Published:Updated:

‘ஜகத்குருவுடன் சில காலம்’

 ‘ஜகத்குருவுடன் சில காலம்’
பிரீமியம் ஸ்டோரி
‘ஜகத்குருவுடன் சில காலம்’

சீதாராமன்

‘ஜகத்குருவுடன் சில காலம்’

சீதாராமன்

Published:Updated:
 ‘ஜகத்குருவுடன் சில காலம்’
பிரீமியம் ஸ்டோரி
‘ஜகத்குருவுடன் சில காலம்’

வருக்குப் பணிவிடை செய்வதற்காக அவருடன் இருப்பதையே பாக்கியமாகக் கருதி இருந்தவர்கள் பலர். அவர் இட்டக் கட்டளைகளைப் பரதனைப்போலச் செயல் படுத்திக்கொண்டிருப்பவர்கள் பலர்.  

 ‘ஜகத்குருவுடன் சில காலம்’

அனுபவஸ்தர்களும் ஆளுமையாளர் களும்கூடப் பெரும் பிரச்னையாக நினைத்துக் கொண்டிருந்த விஷயங்களுக்கு, அவைபற்றிக் கேட்டமாத்திரத்திலேயே மிக எளிதில் அவர் கூறும் தீர்வுகளைக்கண்டு பிரமித்தவர்கள் பலர் உண்டு.

குழந்தைகளோடு குழந்தையாகவும் நிர்வாகஸ்தர்களோடு தலைவராகவும் பல்துறை வித்தகர்களுக்கு ஆசார்ய ரூபமா கவும் திகழ்ந்தவர், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ  ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்.

 ‘ஜகத்குருவுடன் சில காலம்’பாரம்பர்ய மிக்க மடத்தின் வழித் தோன்றலாக... பாரதம் முழுக்கத் தன் குருவோடு யாத்திரையாகச் சென்று அலங்கரித்தது, ஆதி சங்கரர் நினைவுக் கூடங்கள், வேத - சாஸ்திர, சம்ஸ்கிருத, தமிழ் இலக்கிய பரிபாலனம்,  கடுங்குளிர், மழை, வெயில் காலங்களைப் பொருட்படுத்தாத ஓய்வறியாத உழைப்பு அவருடையது.

மகாபாரதத்தில் கிருஷ்ணன், “நான் செய்ற எந்த நித்ய கர்மாவாலயும் எனக்கு ஒன்னும் ஆகப்போறதில்லை. ஆனால், கிருஷ்ணனே கடைப்பிடிக்கலையேன்னு பேச்சு வந்துடக் கூடாது”ன்னு சொல்லிச் சிரிப்பானாம்.  இவர் அவன்தான்னு சொல்லலாம்.

மகா பெரியவா எனும் ஞானச் சூரியனின் கனவுகளை நிறைவேற்றி வைத்த, வைராக்கியம்கொண்ட பெரும் கர்மயோகி, ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள். என் பணிப் பயணம் இவர் காலடியிலிருந்தே தொடங்கியது.

காலம்பற எழுந்திருக்கறது, மடத்துக்குள்ளேயே வாக்கிங் போறது, வாக்கிங் முடிந்ததும் எல்லா லைட் ஸ்விட்ச்சுகளையும் தானே அணைக்கறது, மகா பெரியவா பிருந்தாவனத்துக்குப் பூஜை, சந்த்ரமௌளீஸ்வர பூஜை, பாஷ்ய பாடம் என எல்லாத்துலயும் பெரியவா ளோட பன்ச்சுவாலிட்டி,  தண்டத்தைக் கையில வெச்சிண்டு அவர் நடக்கற ஸ்பீடு... சான்ஸே இல்லை. நாமல்லாம் கூட ஓடித்தான் போயாகணும்!

அப்போதெல்லாம்... காலை நாலு மணிலேர்ந்து ராத்திரி பத்து, பதினோரு மணி வரைக்குமான பெரிய வாளின் டைம் டேபிள் மனப்பாடம் எனக்கு.

எங்க தாத்தா அமரபாரதி நடராஜ ஷர்மா- ஸ்ரீமடத்துல பெயர். மகாபெரியவா சொன்னான்னு எங்க பாட்டியோட நகைகளை... நூறு பவுனுக்கும் மேலே இருக்கும். எல்லாத்தையும் விற்று, திருச்சி சிந்தாமணியில் சம்ஸ்கிருதத்துக்குன்னு யுனிவர்சிட்டி ஆரம்பிச்சு நடத்தினவர். பின்னாடி அதே பெரியவா சொன்னான்னு ஒரு வார்த்தை, பிரச்னை பண்ணாம வெளில வந்த மகான். 

அவரின் பேரப்பிள்ளையான எனக்கு யுனிவர் சிட்டியில் டீச்சர் வேலை, வார்டன் பொறுப்பு... இதெல்லாம் பெரியவா என்னையும் மதிச்சு, நம்பிக் கொடுத்த வாய்ப்புகள்.  

நான் தினமும் ராத்திரி கிராமத்துலேர்ந்து  மடத்துக்கு வேத பாடத்துக்காக சைக்கிள்ல வந்துட்டுப் போறேன்னு தெரிஞ்சுக்கிட்டவர், என்னையும் என்னோட குரு கருப்பத்தூர் ஸ்ரீசந்த்ரசேகர கனபாடிகளையும் அழைத்து  ``இன்னிக்கு ராத்ரி, நாளைக்குக் காலம்பற 4 மணிக்குன்னு இவனுக்குப் பாடம் நடத்துங்கோ. என்கிட்டயே ஒரு ரூம் இவனுக்குக் குடுத்துடறேன், தினமும் வந்துட்டுப் போக வேண்டாம்’னு அனுக்ரஹித்தது அவரது  தாயுள்ளம். 

 ‘ஜகத்குருவுடன் சில காலம்’

ஒருமுறை, `நான்தான் சம்பாதிக்கறேனே, நானும் மத்த மதங்கள்ல குடுக்கறா மாதிரி மாசாமாசம் ஏதாவது சேவை கார்யத்துக்கு உபயோகமா மடத்துக்குக் காணிக்கை தர்றேன்’ன்னு பெரியவாகிட்ட சொன்னேன். அதற்கு, ``நீ இங்க பாடம் படி, யுனிவர் சிட்டில பாடம் சொல்லிக்குடு. வேறெதுவும் பண்ண வேண்டாம்’னு அருளிய தகப்பன் அவர்.

ஒரு முறை, பெரியவா தினமும் வாக்கிங் போற பாதையின் ஓரமா  அமர்ந்து காலை சந்த்யாவந்தன ஜபம் பண்ணிண்டு இருந்தேன். பெரியவா வரும்போது மரியாதையில்லாம, இப்படி இங்கே உட்கார்ந்துண்டு இருக்கானேன்னு அவர்கூட வந்தவா என்னை எழுப்ப முயன்றபோது, தடுத்துட்டார் பெரியவா.

அதுமட்டுமா?

எப்பவுமே பூச்சிகள் ஒதுங்கிப் போகணும்னு சத்தம் வர்றாப்ல நடப்பது பெரியவா வழக்கம். அன்றைக்கு, எனக்காக வழக்கத்துக்கு மாறா சத்தம் எழாதவண்ணம், என் னைத் தாண்டிப் போனாராம்!  மற்றவர்கள் சொல்லி இதை அறிந்த போது நெகிழ்ந்துபோனேன்.

 ‘ஜகத்குருவுடன் சில காலம்’ஒருமுறை வேதாந்த பாடம் நடந்து கொண்டிருந்தது. பாஷ்ய வாத்தியார், `உப்புக் கரைஞ்ச தண்ணில உப்பு கண்ணுக்குத் தெரியறதில்லை. ஆனா ருசிக்கும்போது புலப்படறது'ன்னு சொல்லிண்டு போறார். பெரியவா இடைமறித்து `அதைக் குடிச்சதும், சுத்தமான தண்ணில ஆசமனம் (குடிச்சிட்டு) பண்ணிட்டு வான்னு ஏன் சொல்லியிருக்கு'ன்னு கேட்டார்.

ஒருத்தர் அது ஆசாரம்னார். மத்தவாள்லாம் எதுவும் சொல்லலை.  அதில் எதோ பெரிசா இருக்கும்னு ஆர்வமா பெரியவாகிட்டயே விளக்கம் கேட்டார்கள். ``உப்புத் தண்ணிய குடிச்சதும் அதுல உப்பு இருக்குன்னு தெரிஞ்சுப்பான்தான். ஆனால் சுத்தமான தண்ணில ஆசமனம் பண்ணினதும் மூளைல அந்தப் பதிவு அனுபவ வித்யாசத்தால இன்னும் ஸ்திரமா பதியும்’னு பதில் சொன்னார் பெரியவா. 

மகாபெரியவாளோட பிரதான சிஷ்யர் இப்படி வேதாந்தத்துக்கு ஒரு எளிய விளக்கம் குடுத்திருக்காளேன்னு ஆச்சர்யப்பட்டா... அது, நிலவு அழகா, குளிரா இருக்கேன்னு ஆச்சர்யப்படறமாதிரிதான்!

ஒருமுறை, அப்பா நடத்தற ஸ்கூலுக்குப் பணம் போதலைன்னு காஞ்சி மடத்து யுனிவர்சிட்டி வேலையை விட்டுட்டு, ஐ.டி கம்பெனிக்கு வேலைக்குப் போலாம்னு முடிவெடுத் தேன். எனது ராஜினாமாவை வைஸ்சான்ஸ்லரும் அங்கீகரிச்சுட்டார். அந்தநேரத்துல பெரியவா யுனிவர்சிட்டிக்கு வந்திருந்தார். அது எனக்குத் தெரியாது; நான் வேலை விஷயமா டவுனுக்குப் போயிருந்தேன்.

திடுதிப்புன்னு எனக்கு போன். `பெரியவா வந்திருக்கா. உன்னைப் பாக்கறதுக்காக உட்கார்ந் திருக்கார்'ன்னு நண்பர்கள் சொன்னதும், பதறியடிச்சிண்டு ஓடி வந்தேன். பெரியவாளை நமஸ்காரம் பண்ணி, அழுதேன்.  எல்லாரையும் வெளில இருக்கச் சொல்லிட்டு, என்கூடத் தனியா பேசினார். கும்பகர்ணன், விபீஷணன் கதையெல்லாம்  சொல்லி அறிவுறுத்தினார். நிறைவாக, `பாடம் சொல்லிக்கொடுத்து குழந்தைகளை வெளியே அனுப்பு; நீ போய்டாதே’ன்னு அறிவுறுத்தினார். அத்துடன், வைஸ் சான்ஸ்லரோட பி.ஏ-வைக் கூப்பிட்டு, என்னோட ரெஸிக்னேஷன் லெட்டரைக் கிழிச்சிப்போட வெச்சதோட,  ‘அவன் எங்கேயும் போகல’ன்னு உத்தரவும் போட்டுட்டார்!

அதுமட்டுமா? அழைத்தும் எங்கும் எளிதில் வந்துவிடாத இந்த இந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள், கம்பரசன் பேட்டை உள்ள எங்க இல்லத்துக்கு ரெண்டு, மூணு தடவை எழுந்தருளியது, குழந்தைகளை ஆசிர்வதித்தது, எங்காத்து விக்ரஹங்களுக்குப் பூஜை செய்ததெல்லாம் எனது பூர்வ ஜன்மத்துப் பாக்கியமே. நாம் இன்னும் நிறைய எதிர்பார்ப்பில்லாத, எதிர்ப்புகளை மீறின சேவைகளைத் தொடர்ந்து செய்யணும்கற உத்வேகத் தைக் கொடுக்கும் அங்கீகாரமே.

பின்னாளில், பெரியவாகிட்டயே பர்மிஷன் வாங்கி, படிச்ச படிப்பு அனுபவத்துல எங்க, எப்படி உபயோகப்படறதுன்னு பாத்துட்டு, இன்னும் கத்துண்டு வந்துடறேன்னு வெளில வந்திருக்கேன். 

மேய்ச்சல் நிலத்துல மேஞ்சிண்டிருக்கற மாட்ட கட்டியிருந்த கொம்பை இப்ப காணோம். சிவன் இனிமே யார, எப்ப அனுப்பிச்சு, திரும்பி வழி நடத்தப் போறான்னு தெரியல.

ஜய ஜய பகவா குருவே ஜய ஜய பகவா

 ‘ஜகத்குருவுடன் சில காலம்’

‘தமிழுக்கு ஆற்றிய தொண்டு!’

கணேஷ் ஷர்மா

“கா
ஞ்சி ஜெயேந்திர ஸ்வாமிகளின் மகத்துவமே அவரின் மனிதநேயப் பண்புகள் தான். நியம நிஷ்டைகளின்படி ஆன்மிகப் பணிகளை மட்டும் செய்யாமல், வீதிக்கு வந்து மக்களைச் சந்தித்து அவர்களின் துயர்களைத் தீர்த்த அவரது செயல்கள் மகத்தானது. ஜனகல்யாண் அமைப்பின் வழியே எண்ணற்ற ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றியவர். ஏழைகளின் வறுமை நீங்க தையல் இயந்திரம், ஆட்டோக்கள் என அவர் வழங்கிய கொடைகள் ஏராளம். 

 ‘ஜகத்குருவுடன் சில காலம்’பசியோடு எந்த மனிதரும் இருக்கக் கூடாது என்பதை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார்.  எத்தனையோ தர்ம காரியங்களை எவருக்கும் தெரியாமல் செய்திருக்கிறார். வடகிழக்கு மாநில மக்களுக்கு மருத்துவ வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை என்று தெரிந்ததும் அங்கும் பல மருத்துவ சேவைகளைச் செய்யச்சொல்லி உதவியவர். எனக்குத் தெரிந்து எந்த மடாதிபதிகளும் செய்யாத மக்கள் பணியைச் செய்தவர். தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டுகளும் சிறப்பானவை. இன்றும் இவரது முயற்சியால் 12 திருமுறைகளும் காஞ்சி மடத்தில் முறையாக ஓத ஓதுவாமூர்த்திகளால் பயிற்சி அளிக்கப்படுகிறது. எத்தனையோ தமிழ் கல்வெட்டுகளையும் ஓலைச்சுவடிகளையும் உலகறிய வெளிக் கொணர்ந்தவர் காஞ்சி ஜெயேந்திர ஸ்வாமிகள். இவரை அருகிருந்து பார்த்த என்னால் இவரை வெறும் மடாதிபதி என்று மட்டும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இவர் மனிதர்களை நேசித்த ஓர் அவதாரப் புருஷர் என்றே சொல்வேன்”

 ‘ஜகத்குருவுடன் சில காலம்’

`வாஞ்சையானவர் வாழ்வித்தவர்!’

பம்பாய் சகோதரிகள் சரோஜா - லலிதா 

“எ
ங்களுடைய வாழ்க்கையில் எல்லாவிதத் தருணங்களிலும் காஞ்சி மகான் ஜெயேந்திர ஸ்வாமிகள்  உறுதுணையாக இருந்திருக்கிறார். அவருடைய ஆசியும் வழிகாட்டலும்தான் எங்களை வாழ்வித்தது எனலாம். எங்களுடைய 20 வயதிலிருந்து காஞ்சி மடத்தில் பாடிவருகிறோம். காஞ்சி மகாபெரியவர், ஜெயேந்திர ஸ்வாமிகள், விஜயேந்திர ஸ்வாமிகள் ஆகிய மூவருடைய ஆசியும் எங்களுக்குண்டு. ஜெயேந்திர ஸ்வாமிகள் ரொம்பவும் வாஞ்சையானவர். யாருக்கு கஷ்டம் என்றாலும் அத்தனை அன்பாகக் கேட்டுக்கொள்வார்.  கஷ்டம் நீங்க வழி காட்டுவார்; பிரார்த்தனை செய்வார். காஞ்சி மடத்தின் அத்தனை முக்கிய விசேஷங்களிலும் நாங்கள் பாடி இருக்கிறோம். காஞ்சி மடத்தின் “ஆஸ்தான விதுஷி’ பட்டத்தையும் பெற்றிருக்கிறோம். எல்லாம் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆசிர்வாதம்தான். மிகப்பெரிய மகானான அவர், கொஞ்சமும் கர்வமின்றி குழந்தைபோலப் பழகுவார். எங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் நலத்தையும் கேட்டு அறிந்துகொள்வார். இத்தனை பெரிய மகான் நம்முடைய வாழ்க்கையில அக்கறை எடுத்துக்கொண்டார் என்பதை நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. அவருடைய ஆசியும், வாழ்த்தும் எங்களை எப்போதும் வழிநடத்தும் என்று நம்புகிறோம்.”

 ‘ஜகத்குருவுடன் சில காலம்’

`பிரம்மமான விஷயம்!’

எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்

“ம
ற்ற எல்லா மடாதிபதிகளைவிடவும் இவர் தனித்துவமானவர். ஆன்மிகப்பணிகளோடு சமூகப் பணிகளையும் செய்தவர். அதைவிட, இவர் செய்த ஏராளமான யாத்திரைகள்தான் இவரை மக்களோடு ஒருங்கிணைத்தது. அவரது யாத்திரையில் பல ஊர்களில், கோயில்களில் நான் அவரைத் தரிசித்திருக்கிறேன். மகாபெரியவர் சந்நியாசிகளுக்கே உரிய கட்டுப்பாடுகளோடு ஆன்மிக வாழ்வை மட்டும் மேற்கொண்டிருந்தார். ஆனால், ஜெயேந்திரர் மக்களோடு வாழ்ந்தார். சமூக அக்கறை, சமூக சேவை என்ற இவரது தொடர்ந்த மக்கள் பணிகளைக்கண்டு நான் வியந்திருக்கிறேன். சந்யாசிகள் எல்லாவற்றையும் உதறிவிட்டு வாழவேண்டும் என்பதைத்தாண்டி மக்கள் சேவையோடு ஆன்மிகப் பணிகளையும் இவர் செம்மையாகச் செய்தார். ‘ஜனக்கல்யாண்’ அமைப்பின்மூலம் எண்ணற்ற மக்களுக்கு மருத்துவம் மற்றும் கல்விச்சேவை அளித்தார். 

 ‘ஜகத்குருவுடன் சில காலம்’திருநெல்வேலியில் எனக்கு ‘எழுத்துலகச் சிற்பி’ என்ற பட்டத்தை அருளி ஆசிர்வதித்தார். ஒருமுறை நான் மும்பையில் காஞ்சி மகா பெரியவரைப் பற்றி இரண்டு மணி நேரம் உரையாற்றினேன். அந்தப் பேச்சு முழுவதையும் கேட்டு என்னைப் பாராட்டி ஆசி வழங்கினார். ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைப் பற்றி ஆயிரம் விமர்சனங்கள் எழுந்தபோதும், நான் உறுதியாக ஒன்றை நம்பினேன். ‘காஞ்சி மகாபெரியவர் எல்லாம் அறிந்த ஜகத்குரு, அந்த வகையில் அவர் தேர்வு தவறாகப் போகவே போகாது’ என்று நம்பினேன். அந்த பரம ஞானியின் தேர்வுதானே ஜெயேந்திர ஸ்வாமிகள், அவரும் பூரண சேவையைத்தான் நமக்கு அளித்து வந்தார்.

வயதான காலத்திலும் அவரது அன்றாட நடைமுறைகள் இயல் பாகவே இருந்தன. தினசரி பூஜைகள், நிர்வாக நடைமுறைகள் எல்லாவற்றையுமே கவனித்து வந்தார். எந்த வித வயோதிகத் தொல்லைகளையும் அனுபவிக்காது அவர் சித்தியடைந்தது பிரம்மமான விஷயம்; பலருக்கும் வாய்க்காது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டு அவர் செய்த சேவைகளே அவரைக் காலம் கடந்தும் நினைவுகொள்ளச் செய்யும்.”