ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 20

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - பாகம் 2 - 20

பாண்டியன் மாளிகையில்...

தி
க்கெட்டும் புகழ் பரவிக்கிடக்கும் மாமதுரையின் இதய பாகமாகத் திகழும் பாண்டியன் மாளிகையின் மீது குறைவின்றி தன் பொன்னொளியை வீசிக்கொண்டிருந்தான் மாலைச் சூரியன். வெம்மை குறைந்துவிட்ட ஆதவனின் கிரணங்கள் தங்களைத் தொட்டு மீள்வதால்... பொன்முலாம் பூசிய தகடுகளால் அழுகுப்படுத்தப்பட்ட அந்த மாளிகையின் மாடக் கோபுரங்கள் அனைத்தும் வழக்கத்தைவிடவும் அதிகமாய் ஒளிர்ந்தன!

சிவமகுடம் - பாகம் 2 - 20

அந்த மாடங்கள் அனைத்தையும்விட உயரமானதான மகுட விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த கயற்கொடி, வைகையில் தோய்ந்தெழுந்து விசையுடன் வந்து வீசிய பெருங்காற்றின் காரணமாக அதிவேகமாக படபடத்தது. வைகை தீரத்தின் அந்தப் பெருங்காற்று, மாளிகைக்குள்ளும் புகுந்து அங்கிருந்த பைங்கிளியின் மேனியையும் பதம் பார்த்ததுபோலும்!

அதனால்தான் என்னவோ `கீச்... கீச்...’ என்று குரலெழுப்பியபடி, அதுவரையிலும் தான் அமர்ந்திருந்த தோரண மாடத்திலிருந்து  கிளம்பி, சிறகடித்துப் பறந்து வந்து, பாண்டிமாதேவியாரான  மங்கையர்க்கரசியாரின் மடியில் வந்து தஞ்சம் புகுந்தது. 

மாலை நெருங்கும் நேரமாதலால், மகாராணி யார் வீற்றிருந்த அந்த அறையில் ஏற்றி வைக்கப் பட்டிருந்த விளக்குகளையும் வைகைக் காற்று விட்டுவைக்கவில்லை; சுழன்று வீசி தீபச் சுடர்களை அணைத்ததோடு, சாளரங்களின் திரைச் சீலைகளையும் அலைக்கழித்தது. 

சிவமகுடம் - பாகம் 2 - 20சிறிதும் தாமதிக்காமல் சுடர்களை மீண்டும் ஏற்றிவைத்த சேடிப்பெண்கள், மீண்டும் அவை அணைந்துபோகாதபடி உரிய சாதனங்களால் காற்றைத் தடுத்து காப்பு செய்தார்கள். அதற்குள் அந்தக் கிளி, தேவியாரின் மடியிலிருந்து அவரின்  இடது தோளுக்குத் தாவியிருந்தது!

பஞ்சணையில், ஒரு பக்கமாகச் சாய்ந்து அமர்ந்திருந்த பாண்டிமாதேவியார், தமது இடது திருக்கரத்தால் அந்தக் கிளியை வாஞ்சையோடு தடவிக்கொடுத்தபடி, எதிரில் அமர்ந்திருந்த  இளங்குமரனின் விளக்க விவரிப்புகளில் மனதை லயிக்கவிட்டிருந்தார்.

தான், தன் தந்தையின் ஆணைப்படி வைகை தீரத்துக்கு விஜயம் செய்ததில் தொடங்கி, அரண்மனைச் சதுக்கத்தில் பரிசுப் பொருளைப் பறிகொடுத்தது, பின்னர் அது குலச்சிறையார் மூலம் குறத்திப்பெண்ணிடம் கைமாறிய சம்பவம், சிறைப்பட்டிருந்த நம்பிதேவனை மீட்க நடத்திய போராட்டம்,  மீண்டும் மாமன்னரிடம் சிறைப் பட்டு, பிறகு அவராலேயே விடுவிக்கப்பட்டது... என அனைத்தையும் ஒன்றுவிடாமல் விவரித்தான் இளங்குமரன். மேலும், வனப்புறத்தில் மரணக் குழியில் விழுந்துவிட்ட தன்னைப் பாண்டிமா தேவியார் காத்தருளியதையும் மறக்காமல் குறிப்பிட்டான். அத்துடன், நடந்துமுடிந்த சம்பவங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புமுடிச்சுகளோடு திகழ்வதாகவும் தனது கருத்தைச் சொன்னான்.

அத்துடன் அவன் நிறுத்தியிருக்கலாம். ஆனால், எப்போதுமே ராஜாங்கக் காரியங்கள் குறித்து தன் மனதில் எழுவதையெல்லாம்  அப்படியே மகா ராணியாரிடம் கொட்டிவிடும் இளங்குமரனுக்கு,  இப்போதும், தன் மனதில் எழுந்துவிட்ட  யூகத்தை அவரிடம் தெரிவிக்காமலிருக்க இயலவில்லை.

நடந்தவை அனைத்துக்கும் `இதுதான் காரணம்... இன்னார்தான் காரணம்...' என்று ஆன் தனது யூகத்தை வெளிப்படுத்தியதும், சட்டென்று இறுகியது மகாராணியாரின் திருமுகம்.

அதுவரை, பாண்டிமாதேவியாரின் இதழ்களில் அறக்கருணையோடு தவழ்ந்து கொண்டிருந்த குறுநகை மறைய, அவரின் கண்களில் சீற்றமாக வெளிப்பட்டது மறக்கருணை!

`காரணம் இன்னார்தான்'  என்று இளங்குமரன் அந்தப் பெயரை உச்சரித்ததும் பெரும் ஆவேசத்துக்கு ஆளானார் பாண்டிமாதேவியார்.   இளங்குமரனைத் தவிர்த்து வேறு எவரேனும் அப்படிச் சொல்லியிருந்தால், அங்கேயே உயிரை  இழந்திருப்பார்கள்!

பஞ்சணையிலிருந்து துள்ளியெழுந்த தேவியார், அதேவேகத்துடன் ஆணையிட்டார்...

‘‘இளங்குமரா போதும்... நீ புறப்படலாம்!’’

அச்சம் என்பதையே அறிந்திராத இளஞ் சிங்கமான அந்த வீர இளைஞன், தேவியாரின் சீற்றத்தைக் கண்டு ஒரு கணம் நடுங்கித்தான் போனான். தன் அன்னையாகவே கருதிய பாண்டிமாதேவியாரிடமிருந்து, அப்படியொரு சீற்றம் வெளிப்படும் என்று அவன் எதிர்பார்க்க வில்லை. உள்ளுக்குள் புகுந்த அச்சம், அவன் எழில்முகத்தில் வாட்டமாய் வெளிப்பட்டதை அவனால் தவிர்க்கஇயலவில்லை.

மிகத் தளர்வுடன் பாண்டிமாதேவியாரைப் பணிந்து அங்கிருந்து நகர முற்பட்டவனை தடுத்து நிறுத்தியது, மீண்டும் ஒலித்த தேவியாரின் குரல்.

‘‘இளங்குமரா நில்!’’

- இப்போது, தேவியாரின் குரலில் கனிவும் கலந்திருந்ததை உணர்ந்த இளங்குமரன், மெள்ள திரும்பி தேவியாரை நோக்கினான்.

சிவமகுடம் - பாகம் 2 - 20

‘‘புறப்படுமுன், உன் மேல் வஸ்திரத்தை இடைக் கச்சையாக மாற்றிக் கட்டிக்கொள்’’ என்று கூறிவிட்டு, வேகவேகமாக அங்கிருந்து நகர்ந்தார்.

அவர் அப்படிச் சொன்னதற்குக் காரணம் புரியாமல் சில கணங்கள் குழம்பி நின்றான் இளங் குமரன். பின்னர், சற்றுமுன் பாண்டிமாதேவியார் வெளிப்படுத்திய சீற்றத்தை எண்ணி உள்ளுக்குள் கோபம் எழ, `தேவியார் சொன்னதைச் செய்யப் போவதில்லை’ எனும் தீர்மானித்துக்கொண்டான்.

அதுமட்டுமின்றி, கருநிறத்திலான தனது மேல் வஸ்திரத்தை, மார்பில் அகலமாய் படரும்விதம் நெகிழ்த்திவிட்டுக்கொண்டு,  நகர முற்பட்டான்.

மறுகணம் `கீச்... கீச்...’ என்று சத்தம் எழுப்பியபடி, நாலாபுறமுமிருந்து அவன் கண்களை நோக்கி ஆவேசத்துடன் பறந்து வந்தன பைங்கிளிகள்!

வாகீசர் பதிகம்...

மெ
ள்ள மெள்ள சந்தியாவேளை அணுகிக் கொண்டிருக்க, வழிபாட்டுக்கான ஏற்பாடுகளில் முனைந்திருந்தார் குலச்சிறையார்.

தேக்கெனத் திகழும் அவரின் தேகம், சிவ பூஜை என்றால் தும்பைப் பூவாகக் குழைந்துபோகும். `தும்பைப் பூ' என்று வர்ணித்ததற்கு வேறு காரணமும் உண்டு!

எப்போதும் தனது பதவியின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் விதம் வண்ண ஆடைகளை அணியும் பேரமைச்சர், சிவ பூஜை என்றால் வெண்ணிற ஆடைகளுக்கு மாறிவிடுவார்.

வெண்மை தூய்மையைக் குறிப்பது. சிறிது கரை பட்டாலும் கண்ணுக்குக் காட்டிக் கொடுத்துவிடும். அரனாரைப் பூசிக்கும் உள்ளமும் அப்படியே இருக்கவேண்டும் என விரும்புவார் அவர். வெள்ளை வஸ்திரங்களோடு, அவர் மேனியெங்கும் திகழும் வெண்ணீறும், தீபம் காட்டும் வேளையில், தேகம் குறுக - கண்கள் மலர - அவரின் இதழ்களில் விரியும் புன்னகையும்... அவரைத் தும்பைப் பூவாகவே நமக்குக் காட்டும்.

இப்போதும் அப்படித்தான் வெள்ளாடை இடையுடுத்தி, மேல் வஸ்திரமாகத் திகழ்ந்ததையே இடைக்கச்சையாக இறுக்கிக் கட்டிக்கொண்டு, மிக பக்தியோடு குடலை ஒன்றிலிருந்து வில்வ இலைகளை எடுத்து, நார் கொண்டு பிணைத்து, ஆரம் தொடுத்துக் கொண்டிருந்தார்.

அவரின் எதிரில் லிங்கத் திருமேனியராக தென்னாடுடையான் திகழ, அந்தப் பரமனின் திருமுன் பலவண்ண மலர்களும், கனிகளும், தீர்த்தமும், நைவேத்திய அமுது வகைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. சுவாமியின் மேனியில் துலங்கிய மலர் அலங்காரமும், முத்து ஆபரணங்களும், திருமுடியில் திகழும் நாகாபரணமும், மென்மேலும் அழகு சேர்த்தன சுவாமிக்கு. குலச்சிறையார் வில்வம் தொடுத்து முடித்து ஆரம் ஆயத்தமாகிவிட்டால் பூசனையும் ஆரம்பமாகிவிடும்.

குலச்சிறையார், சன்னமானக் குரலில் ராகத்தோடு பதிகம் ஒன்றைப் பாடியபடி வில்வம் தொடுத்துக்கொண்டிருந்தார்

கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்...


சைவத்துக்கு மீண்டதும் திருவதிகை தலத்தை நாடிச் சென்ற வாகீசர், அங்குள்ள இறைவனை துதித்து அருளிய பதிகம் இது.   அடியார் ஒருவர் மூலம் வாகீசர் அருளிய பதிகங்களைக் கற்ற குலச்சிறையார், தருணம் வாய்க்கும் போதெல்லாம் அவற்றைப் பாடத் தவறுவதில்லை. குறிப்பாக இந்தப் பதிகம் மிகப் பிடித்தமானது குலச்சிறையாருக்கு.

வாகீசர், திருவதிகைப் பெருமானிடத்தில் தனது பிணியைத் தீர்க்கும்படி வேண்டிப் பாடியதையும், அதையேற்று அந்தப் பரமன் அவரின் பிணியைக் குணப்படுத்தி அருளிய திருக் கதையையும் கேட்டுச் சிலிர்த்திருக்கிறார் குலச்சிறையார்.

அதுமட்டுமா? வாகீசரின் தேகம் நுழைந்துவிட்ட பிணியை சிவம் நீக்கியருளியது என்றால், வாகீசர் அந்நியர்களால் தேசத்தில் புகுந்திருந்த கொடும் பிணியை அல்லவா அகற்றியிருக் கிறார். அந்த வகையில், வாகீசப் பெருமானை  மிகவும் நேசிக்கத் தொடங்கிவிட்ட குலச்சிறையாருக்கு, வாகீசர் அருளிய பதிகங்களில் சிந்தையைச் செலுத்தும்போது அந்த அடியாரை நேரிலேயே தரிசித்த பரவசம் வாய்த்ததில் வியப்பில்லைதான்.

இப்போதும், அதே பரவசத்தோடு அவர் பதிகம் பாடியபடி வில்வ ஆரத்தைத் தொடுத்துமுடிக்க, அருகிலிருந்த அனைவரும் சிவபூசையை தரிசிக்க ஆயத்தமானார்கள். அதேநேரம் வாயிற்புறத்தில் புரவியொன்று நுழையும் சத்தம்!

அதனால் சலனப்படாத குலச்சிறையார், மெள்ள எழுந்து சென்று பொன்னார்மேனியனைப் பணிந்து அவருக்கு வில்வ ஆரத்தைச் சமர்ப்பித்து திரும்பிய வேளையில், பெரும் பதற்றத்துடன் உள்ளே நுழைந்த வீரன் ஒருவன், பேரமைச்சருக்கு சிர வணக்கம் செய்தான். அத்துடன், தான் கொண்டு வந்த ஓலையை அணுக்கர் ஒருவர் மூலம் பேரமைச்சரிடம் சமர்ப்பித்தான்.

மாமன்னர் கூன்பாண்டியரின் ஆணையாய் விரிந்த அந்த ஓலையின் தகவல், சிவ துர்க்கத்தில் பேராபத்தில் சிக்கிக்கொண்ட பெண்ணொருத்தியைக் காப்பாற்றப் பணித்தது.

பூசனை முடிந்த அடுத்த சில நாழிகைகளில், சிவ துர்க்கம் நோக்கிப் புறப்பட்டது பேரமைச்சரின் படை!

- மகுடம் சூடுவோம்...