Published:Updated:

``கமல்கிட்ட ஆன்மிகம் பேசும்போது என்ன நடக்கும்னா..?!" - கு.ஞானசம்பந்தம்

``கமல்கிட்ட ஆன்மிகம் பேசும்போது என்ன நடக்கும்னா..?!" - கு.ஞானசம்பந்தம்
``கமல்கிட்ட ஆன்மிகம் பேசும்போது என்ன நடக்கும்னா..?!" - கு.ஞானசம்பந்தம்

`இவ்வளவு பேசுகிறீர்களே, உங்களின் நண்பர் கமல்ஹாசன் கடவுள் மறுப்பாளராக இருக்கிறாரே?' என்று சிலர் கேட்பார்கள். 

ன்மிகம் என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஒவ்வோரு மனிதருக்கும் அவரவருக்கெனச் சில அறக்கோட்பாடுகளும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் உண்டு. வாழ்வு நெறிகளும் மனிதருக்கு மனிதர் வேறுபடுவது இயற்கை. இங்கே பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் தன்னுடைய ஆன்மிகம் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்.

`உங்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டா?' என்னிடம் பலரும் கேட்கும் கேள்வி இது. நிச்சயமாக உண்டு. இது என்னுடைய தந்தை வழி, தாய் வழி, பரம்பரை வழி என வழிவழியாக வந்த குடும்பச்சொத்தாகவே நான் கருதுகிறேன். 

ஆன்மிகம் எப்படிச் சொத்தாகும் என்றால், ஆன்மாவைக் கடைத்தேற்றும் வழி ஆன்மிகம். நான் வளர்ந்த சூழல், நான் படித்த கல்லூரி, நான் பணியாற்றிய இடம், நான் படிக்கும் நூல்கள், நான் பேசும் பேச்சுகள், நான் சொல்லும் எந்தச் செய்தியாக இருந்தாலும், அதில் அடிநாதமாக ஆன்மிகம் ஒலித்துக்கொண்டே இருக்கும். 

என்னுடைய தந்தையார் புலவர் குருநாதன், தாயார் விசாலாட்சி அம்மாள். சொந்த ஊர் சோழவந்தான். சகோதரிகள் நான்கு பேர். ஆன்மிகத்தில் எனக்கு எப்படி ஈடுபாடு வந்ததென்றால், என்னுடைய தந்தையார் சிவ பூஜை செய்கிறவர். அவர் இருந்தவரைக்கும் எங்களுடைய வீட்டில் புலால் கிடையாது. அதன் பிறகு மாறிப்போய்விட்டது. 

என்னுடைய தந்தையார் செய்யும் சிவபூஜைக்கு உதவியாக இருக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டது. தினமும் விடியற்காலை ஐந்தரை மணிக்கு என்னை எழுப்பி விடுவார்கள்.

காலையில் எழுந்ததும் பூக்குடலையில், அதாவது `பொன்னியின் செல்வனி'ல் வரும் சேந்தனமுதனைப்போல், ஊரில் எங்கெல்லாம் நந்தவனம் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று பூக்களைப் பறித்து வந்து பூஜை அறையில் சேர்ப்பேன். அடுத்து என் தந்தையாருக்கு அடுத்த உதவியை ஆரம்பித்துவிடுவேன். 

என் தந்தையார், `தேவாரம்', `திருவாசகம்', `திவ்யபிரபந்தம்' `திருமுருகராற்றுப்படை'ஆகிய நூல்களிலிருந்து கசிந்துருகப் பாடத் தொடங்குவார். அவர் பாடத் தொடங்கியதும் முதல் நாள் பூஜையிலிருந்த பொருள்களை எடுத்துவிட்டு, புதிதாக மலர்கள், பூஜைக்குரிய சந்தனம், தூப தீபங்கள் ஆகியவற்றை நான் தயார்செய்து தரவேண்டும். அப்போது என் மனதில் அவர் பாடும் பாடல்கள் ஒலிக்கத்தொடங்கியதுதான் என் வாழ்க்கையை இந்த அளவு உயர்த்தியிருக்கிறது.

என்னுடைய பெயர் ஞானசம்பந்தம் என்றுதான் பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால், வீட்டில் என்னுடைய பெயர் வேறு.
சோழவந்தானில் என்னுடைய தந்தையார் இருந்தபோது திருமறைக்கழகம், திருக்குறள் கழகம் எனப் பல மன்றங்களை வைத்து நடத்தி வந்தார். ஒருமுறை ஒரு விழாவில் பேச கன்னியாகுமரியிலிருந்து ஆறுமுக நாவலர் வந்திருந்தார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளக் குன்றக்குடி அடிகளார், மதுரை ஆதீனம் எனப் பலரும் வந்திருந்தனர்.  

விழா தொடங்கப்போகும் நேரம். கடவுள் வாழ்த்து பாட வேண்டிய ஓதுவாரைக் காணவில்லை. உடனே என் தந்தை `நீ பாடுகிறாயா?'என்று கேட்டார். மைக்கின் மீது இருந்த ஆசையோ என்னவோ தெரியவில்லை. உடனே, 

``தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே''

எனப்  பாடிவிட்டேன். அப்போது எனக்கு மூன்றரை வயது. சகோதரிகளுக்கு ஓதுவார்கள் தினமும் திருவாசம், தேவாரப்பாடல்களைப் பாட சொல்லித்தருவார்கள். அதைத் தினமும் கேட்ட கேள்வி ஞானத்தால்தான் பாடினேன்.  

நான் பாடி முடிந்ததும் ஆறுமுக நாவலர், ``உங்கள் பையனா? என்ன பேர் வெச்சிருக்கீங்க?'' எனக் கேட்டார்.
``அங்குச்சாமி" என்றார் என் தந்தை.

எங்களுடைய குலதெய்வம், அங்காள பரமேஸ்வரி என்பதால் எனக்கு அங்குச்சாமி என்று வைத்திருந்தனர். உடனே அவர் ``இவ்வளவு அருமையாகப் பாடுகிறான். ஞானசம்பந்தம் என்று அழையுங்கள்'' எனக் கூறினார். அது முதல் நான் `ஞான சம்பந்தன்' ஆனேன்.  

மார்கழி மாதத்தில் கோயில்களில் நடைபெறும் பாவை வகுப்பில் திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய சொற்பொழிவுகளை அப்பா நிகழ்த்துவார். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு முறை என்னை நிகழ்த்தச் சொன்னார். காரணம், அவர் உடல் நலமில்லாமல் இருந்தார். விடியற்காலையில் 3.30 மணிக்கு வைகையாற்றில் குளித்துவிட்டு 4.30 மணிக்குப்போய் பேசுவேன். தொடந்து 14 ஆண்டுகள் நான் உரை நிகழ்த்தினேன். அது எனக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது.

அதன்பிறகு பேராசிரியர் ந.ஜெயராமன் வழக்காடு மன்றங்கள், பட்டிமன்றங்கள் ஆகியவற்றில் என்னைக் கலந்துகொள்ளச் செய்தார். பேராசிரியரானதும், பிறகு நானே நடுவராக இருந்து நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினேன். வைணவத்தின் 108 திவ்ய தேசங்கள், 1008 சிவாலயங்களுக்கும் நான் போய் உரை நிகழ்த்தி இருக்கிறேன். 

ராமாயணம், மகாபாரதம் பற்றி 10 நாள்களுக்குத் தொடர் சொற்பொழிவே நிகழ்த்துவேன். மறைந்த எழுத்தாளர் சுஜாதா இது குறித்து, `கற்றதும் பெற்றதும்' தொடரில் பாராட்டி எழுதி இருப்பார். `இவ்வளவு பேசுகிறீர்களே, உங்களின் நண்பர் கமல்ஹாசன் கடவுள் மறுப்பாளராக இருக்கிறாரே' என்று சிலர் கேட்பார்கள். அது அவருடைய விருப்பம். ஆனால் நான் சொல்லும் கருத்துக்களை அவர் உள்வாங்கிக்கொள்வார். அவர் சொல்லும் விஷயங்களை நானும் கேட்டுக்கொள்வேன். வாழ்க்கையில் ஏற்கத்தக்கது, ஏற்கத்தகாததும் என சில விஷயங்கள் இருக்கும். அவருக்கு ஆன்மிகம் அப்படியிருக்கிறது. அவ்வளவே

எல்லாவிதமான கருத்துகளையும் நாங்கள் பகிர்ந்து கொள்வோம். ஏற்பதும் மறுப்பதும் அவரவர் தனி உரிமை. ஆன்மிகம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். உதாரணமாகச் சிறுவர், சிறுமிகள் விளையாடும் தட்டாமாலை விளையாட்டில் இருவரும் சுற்றும் போது ஒருவருக்கு மயக்கம் வந்து விழுந்துவிடுவார். இதையே ஒரு விளக்குக் கம்பத்தைப் பிடித்துக்கொண்டு சுற்றும்போது சுதாரித்து நின்றுவிடுவார். 

ஆன்மிக நம்பிக்கை என்பது நம் ஆன்மா கடைதேற சீரிய வழி அதை அவசியம் நாம் கடைப்பிடிக்கவேண்டும்..!" என்றுகூறி விடைகொடுத்தார் ர் கு.ஞானசம்பந்தம்.

அடுத்த கட்டுரைக்கு