Published:Updated:

வருவாள்... அருள்வாள்... வேப்பிலைக்காரி!

வருவாள்... அருள்வாள்... வேப்பிலைக்காரி!
பிரீமியம் ஸ்டோரி
வருவாள்... அருள்வாள்... வேப்பிலைக்காரி!

பி.சந்திரமெளலி, படம்: மஹிதங்கம்

வருவாள்... அருள்வாள்... வேப்பிலைக்காரி!

பி.சந்திரமெளலி, படம்: மஹிதங்கம்

Published:Updated:
வருவாள்... அருள்வாள்... வேப்பிலைக்காரி!
பிரீமியம் ஸ்டோரி
வருவாள்... அருள்வாள்... வேப்பிலைக்காரி!

டி மாதம், அம்பிகை அவதரித்த பெருமையைப் பெற்றது. அம்பிகை பக்குவம் அடைந்ததாகச் சொல்லப் படும் மாதமும் இதுவே என்கின்றன ஞானநூல்கள்.

ஆடி என்றாலே, அது ‘அம்மன் மாதம்’ என்ற அளவுக்கு அம்பிகையின் அனைத்துக் கோயில்களிலும் விழா நடக்கும். மிக அற்புதமான இந்த மாதத்தில் அம்பிகையைக் கொண்டாடும் விதம், அம்மனின் மகிமைகள் சிலவற்றைப் படித்து மகிழ்வோம்; படிப்பதுடன் நின்றுவிடாமல், அருள் சுரக்கும் அவளின் ஆலயங்களுக்கும் நேரில் சென்று, அம்மையைத் தரிசித்து வழிபடுவோம். நம் இல்லத்திலும் உள்ளத்திலும் நிரந்தரமாகக் குடிகொள்ளும்படி அவளை வேண்டிக்கொள்வோம்.

`நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்... நல்லன எல்லாம் தரும்...’ என்று அபிராமிப் பட்டர் பாடியதற்கேற்ப, நல்ல எண்ணங்களை நம்முள் விதைத்து நாளும் நலமுடன் வாழ அருளும்படி அவளைப் பிரார்த்திப்போம்.

நமது இந்தப் பிரார்த்தனையால் மனம் கசிந்து நம் இல்லம் தேடி வருவாள், அருள் மழை பொழிவாள்... அந்த வேப்பிலைக்காரி!

வருவாள்... அருள்வாள்... வேப்பிலைக்காரி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புன்னை வனத்தில் புற்றின் வடிவில்!

‘‘மன்னா! மாரியான நான் புன்னை வனத்தில், புற்று வடிவில் அருவமாக இருக்கிறேன். தஞ்சாவூருக்கு அருகிலிருக்கும் என்னை வந்து தரிசனம் செய். உனக்கு நலம் உண்டாகும்!’’ என்று கனவில் அம்பிகையின் கட்டளை கிடைத்தது, தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜாவுக்கு (கி.பி. 1676 முதல் 1683 வரை).

அன்னையின் ஆணைக்கு மறுப்பேது. அடுத்த சில நாள்களில் புன்னை வனத்தை அடைந்த மன்னவன், அங்கே புற்று வடிவாகக் காட்டில் மறைந்திருந்த அன்னையை வெளிப்படுத்தி, அனைவரும் தரிசிக்கும்படி செய்தார். காட்டை அழித்துப் பாதைகள் அமைத்தார். அன்னைக்குச் சிறிய கூரை அமைத்து, புன்னைநல்லூர் என்ற பகுதியையும் அன்னைக்கு அர்ப்பணித்தார்.

இங்ஙனம், மகாராஜாவிடம் சொல்லி, தன்னை வெளிப்படுத்திய அந்த அம்மன்தான், தஞ்சை- புன்னைநல்லூர், மகா மாரியம்மன். இந்த அம்மையின் அற்புதம், வெங்கோஜி மகாராஜாவின் மைந்தன் துளஜ ராஜாவின் காலத்திலும் தொடர்ந்தது.

துளஜ ராஜாவின் மகள் அழகி. சுறுசுறுப்பானவள். அவளுக்கு அம்மை நோய் கண்டு, கண் பார்வை குறையத் தொடங்கியது. இதனால், கடுந்துயரில் மூழ்கினார் மன்னர். செய்வதறியாமல் தவித்த மன்னரின் கனவில் ஓர் அந்தணச் சிறுமியாகத் தோன்றினாள் மாரி.

‘‘துளஜ மன்னா... புன்னைநல்லூரில் இருக்கும் என் சந்நிதியை உன் மகளுடன் வந்து தரிசனம் செய். உன் மனத்துயர் தீரும்!’’ என்று அருளினாள். மன்னர், மறு நாளே மகளுடன் மாரியம்மன் சந்நிதிக்கு விரைந்தார். உள்ளம் உருகத் துதித்து வேண்டினார். குருக்கள் தீபாராதனை காட்டிக்கொண்டிருந்த நேரம், மன்னர் மகளின் கண்களில் இருந்து ஏதோ கருகிப்போய்க் கீழே விழுந்தது. அதே நொடியில், ‘‘அப்பா... கண் தெரிகிறது!’’ என மகிழ்ச்சியில் கூக்குரலிட்டாள் அவள்.

சந்தோஷத்தில் சின்னக் குழந்தை போலத் துள்ளிக் குதித்தார் மன்னர். அம்மனின் அருளை முழுமையாகப் புரிந்துகொண்டார். அவரின் அந்த உள்ளத்தின் வெளிப் பாடாக கூரைக் கொட்டகையை நீக்கி, அழகிய சிறு கோயில் ஒன்றைக் கட்டினார்.

மன்னருக்கு மேலும் ஒரு விருப்பம் இருந்தது. ‘புற்று வடிவில் அருள் புரியும் இந்த அம்பிகைக்கு, புது வடிவம் கொடுக்க வேண்டும்!’ என எண்ணினார் அவர். அப்போது அம்பிகையே அனுப்பிவைத்ததைப் போல, சத்குரு சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகள் அங்கு வந்தார். அந்த மகா ஞானி, மன்னரின் விருப்பத்தை உணர்ந்து புற்று மண்ணைக் கொண்டே மகா மாரியம் மனின் திருவடிவத்தை அமைத்தார். அத்துடன் சத்குரு சக்கரத்தையும் பிரதிஷ்டை செய்தார்.

சகலவிதமான துன்பங்களிலிருந்தும் நம்மைக் காத்து ரட்சிக்கும் புன்னைநல்லூராளுக்கு ஆடி மாதம் இரண்டாவது வாரம் தொடங்கி புரட்டாசி மாதம் இரண்டாவது வாரம் வரை பெருவிழா நடைபெறும். இந்த விழாவில் நாமும் கலந்துகொள்வோம், அம்மனின் அருள்பெற்று வருவோம்.

வருவாள்... அருள்வாள்... வேப்பிலைக்காரி!

`வந்தது சாட்சாத் கோமதிதான்!’

ங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா. பெருங் கூட்டம் கூடியிருந்தது. இரவு நேரம். தெற்கு ரத வீதியில் இருக்கும் தபசு மண்டபத்தில், பல்லக்கில் எழுந் தருளியிருந்தாள் உற்சவ மூர்த்தியான அம்பிகை. அவள், திருக்கல்யாண அலங்காரத்தில் இருந்ததால், சர்வாபரண பூஷிதையாகத் திகழ்ந்தாள். அம்பிகையின் அருகில் குப்புசாமிப் பட்டர் களைப்புடன் உட்கார்ந் திருந்தார்.

அப்போது, சங்கரன் கோவிலுக்கு அருகில் உள்ள அரியூரைச் சார்ந்த கணக்கர் ஒருவர், பட்டரைப் போல வேடம் அணிந்து பல்லக்கை நெருங்கினார். அவரைப் பார்த்த எவருக்குமே சந்தேகம் ஏற்படவில்லை! பல்லக்கை நெருங்கிய வேடதாரி, அதில் ஏறி அம்மனின் காதுகளை அலங்கரிக்கும் வைரத் தோடு களைக் கழற்றிக்கொண்டு, கும்பலோடு கும்பலாகக் கலந்து மறைந்தார்.

அப்போது, அசதியுடன் பல்லக்கில் சாய்ந்திருந்த குப்புசாமிப் பட்டரை, எட்டு வயதுச் சிறுமி ஒருத்தியின் மென்மையான கரங்கள் உலுக்கி எழுப்பின. அரக்கப் பரக்கக் கண் விழித்து எழுந்த குப்புசாமிப் பட்டரின் எதிரில் ஒளி மயமாக அந்தக் குழந்தை நின்று கொண்டிருந்தாள். ‘என்ன? ஏது?’ என்று கேட்பதற்குமுன், அவளாகவே பரபரப்புடன், ‘‘மாமா... மாமா... என் தோடுகளை ஒருவன் திருடிக்கொண்டு போகிறான். வா, வந்து அவனைப் பிடி!’’ என்று அவரின் கைகளைப் பிடித்து இழுத்தாள்.

குப்புசாமி பட்டர், மந்திரத்தில் கட்டுண்டவர் போல சிறுமியைப் பின்தொடர்ந்தார். சற்றுத் தூரம் சென்றதும், அந்த வேடதாரியைச் சுட்டிக்காட்டினாள் சிறுமி. சற்றும் யோசிக்கவில்லை குப்புசாமிப் பட்டர். ஓடிப்போய், அந்த வேடதாரியின் மூடிய கையைப் பற்றி இழுத்துக் கடித்தார். வேடதாரி, திமிறினாரே தவிர, எதிர்த்துத் தாக்கவில்லை. பிரமைப்பிடித்ததுபோல் அப்படியே நின்றுவிட்டார்! அதற்குள் கூட்டம் கூடிவிட்டது. வேடதாரியின் கையைப் பிரித்துப் பார்த்தால், அம்மனின் ஆபரணம் ஜொலித்தது.

கூட்டம் ஒன்றுகூடி அந்த வேடதாரியை அடிக்கத் தொடங்கியது. அவரும், தான் செய்த தவறினை உணர்ந்தார். அதற்கான தண்டனையை அனுபவிப்பதே சரி என்று மெளனமாக ஏற்றுக்கொண்டார், மக்கள் தந்த தண்டனையை.

குப்புசாமிப்பட்டர் அந்தச் சிறுமியைத் தேடினார். ஆனால், மாயமாகிவிட்டிருந்தாள் அந்த மாயக்காரி! ஆமாம், குழந்தையாய் வந்து திருடனைக் காட்டிக் கொடுத்தது சாட்சாத் கோமதியம்மனே என உணர்ந்து சிலிர்த்தனர் குப்புசாமிப்பட்டரும், அவர் மூலம் விஷயத்தைக் கேள்விப்பட்ட கூட்டத்தாரும்!

இன்றும் தொடர்கின்றன அன்னை கோமதியின் அருளாடல்கள்.

அம்மனின் அனுமதி பெற்றே அனைத்தும் நிகழும்!

சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள குமாரசாமிபட்டியில் கோயில் கொண்டிருக்கிறாள், அருள்மிகு எல்லைப் பிடாரியம்மன்.

வருவாள்... அருள்வாள்... வேப்பிலைக்காரி!

சேர மன்னரால் கட்டப்பட்ட இந்த ஆலயம், காலப்போக்கில் சிதிலம் அடைந்து, கோயில் இருந்த சுவடே தெரியாமல் போனதாம்! சுமார் 300 வருடங்களுக்கு முன்பு, ஒருநாள்... ஊருக்கு அருகிலுள்ள ஒரு கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தனர் குமாரசாமிபட்டி ஊர்க்காரர்கள். அப்போது, திடீரென பாம்பு ஒன்று, எதிரில் சீறி நிற்பதைக் கண்டு அலறியடித்து ஓடினர். அப்படி ஓடுகிற போது, ஏதோ ஒன்று இடறிவிட, அனைவரும் தடுமாறி விழுந்தனர்.

பிறகு எழுந்து வீடு வந்து சேர்ந்தனர். அன்றிரவு, ஊர்ப் பெரியவரின் கனவில் தோன்றிய அம்மன், ‘ஊரின் எல்லையில், நீங்கள் விழுந்த இடத்தில் புதைந்துகிடக்கிறேன். அங்கே எனக்குக் கோயில் கட்டி வழிபட்டால், உங்களைச் செல்வச் செழிப்புடனும் நோய் நோடியின்றியும் வாழ வைக்கிறேன்’ என அருளினாள். அதன்படியே குறிப்பிட்ட இடத்தில் அம்மன் விக்கிரகத்தைக் கண்டெடுத்த ஊர்மக்கள், அன்னைக்கு அழகிய ஆலயம் அமைத்து, எல்லைப் பிடாரியம்மன் எனத் திருநாமம் சூட்டி, வழிபடலாயினர். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் இந்தக் கோயிலுக்கு வந்து அம்மனைத் தரிசித்து வழிபட்டதாகக் கூறுகிறார்கள்.

புதிதாகத் தொழில் துவங்குவோர், மகன் அல்லது மகளுக்குத் திருமண வேலையைத் துவக்குவோர், புதிய வாகனம் வாங்குவோர் இந்தக் கோயிலுக்கு வந்து எல்லைப்பிடாரியம்மனைப் பிரார்த்தித்துவிட்டே துவக்குகின்றனர்! தடைப்பட்ட திருமணம் மற்றும் தோஷத்தால் கலங்கித் தவிப்பவர்கள், ஒன்பது வெள்ளிக் கிழமைகள் தொடர்ந்து வந்து, அம்மனுக்கு நெய் தீபமேற்றினால், விரைவில் திருமணம் நடைபெறும்; இல்லறம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

மதுரையில் நிகழ்ந்த அற்புதம்!

அம்மனின் அருளைச் சொல்லும் ஒரு சம்பவம் மதுரையில் நிகழ்ந்தது. அது, ஆங்கிலேயர்கள் நம் தேசத்தை ஆண்ட காலம். ஒரு நாள் நள்ளிரவு `ஹோ’வென கொட்டித் தீர்த்தது பெருமழை. தமது வீட்டுக்குள் இருந்தபடி சாளரத்தின் வழியே மழையை ரசித்துக் கொண்டிருந்தார் அந்த ஆங்கிலேய அதிகாரி. அப்போது வாயில் வழியே சிறுமி ஒருத்தி வேகமாக ஓடிவருவது தெரிந்தது. `அவள் யார், என்ன விஷயம்...' என்று அதிகாரி  யோசிப்பதற்குள் சிறுமி வீட்டுக்குள் நுழைந்துவிட்டாள்.

சொட்டச்சொட்ட நனைந்தபடி வந்தவள், அதிகாரியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தாள். அடுத்த கணம் வீடு இடிந்து விழுந்தது. அதற்கடுத்த கணம், அந்தச் சிறுமி மறைந்து போனாள். அதிகாரி சிலிர்த்துப்போனார். தன்னைக் காப்பாற்றியது மீனாட்சியே என்பதை உணர்ந்தவர், ஏராளமான ஆபரணங்களை மீனாட்சிக்குச் சமர்ப்பித்தார். அவை இன்றும் மீனாட்சி கோயிலில் உள்ளன. அந்த அதிகாரியை - பீட்டர் பாண்டியன் என்பார்கள்.

மீனாட்சியம்மன் கோயில் மடைப் பள்ளியில் பணி புரிந்த ஸ்ரீநிவாஸன், ஸ்ரீமீனாட்சியின் அருளால், மீனாட்சி துதிப் பாடல்களைப் பாடியுள்ளார். இவருக்கு பதிலாக அம்பிகையே சமைத்ததுடன், வெளிச்சத்துக்காக தனது மூக்குத்தியை பயன் படுத்தியதாகவும் கூறப்படுவது உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism