Published:Updated:

இறந்தவரை உயிர்ப்பிக்கும் மந்திரம்!

Vikatan Correspondent
சிறுகதை
இறந்தவரை உயிர்ப்பிக்கும் மந்திரம்!
இறந்தவரை உயிர்ப்பிக்கும் மந்திரம்!

தே வர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் போட்டி நிலவிய காலம். அசுரர்களின் குருவான சுக்ராச் சார்யருக்கு இறந்தோரைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரம் தெரியும். அதனால், அவர் போரில் இறந்த அசுரர்களை மீண்டும் உயிர்ப்பித்து வந்தார். இதனால் கவலையடைந்த தேவர்கள், தங்கள் குரு பிரகஸ்பதியின் மகன் கசனிடம் சென்று, ‘‘இளைஞனே... நீ சுக்ராசார்யரிடம் பணி புரிந்து சஞ்சீவினி வித்தையைக் கற்று வா!’’ என்று அனுப்பி வைத்தனர். அதற்கு ஒப்புக் கொண்டு அவனும் சுக்ராச்சார்யரிடம் சென்றான். அவரும் அவனை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார். சுக்ராச்சார்யருக்கும், அவர் மகள் தேவயானிக்கும் சிறப்பாகப் பணிவிடைகள் புரிந்து வந்தான் கசன். இதனால் தேவயானி, கசனிடம் மிகுந்த பிரியம் கொண்டாள்.

தேவர்களின் இந்தச் சூழ்ச்சியை உணர்ந்த அசுரர்கள் கவலை அடைந்தனர். ‘இதை எப்படி முறியடிக்கலாம்?’ என்று யோசித்து, இறுதியில் திட்டம் ஒன்றைத் தீட்டினர். அதன்படி கசனை வெட்டித் துண்டாக்கி, அவன் உடலை நாய்களுக்குப் போட்டனர். கசனை காணாத தேவயானி கதறினாள். தந்தை சுக்ராச்சார்யரிடம் வந்து புலம்பினாள். பிரியமான மகள் மீது இரக்கம் கொண்ட சுக்ராச்சார்யர், சஞ்சீவினி மந்திரத்தால் கசனை உயிர்ப்பித்தார். இதை அறிந்த அசுரர்கள் நொந்து போயினர்.

மற்றொரு முறை, அசுரர்கள் கசனைக் கொன்று சாம்பலாக்கிக் கடல்நீரில் கரைத்தனர். இந்த முறையும் தேவயானியின் கதறலால் சுக்ராச்சார்யர் கசனை உயிர்ப்பித்தார்.

மூன்றாவது முறை அசுரர்கள், வேறொரு திட்டம் தீட்டினர். கசனை கொன்று சாம்பலாக்கி, அந்தச் சாம்பலை மதுவில் கலந்து சுக்ராச்சார்யரிடம் குடிக்கக் கொடுத்தனர். அவரும் அதைக் குடித்து விட்டார். இப்போதும் கசனை காணாமல் தேவயானி கதற... சுக்ராச்சார்யர் சஞ்சீவினி மந்திரத்தைச் சொல்லி, கசனை அழைத்தார். அப்போது அவர் வயிற்றுக்குள்ளிருந்து அவன் குரல் கொடுத்தான். வியப்பு அடைந்த சுக்ராச்சார்யர் விவரம் கேட்டார். மதுபானம் மூலமாக, அவர் வயிற்றுக்குள் வந்ததாகக் கூறினான் கசன்.

இதனால் அதிர்ச்சி அடைந்தார் சுக்ராச்சார்யர். பின்னர் தன் வயிற்றில் இருந்த கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். அந்த மந்திரத்தைக் கற்றுக் கொண்ட கசன், அதன் பிறகு சுக்ராச்சார்யரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உயிருடன் வெளியே வந்தான். அதனால் இறந்து வீழ்ந்தார் சுக்ராச்சார்யர். அப்போது கசன், தான் கற்றுக் கொண்ட ‘சஞ்சீவினி’ மந்திரத்தின் மூலம், அவரை உயிர்ப்பித்தான். இதனால், தேவர்களின் நோக்கமும் நிறைவேறியது.