நினைத்தாலே முக்தி தரும் தலம்
இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்
ஈசன் நெருப்பாக நின்ற தலம்
மலையாகக் குளிந்த தலம்
லிங்கோத்பவர் எழுந்த தலம்
மால் அயனுக்கு அருளிய தலம்
மன்மதனை உயிர்ப்பித்த தலம்
அட்ட லிங்கங்கள் ஆட்சி செய்யும் தலம்
அர்த்தநாரி உதித்த தலம்
அருணகிரியை ஆட்கொண்ட தலம்
திருவெம்பாவை எழுந்த தலம்
தபோவனர்களின் தாயகத் தலம்
வல்லாளனை வாழ்வித்த தலம்
கணம்புல்லரைக் கவர்ந்த தலம்
இடைக்காடரின் முக்தி தலம்
மகாபலிக்கு அருளிய தலம்
வேதம் முழங்கும் தலம்
விண்ணோர் ஏத்தும் தலம்
புத்தி தரும் தலம் சகல ஸித்தி தரும் தலம்
சக்தி பெருகும் தலம் ஜீவன் முக்தி பெருகும் தலம்
சிவன் நாமம் ஜொலிக்கும் தலம்
அண்ணாமலையே! திருவண்ணாமலையே!
அண்ணாமலையே! எங்கள் அண்ணாமலையே!

மண்ணில் கொண்டாடப்பட்ட முதல் விழா கார்த்திகை தீப விழா என்கிறது தேவி மகாத்மியம். அந்த விழாவுக்குச் சிறப்பு சேர்க்கும் திருத்தலம் திருவண்ணாமலை!
தன்னை வணங்காத பிருங்கி மகரிஷி மீது கோபம்கொண்ட இறைவி, கடும் தவமிருந்து ஈசனை விட்டு நீங்கவே முடியாத வண்ணம், அவரின் திருமேனியில் இடபாகம் பெற்றதும் தீபத் திருநாளில்தான்.
அன்னை பார்வதியாள் ஒருமுறை இறைவனின் கண்ணைப் பொத்தி அருள்விளையாடல் புரிய, அந்தக் கணப்பொழுது நேரத்தில் பிரபஞ்சம் இருண்டுபோனது. உயிர்களை இருட்டில் தவிக்க விட்ட பாவம் நீங்க, சக்தி தவமிருந்த இடமே திருவண்ணாமலை. சக்தி ஈசனின் திருக்காட்சி கண்ட இடம் `நேர் அண்ணாமலை' எனும் திருக் கோயில்; நாள் திருக்கார்த்திகை தினம்.
புனுகுப் பூனை ஒன்று ஈசனுக்குப் புனுகு சமர்ப்பித்து திருவண்ணாமலையில் வழிபட்டதாம். அதன் பலனாக அந்தப் பூனை, மறுபிறவியில் அயோத்தி மன்னன் ஹேமாங்கதனாகப் பிறந்தது. நன்றி மறவாத ஹேமாங்கதன், ஆயுள் முழுவதும் திருவண்ணாமலை வந்து புனுகுச் சட்டம் சாத்தி வழிபட்டான். தீபவிழாவையொட்டி `புனுகுச் சட்ட வைபவம்' சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
உலகிலேயே மிகப்பழைமையான மலைகளில் திருவண்ணாமலையும் ஒன்று. இதன் வயது 260 கோடி ஆண்டுகள் என்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிருத யுகத்தில் நெருப்பு மலை யாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், இந்தக் கலி யுகத்தில் மருந்து மலையாகவும் விளங்குகிறது திருவண்ணாமலை என்கின்றன புராணங்கள்.
திருவண்ணாமலை `ஆர்க்கேயன்' காலத்து மலை என்றும், இது முன்னர் எரிமலையாக இருந்து பின்னர் குளிர்ந்தது என்றும் சொல்வர்.
மலையின் உயரம் சுமார் 2,665 அடிகள். கிழக்கில் மலை ஒன்றாக அமைந்து அதாவது ஏகமுக தரிசனம் தந்து `இறைவன் ஒருவனே' என்கிறது. தென்திசையில் இரு சிகரங்கள் தென்பட இருமுகமாக சிவசக்தி தரிசனத்தைக் காட்டுகிறது. மேற்கில் மும்முக தரிசனம் அதாவது சோமாஸ்கந்த வடிவைக் காட்டுகிறது. அதேபோல், ஈசான்ய திசையில் ஈசனின் ஐந்து முகங்களைக் காட்டி அருள்செய்கிறது அண்ணாமலை!
மலையின் மீது ஏறினால் குகை நமசிவாயர், குருநமசிவாயர், விருபாட்சி தேவர் போன்ற ஞானியர்கள் தவமிருந்த குகைகளை தரிசிக்கலாம். பீம தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், சித்தன் தீர்த்தம் என 81 சுனைகள் மலையில் உள்ளன. சோணை நதி, கோணநந்தி ஆறு, கும்ப நதி போன்றவை உற்பத்தியான மலையும் இதுவே.
தண்டபாணி, அரவான், பாண்டவர், கண்ணப்பர், வேடியப்பன் என பல சிறு கோயில்களும், கந்தாஸ்ரமம், காட்டு சிவாஸ்ரமம், சடைசாமி ஆஸ்ரமம் என ஆஸ்ரமங்களும் பலவும் உள்ளன இந்த மலையில்.
திருவண்ணாமலையின் கிரிவலப் பாதை, சுமார் 14 கி.மீ. தூரம் கொண்டது. அஷ்ட லிங்கங்கள், ஆதி அண்ணாமலை, நேர் அண்ணாமலை, சந்திர சூரிய லிங்கங்கள், 16 விநாயகர் கோயில்கள், 7 முருகன் கோயில்கள், வலது கையில் லிங்கம் ஏந்தி அருளும் ஆதிகாமாட்சி கோயில் என மொத்தம் 99 திருக்கோயில்களைக் கொண்ட தெய்வீக கிரிவலப்பாதை இது. எண்ணற்ற தீர்த்தங்களும், ஞானியர்கள் திருமடங்களும் அமைந்துள்ளன.

திரிவிக்ரம பாண்டியன் ஏழாம் திருவீதி என இந்தப் பாதையைக் நினைவுகூர்கிறது வரலாறு. இந்தப் பாதையை ஒட்டியபடி முன்பு சோணை நதி ஓடிக்கொண்டிருந்ததாம். தீபத்திருவிழாவின் 11-ம் நாளன்று ஈசனே இந்த மலையை வலம் வந்து பரவசம் கொள்வார்! கிரிவலம் வரும்போது மலையின் வெவ்வேறு கோணத்தில்... நந்திமுக தரிசனம், நாட்டிய கணபதி தரிசனம் என இயற்கையாக அமைந்த பாறை திருக்காட்சிகளைக் காணலாம்.
அண்ணாமலையை தினமும் வலம் வரலாம் என்றாலும் பவுர்ணமி கிரிவலம் விசேஷம் என்கின்றன ஞானநூல்கள். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களின் எல்லா நாள்களுமே கிரிவலத்துக்கு உகந்தவையே.
கிரிவலம் நடந்தே செல்லவேண்டும், வாகனங் களில் செல்லக்கூடாது. மலையைத் தரிசித்தபடியே வலம் வரும் வகையில், கிரிவலப்பாதையின் இடப் பக்கமாகவே பயணிப்பது சிறப்பு.
இறைவனை தியானித்தபடியே `அண்ணா மலைக்கு அரோகரா' 'நமசிவாய' என சிவநாமங் களை மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். எந்த இடத்திலும் அசுத்தம் செய்யாமல் நடக்க வேண்டும். அதேபோல் அடிமேல் அடியெடுத்து வைத்து பொறுமையுடன் வலம் வருவது சிறப்பு.

சித்தர்கள் பலரும் அரூபமாக நம்மோடு நடப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதால், குறுக்கும் நெடுக்கும் செல்லாமல் பயபக்தியோடு கிரிவலம் வரவேண்டும்.
சுமார் 24 ஏக்கர் பரப்பளவுடன், 9 ராஜ கோபுரங்கள், 6 பிராகாரங்கள், எண்ணற்ற சந்நிதிகள், இரண்டு திருக்குளங்கள் என பரந்து விரிந்து திகழ்கிறது அண்ணாமலையார் ஆலயம்.
ராஜகோபுரம் தாண்டி கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் 1202-ம் ஆண்டில் எழுப்பினார். இதனால் மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் அழைப்பர். இங்குதான் மகாதீபம் ஏற்றுமுன், பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.
மகப்பேறு இல்லாத வல்லாள மகாராஜனுக்கு மகனாக ஈசனே எழுந்தருளி, இன்றும் மாசி மகத்தன்று அவனுக்கு ஈமக்கிரியைகள் செய்யும் அற்புதத் தலம் இது. இங்கு, தீபத் திருநாளன்று கரும்புத் தொட்டில் சுமந்து வேண்டிக்கொண்டால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கும். சிவனரு ளால் பிள்ளை பாக்கியம் கிடைத்ததும், அந்தக் குழந்தையை கரும்புத்தொட்டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பார்கள்.
பிருங்கி முனிவர் இழந்த சக்தியை பெற்றது திருவண்ணாமலையில். காஞ்சியில் பல்வேறு அறங்கள் செய்து தவமிருந்த அன்னை காமாட்சி திருவண்ணாமலையில்தான் ஈசனை தரிசித்து மீண்டும் அவரை அடைந்தாள். அதனால் இது ஆதி காஞ்சி எனவும் போற்றப்படும்.

குந்திதேவி பிள்ளை வரம் பெற்றதும், அருணகிரியாருக்காக கந்தன் தூணைப் பிளந்து வந்ததும், அருணகிரியார் கிளிரூபமாக இருந்து கந்தரநுபூதி பாடி அருளியதும் இந்தத் தலத்தில்தான்.
கல்வியாலும், செல்வதாலும் ஈசனை அடையவே முடியாது. பூரணமான சரணாகதியின் மூலமே அவன் தாளை அடையமுடியும் எனும் தத்துவத்தை உணர்த்துவதே, விஷ்ணுவும் பிரம்மனும் அடிமுடி தேடிய திருக்கதை. எவராலும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என்றானதாம். ஆனாலும் அன்பால் அண்ணா மலையானை அடையமுடியும் என்பதே மகான்களும் பெரியோர்களும் நமக்குத் தரும் பாடம்.
அண்ணாமலையாருக்கு வேறுபல சிறப்பு பெயர்களும் வழங்கப்படுகின்றன. அவை: லிங்கோத்பவ மூர்த்தி, இமய லிங்கம், பிரம்ம லிங்கம், விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர், கல்யாணசுந்தரர், அருணாசலேஸ்வரர், ஈசான லிங்கம், சிதம்பரேஸ்வரர், அக்னி லிங்கம், சம்புகேஸ்வரர், சனாதனேஸ்வரர், நாரதேஸ்வரர், சனந்தேஸ்வரர், வால்மீகிஸ்வரர், சனகேஸ்வரர், வியாச லிங்கம், வசிஷ்ட லிங்கம், குபேர லிங்கம், வாமரிஷீஸ்வரர், சகஸ்ர லிங்கம், கௌசிகேஸ்வரர், குத்சரிஷீஸ்வரர், வைசம்பாதனேஸ்வரர், வருண லிங்கம், தும்புரேஸ்வரர், காசி லிங்கம், சத லிங்கம், விக்ரபாண்டீஸ்வரர், வாயு லிங்கம்.
கல்வெட்டுகளில் திரு வண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவர், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணாநாட்டு உடையார் என்று இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் அருளும் செந்தூர விநாயகர் வித்தியாசமானவர். சம்பந்தாசுரன் எனும் அசுரனை, விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து பல்லாயிரம் அசுரர்கள் உருவாகினர். இதைத்தடுக்க விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார் என புராணம் சொல்கிறது.
இதனால் இங்கு சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை தீப நாள் மற்றும் தை மாதத்தில் பௌர்ணமி ஆகிய நான்கு நாள்கள் விநாயகருக்குச் செந்தூரம் சாத்துகின்றனர்.
ஆலயத்தில், சர்வஸித்தி விநாயகர் சந்நிதியின் வடக்குப் பக்கம் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் தென்மேற்குப் பகுதியில் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு ரமண மகரிஷி பல காலம் தங்கி, தவம் இருந்தார் என்று வரலாறு சொல்லும். இந்தச் சந்நிதியை ‘பரோசா தலையார்காண்’ என்ற வெளிநாட்டுப் பெண்மணி தலைமையில் சென்னை ஜே.எச். தாராபூர் அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பெற்று 14.5.1949-ல் கவர்ஜெனரலாக இருந்த ராஜாஜியால் திறந்து வைக்கப்பட்டது.
கோயில்களில் பொதுவாக தெய்வத் திருமேனிகளை அஷ்டபந்தனம் முறையில் பிரதிஷ்டை செய்வர். ஆனால், இங்கு சுவர்ண பந்தன முறை கையாளப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோயில் வளாகத்தில் அண்ணாமலையாரின் பாதம் அமைந்துள்ளது. இதற்கு தினமும் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுகின்றன
அண்ணாமலையே லிங்கமாக வணங்கப் படுகிறது. அதனால் எப்போதும் எங்கிருந்தும் இந்த மலையை தரிசித்து அருள்பெறலாம். மலையே லிங்கமாக, மழையே அபிஷேகமாக, வான்வில்லே திருவாசியாக, இடி-மின்னலே நாதமாக, நட்சத்திரங்களே பூக்களாக, சூரிய சந்திரர்களே திருவிளக்காக திகழ்கின்றனவாம்!
அகிலத்தையே தாங்குபவன் அரன். அவரையே தாங்கும் பாக்கியம் பெற்றவர் நந்தியெம்பெருமான். அவர், திருமுகம் பெற்றதும் தீபத் திருநாளில்தான். ஈசன் முழுமதியை சூடிக்கொள்ளும் திருநாள் தீபத்திருநாள். அவர், முப்புரம் எரித்து வெற்றி கொண்ட நாளும் கார்த்திகை தீப நாளில்தான். கணம்புல்லர் சிவபதம் பெற்றதும், மகாபலிச் சக்கரவர்த்திக்குச் சிவனார் ஜோதி வடிவமாகக் காட்சியளித்து ஆசி தந்ததும் இந்த நாளே. ராவணன் ஈஸ்வர பட்டம் பெற்றதும், அஸ்வத்தாமன் சிரஞ்ஜீவி நிலையைப் பெற்றதும் இந்த நாளே என்கின்றன புராணங்கள்.

திருவண்ணாமலையில் எடுத்துவைக்கும் அடிதோறும் லிங்க தரிசனம் என்பார்கள். அதனால் புண்ணியமிக்க இந்தத் தலத்தில் ஒருமுறையாவது தீப விழாவை தரிசிப்பது அவசியம். உமையவளே கொண்டாடிய தீபத்திருவிழா சகல பாவங்களையும் அழிக்கவல்லது.
கார்த்திகை பரணி நட்சத்திரத்தில் ஏற்றப் படும் பரணி தீபம் ஜீவாத்மாவையும், மலை மீது மாலையில் ஏற்றப்படும் மகா தீபம் பரமாத்மாவையும் குறிப்பன. பூவுலகில் பிறந்த எந்த ஜீவனும் ஒரே ஒருமுறை இந்தத் தீபத் திருவிழாவை திருவண்ணாமலையில் கண்டால் போதும். பிறப்பிலா பேரின்ப நிலையை அடைந்து வாழ்வின் அத்தனை சௌபாக்கியங்களையும் அடைவார்கள் என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள்.
மொத்தம் 14 நாள்கள் கொண்டாடப்படும் தீபத்திருவிழா, கிராம தேவதை வழிபாட்டுடன், அதாவது துர்கை அம்மனின் புறப்பாடுடன் தொடங்கும். திருவிழாவின் 7-ம் நாள் திருத்தேர் பவனியும், 10-ம் நாள் தீபத்திருவிழாவும் இங்கு விசேஷம். 20 லட்சத்துக்கும் மேலான மக்கள் கூடும் தமிழகத்தின் பிரம்மாண்ட விழா இது.
இந்த வருடம் கடந்த நவம்பர் 12-ம் நாளன்று துர்கையம்மன் மற்றும் பிடாரியம்மன் உற்சவம் நடைபெற்றது. நவம்பர் 14-ம் தேதியன்று அதிகாலை யில், தங்கக்கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. நவம்பர் 23 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 4 மணிக்குப் பரணி தீபம் ஏற்றப்படும். இதையடுத்து, மாலை 6 மணிக்கு அண்ணாமலையில் ஜோதி ஸ்வரூப மகா தீபம் ஏற்றப்படும்.
தீபத்திருநாளில் மகா தீபஜோதியாய் அருளும் அந்த மகாதேவனை தரிசித்து வணங்குபவர்களும் அவர்களின் ஏழேழ் தலைமுறை சந்ததியும் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்கின்றன ஞானநூல் கள். நாமும் நமது வாழ்க்கை ஒளிர, எதிர்காலம் சிறக்க, மறுமையில்லா பெருவாழ்வு பெற, அண்ணாமலையாரை நாடிச் செல்வோம்; அவர் தாள் பணிந்து அவரருளைப் பெற்று வருவோம்.
மு.ஹரிகாமராஜ்
விளக்கேற்றும் நேரம்
23-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்படும். அன்பர்கள் வீடுகளில் மகா தீபம் ஏற்றப்படும் முன்னரே தீபமேற்றலாம். 24, 25-ம் நாள்களிலும் மாலை 6 மணி அளவில் தீபமேற்றவேண்டும்.

அண்ணாமலையின் அற்புதங்களை தரிசிக்க... இங்குள்ள QR Code-ஐ பயன்படுத்துங்கள்.