Published:Updated:

ஆறெழுத்து மந்திரம் உச்சரிப்பதால் கிடைக்கும் பலன்கள்! -வாரியார் நினைவுதினப் பகிர்வு

ஆறெழுத்து மந்திரம் உச்சரிப்பதால் கிடைக்கும் பலன்கள்! -வாரியார் நினைவுதினப் பகிர்வு
ஆறெழுத்து மந்திரம் உச்சரிப்பதால் கிடைக்கும் பலன்கள்! -வாரியார் நினைவுதினப் பகிர்வு

இருபதாம் நூற்றாண்டில் தமிழுக்கும் சைவத்துக்கும் அளப்பரிய சேவை செய்தவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். அதன் காரணமாகவே அறுபத்து நான்காவது நாயனார் என்று சிறப்பிக்கப் பெற்றவர். 

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தவர். சதா சர்வ காலமும் முருகப்பெருமானின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தவர். 

தமது ஆன்மிகச் சொற்பொழிவுகளின் மூலம் பல அரிய கருத்துகளை எளிமையாகச் சொல்லி, பாமரர்களின் மனங்களிலும் பதியச் செய்தவர். சிறு வயதிலிருந்தே பல துதிப் பாடல்களை இயற்றியவர். நாம் ஏற்கெனவே கேட்ட ஒரு கதையாக இருந்தாலும்கூட, வாரியார் சுவாமிகள் அதே கதையை புதியதொரு கோணத்தில் மிகவும் சுவைபடச் சொல்லுவார். அவருடைய கந்தபுராணச் சொற்பொழிவுகள் மிக அற்புதமானவை. 

நாளை கந்த சஷ்டி தொடங்கவிருக்கிறது. இன்று வாரியார் சுவாமிகளின் நினைவுநாள். 
எப்போதும் முருகக் கடவுளின் சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை ஜபித்து வந்த வாரியார் சுவாமிகள், ஒருமுறை முருகப்பெருமானுக்கும் ஆறு என்ற எண்ணிக்கைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி மிக அழகான முறையில் விளக்கியிருக்கிறார்.

'முருகப்பெருமான் நமக்கு வீடுபேறு அருளும் ஆற்றல் கொண்டவன். ஆனால், நாம் வீடுபேறு அடையத் தடையாக ஆறு பகைவர்கள் இருக்கிறார்கள். காம, குரோத, லோப, மோக, மத, மாத்சர்யங்களே அந்த ஆறு பகைவர்கள். ஆறு பகைவர்களையும் வென்று, முருகக்கடவுளின் அருளால் வீடுபேறு அடைய விரும்புபவர்கள், ஆறுமுகப் பெருமானின் ஆறெழுத்து மந்திரத்தை ஓதவேண்டும்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளும் நம்முடைய உடலிலுள்ள ஆறு ஆதாரங்களைக் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளன. மூலாதாரம் - திருப்பரங்குன்றம்; சுவாதிஷ்டானம் - திருச்செந்தூர்; மணிபூரகம் - பழநி; அநாகதம் - சுவாமிமலை; விசுத்தி - திருத்தணி (குன்றுதோறாடல்); ஆக்ஞை - பழமுதிர்ச்சோலை. இந்த ஆறு ஆதாரங்களிலும் முருகக் கடவுள் வீற்றிருந்து நம்மைக் காப்பாற்றுகிறான். 

முருகப்பெருமான் தெய்வயானையை திருமணம் செய்துகொண்டு உல்லாசமாக விளங்கும் தலம் திருப்பரங்குன்றம்.
சிந்தனையாகிய அலைகள் வந்து திருக்கோயிலின் மதில்புறத்தில் மோதி மறைவது போல், நம் மனதில் அடுக்கடுக்காகத் தோன்றும் துன்ப அலைகளை மறையச் செய்யும் தலம் திருச்செந்தூர். ஞானதண்டபாணியாகக் காட்சி தரும் தலம் பழநி.தந்தைக்கு இதமாக `ஓம்' எனும் பிரணவப் பொருள் உரைத்த தலம் சுவாமிமலை.சல்லாபமாக குறிஞ்சி நிலமாகிய மலைகளில் விளையாடுகின்ற தலம் திருத்தணி (குன்றுதோறாடல்).பொழுதுபோக்காக ஞானப்பழம் உதிர்க்கின்ற சச்சிதானந்த சோலையாக விளங்குவது பழமுதிர்ச்சோலை. 

இதையே  அருணகிரிநாதர் கந்தரனுபூதியில், 'உல்லாச நிராகுல யோக இத சல்லாப விநோதனும் நீயலையே' என்று பாடியிருக்கிறார். 
ஆறுதலையின்றி, அநேக பிறப்புகள் அடுத்தடுத்து எடுத்து அல்லல்படுகின்ற ஆன்மாக்களாகிய நாம், ஆறுபடை வீடுகளுக்கும் சென்று ஆறுமுகக் கடவுளை வழிபட்டு, ஆறுதல் பெறுவோமாக' என்று கூறியிருக்கிறார் வாரியார் சுவாமிகள்.