Published:Updated:

கரூவூரில் ஒரு நாள்...

எறிபத்த நாயனார் கதை!

கரூவூரில் ஒரு நாள்...

எறிபத்த நாயனார் கதை!

Published:Updated:
கரூவூரில் ஒரு நாள்...

தினமும் வைகறையில் துயில் எழுந்து நீராடிப் பின்னர், சிவ நாமம் சொல்லியபடியே நந்தவனத்தில் நறுமண மலர்களைச் சேகரித்து சிவாலயத்துக்கு எடுத்துச் சென்று, இறைவனுக்கு மாலையிட்டு வணங்குவார் சிவகாமியாண்டார். அதுவும் எப்படி? தென்னாடுடையானுக்குப் படைக்கும் மலர்கள் தன்னால் மாசடைதல் கூடாது என்று வாயில் துணியைக் கட்டியவாறுதான் பூக்களைச் சேகரிப்பாராம் இந்த சிவபக்தர்!  

அன்று மகா நவமி. வழக்கம்போல அதிகாலை நீராடி, நந்தவனப் பூக்கள் சேகரித்துக் கொண்டு சிவநாமம் ஜபித்தபடி ஆலயத்துக்குச் சென்று கொண்டிருந்தார் சிவகாமியாண்டார். அதேநேரம்... ஆற்றில் நீராட்டப்பட்டு, அலங்காரத்துடன் அந்த வழியே வந்து கொண்டிருந்தது, சோழ மன்னனின் (புகழ் சோழ நாயனாரின்) பட்டத்து யானை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
திடீரென என்ன ஆனதோ தெரியவில்லை... பாகன்களின் கட்டுப்பாட்டுக்கு அஞ்சாமல், மதம் பிடித்தது போல் தறிகெட்டு ஓடிவந்தது பட்டத்து யானை. வீதியில் அனைவரும் பயந்து ஓட, சிவகாமியாண்டார் சிவ நாமத்தை ஜபித்தபடி அமைதியாக நடந்து கொண்டிருந்தார். சிந்தையில் சிவனை மட்டுமே நிறுத்தி, திருநாமம் ஜபித்தபடி வந்த அந்த அருளாளருக்கு, யானையின் பிளிறலோ, ஜனங்களின் அலறலோ எதுவும் கேட்கவில்லை!

கோபத்துடன் சிவகாமியாண்டாரை நெருங்கிய யானை, அவர் கையில் வைத்திருந்த பூக்கூடையை தட்டிவிட்டதுடன், பூக்களை மிதித்து நாசம் செய்து விட்டுச் சென்றது. சினம் கொண்டு களிறை அடிக்க தடியுடன் பாய்ந்து சென்றார் சிவகாமியாண்டார். அவர்தான் முதியவராயிற்றே... மதிகெட்டு ஓடும் களிறின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓட முடியுமா? தரையில் தடுக்கி வீழ்ந்தார்; 'சடாமுடியில் ஏறும் மலரினை யானை சிந்துவதோ சிவமே சிவமே’ என நிலத்தில் கைகளை ஊன்றிக் கதறினார்.

அடியவரின் ஓலம் கேட்டு ஓடி வந்தார், கையில் பரசு ஏந்திய சிவனடியார் ஒருவர். அவர்தான் எறிபத்த நாயனார். சர்வமும் சர்வேஸ்வரனே என நிதமும் ஈசனை துதிப்பவர்; சிவனடியார்களுக்கு நேரும் சிறு துன்பத்தையும் பொறுக்காதவர்; அடியார்களை துன்புறுத்துபவர்களைக் கண்டால்,  வெகுண்டெழுந்து தண்டிப்பவர். சிவனடியவர்களைக் காக்கவும், தீயவர்களைத் தண்டிக்கவும் எந்நேரமும் கையில் பரசு ஏந்தியபடி இருப்பதாலேயே... அவருக்கு 'எறிபத்த நாயனார்’ என்று பெயராம்!

அவரிடம், நடந்தவற்றை கண்ணீருடன் விவரித்தார் சிவகாமியாண்டார். அவ்வளவுதான், எறிபத்த நாயனாருக்கு வந்ததே கோபம்!

பரசு ஆயுதத்தை ஏந்தியபடி யானை சென்ற வழியே சென்றார். யானையைக் கண்டதும் பரசாயுதத்துடன் பாய்ந்தார்; தனது மழுவால் யானையின் துதிக்கையை துண்டித்தார். அலறியபடி நிலத்தில் வீழ்ந்து மடிந்தது களிறு. இதைக்கண்டு சண்டையிட வந்த பாகன்களையும் தனது மழுவைக் கொண்டு வென்றார். பட்டத்து யானையும், பாகன்களும் கொல்லப்பட்ட செய்தி புகழ்சோழனுக்கு எட்டியது. கோபம் கொண்ட மன்னன், படைகள் சூழ அந்த இடத்துக்கு வந்தான்.

கரூவூரில் ஒரு நாள்...

யானையும், வீரர்களும் மடிந்து கிடக்க, அடியவர் ஒருவர் மட்டும் சினத்துடன் ஆயுதம் ஏந்தி அருகில் நிற்பது கண்டு குழம்பினான் மன்னன். யானையைக் கொன்றது யாரென அங்கிருந்தவர்களிடம் விசாரித்தான்; சிவனடியார்தான் இந்த செயலைச் செய்தவர் என்று அறிந்தான். காரணமின்றி சிவனடியார் இத்தகு பாதகத்தைச் செய்யமாட்டார் என்று உணர்ந்தவன், எறிபத்த நாயனாரிடமே  அனைத்தையும் கேட்டறிந்து பதறினான்.

'சிவனடியாருக்கு எமது பட்டத்து யானையினால் எந்தப் பாதகமும் நேராதது நான் செய்த புண்ணியம். இப்படி ஒரு பாவத்தைச் செய்த யானையையும், அதனை அடக்காத வீரர்களையும் மட்டும் கொன்றால் போதாது. அவற்றையெல்லாம் ஆளும் நானும் பாவியே. என்னையும் தங்களே தண்டியுங்கள்’ என்றவன்... 'தங்களது மழுவினால் மன்னனைக் கொன்ற பாவம் உங்களுக்கு வேண்டாம் அடியவரே! எனது வாளாலேயே என்னைத் தண்டியுங்கள்’ என்று கூறியபடி தனது உடைவாளை எடுத்து எறிபத்த நாயனாரிடம் நீட்டினான்.

சிவபெருமானிடத்தும் சிவனடியவரிடத்தும் மன்னன் கொண்ட இத்தனை அன்பை உணர்ந்து சிலிர்த்த எறிபத்த நாயனார், எங்கே தான் வாளை வாங்காவிட்டால், மன்னன் தன்னைத்தானே மாய்த்துக் கொள்வானோ என்று அஞ்சி, மன்னனிடம் இருந்து உடைவாளை வாங்கினார். உடனடியாகத் தன்னைக் கொல்லும்படி சிரம் தாழ்ந்து வணங்கி நின்றான் மன்னன்.

'எத்தகைய பெருமை குணங்கள் நிறைந்த மன்னன் இவன். இவனது ஆட்சியில் சிவனடியார்க்கு எந்தத் துன்பமும் நேராது’ என்று உணர்ந்த எறிபத்த நாயனார், இப்படிப்பட்ட அரசனைத் தாம் கொல்லுதல் ஆகாது என்று முடிவெடுத்து தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். நாயனாரது செயலைக் கண்டு அதிர்ந்த மன்னன், நாயனாரைத் தடுக்க... வானில் ஓர் அசரீரி:

'உயர்ந்த குணங்கள் கொண்டவர்களே... உங்களது திருத் தொண்டின் பெருமையை உலகுக்கு உணர்த்தவே இந்த நாடகம்’ என ஒலித்தது. மறுகணமே, யானையும், பாகன்களும் உயிர்பெற்று எழுந்தனர். சிவகாமியாண்டாரது பூக்கூடை முன்போலவே, புதிய மலர்களால் நிரம்பியது.

நடந்தவற்றைக் கண்டு அதிசயித்த மன்னன், எல்லாம் சிவனருள் என்றுணர்ந்தான். எறிபத்த நாயனாரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். அவர்களின் சிவத்தொண்டும் வழிபாடும் தொடர்ந்தது! அற்புதமான இந்தக் கதையை...

'திருமருவு கருவூர் ஆனிலையார் சாத்தும்
சிவகாமி யார்மலரைச் சிந்த யானை
அரனெறியோர் எறிபத்தர் பாக ரோடும்
அறஎறிய என்னுயிரும் அகற்றீர் என்று
புரவலனார் கொடுத்தபடை அன்பால் வாங்கிப்
புரிந்துஅரிவான் புகஎழுந்த புனித வாக்கால்
கரியினுடன் விழுந்தாரும் எழுந்தார் தாமும்
கணநாத ரதுகாவல் கைக்கொண் டாரே’

என அழகுற விவரிக்கிறது திருத்தொண்டர் புராணம். எறிபத்தர் வாழ்ந்த திருவிடம் கரூவூர் (தற்போதைய கரூர்). இந்த அடியவரின் திருநட்சத்திர திருநாள்- மாசி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் (மார்ச்-10) வருகிறது. இந்தத் திருநாளில் கரூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் ஆலயம் சென்று, நாதனையும் நாயனாரையும் வழிபட்டு வருவது விசேஷம்.

தொகுப்பு: இரா.மங்கையர்கரசி

கருவூர் சித்தரின் அவதார தலம்!

ருவூர் சித்தர் அவதரித்தது இந்தத் தலத்தில்தான். கருவூரார் ஒரு தைப்பூச நாளில் ஸ்ரீஆநிலை யப்பருடன் ஐக்கியமானதாகச் சொல்வர். அதனால்தான், மூலவர் லிங்கம் சற்றே சாய்ந்த நிலையில் உள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.

இரண்டு அம்பாள்!

ந்த தலத்தில் இரண்டு அம்பாள்கள் தனித்தனி சந்நிதியில் அருள்கின்றனர். ஸ்ரீஆநிலை யப்பரின் மூத்த ஆதிசக்தி ஸ்ரீகிருபாநாயகி (ஸ்ரீஅலங்கார வல்லி) ஸ்ரீசக்ரமேருவின் மேல் நின்ற கோலத்தில் அருள்கிறாள். இரண்டாவதாக, ஸ்ரீசௌந்திர நாயகி. கரூருக்கு மேற்கே அப்பிப்பாளையம் கிராமத்தில் பிறந்து ஸ்ரீபசுபதீஸ்வரரையே கணவராக எண்ணி தவமிருந்து, பங்குனிப் பெருவிழாவின்போது இறைவனிடம் ஐக்கியமான வேட்டுவ குலப்பெண் வடிவுடையாளே, ஸ்ரீசௌந்திர நாயகியாக அருள்கிறாளாம்!

உத்தியோக உயர்வு கிடைக்கும்!

ஸ்ரீபசுபதிநாதரை மனதார வழிபட... திருமணத் தடை நீங்குமாம். அதனால், அவருக்கு ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் என்றே சிறப்புப் பெயர். திருமணத் தடை நீங்க வேண்டுபவர்கள், வேண்டுதல் நிறைவேறப்பெற்ற வர்கள் தாலி உள்ளிட்ட மங்கல ஆபரணங்களை காணிக்கையாகத் தருகின்றனர். ஸ்ரீபசுபதீஸ்வரரை வழிபட்ட பின்னரே, தான் இழந்த படைப்புத் திறனை மீண்டும் பெற்றார் பிரம்மதேவர். மேலும், தெய்வப்பசுவாம் காமதேனு, சில காலம் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும்படி அருளியவரும் இந்தத் தலத்து நாயகனே. ஆக, ஸ்ரீபசுபதீஸ்ரவரை மனதார வழிபட வேலைவாய்ப்பு, உத்தியோக உயர்வு கிட்டுவதுடன், நிம்மதி பெருகும் என்கின்றனர் பக்தர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism