நினை அவனை! - 2

மைத்ரேயியின் மனத் தெளிவு!

`மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜகர்மோ பாத்தம்
வித்தம் தேன விநோதாய சித்தம்’

நினை அவனை! - 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கருத்து: விவேகமற்ற மூடா! செல்வத்தைக் குவிக்கவேண்டும் என்ற பேராசையை ஒதுக்கிவிடு.  செல்வம் என்பது மாயை.  எனவே அதை ஒதுக்கி, நற்குணங்களைத் தேடி வளர்த்துக்கொள்.

குழந்தை பிறந்ததும் சிரித்து மகிழ்கிறோம். யாராவது இறந்தால் துக்கப்படுகிறோம். இது விந்தையான ஒரு நிலை.

ஆத்மாவைப் பொறுத்தவரை, பிறப்பு என்பது சிறைப்படுவதற்கு ஒப்பானது (ஒருவேளை குழந்தை பிறந்த சில நொடிகளிலேயே அழுவது இதற்காகத்தானோ?). அதனால்தான் ‘பிறவியில்லா நிலை வேண்டும்' என்று அடியவர்கள் ஆண்டவனை வேண்டுகிறார்கள். 

நினை அவனை! - 2அதேநேரம், இறப்பு என்பது ஆத்மாவுக்கு விடுதலை. அது இன்பத்துக்குரிய நிலை. என்றாலும் நாம் ஏன் மாறுபட்டு உணர்கிறோம்? அதுதான் மாயை. பிரம்மத்தை உணர்வதன் மூலம்தான் மாயையை அழிக்கலாம். பிரம்ம ஞானம் குறித்துப் பேசுவது வேறு. அதை உணர்வது வேறு.  இதைத்தான் ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் குறிப்பிடுகிறார்:

‘`பலரும் பிரம்ம ஞானத்தைப்பற்றிப் பேசுகிறார் கள்.  ஆனால், அவர்களுடைய மனமோ தாழ்ந்த விஷயங்களிலேயே ஈடுபட்டிருக்கிறது. வீடு, வாசல், பணம், காசு, பெயர், புகழ் ஆகியவற்றிலேயே அழுந்திக்கிடக்கிறது. விறகு எரியும்போது, அது உடையும் ‘கடமுட’ ஓசை உண்டாகிறது.  தீப்பொறிகள் தெறிக்கின்றன. விறகு முழுதும் எரிந்து முடிந்ததும் சாம்பல் ஒன்றே மிஞ்சுகிறது.  எவ்வித ஓசையும் இல்லை. பற்று மறைந்தால், ஆசையும் மறைகிறது.  பிறகு முடிவற்ற அமைதியே!’’

யாக்ஞவல்கியர் என்ற முனிவர், தன் இரு மனைவிகளையும் அழைத்தார்.

‘`மைத்ரேயி, காத்யாயனி... என் சொத்து முழுவதையும் உங்கள் இருவருக்கும் பிரித்து அளித்துவிட்டு, நான் துறவறம் பூணுவதாக உள்ளேன்’’ என்றார்.

மைத்ரேயி மிகுந்த அறிவாளி. ‘`நாதா! உலகில் உள்ள செல்வம் அனைத்தும் கிடைத்தாலும், அதனால் எனக்கு இன்பம் கிடைக்குமா, முக்தி கிடைக்குமா’’ என்று கேட்டாள்.

‘`கிடைக்காது. பணத்தைக்கொண்டு நீ கேளிக்கைகளை அனுபவிக்கலாம்.  உண்மையான இன்பமோ மோட்சமோ கிடைக்காது’’ என்றார் யாக்ஞவல்கியர்.

மைத்ரேயியும் இதை உணர்ந்துகொண்டவளாக ‘`அப்படியானால், எனக்குப் பணம் தேவையில்லை. முக்தி தரும் வழியைக் கூறுங்கள்’’ என்றாள்.

யாக்ஞவல்கியர், ‘`ஆன்மாவைக் குறித்தே சிந்தித்து தியானம் செய்தால், மாயை அகலும்.உண்மை விளங்கும். அப்போது, தானாக முக்தி அடையலாம்” என்றார்.

செல்வத்தைத் துறந்துவிட வேண்டாம். அதன் மீது கொண்ட தணியாத தாகத்தை விட்டாலே  போதுமானது. `அது எப்படி சாத்தியம்' என்பவர் களுக்கு விடை, ஜனகர் குறித்த இந்த சம்பவம்தான்.

னகர் மன்னராக இருந்தாலும், அவரைப் பெரும் துறவி என்பார்கள். ஆனால், இதுகுறித்துச் சில முனிவர்களுக்குப் பெரும் சந்தேகம். 

“ஜனகர் பட்டாடை உடுத்துகிறார்.அரண்மனையில் தங்குகிறார். ஏவலுக்குப் பணியாள், காவலுக்கு ஊழியர்... இப்படியிருக்க, இவரைப் போய் துறவி என்கிறார்களே!”

இதை உணர்ந்த நாரதர் ஒரு காரியம் செய்தார். அந்த முனிவர்களை ஒரு மாபெரும் விருந்துக்கு அழைத்தார். தொடர்ந்து மூன்று தினங்கள் உபவாசத்தில் இருந்ததால், கடும்பசியுடன் சென்றார்கள் முனிவர்கள். அவர்களை வரவேற்று அமரச்செய்து உணவு படைத்தார் நாரதர்.

சாப்பிடத் தொடங்கும்போதுதான் முனிவர்கள் ஒன்றைக் கவனித்தார்கள். ஒவ்வொருவரின் இலைக்கு மேலும் ஒரு தலைமுடி தொங்கிக் கொண்டிருந்தது. சாப்பிட உட்கார்ந்தபிறகு பேசக் கூடாது, எழுந்திருக்கக்கூடாது, தலை முடியை எடுக்கக்கூடாது. இந்த நிலையில், வேகவேகமாக உணவருந்திவிட்டு எழுந்தனர் முனிவர்கள்.

“விருந்தில் பலவித பண்டங்கள் இருந்தனவே.  கவனித்தீர்களா” என்று கேட்டார் நாரதர்.

“அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையிலா நாங்கள் இருந்தோம். இலைக்குமேல் தொங்கிக் கொண்டிருந்த தலைமுடியில் அல்லவா எங்கள் கவனம் இருந்தது” என்றார்கள் முனிவர்கள். 

உடனே நாரதர், “இப்படித்தான் ஜனகரும். ஆடம்பரமான ராஜ வாழ்க்கையில் உழன்றாலும், அவரின் மனம் எப்போதும் பிரம்மத்தையே நினைத்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான் அவரை இல்லத்துறவி என்கிறோம்” என்றார். முனிவர்கள் உண்மையை உணர்ந்தனர்.

திசங்கரர், ‘மாயா பஞ்சகம்’ என்ற சுலோகங் களை இயற்றி, அதில் மாயையைக் குறித்து பல விளக்கங்கள் கூறுகிறார்.

மாயை என்பது என்ன?

உண்மைக்கு எதிரானவற்றை உண்மை என்று நியாயப்படுத்தும் சக்தி. 

அரசன் ஒருவன் தன் படையுடன் வேட்டை யாடச் சென்றான். வழியில் அவர்கள் பிரிந்து விட்டனர். காட்டுக்குள் மன்னன் மட்டுமே வெகு​தூரம் நுழைந்துவிட்டான். அவனுக்கு மிகவும் பசித்தது. சற்றுத் தொலைவில் ஒரு குடிசை இருப்ப தைப் பார்த்தான். அங்கு சென்று ஏதாவது உணவு இருக்கிறதா என்று கேட்டான். 

அது ஓர் ஏழையின் வீடு. அவனிடம் அப்போது இரண்டு ரொட்டிகள் மட்டுமே இருந்தன. இரவு உணவுக்காக வைத்திருந்தான்.  ஆனால்,  பசி என்று ஒருவர் கேட்கும்போது எப்படி உணவு அளிக்காமல் இருக்க முடியும்? ஆகவே, வந்திருப்பது அரசன் என்பது தெரியா​மலேயே, ரொட்டிகளை அவனுக்குக் கொடுத்தான். மன்னனுக்கு அவை அமுதமாக இருந்தன.

அதேநேரம் வழிதவறிச் சென்ற படை வீரர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அப்போதுதான், தன் குடிசைக்கு வந்திருப்பது அரசன் என்பதையே அந்த ஏழை உணர்ந்துகொண்டான்.

அரசன், அந்த ஏழைக்குச் சந்​தனத் தோப்பு ஒன்றைப் பரிசளித்தான். சில மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் அந்த ஏழையின் குடிசைக்கு விஜயம் செய்தான் மன்னன். அந்த ஏழையின் முகம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

‘`மன்னா, சந்தனத் தோப்பிலிருந்த அனைத்து மரங்களையும் எரித்துக் கரியாக்கிவிட்டேன். அந்தக் கரியை விற்று வாழ்க்கை நடத்துகிறேன்’’ என்றான்.

மன்னன் திகைத்து விட்டான்.  ஆக, சந்தனத்தின் அருமையை அந்த ஏழை அறிந்திருக்கவில்லை. மாயை அவன் கண்களை மறைத்திருந்தது. இப்படித்தான் செல்வத்தின்மீது நாட்டம் செலுத் தும் நாம் உண்மையான செல்வமான இறை நம்பிக்கையைத் தொலைத்து நிற்கிறோம்.

இந்த மாயையிலிருந்து விடுபட முயற்சி செய்ய வேண்டும்.

- நினைப்போம்...

ஜி.எஸ்.எஸ். - ஓவியங்கள்: ஸ்யாம்