Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 18 - சத்திய வாக்கு

திருவருள் செல்வர்கள்! - 18 - சத்திய வாக்கு
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 18 - சத்திய வாக்கு

ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்

திருவருள் செல்வர்கள்! - 18 - சத்திய வாக்கு

ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்

Published:Updated:
திருவருள் செல்வர்கள்! - 18 - சத்திய வாக்கு
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 18 - சத்திய வாக்கு

“அக்கா! இந்தப் பயல் எல்லாத்துலயும் நன்னா பாஸ் பண்ணிட்டான். ‘ஃபிஸிகல் ஃபிட்னெஸ்’ மட்டும்தான் பிரச்னை. மைக் ஸ்டாண்ட் மாதிரி இருக்கான்; அவுனுக்கும் பயமாதான் இருக்கு.

இந்த வேலை கிடைச்சா, நன்னாருக்கும்கா!” என்று ஒருவர், தன் மகனைப் பற்றிச் சொல்லி, அக்காவிடம் முறையிட்டார். 

திருவருள் செல்வர்கள்! - 18 - சத்திய வாக்கு

“அவன பாம்பன் ஸ்வாமிகள் கோயிலுக்குப் போய்ட்டு வரச்சொல்லு. செலக்‌ஷன் ஆய்டுவான்” என்றார் அக்கா.

அக்கா - தம்பிக்கிடையே நடந்த தொலைபேசி உரையாடல் இது. அழுத்தமாக அக்கா, இவ்வாறு சொல்லக் காரணம்?

அவரின் சொந்த அனுபவம்தான்!

அந்தப் பெண்மணி, நடக்கக்கூட இயலாத உடல்உபாதையால் பாதிக்கப்பட்டு, விசேஷ மருத்துவர் ஒருவரிடம் சென்றிருந்தார்.

பலவிதமான சோதனைகளும் முடிந்து, இரண்டு மாத கால மருத்துவம் பார்த்து, “அவசர அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும். அதுவும் ஐந்து சதவிகிதம்தான் உத்தரவாதம் தர முடியும். அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகளுக்குமேல், இவர் தாங்கமாட்டார்” என்றார் மருத்துவர்.

பெண்மணி அறுவைச்சிகிச்சைக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ‘எனைத் தள்ளினாலும் எனை நம்பியவர் தள்ளேல்’ என்று, பவரோக வைத்தியநாதப் பெருமானான முருகனிடம் முழுமையான பக்தி பூண்ட ஸ்ரீபாம்பன் சுவாமி களிடம் சரணடைந்தார். திருவான்மியூரில் உள்ள ஸ்ரீபாம்பன்சுவாமிகளின் கோயிலுக்குச்சென்று, வேண்டுகோள் விடுத்து, வழிபட்டார். விளைவு?

அதன்பின் பதினாறு ஆண்டுகள் கடந்தும், அந்தப் பெண்மணி இன்றுவரை, நடந்து, துணி துவைத்து, சமையல் செய்து என அனைத்தையும், தானே நன்றாகச் செய்து வருகிறார். இவரை இன்றும் திருவான்மியூர் ஸ்ரீபாம்பன் சுவாமிகளின் ஆலயத்தில் அடிக்கடி காணலாம்.

இவ்வாறு, தான் அனுபவித்த - தனது அனுபவத் தைச் சொல்லி, “பாம்பன் ஸ்வாமிகள் கோயில்ல போய், அவர்கிட்ட சொல்லிட்டு, பிரார்த்தனை பண்ணிட்டு வரச்சொல்லு. நிச்சயம்  செலக்‌ஷன் ஆயிடுவான்'' என்றார் பெண்மணி. அதன்படியே அந்தத் தம்பியும் செய்ய, அவர் மகனான இளைஞரும் உடல் தேர்வில் தகுதிபெற்று, இந்திய அளவில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். இவர்கள் இருவருமே, அடியேனுக்கு  மிகமிக நெருங்கிய உறவினர்கள்!

இன்றும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், திருவான்மியூரில் உள்ள சமாதித் திருக்கோயிலில் எழுந்தருளி துயரங்களைத் தீர்க்கிறார்.
 
சிறு விபத்தின் காரணமாக காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளுக்கு, மயூர வாகனனாகத் தோன்றி முருகன் அருள்செய்ததைச் சிறப்பிக்கும் மயூரவாகனை சேவை வைபவம் திருவான்மியூர் ஆலயத்தில் வரும் ஜனவரி-6 அன்று நடைபெறவுள்ளது. அந்த வைபவத்தை தரிசிக்க ஆயத்தமாகும் அதேவேளை யில், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

கடல் போல் பரந்துவிரிந்த சுவாமிகளின் மகிமையை எடுத்துரைக்க, அடியேன் என்ன, கடலினை உள்ளங்கையில் அடக்கிய அகத்தியரா?

ஆகவே, கடற்கரை ஓரமாக நின்று கடலினைப் பார்த்து அனுபவிப்பதுபோல, அலைவீசும் ‘அப்பாவு’வின் நிகழ்வுகள் சிலவற்றை மட்டும் தரிசிக்கலாம். ஆம்! பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் பிள்ளைத் திருநாமம் ‘அப்பாவு’ என்பதே. (இனி ஸ்ரீசுவாமிகள் என்றே பார்க்கலாம்).

ராமேஸ்வரம் - பாம்பன் பகுதியில், சாத்தப்ப பிள்ளை-செங்கமல அம்மை ஆகியோர் செய்த தவப்பயனாலும்; முருகன் அடியார்கள் செய்த தவப்பயனாலும் அவதரித்தார் ஸ்ரீசுவாமிகள். வேதங்கள், சாஸ்திரங்கள் என அனைத்திலும் கரைகண்டவர் ஸ்ரீசுவாமிகள். அருணகிரிநாதரிடம் அளவிலாத பக்தி பூண்டவர்; நினைத்தவுடன் சந்தக்கவி பாடும் தனித்திறன் கொண்டவர்; முருகப்பெருமானைப் பலமுறை கனவிலும் நனவிலும் தரிசித்தவர்.

சிறு வயதிலிருந்தே, துறவு வேட்கை கொண்ட ஸ்ரீசுவாமிகள், ஆசிரியர் ஆணையை மறுக்க அஞ்சியே, இல்லறம் ஏற்றார். ஸ்ரீசுவாமிகள் துறவு நிலை பெறுவதற்கு முன்பாகவே, தம் ஆகார வகையில், உப்பு - புளி முதலியவற்றை நீக்கியவர். தினமும் பகலில் ஒருவேளை மட்டுமே உணவு; அதுவும் உச்சி வேளைக்குள்; உச்சிவேளை தாண்டிவிட்டால், அந்த உணவும் கிடையாது. துறவு வேட்கை நாளுக்குநாள் மேலோங்கியது. ஸ்ரீசுவாமிகள், துறவு பூண்டதும் ஆறுமுகன் நிகழ்த்திய அதிசயமே!

1891-கர வருடம், ஆடிமாதம், வெள்ளிக் கிழமையன்று, ஸ்ரீசுவாமிகள் தம் நண்பரான அங்கமுத்துப்பிள்ளை என்பவரிடம், “நாளை நான் பழநிக்குச் செல்லவுள்ளேன்” என்றார்.

“மீளுவது எப்போது?” எனக் கேட்டார் நண்பர். “சொல்வதற்கில்லை” என்று பதிலளித்தார் ஸ்ரீசுவாமிகள். அவரின் துறவு மனநிலையை உணர்ந்த நண்பர், “நீங்கள் இப்போது அவ்வாறு செய்யக்கூடாது. இதென்ன முருகப்பெருமான் கட்டளையோ?” எனக் கேட்டார். எங்கே, துறவுக்கு நண்பர் தடையாக இருந்துவிடுவாரோ எனும் எண்ணத்தில், ``ஆமாம்!” என்றார் ஸ்ரீசுவாமிகள். அதன்பிறகு நண்பர் கேள்வியே கேட்கவில்லை.  ஸ்ரீசுவாமிகளின் மனமே அவரை வருத்தியது.

அன்று மாலை, ஸ்ரீசுவாமிகள் தமது இல்லத்தின் மேல் மாடியில் இருந்து, `அமரர் கோ’ எனும் பாடல் முதல், ‘அமிர்தமதி’ எனும் பாடல் வரை உள்ள, தம்முடைய பாடல்களைப்படித்து முடித்து, “திருமுருகா! நாளை நான் இவ்வூரை விட்டுத் துறவுபெற எண்ணியிருக்கிறேன்” என்று சிந்தித்தபடியே தென்புறமாகத் திரும்பினார்.

அதேவிநாடியில், அங்கே தோன்றி நின்ற முருகப்பெருமானின் திருவடிவம், தம் வலது கர சுட்டுவிரலை நிமிர்த்தி அசைத்து பற்களைக் கடித்து, அச்சுறுத்தியது. அவரின் அழகுத் திருமுகமோ கோபத்தை வெளிப்படுத்தியது.

“அவரின் திருமேனி விவரம் கூற என் மனம் இசையாது” என ஸ்ரீசுவாமிகளே குறித்துள்ளார்.  
 
திருவடிவம் கண்டு அஞ்சிய ஸ்ரீசுவாமிகள் கண்களை மூடி, உடலும் உள்ளமும் நடுங்க... “என்னப்பனே! அடியேன் நிலமோ சொத்து சுகங்களோ வேண்டிப் பொய் சொல்லவில்லை. ஆன்ம லாபம் கருதியே அவ்வாறு நடந்தது. பொறுத்தருள வேண்டும்” என வேண்டினார். உள்ளத்தில் உள்ளதை உணரும் உமை பாலனும், “அந்த லாபம் என்னாலாகாதா? இனிமேல், நான் வருக என்று சொல்லும்வரை, பழநிக்கு நீ வரக்கூடாது. வருவதில்லை என்று சொல்!” என்றார். “அப்படியே!” என்றார் ஸ்ரீசுவாமிகளும்.

இந்த நிகழ்வைச்சொல்லி, தன்பிழை பொறுத்து அருளும்படியாகப் பலமுறை முறையிட்டு வேண்டியிருக்கிறார் ஸ்ரீசுவாமிகள். முருகன் அழைக்கவில்லை; ஸ்ரீசுவாமிகளும் பழநிக்குச் செல்லவில்லை; சத்தியத்தைக் காப்பாற்றினார்.

ஸ்ரீசுவாமிகள், வாக்குகளில் சிறிதும் பொய்க் கலப்பில்லாத புண்ணியர் என்பதை வெளிப் படுத்தவே முருகன் நிகழ்த்திய நிகழ்வு இது.  இதுபோன்று, மேலும் சில அற்புதங்களையும் தொடர்ந்து பார்ப்போம்.

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன் - ஓவியம்: பத்மவாசன்