Published:Updated:

``சபரிமலை போவேன்... தவக்கால விரதமிருப்பேன்... ரம்ஜான் நோன்பும் இருப்பேன்"- நடிகர் ராதாரவி! #WhatSpiritualityMeansToMe

நம்புறவங்களுக்கு தெய்வம் இருக்கு... நம்பாதவங்களுக்கு இல்லை...- நடிகர் ராதாரவியின் ஆன்மிகம்!

``சபரிமலை போவேன்... தவக்கால விரதமிருப்பேன்... ரம்ஜான் நோன்பும் இருப்பேன்"- நடிகர் ராதாரவி! #WhatSpiritualityMeansToMe
``சபரிமலை போவேன்... தவக்கால விரதமிருப்பேன்... ரம்ஜான் நோன்பும் இருப்பேன்"- நடிகர் ராதாரவி! #WhatSpiritualityMeansToMe

டிகர், அரசியல்வாதி, பேச்சாளர், திரைப்பட டப்பிங் யூனியன் தலைவர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் நடிகர் ராதாரவி.  
தி.மு.க, அ.தி.மு.க எனத் தமிழகத்தின் திராவிடக் கட்சிகள் இரண்டிலுமே பயணித்தவர். கருணாநிதி, ஜெயலலிதா என இருவரின் அன்புக்கும் பாத்திரமானவர். ஆனாலும், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் வெளிப்படையாகப் பேசும் ஆன்மிகவாதி.
நாம் தொடர்புகொண்டபோது, ``கார்த்திகை தீபத்துக்கு முன்னாடியே அண்ணாமலையாரைப் பார்த்துடலாம்'னு திருவண்ணாமலைக்கு வந்திருக்கேன்..." என்றவரிடம் அவரது ஆன்மிகம் குறித்து கேட்டோம். 

``எங்க அம்மா தனலட்சுமி எல்லாக் கோயிலுக்கும் போவாங்க. எல்லா விரதமும் இருப்பாங்க. அது எங்க அப்பா எம்.ஆர்.ராதாவுக்கும் தெரியும். நான் சின்ன வயசிலிருந்தே சாமி கும்பிடுக்கிட்டுத்தான் இருக்கேன். நான் படிச்சதெல்லாம் ஆங்கிலோ இந்தியன் ஸ்கூல்தான். 
தினமும் பிரேயர்ல சொல்லுவோம். `In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen. Our Father, Who art in Heaven, hallowed be Thy name; Thy Kingdom come,Thy will be done on earth as it is in Heaven.'

45 வருஷமாச்சு. கரெக்டா சொல்றேன். பார்த்தீங்களா?'' என்றவர், மேலும் தொடர்ந்தார்.

``எங்கள் பள்ளியில் கிறிஸ்தவர்களுக்கு `கத்தோலிக்க வகுப்பு' ஒன்று வாரம் ஒருமுறை நடக்கும். மற்றவர்களுக்கு, `நீதி போதனை வகுப்பு' நடக்கும். அங்கு கேட்ட கதைகள்ல பலவற்றைத்தான் நான் அரசியல் மேடைகளில் சொல்லி வருகிறேன். ஒவ்வொரு கதையிலும் நீதியும் அறமும் கலந்திருக்கும். 

நான் சபரிமலைக்கு 1969 -லிருந்து தொடர்ந்து 37 வருஷம் போயிருக்கேன். இப்போதான் போக முடியறதில்ல. ஒரே வருஷத்துல ரெண்டு மூணு முறைகூட போயிருக்கேன். எங்க அப்பா இறந்து போன 1979-ம் வருஷத்துலகூட மாலை போடாம, 18-ம் படியேறாம போய் சாமி கும்பிட்டு வந்தேன். 

அதேமாதிரி கிறிஸ்துவர்களின் `புனிதவெள்ளி'க்கு முன்பாக வரும் `லெந்து நாள்களில் (தவக்காலம்) நான் விரதமிருப்பேன். இஸ்லாமியர்கள் `ரம்ஜான் நோன்பு' இருக்கும்போது நானும் நோன்பு இருப்பேன்.

அதுக்காகப் பகுத்தறிவையும் சுயமரியாதையையும் எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்கமாட்டேன். அது இருந்ததால்தான் தமிழகத்தின் முதலமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதானு மூணுபேரின் அன்பையும் பெற முடிஞ்சுது.

எங்க அம்மா, நான் உயிரோட பார்த்த தெய்வம். அவங்க இறந்தன்னைக்கே 60 சதவிகித ராதாரவி செத்துட்டான். இப்போ நீங்க பார்க்கிறது வெறும் 40 சதவிகிதம்தான். எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும், `கவலைப்படாதடா, தெய்வம் துணையும் இருக்கும்'னு ஆறுதல் சொல்லுவாங்க. நம்மையும் மீறிய ஒரு சக்திதான் நம்மை வழிநடத்துது. அதை நம் வாழ்க்கையில நடக்கிற சம்பவங்கள் மூலமாகவும் ஜோதிடம் மூலமாகவும் நாம தெரிஞ்சிக்கலாம். 

ஒரு முறை, இப்போ நான் இருக்கிற வீடு பேங்க்ல வாங்கின கடனால் ஜப்திக்கு வந்திடுச்சு. உண்மையில் வீட்டுக்காக வாங்கினது 7 லட்சம்தான். படம் தயாரிப்பதற்காக வாங்கினது 20 லட்சம். ஆனா, ரெண்டையும் ஒண்ணா சேர்த்து வட்டிக்கு வட்டி போட்டு ஒண்ணே கால் கோடி கட்டணும்னு சொல்லிட்டாங்க. வீட்டுக் கதவுல நோட்டீஸ் ஒட்டிட்டுப் போயிட்டாங்க. இந்த ஜப்தியை நிறுத்தணும்னா மத்திய அமைச்சர் கடிதம் இருந்தால்தான் நிறுத்த முடியும். 

அப்போ முதல்வராக இருந்த ஜெயலலிதாம்மா, `திருவான்மியூர்ல எனக்கு ஒரு வீடு, கார் பார்க்கிங்குடன் இருக்கு. அங்க போய் இருந்துக்கங்க'னு சொன்னாங்க. எனக்கு மனசே ஆகலை. அப்பா இருந்த வீடு. 

அப்போ என் நண்பர் நந்தகுமார் ஜோதிடர், `வீடு கையை விட்டுப்போகாது, கவலைப்படாதே. நீ இருக்கிற வேற ஒரு சொத்தை விற்றுவிடு'னு சொல்லி தைரியம் கொடுத்தார். அதுக்கும் இந்த ஜப்திய உடனே நான் நிறுத்தியாகணும்.

நண்பர் கலைப்புலி தாணு மூலமா ஜப்தியை நிறுத்திட்டேன். மும்பை டிரிப்யூனலுக்கு கேஸ் வந்துச்சு. நீதிபதியாக இருந்த அந்த அம்மா, வாய்மொழியாக நிறுத்துறதுக்கு உத்தரவிட்டிருந்தாங்க. ஆனால், அது டாக்குமென்டா இருந்தாதான் நிறுத்த முடியும்னு சொல்லிட்டாங்க.

நாங்க போன நேரம் ஜட்ஜம்மா ஒரு லீவுல வேறு ஊருக்குப் போக கிளம்பிக்கிட்டிருந்தாங்க. விஷயத்தைச் சொன்னோம். அங்கேய கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டு தன்னுடைய காருக்குப் போனாங்க. ஆனா, போகும்போதே மயங்கி விழுந்து இறந்துட்டாங்க. இதை என்னனு சொல்றது. அதனால தெய்வம் நம்புறவங்களுக்கு உண்டு. நம்பாதவங்களுக்கு இல்ல அவ்வளவுதான். காலையில குளிச்சதும் என் தாய், தந்தையை வணங்குவேன். வெளியூர் போனாலும் அம்மா, அப்பா படத்தைக் கூடவே எடுத்துக்கிட்டுப் போவேன்... அவங்களுக்கு அடுத்து எல்லா தெய்வங்களையும் கும்பிடுவேன். சென்னையில திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கும் தியாகராய நகர் அகத்தியர் கோயிலுக்கும் போவேன். சனிக்கிழமை அம்மாவுக்காகவும் திங்கள்கிழமை அப்பாவுக்காகவும் விரதம் இருப்பேன்... '' எனும் ராதாரவி வீடு முழுவதும் புத்தர் சிலைகளையும் வைத்து வணங்கி வருகிறார்.