Published:Updated:

ஆதீன குருபரம்பரைக்குப் புகழ் சேர்த்த குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்... வாழ்வும் பணிகளும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்
குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்

1971-ம் வருடம், ஶ்ரீலஶ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் என்ற பெயருடன் தருமபுர ஆதீனத்தின் மடாதிபதியாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

சைவமும் தமிழும் விளக்கமுற அரும்பணி ஆற்றும் ஆதீனம், தருமபுர ஆதீனம். 16-ம் நூற்றாண்டில் ஶ்ரீலஶ்ரீகுருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகளால் ஏற்படுத்தப்பட்ட தருமபுர ஆதீனத்தின் 26-வது குருமகா சந்நிதானமாக வீற்றிருந்து, சுமார் 48 வருடங்களாகத் தமிழுக்கும் சைவத்துக்கும் அளப்பரிய சேவை செய்தவர் ஶ்ரீலஶ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள்.

குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்
குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்
20 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன்கோயில் ஆலயக் குடமுழுக்குப் பணிகள் தொடக்கம்!- பக்தர்கள் மகிழ்ச்சி

இவர் கடலூர் மாவட்டம் சிறுகாட்டூர் கிராமத்தில் கந்தசாமி - கல்யாணி தம்பதிக்கு ஐந்தாவது மகனாக 21.4.1926 அன்று பிறந்தார். பெற்றோர் இவருக்கு ஞானசம்பந்தன் என்று பெயரிட்டனர். ஆரம்பக் கல்வியை உள்ளூர் திண்ணைப் பள்ளியில் முடித்தவர், பின்னர் விருத்தாசலம் சென்று சபாபதிச் செட்டியார் தேவார பாடசாலையில் திருமுறைகளில் பயிற்சி பெற்றார். 

எட்டு வருடங்கள் தேவாரப் பாடசாலையில் திருமுறைகள் பயின்ற பிறகு, திருப்பனந்தாள் காசிமடம் அதிபர் காசிவாசி சுவாமிநாத தம்பிரான் காலத்தில் ஓதுவாராகப் பணியாற்றினார். ஆன்மிகத்திலும் சிவ பரம்பொருளிடத்தும் நாட்டம் மிகக் கொண்டிருந்த ஞானசம்பந்தன், துறவு மேற்கொள்ள விரும்பினார். தாயின் சம்மதத்துடன் 1945-ம் வருடம் தருமபுர ஆதீனத்துக்கு வந்தார். அப்போது இருந்த குருமகா சந்நிதானத்தைத் தரிசித்து தம்முடைய விருப்பத்தைத் தெரிவித்தார். அவருடைய முன்செய் தவப்பயனாக மறுநாளே ஞானசம்பந்தனுக்குக் காஷாய ஆடை வழங்கப்பட்டு, ஶ்ரீமத் சோமசுந்தர தம்பிரான் சுவாமிகள் என்ற பெயர் வழங்கப்பட்டது.

குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்
குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்

ஓதுவாராக இருந்தபோது திருப்பனந்தாள் காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் கல்லூரியிலும், சந்நியாச தீட்சை பெற்ற பிறகு தருமபுரம் கல்லூரியிலும் வித்வான் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1951-ம் வருடம் ஆதீனத்தின் வழிபடு மூர்த்தமான சொக்கநாதரை பூசிக்கும் பேறு பெற்றார். பின்னர் திருச்சி மலைக்கோட்டை மௌன மடம் கட்டளை விசாரணை பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து சென்னை தியாகராயநகரில் அமைந்துள்ள தருமபுர ஆதீன சமய பிரசார நிலையத்தில் கட்டளை விசாரணையாகப் பொறுப்பேற்று, சைவத்துக்கும் தமிழுக்கும் அளப்பரிய சேவைகள் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1971-ம் வருடம், ஶ்ரீலஶ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் என்ற பெயருடன் தருமபுர ஆதீனத்தின் மடாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். தாம் பொறுப்பேற்றுக் கொண்டதும், தருமபுர ஆதீனத்துக்கு உட்பட்ட போதிய வருமானம் இல்லாத கோயில்களுக்கு வருமானம் ஏற்படுத்தி, நித்திய பூஜைகள் தடையில்லாமல் நடைபெற வழி செய்தார்.

குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்
குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்
முக்தி அடைந்தார் தருமபுரம் ஆதீனத்தின் 26வது குருமகாசந்நிதானம்!

அவ்வப்போது பல மடாதிபதிகளையும், ஆன்மிக ஆன்றோர்களையும் வரவழைத்து, சமய பிரசார மாநாடுகள் நடத்தினார். தம்மிடம் ஆலோசனை கேட்டு வந்த மற்ற மடாதிபதிகளுக்குத் தக்க ஆலோசனைகள் வழங்கி, அவர்களின் பணி சிறப்புற உதவினார்.

பல்துறை அறிஞர்களும் ஆன்மிக ஆன்றோர்களும் இவரைத் தரிசித்து அருளாசிகளும் அறிவுரைகளும் பெற்றுச் செல்வதை பெரும் பேறாகக் கருதினார்கள்.

திருமுறைகளைப் பயிற்றுவிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். வருடம்தோறும் திருமுறைகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுபவர்களுக்குப் பாராட்டுப் பத்திரமும் பணமுடிப்பும் வழங்கி கௌரவித்தார்.

ஆதீனத்துக்கு உட்பட்ட ஆலயங்களில் நடைபெறும் முக்கியமான வைபவங்களில் நேரில் சென்று கலந்துகொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். திருக்கடவூர் கார்த்திகை சங்காபிஷேகமாக இருந்தாலும், தை அமாவாசை வைபவமாக இருந்தாலும், சீர்காழி ஞானசம்பந்த பெருமானுக்கு ஞானப்பால் ஊட்டும் வைபவமாக இருந்தாலும், தள்ளாத வயதிலும் தளராத மனதுடன் நேரில் சென்று கலந்துகொண்டு இறைவனை வழிபட்டதுடன், பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதில் தவறியதே இல்லை.

குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்
குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்

தம்முடைய குருவிடம் மிகுந்த பக்தியும் விசுவாசமும் கொண்டிருந்தார். ஒவ்வொருவருக்கும் நல்வழி காட்ட குரு அவசியம் என்பதை எல்லோருக்கும் வலியுறுத்தினார். அதே தருணத்தில் குருவைத் தேர்ந்தெடுப்பதிலும் மிகுந்த கவனம் தேவை என்பதையும் அறிவுறுத்தினார். ஒருமுறை குருவைப் பற்றி அவர் குறிப்பிட நேரிட்டபோது,

'குரு என்பவர் மிகவும் அவசியம். நம்முடைய வேதங்களும் மற்ற சாஸ்திரங்களும் குருவிடமிருந்து சீடர்களுக்கு வாய்வழியாக உபதேசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான். நாத்திகர்கள்கூட தங்களுக்குத் தலைவர் என்ற பெயரில் ஒரு குருவை ஏற்றுக்கொள்கிறார்கள். குரு நல்லவழி காட்டுபவராக இருக்கவேண்டும்.

குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்
குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்

ஒருமுறை இந்திரன் தன் சபைக்கு வந்த தேவகுருவைப் பாராமுகமாக இருந்து அலட்சியம் செய்துவிட்டான். வேதனையும் கோபமும் கொண்ட குரு ஒதுங்கிக்கொண்டார். குருவருள் இல்லாததால் தேவலோகம் பொலிவிழந்து வளமிழந்து போனது. பொலிவும் வளமும் பெற்றிட ஒரு யாகம் நடத்த விரும்பினான் இந்திரன்.

ஆனால், தேவகுருவை அழைக்க முடியாது. எனவே, அசுர குருவான விசுவரூபன் என்பவரை அழைத்து யாகம் செய்தான். அசுர குரு எப்படித் தேவர்களின் நன்மைக்காக யாகம் செய்வார்? மந்திரங்களைத் தேவர்களின் நன்மைக்காகக் கூறினாலும், மனதுக்குள் அசுரர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அவர் எண்ணத்தைப் புரிந்துகொண்ட இந்திரன் அவரைக் கொன்றுவிட்டான்.

குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்
குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்

இதனால் குருஹத்தி தோஷம் அவனுக்கு ஏற்பட்டுவிட்டது. பின்னர், தாமரைத் தண்டில் உள்ள இழையில் ஒளிந்துகொண்டு தவம் செய்த பிறகே அவனுடைய தோஷம் நீங்கியது. எனவே, குருவைத் தேர்ந்தெடுப்பதிலும் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்' என்று கூறினார்.

காலமெல்லாம் பக்தர்களுக்கு ஞானவழிகாட்டி வழிநடத்திய ஶ்ரீலஶ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று இறைவனின் திருவடியில் இணைந்தார். அவரின் இழப்பு தமிழுக்கும் சைவத்துக்கும் பேரிழப்பு என்பதில் ஐயமில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு