
மகாபாரதம் குறித்த ஆய்வுகளும், உபநூல்களும் அதிகரித்துவரும் வேளையில், இந்த நூல் குறித்த தொன்மையான நம்பிக்கைகள் பலவும் நம் மண்ணில் காலம் காலமாக இருந்துவருகின்றன. அப்படியான ஒரு கேள்வியை விகடன் வாசகர் முன்வைத்தார்.
நம் பாரத தேசத்தின் இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். இதன் காலம் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. உலகின் உன்னதமான காப்பியங்களாக விளங்கிய கிரேக்கக் காப்பியங்களைவிட பல மடங்கு பெரிய இலக்கியம் `மகாபாரதம்'. ஒரு நிலத்துக்கான படைப்பாகத் திகழாமல் மனித சமூகம் முழுமைக்குமான படைப்பாகத் திகழ்வது இது.

ஒரு குடும்பத்தில் பங்காளிகளுக்கு நடுவே இருந்த பகை ஒரு மாபெரும் போராக உருவெடுத்த நிகழ்வை விவரிக்கும் இந்த நூல் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வோடும் கலந்து செல்வாக்கோடு விளங்கிவருகிறது. இந்த நூல் குறித்த ஆய்வுகளும், உபநூல்களும் அதிகரித்துவரும் வேளையில், இந்த நூல் குறித்த தொன்மையான நம்பிக்கைகள் பலவும் நம் மண்ணில் காலம் காலமாக இருந்துவருகின்றன. அப்படியான ஒரு கேள்வியை விகடன் வாசகர் முன்வைத்தார்.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் விஸ்வநாதன் என்கிற வாசகர், `இளம் வயதில் மகாபாரதம் படித்தால், குடும்பத்தில் பங்காளிச் சண்டை உருவாகும் என்று கூறுகிறார்கள். இது உண்மையா? அப்படியென்றால், மகாபாரதம் எப்போது படிக்கலாம்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாபாரதம் குறித்து ஆய்வு செய்து நூல் எழுதியவர் ஐராவதி கார்வே. அவர் தனது நூலில், `மகாபாரதம் எளிமையான கவிதை நடையில் சம்ஸ்கிருத மொழியில் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு பெரிய யுத்தமாக மாறியதை விவரிக்கும் ஒரு நூல்' என்று குறிப்பிடுகிறார். மகாபாரதத்தின் காலம் குறித்துப் பேசும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, `கி.மு 400-க்கும் கி.பி 400-க்கும் இடையே நூல்வடிவம் பெற்றிருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.
இவ்வளவு பழைமைவாய்ந்த இந்த நூல் வெறும் சகோதர யுத்தத்தை மட்டும் பேசவில்லை. மானுடவாழ்வில் பின்பற்றவேண்டிய பல்வேறு நெறிமுறைகளை வாழ்வியலின் மூலம் முன்வைக்கும் நூல். முதன் முதலில் 'ஜெயம்' என்கிற பெயரோடும், பிற்காலத்தில் `பார சம்ஃகிதை' என்ற பெயரிலும் வழங்கிவந்த இந்த நூல் பொதுவாக மகாபாரதம் என்ற பெயரோடு வழங்கப்பட்டு அதுவே நிலைத்து நின்றது என்கின்றனர் மானுடவியல் அறிஞர்கள்.

மகாபாரதம், நம் நாட்டின் அனைத்து மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது. முழுமையாகவோ, தனித்தனியாகவோ அதன் சம்பவங்கள் நூல்களாக்கப்பட்டன. சங்க காலத்திலிருந்து, இன்று வரை தொடர்ந்து எழுதிவரும் படைப்பாளர்கள் அநேகம். அந்த அளவுக்கு அது ஒரு மிகப்பெரிய வாழ்வியல் களஞ்சியமாகத் திகழ்கிறது.
மக்கள் வாழ்வதற்கான வழிகாட்டல்களும் நெறிமுறைகளும் நிறைந்திருக்கும் இந்த நூல், எப்படியோ ஒருசாரார் மனத்தில் சகோதரச் சண்டையை மையப்படுத்திப் பேசும் நூல் என்பதாகவே பதிந்துவிட்டது. இந்த நூலை வீட்டில் வைத்துப் படிப்பதன் மூலமும் வீட்டில் வைத்திருப்பதாலுமே சகோதர உறவுகளுக்குள் சண்டை மூழும் என்கிற நம்பிக்கை உருவாகிவிட்டது. பத்தாண்டுகளுக்கு முன்புவரைகூட மகாபாரத ஏடுகளையும் நூல்களையும் பல கிராமங்களில் ஊரில் உள்ள மண்டபத்திலேயே வைத்திருந்து படிக்கும் பழக்கம் இருந்தது.

உண்மையில் மகாபாரதத்தை வீட்டில் வைத்துப் படிக்கக்கூடாதா என்கிற கேள்வியை ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஏ.பி.என். சுவாமிகளிடம் முன்வைத்தோம். "மகாபாரதம் என்பது ஐந்தாம் வேதமாகக் கருதப்படுகிறது. அந்த அளவுக்கு வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகள் அதில் குவிந்துகிடக்கின்றன. அத்தகைய ஞானப் பொக்கிஷத்தை வீட்டில் வைத்துக்கொள்வதால் எந்தக் கெடுதலும் வந்துவிடாது. வீட்டில் ஒரு நூலை வைத்துக்கொள்வதால் சண்டை வரும் என்பவர்கள், கொஞ்ச காலம் அந்த நூல்களை வேறெங்காவது வைத்துவிட்டு சகோதரர்களுடன் சண்டையிடாமல் இருந்து பாருங்களேன்.
மகாபாரதம் என்பது சண்டையை வர்ணிக்கும் நூல் இல்லை. எதனால் சண்டை வந்தது, அந்தச் சண்டை வராமல் தடுக்க என்ன வழி? அப்படி சண்டை வந்தால் அது எப்படி சர்வ நாசம் ஏற்படுத்தும் என்பதைச் சொல்லி எல்லோரும் சமாதானமாகவும் தர்மத்தின் வழியிலும் நடக்க வேண்டும் எனும் நீதியைப் போதிக்கும் நூல். எனவே அந்த நூலை வீட்டில் வைத்துக்கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை. இதனால் சண்டை ஏற்படாது. எல்லா வயதினரும் வாசிக்கலாம்.

மகாபாரதத்தைப் பாராயணமாக ஒரு பலன் கருதி வாசிக்க வேண்டும் என்றால், தினமும் உண்பதற்கு முன் அதை வாசித்து வரவேண்டும். அப்படியில்லாமல் அறிந்துகொள்ளவும் இலக்கிய நயத்தை ரசிக்கவும் வாசிப்பது என்றால் அதற்கு நேர வரையறை இல்லை. எப்போது வேண்டுமானாலும் எல்லா வயதினரும் வாசிக்கலாம். இது மகாபாரதத்துக்கு மட்டுமல்ல, அனைத்து இதிகாச புராண உபநிஷத்துகளுக்கும் பொருந்தும்" என்றார்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!
