Published:Updated:

``பசியோடு வருபவர்களுக்கு உன்னிடம் இருப்பதைக் கொடு"- சாய்பாபா! #SaiBaba

``பசியோடு வருபவர்களுக்கு உன்னிடம் இருப்பதைக் கொடு"- சாய்பாபா! #SaiBaba
``பசியோடு வருபவர்களுக்கு உன்னிடம் இருப்பதைக் கொடு"- சாய்பாபா! #SaiBaba

``நீ சாப்பிட உட்கார்ந்தபோது ஒரு நாய் பசியுடன் உன்னிடம் வந்ததல்லவா? நீயும் அதற்குச் சோள ரொட்டியைத் தந்தாயே! அந்த நாய் யார் என்று நினைத்தாய்? நாய், பூனை, பன்றி என அத்தனை ஜீவன்களிலும் நானே உள்ளேன். எந்த ஜீவனிலும் நீ என்னையே காண்பாய்"

சாய்பாபா, ஒருவரைத் தம்மிடம் அழைத்து அவருக்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்டுவிட்டால், அதற்கேற்ப சம்பவங்கள் நிகழும்படியாகச் செய்துவிடுவார். அப்படித்தான் பம்பாயைச் சேர்ந்த பிரதான் என்பவரின் வாழ்க்கையிலும் நிகழ்ந்தது.
பிரதானின் மகன் ஒருவன் 7 வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டான். அந்த வருத்தத்தில் இருந்த பிரதான், ஒருநாள் இரவு உறங்கும்போது கண்ட கனவில், ஐந்து சாதுக்கள் ஓர் இடத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவர் ஏற்கெனவே தன்னுடைய நண்பர் ஒருவரின் மூலமாக பாபாவைப் பற்றிக் கேள்விப்பட்டு இருந்ததால், கனவில் தோன்றிய அந்த சாதுக்களிடம், `அவர்களில் யார் சாய்பாபா?’ என்று கேட்டார். அந்த சாதுக்கள் தங்களில் ஒருவரைக் காட்டி, `அவர்தான் சாய்நாதர்’ என்று கூறினர். சில காலத்துக்குப் பிறகு, பிரதான் ஷீர்டிக்குச் சென்று பாபாவை தரிசித்தபோது, தன்னுடைய கனவில், தான் தரிசித்த ஐந்து சாதுக்களில் ஒருவராக இருந்தவர் சாயிநாதர்தான் என்பதை அறிந்து மெய்சிலிர்த்துப் போனார்.

பிரதானை தமக்கு முன்பே தெரியும் என்றும், தாம் அவருடைய வீட்டுக்குச் சென்றிருப்பதாகவும் கூறிய சாயிநாதர், பம்பாயில் இருக்கும் பிரதானின் வீடு, தோட்டம் போன்றவற்றின் அமைப்பை அப்படியே துல்லியமாக விவரித்தார். இதைக்கேட்டு பிரதான் வியப்படைந்தார். பின்னர் பாபா பொதுவாகச் சொல்வதைப்போல், `இந்த முட்டாள் இறந்துபோன தன் மகனுக்காக எதற்கு துக்கப்படவேண்டும்? மண் மண்ணோடு சேர்ந்துவிட்டது; அவ்வளவுதான்!’ என்றார்.  சாயிநாதர் சொன்ன வார்த்தைகள் தங்களையே குறிப்பதாகப் புரிந்துகொண்ட பிரதானும் அவருடைய மனைவியும் பாபாவிடம் பக்தி கொண்டு, அவரையே தங்களுடைய வாழ்நாள் பாதுகாவலராகவும் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும்  தம்பதியான பிரதானும் அவருடைய மனைவியும், மசூதியில் வசிக்கும் பாபாவிடம் பக்தி செலுத்துவது, அவர்களுடைய குடும்ப நன்மைக்காக பூஜைகள் செய்யும் ஒரு பண்டிதருக்குப் பிடிக்கவில்லை. இந்த நிலையில், அவர்களுடைய மற்றொரு மகனான பாபு உடல்நலம் குன்றி, ஆபத்தான நிலைக்கு ஆளானான்.

`பிரதான் தம்பதியர் பாபாவிடம் சென்றதால்தான் அவர்களுடைய மகனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது' என்று குற்றம் சாட்டினார் அந்தப் பண்டிதர். அன்று இரவு அவரின் கனவில் தோன்றிய பாபா, கையில் தடியுடன் மாடிப் படியில் அமர்ந்துகொண்டு, `நானே இந்த வீட்டின் பாதுகாவலன். நீ யார் என்னைத் தடுப்பது?’ என்று கடுமையாகக் கோபித்துக் கொண்டார். பண்டிதர் பயந்தே போனார். ஆனாலும், தான் கண்ட கனவைப் பற்றி அவர் பிரதானிடம் தெரிவிக்கவில்லை.

அவருடைய பூஜைகளையும் மீறி அந்தப் பையனின் உடல் நிலை மிகவும் மோசமாகவே, அந்தப் பண்டிதர் பாபாவின் படத்தின் முன்பாக நின்றுகொண்டு, `பாபா, இன்று மாலை 4 மணிக்குள் பையனின் உடல்நிலை சீரடைந்து, அவனை மாடியிலிருந்து கீழே கொண்டுவர முடிந்தால், நான் உம்மை தத்தாத்ரேயர் என்று ஒப்புக் கொள்கிறேன்’ என்று கூறினார்.

என்ன ஆச்சர்யம்?! அன்று மாலையே பையனின் உடல்நிலை சீரானதுடன், ஒரு மாறுதலுக்காக அவன் கீழே வர விரும்புவதாகத் தெரிவித்தான். சாயிநாதர் பகவான் தத்தாத்ரேயரின் அம்சமே என்று உறுதியாக நம்பிய அந்தப் பண்டிதர், அன்றுமுதல் அவரும் பாபாவை வழிபடத் தொடங்கிவிட்டார்.

பாபா, தாம் எல்லா ஜீவன்களிலும் இருப்பதாக அடிக்கடி சொல்வது வழக்கம். அவருடைய வார்த்தைகள் உண்மைதான் என்பதை உணர்த்துவதுபோல் பல நிகழ்ச்சிகள் அவருடைய சங்கல்பத்தின்படி நடைபெறவும் செய்திருக்கின்றன.

ஷீர்டியில் தார்காட் என்பவரின் மனைவி சில நாள் தங்கி இருந்தார். ஒருநாள், அவர் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தபோது, பசியால் வாடியிருந்த நாய் ஒன்று அவருக்கு அருகில் வந்து நின்றுகொண்டது. அந்த நாயைப் பார்த்த அந்தப் பெண்மணி, தன் இலையில் பரிமாறப்பட்டு இருந்த சோள ரொட்டிகளில் ஒன்றை அந்த நாய்க்குக் கொடுத்து, அது ஆவலுடன் அதைத் தின்று பசியாறுவதைப் பார்த்து மனம் மகிழ்ந்தார்.

பின்னர், அந்த அம்மையார் பாபாவைப் பார்ப்பதற்காக துவாரகாமாயிக்குச் சென்றபோது, அந்த அம்மையாரைக் கனிவுடன் பார்த்த சாயிநாதர், ``தாயே, நீ எனக்கு அன்புடன் உணவு கொடுத்தது கண்டு நான் மிகவும் சந்தோஷமடைந்தேன். எப்போதும் பசியுடன் வருபவர்க்கு இன்றைக்குப் போலவே நீ உணவளித்து வா!'' என்று சொன்னார். பாபா சொன்னதன் பொருள் அந்தப் பெண்மணிக்கு விளங்காததால், ``பாபா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் எப்போது உங்களுக்கு உணவு கொடுத்தேன்? தாங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே?'' என்று கேட்டார்.

``நீ சாப்பிட உட்கார்ந்தபோது ஒரு நாய் பசியுடன் உன்னிடம் வந்ததல்லவா? நீயும் அதற்குச் சோள ரொட்டியைத் தந்தாயே! அந்த நாய் யார் என்று நினைத்தாய்? நாய், பூனை, பன்றி என அத்தனை ஜீவன்களிலும் நானே உள்ளேன். எந்த ஜீவனிலும் நீ என்னையே காண்பாய். உன்னிடம் பசியோடு வருபவர்களுக்கு உன்னிடம் இருப்பதைக் கொடு. அது உன்னை ஜன்மஜன்மாந் தரங்களுக்கும் காப்பாற்றும்!'' என்றார் பாபா.

இப்படியாக, பாபாவுக்கும் அந்தப் பெண்மணிக்கும் நடைபெற்ற உரையாடலைக் கேட்டவர்கள் எல்லோருமே அதைக் கடைப்பிடித்தார்களா என்றால் அதுதான் இல்லை.

ஷீரடியில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்த ஒரு பெண்மணி, தினமும் துவாரகாமாயிக்குச் சென்று, பாபாவுக்கு மதிய உணவு நைவேத்தியம் செய்வாள். அடிக்கடி அவள் பாபாவிடம், தன்னுடைய விடுதிக்கு வந்து உண்ண வேண்டும் என்று வேண்டிக்கொள்வது வழக்கம். பாபாவும் `இன்று வருகிறேன், நாளை வருகிறேன்' என்று ஒவ்வொரு நாளாகத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். அந்தப் பெண்மணியும் விடாமல் பாபாவை அழைத்துக்கொண்டே இருந்தாள்.

அவளுடைய வற்புறுத்தலைத் தாங்கமுடியாமல் ஒருநாள் பாபா அந்தப் பெண்மணியிடம் தாம் அவளுடைய விடுதிக்கு வந்து உணவு உண்பதாகக் கூறினார். அதைக் கேட்டு மிகவும் சந்தோஷமடைந்த அந்தப் பெண்மணி, உடனே விடுதிக்குச் சென்று பாபாவுக்காக விதம்விதமான இனிப்புகளையும் உணவு வகைகளையும் தயாரிக்கத் தொடங்கினாள். பாபாவுக்கான உணவு என்பதால், மிகுந்த கவனத்துடன் அவள் சமையல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு நாய் அங்கே வந்தது. பாபாவுக்காகச் சமைக்கும் இடத்தில் நாய் நுழைந்துவிட்டதைக் கண்டு, அந்தப் பெண்மணி என்ன செய்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் யோசித்தாள்.

நாயை விரட்டுவதற்கு அருகில் கல்லோ, குச்சியோ இல்லாததால், அடுப்பில் எரிந்துகொண்டிருந்த கொள்ளிக்கட்டையை எடுத்து நாயின் மீது வீசினாள். எரியும் கொள்ளிக்கட்டை தன்னை நோக்கி வீசப்பட்டதைக் கண்ட நாய், குரைத்தபடியே அங்கிருந்து ஓடிவிட்டது.

பிறகு அந்தப் பெண்மணி சாயிநாதர் வருவார் என்று எண்ணியபடி நீண்டநேரம் காத்துக் கொண்டிருந்தார். சொன்னபடி பாபா வரவில்லை.
தான் சமைத்த உணவுப் பொருள்களை எடுத்துக்கொண்டு துவாரகாமாயிக்குச் சென்றவள், சொன்னபடி பாபா வராததற்காகக் கோபித்துக்கொண்டாள். மெள்ளச் சிரித்த பாபா, ``நான் உங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்று அன்புடன் வற்புறுத்துகிறீர்கள். ஆனால், நான் வரும்போது எரியும் கொள்ளிக்கட்டையை எடுத்து என் மேல் வீசுகிறீர்கள்'' என்று  குறிப்பிட்டார். அங்கிருந்தவர்களுக்கு பாபா கூறியதன் பொருள் விளங்கவில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு பாபா கூறியதன் பொருள் விளங்கியது. பாபாவிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். பாபாவும் அவளை மன்னித்து, ஆசீர்வதித்து, அவள் கொண்டு வந்த உணவுகளை ஏற்றுக்கொண்டார்.

பாபா பற்றி மேலும் தெரிந்துகொள்ள, இங்கே க்ளிக் செய்யவும்...

அடுத்த கட்டுரைக்கு