Published:Updated:

அஞ்சாநெஞ்ச மருது சகோதர்களை வெள்ளையர்களிடம் சரணடைய வைத்தது எது? #EmotionalStory

அஞ்சாநெஞ்ச மருது சகோதர்களை வெள்ளையர்களிடம் சரணடைய வைத்தது எது? #EmotionalStory
அஞ்சாநெஞ்ச மருது சகோதர்களை வெள்ளையர்களிடம் சரணடைய வைத்தது எது? #EmotionalStory

சிப்பாய்க் கலகம் நடப்பதற்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து, இந்தியாவின் தெற்கு மூலையில் ஒரு சிம்மக் குரல் கர்ஜித்ததைப் பலர் பதிவு செய்வதேயில்லை

வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டதால் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால், எதற்கும் அஞ்சாத மருது சகோதரர்களை எதைச் சொல்லி வெள்ளையர்கள் பணிய வைத்தார்கள் தெரியுமா?

இந்திய விடுதலைப் போராட்டம், வியத்தகு பல களங்களையும், உயிரை துச்சமென மதித்த, வீரம் செறிந்த பல தலைவர்களையும் நமக்கு அடையாளம் காட்டிச் சென்றது. வெள்ளையர்கள் இப்பெரும் நிலத்தைச் சூழ்ந்து கொண்ட பின்னர் அவர்களை எதிர்த்து நடந்த முதல் புரட்சி என்று மே 10, 1857-ல் மீரட் நகரில் நடந்த சிப்பாய்க் கலகப் புரட்சியையே வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கிறார்கள். அந்தப் புரட்சியும் ஜூன் 20, 1858-ல் குவாலியர் நகரில் வீழ்ச்சியுற்றது. வீழ்ச்சிக்குக் காரணம் `தளபதிகள் முன்னின்று போரை நடத்தாமல் பின்னின்று வழிநடத்தியதுதான்' என ஆங்கிலேயப் படைத்தளபதி ஸ்ட்ராங் தன்னிடம் சொல்லியதாக, விவேகானந்தர் `எனது பயணம்' கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

உண்மையில், சிப்பாய்க் கலகம் நடப்பதற்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து, இந்தியாவின் தெற்கு மூலையில் ஒரு சிம்மக் குரல் கர்ஜித்ததைப் பலர் பதிவு செய்வதேயில்லை.1801 ஜுன் 12 ம் தேதி திருச்சியில் `ஜம்புத்தீவு பிரகடனம்' என்னும் பெயரில் `ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்கவேண்டும்' என மருது சகோதரர்களில் இளையவரான சின்ன மருதுவால் விடுக்கப்பட்ட அறைகூவல்தான் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் குரல். அதுவே முதல் புரட்சியும் கூட. இந்தக் குரலுக்கு அஞ்சிதான் ஆங்கிலேய அதிகாரிகளால் தூக்கிலிடப்பட்டார்கள் மருது சகோதரர்கள். 

சிவகங்கை சமஸ்தான வனங்களுக்குள் தலைமறைவாக இருக்கும் மருது சகோதரர்களையும், அவர்களின் படை பரிவாரங்களையும் தேடிப் பிடித்து அழித்துவிடவேண்டும் என்கிற தீரா வேட்கையுடன் அலைகிறார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள். அதற்கான எண்ணற்ற முயற்சிகளில் ஈடுபட்டும், தோல்வி மட்டுமே மிஞ்சுகிறது. என்ன செய்யலாம் என ஆங்கிலேயத் தலைமை அதிகாரி யோசித்துக் கொண்டிருந்த வேளையிலேயே, மருது சகோதரர்கள் உடனிருந்து, வெள்ளையர்களுக்குக் கையாளாக மாறிவிட்ட ஒருவன் ஒரு யோசனையைச் சொல்கிறான். 

``காளையார்கோவில் அமைந்திருக்கும் சொர்ணகாளீஸ்வரர் சிவாலயம் என்றால் மருதிருவர்களுக்கு உயிர். கோயிலை இடிக்கப் போகிறோம் என்ற செய்தியைக் கசிய விட்டால் போதும், அவர்கள் தானாக உங்கள் முன் வந்து நிற்பார்கள் '' என்கிறான் அவன். முதலில் அவனின் குரலை வேடிக்கையாகக் கடந்த பிரிட்டிஷ் அதிகாரி, வேறு வழியே இல்லாததால் அந்த யோசனையைச் செயல்படுத்திப் பார்க்கிறான். 

`கோயிலின் கோபுரத்தைப் பீரங்கி வைத்துத் தகர்க்கப் போகிறோம்` என்ற செய்தியைத் திட்டமிட்டு சிவகங்கை சமஸ்தானம் முழுவதும் பரப்புகிறார்கள். வெள்ளையர்கள் திட்டமிட்டது போலவே அந்தச் செய்தி மருதிருவர்களின் காதுகளுக்கும் போனது.

அடுத்த சில மணி நேரங்களிலேயே ஆங்கிலேயப் படைகளுக்கு முன்னால் வந்து நிற்கிறார்கள் மருது சகோதரர்கள். (பெரிய மருதுதான் படை பரிவாரங்களுடன் வந்து முன் நின்றார். அடுத்த சில மணி நேரங்களில் ஆங்கிலேய அதிகாரிகள் காட்டுக்குள் சின்ன மருதுவைக் கைது செய்தார்கள் என்கிற கருத்தும் நிலவுகிறது).

தாங்கள் நினைத்தது போலவே அவர்களைத் தூக்கிலிட எத்தனிக்கிறார்கள் ஆங்கிலேய அதிகாரிகள். தூக்கிலிடுவதற்கு முன்பாக மருது சகோதரர்களிடம் "உங்களின் கடைசி ஆசை என்ன?" என்று கேட்கப்படுகிறது. அதற்கு தங்களின் தலையைக் கோயிலுக்கு எதிராகப் புதைக்கவேண்டும், கோயிலுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த மானியங்களை நிறுத்தக் கூடாது' எனக் கோரிக்கை விடுக்கிறார்கள் . அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கிறார்கள் ஆங்கிலேயர்கள். 

தற்போதைய சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூரில், இன்றைய நாளில்தான் இருவரும் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்கள் மட்டுமல்லாமல் அரச குடும்பத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரும் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்களில் சின்னஞ்சிறார்களும் அடக்கம். பின்னர் இரண்டு நாள்கள் கழித்து அவர்களின் விருப்பப்படியே காளையார்கோயில் ஆலயத்துக்கு எதிராக மருதிருவர்களின் தலை (அக்டோபர் 27) புதைக்கப்பட்டன. அவர்களின் உடல் திருப்பத்தூரில் புதைக்கப்பட்டன. 

வீரத்தில் மட்டுமல்ல தாங்கள் போற்றி வளர்த்த கலையிலும், பக்தியிலும்கூட தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை இந்த உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் மருது சகோதரர்கள்

இந்த நாளில் அவர்களின் நினைவைப் போற்றுவோம்..!

அடுத்த கட்டுரைக்கு