திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - புதிய தொடர்

திருவருள் செல்வர்கள்! - புதிய தொடர்
பிரீமியம் ஸ்டோரி
News
திருவருள் செல்வர்கள்! - புதிய தொடர்

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

லைகடலின் கரை மணலை அளவிட்டாலும் அளவிடலாம்; பரத கண்டமாம் நம் புண்ணிய பூமியில் அவதரித்த மகான்களின் எண்ணிக்கையையோ அவர்தம் மகிமை களையோ அளவிடவே இயலாது.

உலகின் வேறு எந்தவொரு பகுதியிலும் இல்லாத அளவுக்கு, மகான்களாலும் அவர்களது வழிகாட்டலாலும் அறம் நிறைந்து, அருள்செறிந்து திகழும் தேசம் நம்முடையது. அதிலும் குறிப்பாக நம் தமிழகம், தன்னிகரில்லா தவசீலர்களின் தண்ணருள் செழித்த புண்ணியபூமி ஆகும்.

என்றென்றும் உள்ளவர்களாக, எங்கெங்கும் நிறைந்தவர்களாகத் திகழும் அந்த மகான்கள், இந்தத் தொடர் மூலம் அருள்மழை பொழிய வருகிறார்கள்.

வணங்கி வரவேற்போம்; வளம்பெறுவோம்!  

திருவருள் செல்வர்கள்! - புதிய தொடர்

ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள்

நீ
று பூத்த நெருப்பாக இருந்த மகான் ஒருவர் திருத்தல யாத்திரையாகச் சென்ற காலத்தில், ஓர் ஆலயத்துக்குத் தரிசனம் செய்யச் சென்றிருந்தார்.அவரைப் பார்த்தவுடன் அக்கோயிலின் கணக்குப்பிள்ளை, ``அட! இது நம்ம சொந்தக்காரப் பிள்ளையாச்சே! வெவரம் தெரிஞ்ச பிள்ளை. இந்தப் பிள்ளையை இங்க வெச்சிட்டு, நாம பத்து நாளக்கி போயிட்டு வந்திடலாம்’’ எனத் தீர்மானித்தார்.

தீர்மானம் உடனே நடைமுறைக்கு வந்தது. மகானைப் பற்றிய மகிமை அறியாமல் அவரை நெருங்கிய கணக்குப்பிள்ளை, “தம்பி! நா ஒரு பத்து நாளக்கி, மருந்து சாப்பட வேண்டியிருக்கு. அதுவரைக்கும் நீ இங்க இருந்து கோயில் கணக்கை எழுதறியா?” எனக் கேட்டார்.  மறுக்கவில்லை மகான். ‘‘சிவ கைங்கர்யம்தானே. தாராளமாகச் செய்கிறேன்” என்றார். எழுத்தாணியுடன் கணக்கெழுதுவதற்கு உண்டானவற்றையும் மகான் கையில் ஒப்படைத்த கணக்குப்பிள்ளை, மகிழ்ச்சியுடன் போய்விட்டார்.

அவர் மகிழ்வோடு போகலாம். மற்றவர்களுக்கு? கணக்குப்பிள்ளை போனதும், மகான் தன் கைங்கர்யத்தைத் துவங்கினார். நாள்தோறும் மணியக் காரர் முதலான ஆலயச் சிப்பந்திகள் வந்து, அன்றைய கணக்கு விவரங்களைச்
சொல்வதற்கு முன்னமே, அன்றைய செலவினங்களின் கணக்கை எழுதிக் கட்டி வைத்துவிட்டு, நிஷ்டையில் உட்கார்ந்து விடுவார். மணியக்காரர் முதலானோர் வந்து கணக்குகளைச் சொல்லத்தொடங்கும்போது, ‘‘எலலாம் ஏற்கெனவே எழுதி வைத்தாகி விட்டது. கணக்கைச் சரி பார்த்துக் கொள்ளுங் கள்!” என்பார்.

அதன்படியே மணியக்காரா் முதலானோர் கணக்குக் கட்டை அவிழ்த்துப் பார்த்தால், இவர்கள் என்ன கணக்கைச் சொல்ல நினைத் தார்களோ, அது ஏற்கெனவே எழுதப்பட் டிருக்கும். இவர்கள் அதைப் பார்த்து வியப்பில் ஆழ்வார்கள்.

திருவருள் செல்வர்கள்! - புதிய தொடர்ஒருநாள், வழக்கப்படி மணியக்காரர் வந்து கணக்கைப் பார்க்கையில், மாறுபாடாக இருந்தது. திகைத்த அவர்,  ``என்ன இது? இன்றைய உங்கள் கணக்கில், நான்குபடி பாலும் ஒரு படி தேனும் விடுபட்டுப் போய் இருக்கின்றதே??” எனக்கேட்டார்.

உடனே பதில் சொன்னார் மகான்: ‘‘ஸ்வாமிக்கென்று செலவு செய்யாததை எப்படி எழுதுவேன் நான்? உள்ளே போய்ப் பார்! நீ சொன்ன நான்குபடிப் பாலும் ஒரு படித் தேனும் அபிஷேகம் செய்யப்படாமல், வீட்டுக்கு எடுத்துப் போவதற்காகத் தனியாக எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

மணியக்காரர் உள்ளே போய்ப் பார்த்தார். மகான் சொன்னபடியே பாலும் தேனும் தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்தன.   

திருவருள் செல்வர்கள்! - புதிய தொடர்

அப்புறம் என்ன? கோயில் அதிகாரிகள் முதல் கடைசி சிப்பந்தி வரை, ‘‘இந்த ஆளு இங்கே இருந்தால், நாம செய்யிற களவு எல்லாம் தெரிஞ்சி போயிரும்” என்று பயந்தார் கள். அன்று முதல் மகானைக் கண்டதும் பயந்து எழுந்து நின்று வணங்கி, பணிவோடு கைகளைக் கட்டி இருக்கத் தொடங்கினார்கள்.

பார்த்தார் மகான். ‘‘நாம் இந்தக் கணக்கை எழுதுவதால்தானே, இவர்கள் இவ்வாறு பயப்பட வேண்டி இருக்கிறது!” என்று எண்ணி அங்கிருந்து வெளியேறி விட்டார்.

மனிதர்கள் மனதில் இருப்பவற்றை மட்டு மல்ல, அவர்களின் செயல்களையும் உணர்ந்து, மனக்குறை தீர்க்க வந்த மகான்களை இவ்வாறு விரட்டி அனுப்பிவிட்டு, என்ன செய்யப் போகிறோம்?

நாம் விரட்டினாலும் மகான்கள் தமது அருளை நிறுத்துவதில்லை. பணியாளர்கள் மனம் அச்சப்படக் கூடாது என்று, அருளோடு போன அந்த மகான்... ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகள் !

திருச்சிக்கு அருகில் உள்ள கீழாலத்தூர் எனும் ஊரில் சிவசிதம்பரம் பிள்ளை என்பவர் வாழ்ந்து வந்தார். கல்வியறிவு, ஒழுக்கம், சிவ பக்தி, அடியார் பக்தி எனப் பலவிதங்களிலும் சிறந்து விளங்கிய அவர் மனைவி மீனாம்பிகை. அவர் கணவருக்கேற்ற அறிவும் அன்பும் கொண்டவராய், இல்லறத்தை நன்முறையில் நடத்தி வந்தார்.

குறைவற வாழ்ந்து வந்த அவர்கள் வாழ்வி லும், மகவு இல்லாத குறை அவர்கள் மனதை வாட்டியது. குறைதீரத் திருத்தலப் பயணம் மேற்கொண்டார்கள். தலங்கள் பலவற்றைத் தரிசித்தபடி திருவண்ணாமலையை அடைந்த வர்கள், அங்கேயே சில நாட்கள் தங்கினார்கள். அதிகாலையில் எழுவது, தீர்த்தங்களில் நீராடு வது, அண்ணாமலையாரையும் உண்ணா முலை அம்பாளையும் தரிசித்துக் குறைதீர முறையிடுவது, கிரிவலம் செய்வது- என நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன.

ஒரு நாள் இருவர் கனவிலும் விபூதி, ருத்திராட்சம், காவி ஆடை புனைந்து, துறவி வடிவில் தோன்றிய அண்ணாமலையார், ‘‘மகப் பேறில்லாக் குறையை யாமே வந்து நீக்குவோம்! ஊருக்குச் செல்க!” என உத்தரவிட்டார்.

அதன்படியே ஊர் திரும்பிய அந்தத் தம்பதிக்கு பத்து மாதங்கள் கழித்து, நல்லதொரு நாளில் ஆண் குழந்தை ஒன்று அவதரித்தது.அருணாசலேஸ்வரர் அருளால் அவதரித்த அக் குழந்தைக்கு ‘அருணாசலம்’ எனப் பெயரிட் டார்கள். இந்த அருணாசலம்தான் சற்றுமுன் பார்த்த ஸ்ரீதட்சிணா மூர்த்தி ஸ்வாமிகள்.

குழந்தை அருணாசலம் பிறந்ததில் இருந்து, பசிக்காக அழுவதில்லை. தாயார் மடியில் வைத்துப் பால் கொடுத்தால் பால்அருந்தும்; இல்லாவிட்டால் சும்மாவேயிருக்கும். தவழ்ந்து, எழுந்து, அமர்ந்து, நடந்த காலத்திலும் இதே நிலைதான். யாரிடமும் எதுவும் பேசியதில்லை. சில நேரம் பத்மாசனம் இட்டு, நிஷ்டையில் அமர்ந்துவிடுவதும் உண்டு.

அருணாசலத்துக்கு ஐந்து வயதாகும் வரை இதே நிலைதான். பெற்றோர் மனம் கலங்கினர்.

‘‘என்ன பிழை செய்தோம் என்று தெரிய வில்லையே” என அவர்கள் துயரத்தில் ஆழ்ந்தபோது, ஒருநாள்... கனவில் தோன்றிய அதே உருவில் துறவியாக வந்தார் அருணா சலேஸ்வரர். அவரைப் பார்த்ததும், சிவ சிதம்பரம் பிள்ளை முன்சென்று வணங்கி எழுந்து கை கட்டி, ‘‘சுவாமி! குழந்தை பிறந்து ஐந்து வயது ஆகிவிட்டது. இன்னமும் வாய் திறந்து பேசாமல் ஊமையாகவே இருக்கிறான். தாங்கள்தான் அவனைப் பேசும்படியாக அருள் செய்ய வேண்டும்” என வேண்டினார்.

கூடவே துறவியை வீட்டினுள்ளே அழைத் துச் சென்று, குழந்தையையும் காட்டினார்.பத்மாசனம் போட்டு, கண்களை மூடி நிஷ்டையில் இருந்த அந்தக் குழந்தையைப் பார்த்த துறவி, ‘‘இவன் உன்னையும், உன் குலத்தையும், அடியார்களையும் நற்கதிக்குச் செலுத்துவதற்காக அவதரித்தவன்.இவன் ஊமையல்ல. உன் பிள்ளையுடன் நீ பேசு!” என்றார்.

சிவசிதம்பரம் பிள்ளை, ‘‘அப்பா! நீ ஏன் கண்களை மூடிக் கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டார். ``சும்மா இருக்கிறேன்” என்றது குழந்தை.

துறவியாக வந்த அருணாசலேஸ்வரரோ, ``சும்மா இருக்கும் நீ யார்?” எனக் கேட்டார். கண்களை மூடி நிஷ்டையில் இருந்தாலும், வந்திருக்கும் துறவி அருணாசலேஸ்வரர் என்பது குழந்தைக்குத் தெரிந்தது; அதைச் சொல்லவும் செய்தது.

‘‘நீயே நான்! நானே நீ!’’ என்றது.

அதைக் கேட்டதும், துறவியாக வந்த சிவனார், “சத்தியம்! சத்தியம்!” என்று சொல்லி விட்டு அப்படியே மறைந்தார். பெற்றோர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள்.

“குழந்தையைப் பேசவைக்க, உண்ணாமுலை அம்பாளின் துணைவரே, நேருக்கு நேராக வந்திருக்கிறார் என்றால்... ஆஹா! ஆஹா! அருணாசலேஸ்வரர் வாக்குப்படிப் பிறந்த இக்குழந்தை, `நீயே நான்! நானே நீ!’ என்று அருணாசலேஸ்வரரிடமே கூறுகிறது என்றால், இது தெய்வமாகவே இருக்க வேண்டும்” எனத் தீர்மானி்த்த சிவசங்கரம் பிள்ளை, தன்குழந்தையைத் தெய்வமாகவே கருதத் தொடங்கினார். அது மட்டுமல்ல! எதைச் செய்தாலும் குழந்தையிடம் கேட்டே செய்தார்.(இனி அக்குழந்தையை ‘ஸ்ரீஸ்வாமிகள்’ எனும் பெயரிலேயே பார்க்கலாம்)

ஒருநாள் சிவசிதம்பரம் பிள்ளை, ‘‘ஸ்வாமி! சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் செய்துவர விரும்புகிறேன் உத்தரவு தர வேண்டும்” எனக் கேட்டார்.

அதற்குத் தடை விதித்தார் ஸ்ரீஸ்வாமிகள்.  அத்துடன் தடை விதிப்பதற்கான மிக முக்கிய காரணம் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார். அந்தக் காரணம் சிவசிதம்பரம் பிள்ளையை அதிர்ச்சியடையச் செய்தது!

- திருவருள் பெருகும்...

திருவருள் செல்வர்கள்! - புதிய தொடர்

இரண்டு மான்கள்

ராமாயணத்தில் முக்கியமாக இடம்பெறுபவை இரண்டு மான்கள். ராமனிடமிருந்து சீதாதேவி பிரிவதற்குக் காரணமான மான் ஒன்று. அது பொன் மான். அப்படிப் பிரிந்தவர்கள் ஒன்றுசேரக் காரணமாக இருந்தது இரண்டாவது மான். அது அனுமான்!

- வாரியார்