மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 31

இறையுதிர் காடு - 31
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 31

இறையுதிர் காடு - 31

இறையுதிர் காடு - 31

அன்று  சலன சஞ்சலங்களோடு தன்னைப் பார்த்த கிழார்களை போகரும் கவனித்து ``இன்னும் ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?’’ என்று கேட்டார்.

``ரசவாத விஷயத்தில் எங்கள் சாட்சியம் அவசியமில்லை என்கிற தங்கள் கருத்து வருத்தமளிக்கிறது. எங்களை நீங்கள் பெரிதாகக் கருதவில்லையோ என்றும் எண்ணச் செய்கிறது.’’

போகர், கிழார் ஒருவர் கருத்தைக் கேட்டுச் சிரித்தவராய் ``உங்களின் இந்தக் கருத்துக்கு நான் பதில் கூறினால், அதனால் வருத்தம்தான் உங்களுக்கு ஏற்படும். இந்தப் பேச்சை இத்துடன் விட்டு விடுங்களேன்’’ என்றார்.

``இல்லை பிரானே, உங்களுக்குள் உருவாகும் அவ்வளவு எண்ணங்களையும் முதலில் செவிமடுப்பவர்கள் நாங்களே. ஒலி நீங்கள் என்றால், எழுத்தென்னும் ஒளிப்படிவம் எங்களாலேயே உருவாகிறது. அப்படிப்பட்ட எங்களுக்குத் தெரியாத விஷயங்களும் உங்களிடம் இருப்பது எங்களுக்கு வியப்பைத் தருகிறது. அது நன்றோ தீதோ, நாங்கள் அதையும் அறிந்தவர்களாக இருக்கவே விரும்புகிறோம்’’ என்ற கிழாரின் கருத்தைக் கேட்டு முகத்தைச் சுருக்கிய போகர்...

இறையுதிர் காடு - 31

``உங்களிடம் `நான்’ எனும் அகந்தை ஒளிந்திருப்பதைப் பார்க்கிறேன். `எங்களை நீங்கள் பெரிதாகக் கருதவில்லையோ... அதனால்தான் எங்கள் எதிரில் ரசவாதம் புரிய விரும்பவில்லையோ!’ என்று கேட்டீர்கள். ஒருவரைப் பெரிதாகக் கருதுவதும் சிறிதாகக் கருதுவதும் உங்களைப் போன்ற இகபர வாழ்வு வாழ்பவர்களின் போக்காகும். எதுவும் பெரிது மில்லை; எதுவும் சிறிதுமில்லை என எண்ணும் சித்தன் நான். ஒரு வட்டத்தின் மையப்புள்ளி போன்றவன் சித்தன். அப்படி இருந்தாலே எல்லாப் பக்கங்களும் அவனுக்கு சம தூரமாக இருக்கும்.

இங்கு வருபவர்களுக்கு நான் சொல்லும் மூன்று விஷயங்களில் `இங்கே யாரும் பெரியவரும் அல்ல, சிறியவரும் அல்ல’ என்று கூறியதை நீங்கள் துளியும் உணர்ந்து பார்க்கவேயில்லை. நான் எவ்வளவோ சொன்னேன். இந்தப் பூமியைப் பற்றிச் சொன்னேன், வானம் பற்றிச் சொன்னேன், சூரிய சந்திரர் முதல் நவகோள்கள் வரை எவ்வளவோ சொன்னேன். மட்டுமா? தாவரங்களான மூலிகைகள் முதல் அதன் குணம் பற்றியெல்லாமும் கூறினேன். எல்லாவற்றையும் சத்தமாக மட்டுமே உள்வாங்கியுள்ளீர்கள் என்பது, இப்போது நீங்கள் நடந்து கொள்வதிலிருந்து தெரிகிறது. ஓர் எழுது கருவியாக மட்டுமே இருந்துள்ளீர்கள். மற்றபடி என் தொடர்பு, உங்களுக்குள் உங்கள் ஆசைகளைத் துளியும் சீரமைக்கவில்லை. அதனால்தான் ரசவாதத்தில் உங்கள் மனம் நிலைகொண்டுவிட்டது.

அதை நான் செய்வதைக் காணும்போதே எதைக்கொண்டு எப்படிச் செய்கிறேன் என்பதைத் தெரிந்துகொண்டு நீங்களும் செய்ய விரும்புகிறீர்கள். உலகின் பொதுப்பணம் இந்தத் தங்கம். இதைச் செய்ய ஒரு மனிதனால் முடியுமானால், அவன்தான் பூவுலகில் குபேரன்! ஆனால், இப்போது சொல்கிறேன்... ஆசையுள்ள ஒரு மனிதனால் எந்தக் காலத்திலும் ரசவாதம் புரிய முடியாது.

ரசவாத மூலிகைகளில் அதைப் பயன்படுத்தும் மனிதனும் ஒரு மூலிகை. இது ரசவாத ரகசியத்தின் முதல் ரகசியம். ஒரு மனிதன் ஆசையும் பாசமுமாய் உள்ள வரை அவன் கோள்களின் ஆதிக்கத்தில் இருப்பவன் ஆவான். ஆசாபாசங்களைத் துறந்தாலே கோளாதிக்கத்தில் இருந்து விடுபட முடியும். அப்போதுகூடச் சில கோள்கள் இயங்கியபடிதான் இருக்கும். இப்போது நான்கூடக் கேது சாரத்தில், சூரிய புக்தியில் இருக்கிறேன். கோள் ஆதிக்கத்திலிருந்து இந்த உடம்பை விடுவிப்பது என்பது, சிலந்தியின் வலையில் அதன் கால்களுக்கு இடையில் அகப்பட்ட பூச்சிக்கு இணையானது. ஒரு காலை விலக்கும்போதே இன்னொரு கால் அமுக்கிப் பிடிக்க முயலும்.

தியானத்தில் அமர்ந்து, குண்டலினியை எழுப்பி, உடம்பை அருட்கதிர்களால் ஒரு குதிருக்குள் நெல்லைக் கொட்டி நிரப்புவதுபோல் நிரப்பும்போதுதான் இந்தக் கோள் ஆதிக்கம் வலுவிழந்து விலகி நிற்கும். அப்போதுதான் குண்டலினி சக்தியுடைய மனிதனும் ஒரு மூலிகைத் தாவரம்போல் ஆகிறான். இந்த நிலையில், எந்த ஆசையும் பரவசமுமின்றி ரசவாத மூலிகைகளைக்கொண்டு ரசம் செய்து அதில் செம்பையோ அல்லது இரும்பையோ போடும்போது அது வேதிவினைக்கு உட்பட்டுத் தங்கமாகிறது.

சற்று மாற்றிச் சொல்கிறேன். பஞ்சபூதங்களால் அழிக்க முடியாத உலோகமாகிறது. தங்கம் செய்வது என்பது, இப்படி எந்த மாயமும் இல்லாத ஒரு வேதிச்செயல். இந்த உலகில் பிறந்த எவர் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். ஆனால் அவர், நான் கூறியதுபோல் குண்டலினி சக்திகொண்ட, கோள் ஆதிக்கமில்லாதவராக இருக்க வேண்டும். இவையெல்லாம் உங்களுக்குச் சாத்தியமே இல்லை!

என்னைப் பற்றிய புரிதல்கூட உங்களிடம் சரியாக இல்லை. தங்கத்தை மிக மதிப்புக்குரியதாகக் கருதி உங்கள் மதிப்பை உங்களையும் அறியாமல் இழந்துவிட்டீர்கள். இதனாலேயே தொடக்கத்தில் பதில் ஏதும் கூறாமல் புன்னகையோடு கடக்க முயன்றேன். நீங்கள் வற்புறுத்தியதால் இவ்வளவு தூரம் கூறுகிறேன்’’ என்ற போகர், அடுத்து அஞ்சுகன், சங்கன், புலிப்பாணி பக்கம்தான் திரும்பினார். அங்கிருந்து, நவபாஷாணங்களைச் சேகரிக்கவென்றே அவர் வடிவமைத்திருந்த நவமர்களான அஞ்சுகன், சங்கன், புலிப்பாணி என எல்லோருமே போகரைப் பார்த்தனர்.

``அருமைச் சீடர்களே, தண்டபாணித் தெய்வத்தைத் தங்கத்தால் செய்யாமல் ஏன் நவபாஷாணத்தால் செய்ய வேண்டும் என்று கேட்டீர்கள் அல்லவா? தங்கம் முதலில் பொருள் மதிப்புக்கே உரியது. அதன் அருள்மதிப்பு எங்களைப் போன்ற சில சித்த புருஷர்களுக்கே தெரியும். நாங்கள் அதன் பொருள் மதிப்பைப் பொருட்படுத்தியதேயில்லை. எங்களைப்போல் எல்லோரையும் சொல்ல முடியுமா?

தண்டபாணித் தெய்வத்தை ஒருவன் தரிசிக்கும்போது தரிசிப்பவன் கண்ணுக்குத் தங்கம் தெரியக்கூடாது. தண்டபாணி மட்டுமே தெரிய வேண்டும். தண்டபாணியும் பொருள் தரும் ஆகமன் அல்லன்... அருள் தரப்போகும் ஆகமன். அவனை நான் அப்படிக் கட்டமைக்கவே விரும்புகிறேன். தங்கம் என்பது, குரு என்னும் கோள் ஆதிக்கத்துக்குரியது. நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள், நவபாஷாணங்கள் கோளாதிக்கமற்றவை!’’

இறையுதிர் காடு - 31

போகர் இங்கே சற்று இடைவெளி விட்டு எல்லோரையும் பார்த்தார். கிழார்களும் ஊன்றி கவனித்தனர்.

``என்ன... எப்படி என்று கேட்கத் தோன்ற வில்லையா?’’ என்று அவரே தூண்டிவிடவும் ``எப்படி?’’ என்று ஒருமித்த குரலில் கேட்டனர்.

``அப்படிக் கேளுங்கள். பாஷாணங்கள் தனிமமாக உள்ள வரை அவற்றுக்கு விஷத்தன்மை அதிகம். ஒன்றோடு ஒன்று கலக்கும்போது அந்தத் தன்மை மாறுகிறது. கலவையின் அளவைப் பொறுத்து, அது காந்தமாகிறது.

 கலவையின் அளவைப் பொறுத்து, அது மின்னல்களைத் தோற்றுவிக்கும். கலவையின் அளவைப் பொறுத்து, அது அணுக்கதிர்களை வெளிப்படுத்தும். இப்படி ஒன்பது கலவைகளை எண்பத்தொரு வித அளவுகளுக்கு உட்படுத்திட, எண்பத்தொரு சக்தி விசை ஏற்படும்.

முன்னதாய் ஒரு கேள்வி... உங்களுக்கெல்லாம் ஆயகலைகள் அறுபத்துநான்கு என்பது தெரியும். அவை எவை எனத் தெரியுமா?’’ - போகர் கேள்வி கேட்டு நிறுத்தினார்.

சீடர்களுக்குத் தெரியவில்லை. கிழார்களுக்குத் தெரிந்திருந்தது. ``நாங்கள் கூறலாமா?’’ என்று ஒருமித்துக் கேட்டனர்.

``யாராவது ஒருவர் கூறுங்கள்’’ என்றார் போகரும்.

வேல்மணிக் கிழார் எழுந்து நின்றுகொண்டு கம்பீரமான குரலில் வரிசையாகக் கூறத் தொடங்கினார்.

``நன்கு பாடுதல், கருவிகளை இசைத்தல், நாட்டியம் ஆடல், ஓவியம் வரைதல், கோலமிடுதல், பூ அலங்காரம் செய்தல், இலை அலங்காரம், ஆடையில் வண்ணம் சேர்த்தல், குடிலழகு செய்தல், படுக்கை வாகு, நீரிசை (ஜலதரங்கம்), வேடம் அணிதல், மாலை தொடுத்தல், அதை அழகுற அணிதல், சுவடி எழுதுதல், சங்கு-சிப்பிகளால் காதணி செய்தல், விரை கூட்டுகை, அணிகலன் புனைகை, மாயமாய் மறைவது (இந்திரஜாலம்), காம விளையாட்டு, களி விளையாட்டு, மடை நூலறிவு - இவை முன்வகை’’ என்றிட, அருணாசலக்கிழார் அடுத்து தொடர்ந்தார்.

``தையல், நெசவு, வீணை, உடுக்கை வாசிப்பு (டமருகம்), விடுகதை போடுதல், யாப்பிசைத்தல், நெருட்டுச் சொற்றொடர் அமைத்தல், பண்ணோடு பாடல், நாடகமாக்கம், குறிப்பறிதல், கட்டில் வடம் பின்னுதல், கதிர் நூல் சுற்றல், தச்சுவேலை, வாஸ்துசாஸ்திரம் அறிதல், ரத்னப்பரிசோதனை, நாடித்துடிப்பு அறிதல், சிற்பசாஸ்திரம், தோட்டத்தவம் (தோட்டவேலைதான் `தவம்’ எனப்படுகிறது), சேவல் போர், விலங்கு வேட்டை, பறவைமொழி அறிதல், உடும்பு பிடித்தல் - இவை நடுவகைக் கலைகள்’’ என்று கூறி முடிக்க, பூமணிக்கிழார் அடுத்துள்ள கலைகள் பற்றிக் கூறத் தொடங்கினார்.

``சங்கேத மொழி அறிவு, ரகசிய மொழி அறிவு, வட்டார மொழி அறிவு, பூத்தேர் அமைக்கும் திறன், நிமித்திகம் அறிதல், பொறிகள் (கருவி) உருவாக்கம், ஏகாக்ரகம் (ஒருமுறை கூறினால் போதும் - அதை அப்படியே கிரகித்துக்கொள்ளும் அறிவு), இருகால் கொள்கை (பலவற்றை நினைவில்கொள்ளுதல்), புதிர்போடுதல், காவியம் இயற்றுதல், உரிச்சொல் அறிவு (ஒரு சொல் - பல பொருள் தருதல்), யாப்பு அறிதல், அணி அறிதல், மாயக்கலை புரிதல் (கயிற்றைப் பாம்பாக்குவது போன்றது), ஒரே ஆடையைப் பலவிதமாக அணிதல், சூதாட்டம், சொக்கட்டான், பாவை (பொம்மை) பந்து முதலியவற்றோடு ஆடுதல், யானையேற்றம், குதிரையேற்றம், மரம் ஏறுதல், படைக்கலப் பயிற்சி... இறுதியாக உடற்பயிற்சி. இவை அறுபத்து நான்கின் பின்வகை’’ என்று மூன்று கிழார்களும் அறுபத்து நான்கு கலைகளை வரிசைப்படுத்தினர்.

``அருமை கிழார்களே... அருமை! அறுபத்து நான்கு கலைகளை ஒருவன் அறிவது என்பது பெரும்பேறாகும். பொதுவில் இந்த அறுபத்து நான்கில் நான்கைந்து கலைகள் ஒருவருக்கு இருந்தாலும் போதும், அவர்கள் வாழ்வில் பொன், பொருள், புகழ் மூன்றும் கிடைத்துவிடும். அறுபத்து நான்கும் இருந்தால், அவனை வெல்ல எவராலும் இயலாது. வரலாற்றில் காளிதேவியின் அருள்பெற்ற விக்கிரமாதித்தன் அறுபத்து நான்கையும் அறிந்தவன் ஆவான். அவனுக்குப் பிறகு எவரும் அறிந்ததுபோல் எனக்குத் தெரியவில்லை.

இந்தக் கலைகளோடு பதினாறு பேறுகள் எனப்படும் புகழ், கல்வி, வீரம், வெற்றி, பிள்ளைப்பேறு, துணிவு, செல்வம், தான்யம், இன்பம், ஞானம், அழகு, சிறப்பு, மனை, நோயில்லாமை, தெளிந்த சிந்தை, குறையில்லாத ஆயுள் ஆகியவையும் சேர்ந்திட, எண்பது வகை பயன்கள். இத்துடன் தண்டபாணித் தெய்வத்தின் தண்ணருள் சேர்ந்தால் எண்பத்தொன்று! இந்த எண்பத்தொன்றையும் நான் உருவாக்கப்போகும் நவபாஷாணங்கள் அளிக்கப்போகின்றன. நவமர் தங்களுக்குள் பெருகினால் அதனால் வருவது எண்பத்தொன்றாகும். நவத்தின் தனிச்சிறப்பே தன்னிலை மாறாத தன்மைதான். கூட்டினாலும், பெருக்கினாலும், வகுத்தாலும், கழித்தாலும் ஒன்பது தன் தனித்துவத்தை இழப்பதேயில்லை.

தண்டபாணியும் அதுபோன்றவனே! இவனுக்குள் மூவர், தேவர் என யாவரும் அடக்கம். இவன் முன் சென்று நின்றாலே போதும், இந்தச் சிலை நம் உயிர்ச்சிலைகளின் உள்புகுந்து கதிர்வீச்சால் சுத்தீகரணம் செய்து, அவரவர் கர்மத்துக்கு ஏற்ப நல்விளைவுகளை அவர்களுக்குள் தூண்டிக் காரியமாற்றும். குறிப்பாக, பேராசை குறைந்து ஆசை சீராகும். ஏதேனும் ஒரு கர்மவினையாவது தீர்ந்து பாரம் குறையும். சிலருக்கு எல்லாக் கர்மவினை களுமேகூடத் தீர்ந்துவிடும். குறிப்பாக, உடம்பின் ரத்த ஓட்டமும், இதயத்துடிப்பும், சுரப்பிகளும் கழுவப்பட்டதுபோல் சுத்தமாகும். மனதுக்குள் தீப்பந்தம் பிடித்தாற்போல் வெளிச்சம் பரவும். தீராத வியாதிகள் இருந்தால் தண்டபாணி மேனிமேல் பட்ட விபூதியைக் குழைத்துப் பூசுங்கால், அது காய்ந்து ஆவியாகும் தருணம் - வியாதிக்குக் காரணமான கெட்டநீரையும் இழுத்து தன்னாவியோடு அதையும் ஆவியாக்கி விடும்.

மேலும், அபிஷேகப் பாலையும் ஏனைய ரசங்களையும் உண்ண உண்ண, குன்மம் குஷ்டம்கூடக் கட்டுப்படும். சுருக்கமாகக் கூறுவதானால், இந்தத் தண்டபாணி மலைமீது இருந்தபடி விண்ணில் செவ்வாயையும், அவன் எதிரியான சனியையும் சீராக்குவதோடு, மண்ணில் மனிதர்களுக்கு ஞானத்தையும் ஆரோக்கியத்தையும் வாரி வாரி வழங்குவான். தங்கத்தில் அவனைச் செய்தால் இது எதுவுமே சாத்தியமில்லை... இப்போது புரிகிறதா?’’
 - போகரின் நெடிய விளக்கம் எல்லோரையுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, அடுத்து என்ன கேட்பது என்றே தெரியாதபடி சிந்தனைக்கு ஆட்படுத்தி யிருந்தது.

ஆயினும் கேள்விகள் எழாமல் இருக்குமா என்ன?

இன்று    ஜோதிடர் முகத்தில் தென்பட்ட குரூரப் பிரகாசம், பானுவைப் பல மாதிரி சிந்திக்கச்செய்தது.

``ஜீ... அதுல அப்படி என்னல்லாம் இருக்கு, உங்களுக்கு அது பயன்பட?’’ என்ற கேள்வியைச் சட்டெனக் கேட்டாள்.

அந்த ஜோதிடர் நாலாபுறமும் முதலில் பார்த்தார். பிறகு சட்டைப் பாக்கெட்டிலிருந்து சங்கிலியோடுகூடிய ஒரு கடிகாரத்தை எடுத்து உள்ளங்கையில் பிடித்து மணி பார்த்தார். திரும்ப பாக்கெட்டில் போட்டுக்கொண்டவர், தன் லெதர் பேக்கைத் திறந்து டேபை எடுத்து ஆன் செய்து நொட் நொட் என ஆள்காட்டி விரலால் தட்டி, ஒரு ஆப்புக்கு உயிர்கொடுத்து, திரையில் தெரிந்த சில அட்டவணைகளைப் பார்த்தார். அதைப் பார்த்தபடியே பேசவும் தொடங்கினார்.

``பானு, லெட் வி மூவ் ஃப்ரம் ஹியர் டு எம்.பிஸ் ஹோம். தேர் வி ஸ்டார்ட் டு பிரேக் த பாக்ஸ் இம்மீடியட்லி!’’ என்றார்.

``ஜீ... பாரதி மேடம் வந்தா பதில் சொல்ல முடியாது.’’

``என்ன செய்வா அந்தப் பொண்ணு?’’

``அது எனக்கு எப்படித் தெரியும்? யாரைக் கேட்டு உடைச்சேன்னு கேட்பாங்க... என்ன பதில் சொல்றது?’’

``மருந்துக்காகன்னு சொல்லு.’’

``ரைட்... என்கிட்ட ஏன் பர்மிஷன் கேட்கலைன்னு கேட்டா.’’

``போன்ல டிரை பண்ணினேன். டவரே கிடைக்கலைன்னு சொல்லிச் சமாளிக்க முடியாதா?’’

``ஜீ... பாரதி மேடம் ரொம்ப ரொம்ப ஷார்ப். எம்.பி சார்கிட்டயே தப்புன்னா தப்புதான்னு பேசறவங்க அவங்க. இன்ஃபாக்ட், செத்துப்போன அந்தக் குமாரசாமிக்காக அவங்க இப்பகூட போராடிக்கிட்டிருக்காங்க. நான் சொல்ற சமாதானத்தையெல்லாம் நிச்சயம் நம்ப மாட்டாங்க.’’

``பானு, பேசிக்கிட்டிருக்க இப்ப நேரமில்லை. நாம் போய்க்கிட்டே பேசுவோம். எனக்கு இப்பவே அந்தப் பெட்டியைப் பார்த்து எப்படியாவது அதைத் திறந்துடணும்.’’

``அது ஒரு பழைய புத்தகக் கடைக்காரன் மூலமா கிடைச்ச ஒரு ஆன்டிக்ஸ் அயிட்டம். ஆனா, அதுக்குள்ள மருந்து இருக்குன்னு நீங்க எதைவெச்சு நம்புறீங்கன்னு எனக்குத் தெரியலை.’’

``நோ... அது ஆன்டிக்ஸ் அயிட்டம் கிடையாது. அது பர்மா மேடு லாக்கர் பாக்ஸ். அதோட பேர்தான் அந்தப் பெட்டியைத் திறக்கிற சாவி. கப்பல் பயணம் செய்தவங்க, இந்த மாதிரிப் பெட்டியைத்தான் யூஸ் பண்ணிக்கிட்டிருந்தாங்க.’’

``இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?’’

``நான் ஒரு ஜோசியக்காரன். அதுலயும் வி.ஐ.பி-க்களுக்கான ஜோசியக்காரன். எனக்கு உலகம் பூரா தொடர்பு உண்டு. அப்படி ஒரு தொடர்புல எனக்குத் தெரியவந்த விஷயம் இது. பர்ட்டிக்குலரா எங்க ஜோசியத்துக்கு சித்தர்கள்தான் பிரதானம். அப்படிப்பட்ட சித்தர்கள்ல ஒருத்தர்தான் புலிப்பாணி சித்தர்ங்கிறவர். அவர் எழுதிய பல நூல்களைப் படிச்சுதான் நான் ஜோதிடன் ஆனேன். அந்தப் புலிப்பாணி சித்தர் இப்பகூட சூட்சமமா நடமாடுறதா ஒரு நம்பிக்கை, எங்க ஜோதிட உலகத்துல இருக்கு. அவர் இந்தப் பெட்டி பற்றி ஒரு ஏட்டுல குறிப்பிட்டிருக்காரு.’’

இறையுதிர் காடு - 31

``ஒரு வட இந்தியரான நீங்க, எங்க ஊர் சித்தர் புக்கைப் படிச்சீங்களா... ரொம்ப ஆச்சர்யமா இருக்கு!’’

``ஆமாம்... எங்க பாஷையில இந்த மாதிரி புத்தகச் செல்வங்கள் கொஞ்சம்கூட இல்லை. ஜோதிட மாநாட்டுல கலந்துகிட்ட தமிழ்நாட்டு நாடி ஜோசியர் மூலமாத்தான் நான் புலிப்பாணி சித்தர் பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப அதைப் பற்றி விரிவா பேச நேரமில்லை. முதல்ல புறப்படு.’’

``திரும்பவும் சொல்றேன்... பெட்டியை ஸ்மூத்தா திறக்க வழி இருக்கான்னு பார்ப்போம். உடைக்கிறதெல்லாம் வேண்டாம்.’’

``சரி, முதல்ல கிளம்பு... மற்ற விஷயங்களை அப்புறம் பேசிப்போம்.’’

அந்த ஜோதிடர் வாயிற்புறம் நோக்கி நடக்கத் தொடங்கினார். பானு, அரைமனதாய் அவரைத் தொடர்ந்தாள். புறப்படும் முன் அவளிடம் ஒரு சிறு தேக்கம்.

``ஜீ... வெளியே கார்கிட்ட வெயிட் பண்ணுங்க. நான் கணேசபாண்டிகிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்’’ என்று திரும்பி நடந்தாள்.

கணேசபாண்டி யாருடனோ போனில் பேசியபடி இருக்க, நெருங்கி நின்றாள். அவரும் ஏறிட்டார்.

``கிளம்பறேண்ணே...’’

``என்ன அவசரம் பானு?’’

``அவசரம்தாண்ணே... கிட்டத்தட்ட 12 லெட்டர் டைப் பண்ணவேண்டியிருக்கு. சார் மேட்டர் கொடுத்து ரெண்டு நாள் ஆச்சு. அவ்வளவும் பார்லிமென்ட் செகரட்ரிக்குப் போகவேண்டியது’’ - பானு தொழில்ரீதியாகப் பொய் சொன்னாள்.

கணேசபாண்டி அதைக் கேட்டு அரை மனதோடும் சலனத்தோடும் விடைகொடுத்தார். பானுவும் புறப்பட்டாள். விறுவிறுவென நடந்தவள், ஓர் இடத்தில் ஸ்தம்பித்து நின்றாள். எதிரே ஒரு நாற்காலியில் செத்துப்போன குமாரசாமி அவளையே உற்றுப்பார்த்தபடி அமர்ந்திருந்தார்!

பானுவுக்கு சோடா பாட்டில் கோலி தொண்டையில் அடைத்தாற்போல் இருந்தது. அப்படியே நின்றுவிட்டாள். யதார்த்தமாய் தன் இடத்திலிருந்து பார்த்த கணேசபாண்டியன், `இந்தப் பொண்ணு என்ன அப்படியே மரமாட்டம் நிக்குது?!’
என்று அருகே வரவும்தான், அவள் எதிரில் யாரையோ பார்த்தபடி நிற்பது புலனானது.

``பானு...’’

``...’’

``ஏ பானு... என்னாச்சு?’’

``அ... பாண்டியண்ணனா... அதோ... அதோ...’’

``எதோ?’’

``ஐயோ அங்கே பாருங்க, நாற்காலி மேல அந்தக் குமாரசாமி உட்கார்ந்திருக்கிறதை...’’

``குமாரசாமியா?’’ - கணேசபாண்டியும் திரும்பிப் பார்த்தார். ஆனால், யாரும் புலனாகவில்லை.

``எங்கம்மா... என் கண்ணுக்கு யாருமே தெரியலியே!’’

``ஐயோ... அதோ அதோ... எழுந்து போறார் பாருங்க.’’

``எங்க... எங்க..?’’

``அதோ அந்த நாற்காலிகிட்டண்ணே.’’

கணேசபாண்டியன் வேகமாக அவள் சுட்டிக்காட்டிய நாற்காலி அருகே போய் நிற்கவும், பானு முகம் பெரிதும் வெளிரத் தொடங்கியது. நாற்காலியில் அமர்ந்திருந்த குமாரசாமி எழுந்து செல்வதைக் கண்டவள் ``அண்ணே, அவர் எழுந்திரிச்சு போறாருண்ணே...’’ என்றாள். எதுவும் கணேசபாண்டியனுக்குத் துளியும் புலனாகவில்லை. அதன் பிறகு பானுவும் எதுவும் பேசவில்லை. அதற்குள் கணேசபாண்டியனே நெருங்கி வந்தார். அவர் பார்வையில் நெற்றியில் மடிப்பு விழுந்த சலனம்.

``பானு... நிஜமா குமாரசாமியைப் பார்த்தியா?’’ என்றார் ஹஸ்கி வாய்ஸில். பானுவுக்கு வியர்க்க ஆரம்பித்து வழியவும் தொடங்கியிருந்தது.

``உன்னைத்தான் பானு கேட்கிறேன்...’’

``பா... பா... பார்க்காமலா சொன்னேன்!’’

``என் கண்ணுக்குத் தெரியலியே..?’’

``இல்லை... எனக்கு பயமா இருக்கு. நான் வர்றேன். ஜாக்கிரதைண்ணே... சம்திங் ராங்’’ என்று துண்டு துண்டாய்ப் பேசிக்கொண்டே வெளியே செல்லத் தொடங்கினாள்.

வெளியே கார் அருகே ஜோதிடர் காத்துக்கொண்டிருந்தார். பானு படபடப்போடு வந்து காரில் முன்னால் ஏறிக்கொள்ளவும் பெரிதும் ஆச்சர்யம். ஜோதிடரும் ஏறிக்கொண்டார். கார் புறப்பட்டது. உள்ளே ``என்னாச்சு பானு... ஏன் அப்நார்மலா இருக்கே?’’

``ஜீ... இந்த ஆவி, பேய், பிசாசு எல்லாம் உண்மையா?’’

``எதுக்கு இப்ப போய் இந்தக் கேள்வியைக் கேட்கிறே?’’

``நா... நான் இப்ப அந்த ஆவியைப் பார்த்தேன்.’’

``எந்த ஆவியை?’’

``கு... குமாரசாமி ஆவியை...’’

``யூ மீன்... அந்த இடத்தை விற்க மாட்டேன்னு சொன்ன அந்த பர்சனா?’’

``அ... ஆமா..’’

``மை காட்! ஹாஸ்பிடல் வரை அவன் ஆவி வந்துடுச்சா?’’

``அப்ப... ஆவியெல்லாம் உண்மையா?’’

``பார்த்த நீயே இப்படிக் கேட்டா, நான் என்னன்னு சொல்ல... க்யா பானு?’’

``ஏன் அது குமாரசாமி மாதிரி யாரோ ஒருத்தரா இருக்கக் கூடாது?’’

``க்யா பானு... அப்படியும் சொல்றே... இப்படியும் கேட்கிறே?’’

``ஜீ... ரொம்பவே தப்புத் தப்பா நிறைய விஷயங்கள் தொடர்ந்து நடந்துகிட்டே வருது. ஒரு பக்கம் பெட்டி, கத்தி - மறுபக்கம் ஆவி... சம்திங் ராங்.’’

``அஃப்கோர்ஸ்... மகேந்தர் ஜீக்கு இப்ப ரொம்பவே கெட்ட நேரம். அவர் ஜாதகப்படி சனி அவருக்கு இப்ப கெடுதல் செய்யணும். சனியோட வீட்டுக்குள்ள செவ்வாயும் இப்ப வந்து உட்கார்ந்துட்டான். குரு பார்வைவேற சுத்தமா இல்லை. இப்படித்தான் ஒரு தப்பு நடக்கும்னு பிரெடிக்ட் பண்ணவே முடியாது. பராபர்... எப்படிவேணா நடக்கலாம்.’’

கார் போய்க்கொண்டே இருந்தது. ஜோதிடர் பேச்சு பானுவுக்குள் பீதியைக் கிளப்பி, அவள் நடுங்கவே தொடங்கிவிட்டாள். அதற்குள் ராஜா மகேந்திரனின் பங்களா வரவும், வாட்ச்மேன் கதவைத் திறக்க, கார் உள் நுழைந்து நின்றது.

வெளியே மருதமுத்துவில் இருந்து வீட்டு வேலைக்காரி வரை எல்லோரும் கூட்டமாய் நின்றிருந்தனர். காரை விட்டு இறங்கிய பானு ஆச்சர்யமாகப் பார்த்தபடி அவர்களை நெருங்கி, ``என்ன இது... எல்லாரும் இங்கே நின்னுகிட்டி ருக்கீங்க? ஐயா இல்லை, அம்மா இல்லைன்னதும் துளிர்விட்ருச்சா?’’ பானு படபடக்கவும், மருதமுத்து சற்றுக் கோபமாக முன் வந்தவனாய் ``உள்ளே போய்ப் பாத்துட்டு வந்து அப்புறம் சொல்லுங்க...’’ என்றான். பானுவும் வேகமாய் உள்ளே சென்றாள். சென்ற வேகத்தில் வெளியே ஓடி வந்தாள். ஜோசியரும் வந்துவிட்டிருந்தார்.

``க்யா பானு?’’ என்றார். வியர்வை பெருகி வழிய ``பெட்டி மேல பா... பா... பாம்பு...’’ என்றாள். ஜோதிடருக்கு ஷாக் அடித்த மாதிரி இருந்தது. தயக்கத்தோடு ஜோதிடரும் எட்டிப்பார்த்தார்.

மரப்பெட்டி மேல் அந்தப் பாம்பு கம்பீரமாய் படம் விரித்திருந்த நிலையில் அதன் இரட்டை நாக்கும் வெளியே மின்னல் வேகத்தில் வந்து வந்து உள்ளே போனபடி இருந்தது.

அந்தத் தென்னந்தோப்பில் ஒரு கட்டில் மேல் கால் மேல் கால் போட்டு அந்தக் காலை ஆட்டியபடியே படுத்திருந்தார் கண்ணாயிரப் பண்டாரம். செந்திலும் அரவிந்தனும் மெல்ல அவரைச் சமீபித்து நின்றனர். உடன் அவர்களை அழைத்து வந்திருந்த தோப்புக்கார வேலையாள், ``சாமி... உங்களைப் பாக்கணும்னு வந்திருக்காங்க. கூட்டியாந்திருக்கேன் பாருங்க’’ என்றபடியே அந்த வேலையாள் விலகிச் சென்று விழுந்து கிடந்த ஒரு தென்னை மட்டையைத் தூக்கிக்கொண்டு, மட்டைகளைப் போட்டு வைத்திருக்கும் இடம் நோக்கி நடந்தான்.

இறையுதிர் காடு - 31

பண்டார சாமியும் அப்படியே, படுத்த நிலையிலேயே கழுத்தை வளைத்துப் பார்த்தது. பார்க்கவும் அரவிந்தன் வணக்கம் சொன்னான். செந்தில் பாதி சொன்னான்.

``ஆரு...?’’

``உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கோம்...’’

``அதான் வந்துட்டியே... கழுத்துல என்ன மாலை? மலை மேல கிழவி போட்டுவிட்டாளா?’’ - முதல் கேள்வியிலேயே சன்னமாய் ஓர் அமானுடம்.

``அ... ஆமாம். ஆனா, எனக்கு அவங்க போடலை. பாரதி வீசி எறியவும் என் கழுத்துல விழுந்துச்சு.’’

``அப்புடியா... அது இருக்கிறதாலதான் நீ இப்ப என்னைப் பார்த்துப் பேசிக்கிட்டிருக்கே. இல்லைன்னா உனக்கு நாக்குத் தள்ளியிருக்கும். நான் கிடைச்சிருக்க மாட்டேன்.’’

``அப்படி என்ன இருக்கு இந்த மாலையில?’’

``ஹூம்... கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை... அதுல இருக்கிற ஒவ்வொரு மணியும் ஒரு சித்தன் கழுத்துல இருந்த மணிங்க.’’

கண்ணாயிரப் பண்டாரம் சொன்னதில் கொஞ்சம் வியப்பு... கொஞ்சம் மர்மம்!

- தொடரும்.

- இந்திரா சௌந்தர்ராஜன்;  ஓவியங்கள்: ஸ்யாம்