பிரீமியம் ஸ்டோரி

குரு ஏன் சாப்பிடவில்லை?

ஜென் துறவியான இக்குகோ என்பவருக்கு ஏராளமான சீடர்கள். நாள்தோறும் சீடர்களுடன் நிலத்தைச் சுத்தம் செய்வார் அவர். தள்ளாடும் முதுமைப் பருவத்தில்கூட தோட்ட வேலையை விடாமல் செய்து வந்தார். இதைக் கண்ட சீடர்கள், ‘‘தோட்ட வேலையை நாங்கள் செய்கிறோம். நீங்கள் ஓய்வெடுங்கள்!’’ என்றனர். ஆனால், அவர்களின் பேச்சைக் கேட்காமல், தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருந்தார் அந்த ஜென் துறவி.

‘‘இந்த வயதில் குரு ஏன் இப்படி துன்பப்பட வேண்டும்... என்ன சொன்னாலும் அவர் கேட்பதில்லையே...’’ என்று ஆதங்கப்பட்டான் ஒரு சீடன். மற்றொரு சீடன், ‘‘தோட்டத்தில் இருக்கும் மண்வெட்டி, கடப்பாரையை எல்லாம் எங்காவது மறைத்து வைத்துவிட்டால், அவரால் எந்த வேலையையும் செய்ய முடியாது!’’ என்றான். அதன்படி எல்லாக் கருவிகளும் மறைத்து வைக்கப்பட்டன.

வழக்கம்போல வேலை செய்ய வந்த குரு, மண்வெட்டி மற்றும் கடப்பாரை இல்லாததைக் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினார். அன்றிரவு அவர் எதுவும் உண்ணவில்லை.

மறுநாளும் அவரது உண்ணாவிரதம் தொடர்ந்தது. இதனால் வருந்திய சீடர்கள், ‘நாம் இப்படிச் செய்ததால்தான் குரு கோபம் அடைந்துள்ளார். மறுபடியும் கருவிகளைத் தோட்டத்தில் வைத்துவிடலாம்!’ என்று முடிவெடுத்து அவற்றை கொண்டு போய் அங்கே வைத்தனர். அதன்பின், தோட்டத்துக்கு வந்த குரு, மனம் மகிழ்ந்து வழக்கம்போல் வேலையைச் செய்யத் தொடங்கினார். இரவில் சீடர்களுடன் அமர்ந்து மகிழ்ச்சியாக உணவு உண்டார். அவரிடம், ‘‘நீங்கள் கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணத்தில்தான் கருவிகளை மறைத்து வைத்தோம். அதற்காக உங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டுமா குருவே...’’ என்று சீடர்கள் கேட்டனர்.

ஆன்மிக துளிகள்

அதற்கு குரு, ‘‘உழைப்பவர்களுக்கே உண்ணும் உரிமை உண்டு. நேற்று வேலை இல்லாததால் நான் உண்ணவில்லை!’’ என்றார். சீடர்கள் வியந்து நின்றனர்.

அரூர் மு. மதிவாணன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவன் மட்டும் என்ன உசத்தி?

மடாலயத் தலைவர் ஒருவர், அங்கிருந்து மாற்றலாகி வெளியூரில் உள்ள வேறொரு மடத்துக்குச் செல்ல வேண்டி இருந்தது. எனவே, அவர் தன் சீடர்களுள் ஒருவரை இந்த மடத்தின் தலைவராக்க நினைத்தார். எனவே அவர், ‘‘இன்று முதல் உங்கள் செய்கைகளைக் கண்காணித்து, தகுந்த ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்கப் போகிறேன்!’’ என்று சீடர்களிடம் அறிவித்தார்.

அந்த நிமிடம் முதல் எல்லா சீடர்களும் தங்களது கடமைகளை ஒழுங்காகச் செய்தனர். சில நாட்கள் கழித்து, ‘‘இவனே அடுத்த தலைவன்’’ என்று ஒருவனை அறிவித்தார் குரு. சீடர்களுக்கு அதிர்ச்சி. அவர்கள், ‘‘நாங்கள் எல்லோரும் ஒழுங்காகத்தான் நடந்து கொண்டோம். அப்படி இருக்க இவன் மட்டும் என்ன உசத்தி?’’ என்று ஆதங்கத்துடன் கேட்டனர்.

உடனே, ‘‘நான் அறிவிப்பு செய்யும் முன்பே, அதே ஒழுக்கத்துடன் நடந்துகொண்டவன் இவன் மட்டுமே!’’ என்று பதிலளித்தார் குரு.

ஜெயலட்சுமி கோபாலன், சென்னை-64

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு