Published:Updated:

18 ஆயிரம் திருமறைப் பாடல்களுடன் வடை பாயச விருந்து! - சாரதா நம்பிஆரூரன் வீட்டு ஆன்மிகம் #WhatSpiritualityMeansToMe

18 ஆயிரம் திருமறைப் பாடல்களுடன் வடை பாயச விருந்து! - சாரதா நம்பிஆரூரன் வீட்டு ஆன்மிகம் #WhatSpiritualityMeansToMe
18 ஆயிரம் திருமறைப் பாடல்களுடன் வடை பாயச விருந்து! - சாரதா நம்பிஆரூரன் வீட்டு ஆன்மிகம் #WhatSpiritualityMeansToMe

சாரதா நம்பிஆரூரன் அரசுக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆன்மிகச் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்களில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர். மறைமலை அடிகளாரின் மகள் வயிற்றுப் பேரன் நம்பி ஆரூரனை மணந்தவர். 
ஆன்மிகம் என்பது என்ன... அவரது பார்வையைப் பகிர்ந்துகொள்கிறார். 

``கடவுள் நம்பிக்கை என்பது, தனிப்பட்ட விஷயம். இறைவனை வழிபடுகிறவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்பதோ, அதிகமாகக் கடவுள் வழிபாடு செய்யாதவர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்ல என்பதோ சரியல்ல. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களில் பலரும், எவருக்கும் தீங்கு நினைக்காமல் அறவாழ்க்கை வாழ்வதும் உண்டு. கடவுள் நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு சோம்பித் திரிபவர்களும் உண்டு. 

என் கணவர் நம்பி ஆரூரன் `செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமையே நமது செல்வம்' என்றிருப்பார். கோயில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தால்கூட, நான் ஆன்மிகப் பேச்சாளர் என்பதால் சிறப்பு தரிசன வழியில் செல்ல கோயில் நிர்வாகத்தினர் எங்களை அழைப்பார்கள். ஆனால், அதை அவர் மறுத்துவிட்டு நீண்ட வரிசையிலேயே என்னை அழைத்துப்போவார்.

``நாம் வரிசையில் இருக்கும்போது, வேறு நபர்கள் குறுக்கே போனால் நாம் எப்படி மனத்துக்குள் வசை பாடுவோமோ அப்படித்தான் நம்மையும் மற்றவர்கள் வசைபாடுவார்கள்'' என்று கூறுவார். நான் அடிக்கடி திருப்பதிக்கு மலையேறி வருவதாக வேண்டிக்கொள்வேன். ஆனால், நான் மலையேறி முடிப்பதற்குள், மற்றவர்கள் இரண்டுமுறை மலையேறி இறங்கிவிடுவார்கள். இப்படியெல்லாம் "ஏன் உன்னை வருத்திக்கொள்கிறாய்?" என்று கேட்பார். வீட்டிலிருந்தபடியே சண்முகக் கவசம் படிப்பார். எளிய முறையிலான பக்தியே போதுமென்பார். அவரது இந்தக் குணம் எனக்குள்ளும் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்தது. 

திருமணத்துக்கு முன்பு எனது பெற்றோருடன் நிறைய கோயில்களுக்குச் சென்றுள்ளேன். எட்டுக்குடி முருகன் கோயிலுக்குச் செல்வோம். அங்கிருந்து நேராக வேளாங்கண்ணிக்குப் போவோம் நாகூர் தர்காவுக்குப்போய் வணங்குவோம். ஆனால், திருமணத்துப் பிறகு எனது வழிபாட்டில் மாற்றம் ஏற்பட்டது. சிவ வழிபாட்டில் எனது ஈடுபாடு அதிகமானது. அதுவும் மயிலை கபாலீஸ்வரர் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

குறிப்பாக எனது மாமனார், பன்னிரு திருமறைகள் அனைத்தையும் ஓதுவார். அதிலிருக்கும் 18 ஆயிரம் பாடல்களையும் பாடி முடிக்க கிட்டதட்ட 3 மாதங்களாகும். பாடி முடித்ததும் அன்றைய தினம் வடை பாயசம் ஆகியவற்றுடன் வீட்டில் விருந்து நடக்கும். சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டு எனக்குள் பெரும் மனமாற்றத்தைக் கொண்டுவந்தது.

திருமணமான புதிதில் ஒருமுறை மயிலை கபாலீஸ்வரர் கோயில் திருவிழா... 1967-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அதிகார நந்தியின் பவனி சீரும் சிறப்புமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த அதிகாலை நேரத்தில் அந்தத் திருக்காட்சி எனக்குள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தி என் கண்கள் கண்ணீர் வடித்தன. 

`காதலாகிக் கசிந்து கண்ணில் நீர்மல்கி' என்பதன் பொருளை நான் உணர்ந்த தருணம் அது. அப்போது முதல் கடந்த 50 ஆண்டுகளாக நான் எங்கிருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்குத் திருமயிலைக்கு வந்து விடுவேன். அன்றைய தேதியில் பட்டிமன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொள்ளவும் மாட்டேன். 

அறுபத்து மூவர் விழா நாளும் என் நெஞ்சுக்கு நெருக்கமான நாளாகும். 63 நாயன்மார்களும் நம் தமிழ்மண்ணில் பிறந்தவர்கள். `பெரிய புராணம்' நம் சைவ நெறிமுறைகளுக்கு ஆதாரமான ஆகச் சிறந்த வரலாற்றுப்பதிவு. வேட்டுவர், குயவர் எனச் சாதிப்பாகுபாடு இல்லாமல் சிவசிந்தனையால் மட்டுமே ஈசனின் அருளைப் பெற்றவர்கள். அவர்களையும் அவர்களுக்கான விழாவையும் நம் தமிழையும் கொண்டாடுவதையே நான் பெற்ற பேறாக நினைக்கிறேன்'' என்கிறார் பக்திப் பெருக்குடன்.