Published:Updated:

‘கண்ணுக்கு கண்ணே மருந்து’

‘கண்ணுக்கு கண்ணே மருந்து’

போற்றிப் பணிவோம்!
கண்ணுக்கு கண்ணே மருந்து!’
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- தங்கம் கிருஷ்ணமூர்த்தி

பொ துவாக வேடர் குலம், வீரம் செறிந்ததாகக் கருதப்படுகிறது. வீரக் கடவுளான சிவ பெருமானை, வில்லேந்தும் வேடனாகப் போற்றுகின்றன வேதங்கள். ஸ்ரீருத்ரத்தில் சிவபெருமானின் பல வகைத் திருக்கோலங்கள் குறிப்பிடப் பட்டாலும், அவற்றுள் வேடுவ கோலமே சிறந்தது என்பது அறிஞர்கள் கருத்து. ஸ்ரீருத்ரத்தில் ‘வேடுவர்களின் தலைவர்’ என்றே அவர் குறிக்கப்படுகிறார்.

‘கண்ணுக்கு கண்ணே மருந்து’

திரிபுரங்களை எரித்தழித்த சிவபெருமான், வேடுவனாகத் தோன்றி அருள் பாலித்ததை பல தல புராணங்கள் குறிப்பிடுகின்றன. மகாபாரதத்தில் பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் புரிந்த அர்ஜுனனுக்கு அருள் புரிந்தபோதும், திருஞானசம்பந்தர், சுந்தரர் முதலான அடியார்களுக்கு வழிகாட்டவும், பகைவர்களை அழிக்கவும் வேட வடிவத்தில் சிவபெருமான் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஊழிக்கால முடிவில் உலகைப் படைக்கத் தொடங்கிய இறைவன், வேடனாகத் தோன்றி பிரம்மனுக்கு அருள் புரிந்ததாகக் குடந்தை புராணம் கூறுகிறது.

‘கண்ணுக்கு கண்ணே மருந்து’

வடமொழியில் ‘புலிஞன்’ என்றால் வேடன் என்று பொருள். இதையட்டியே சிவபெருமானும் பார்வதியும் புலிஞன் - புலிஞேஸ்வரி என்று அழைக்கப்படுகின்றனர்.

வில்லேந்தி, எடுத்துக் கட்டிய சடைமுடியுடன், தோளில் அம்பு நிறைந்த அம்பறாத்தூணியுடன், கால்களில் வீரக்கழல் மற்றும் செருப்புகள் அணிந்து, வேட்டை நாய்கள் புடைசூழ சிவபெருமான் வேதங்களில் சித்திரிக்கப்படுகிறார்.

இப்படிப்பட்ட வேடுவ குலத்தில் உதித்த பலர், சிவ பக்தியில் சிறந்தவர்களாக விளங்கியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர், அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான திண்ணன் என்கிற கண்ணப்பன்.

திருக்காளத்தி மலைக்கு அருகிலுள்ள பொத்தொப்பி நாட்டின் இளவரசரான திண்ணன், முதன்முறையாக வேட்டைக்குச் சென்றபோது பன்றி ஒன்று எதிர்ப்பட்டது. அதைப் பின்தொடர்ந்த அவர், தன் நண்பர்களுடன் திருக்காளத்திக்கு வந்து சேர்ந்தார்.

பன்றியைக் கொன்ற பின், நண்பர்கள் அதைச் சுட்டு உணவாக்கும் பணியில் ஈடுபட்டனர். திண்ணன் மலை மீது ஏறி அங்குள்ள குடுமித்தேவர் எனும் சிவலிங்கத்தைக் கண்டு மெய்ம்மறந்தார். ஏதோ ஓர் உந்துதலின் பேரில் ‘இறைவனுக்குப் பசிக்குமே!’ என்று எண்ணி, நண்பர்கள் சமைத்து வைத்திருந்த இறைச்சியைச் சுவைத்துப் பார்த்து, அதில் சுவையானவற்றை ஓர் இலையில் எடுத்துச் சென்று இறைவனுக்குப் படைத்தார். பிறகு, ஆற்றிலிருந்து நீரை வாயில் அடக்கிக் கொண்டு வந்து திருமுழுக்காட்டி, காட்டு மலர்களால் அர்ச்சித்து மகிழ்ந்தார்.

அதன் பிறகு ஆகம விதிப்படி பூஜை செய்யும் அர்ச்சகர் வழக்கம்போல் அங்கு வந்தார். அங்கு இறைச்சித் துளிகள் சிந்தியிருப்பது கண்டு வருந்தினார். பின்னர் அவற்றைச் சுத்தம் செய்து, இறைவனை பூஜித்துத் திரும்பினார்.

இவ்வாறு திண்ணனும் அர்ச்சகரும் தங்கள் முறைப்படி மாறி மாறி பூஜை செய்து வந்தனர். இப்படி தினந்தோறும் இறைவன் சந்நிதி அசுத்தமாவது கண்டு வருத்தமுற்றார் அந்த அர்ச்சகர். அவரது கனவில் ஒரு நாள் இறைவன் தோன்றி, ‘‘நாளை எமது அன்பரின் அன்பைக் காண்பாய்!’’ என்று கூறி மறைந்தார்.

மறுநாள் அதிகாலையில், சிவலிங்கத்துக்கு என்ன நிகழ்கிறது என்பதை அறிய ஒரு மரத்தின் பின்னே ஒளிந்தவாறு காத்திருந்தார் அர்ச்சகர். வழக்கம் போல் திண்ணன், தனது முறைப்படி பூஜை செய்து அன்பின் மிகுதியால் காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி நின்றார். அப்போது இறைவன் தன் வலக் கண்ணில் இருந்து ரத்தம் வடிய வைத்தார்.

இதைக் கவனித்த திண்ணன் மனம் கலங்கி, தனக்குத் தெரிந்த பச்சிலை வைத்தியங்கள் அனைத்தையும் செய்தார். எனினும் ரத்தம் நிற்கவில்லை. பின் ஏதோ ஓர் உந்துதலின் பேரில், ‘கண்ணுக்குக் கண்ணே சிறந்த மருந்து!’ என்று கருதித் தன் கண்ணைப் பெயர்த்தெடுத்து இறைவனின் வலக் கண்ணில் அப்பினார். என்ன ஆச்சரியம்... ரத்தம் வடிவது சட்டென்று நின்றுவிட்டது. இதனால் மகிழ்ச்சிக் கூத்தாடினார் திண்ணன்.

சிறிது நேரத்தில் பெருமான், தன் இடக் கண்ணில் ரத்தம் வடியச் செய்தார். உடனே திண்ணன், பெருமானின் கண்ணுள்ள இடத்தை அடையாளம் தெரிந்து கொள்வதற்காகத் செருப்பணிந்த தன் காலை பெருமானின் முகத்தில்- கண்ணருகே வைத்துக் கூரிய அம்பால் தன் மற்றொரு கண்ணையும் தோண்ட முயன்றார்.

‘கண்ணுக்கு கண்ணே மருந்து’

அப்போது இறைவன் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அவர் கையைப் பிடித்து, ‘‘கண்ணப்பா... நிற்க!’’ என்று தடுத்தாட் கொண்டார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். பெருமான் அவருக்குக் ‘கண்ணப்பன்’ என்று பெயர் சூட்டி, ‘‘எப்போதும் என் வலப் பக்கத்தில் இருப்பாய்!’’ என்று வரமும் அளித்தார்.

கண்ணப்ப நாயனாரின் இந்த உறுதி மிக்க பக்தியை சேக்கிழார் பெருமான், தமது பெரிய புராணத்தில் பெரிதும் வியந்து போற்றுகிறார். சைவக் குரவர்கள் நால்வர் மற்றும் ஆதிசங்கரர் போன்ற பெரியோர்களும் கண்ணப்ப நாயனாரின் பெருமைகளைப் பாடிப் பரவசமடைகின்றனர். பட்டினத்தார், திருக்காளத்தி நாதரைப் போற்றிப் பாடுமிடத்து, உறுதியான பக்தி கொண்ட சிவ பக்தர்களில் மூவரை முன்னிருத்திப் பாடுகிறார். அவர்களுள் கண்ணப்ப நாயனாரும் ஒருவர் (மற்ற இருவர்: சிறுத்தொண்ட நாயனார், திருநீலகண்ட நாயனார்).

மேலும் திருமுறைகளில் கண்ணப்ப நாயனாரின் பக்தி தனிச்சிறப்புடன் போற்றப் படுகிறது. திருக்காளத்தி நாதர் புகழுடன், வேடர் கண்ணப்பன் புகழும் பாடப்பட்டுள்ளது. பெரும்பாலான ஆலயங்களில் கண்ணப்பரின் கதை, புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. வேடர் கண்ணப்பனின் ஒப்புயர்வற்ற தியாகம், ‘திருமறம்’ என்று போற்றப்படுகிறது. நக்கீர தேவருக்கு காளத்தி மீதும், கண்ணப்பர் மீதும் உள்ள அன்பின் மேலீட்டால், அவர் பதினோராம் திருமுறையில் ‘திருக்கண்ணப்ப தேவர் திருமறம்’ எனும் நூலை இயற்றியுள்ளார்.

இதில் இவர், கண்ணப்பர் செய்த பூஜையின் திறம் மற்றும் அன்பைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். நூலின் இறுதியில் கண்ணப்ப நாயனாரைப் பற்றிய சிறு குறிப்பைத் தரும் வெண்பா ஒன்றும் உள்ளது.

அதே போல் சிவநெறி நின்ற பெரியாரான கல்லாட தேவ நாயனாரும், தாம் இயற்றிய ‘திருக்கண்ணப்ப திருமறம்’ என்ற நூலில் கண்ணப்பரின் பக்தியையும், வீரத்தையும் புகழ்ந்து பாடியுள்ளார். இந்நூல், ‘கண்ணப்பரை வழிபட்டாலே, நமது பிறப்பை அறுத்து வினைகளை ஒழித்து வீடு பெறலாம்’ என்று அழகாக விளக்குகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்துக்கு அருகில் உள்ளது பெருந்தலையூர். இங்கு அர்ஜுனனுக்கு இறைவன் வேடனாகக் காட்சியளித்தார். இங்கு கும்பிட்ட நிலையில் அர்ஜுனன் சிலையும், தனது கூரிய அம்பினால் கண்ணைத் தோண்டும் நிலையிலான கண்ணப்பரின் சிலையும் அமைந்திருப்பது சிறப்பம்சம்!

இத்தகு சிறப்புமிக்க கண்ணப்ப நாயனாரைப் போற்றிப் பணிவோம்!

பிப்ரவரி-8: கண்ணப்ப நாயனார் திருநட்சத்திரம்