திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

‘ரஜினி சார் கேட்ட ஸ்ரீராகவேந்திரர் ஓவியம்!’

மாது பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
மாது பாலாஜி

வி.ஐ.பி ஆன்மிகம் - மாது பாலாஜி

தான் சிரிக்காமல் மற்றவர்களைச் சிரிக்க வைப்பது பெரிய கலை. அதில் கரை கண்டவர்கள் கிரேஸி சகோதரர்கள். தோற்றத்திலும் நகைச் சுவையிலும் மட்டுமல்ல; ஆன்மிக ஈடுபாட்டிலும், தன் அண்ணன் கிரேஸி மோகனைப் போலவே இருக்கிறார் மாது பாலாஜி.

தமது ஆன்மிகம் குறித்து ரொம்ப கேஷுவலாக அவர் நமக்கு அளித்த பேட்டி...

‘ரஜினி சார் கேட்ட 
ஸ்ரீராகவேந்திரர் ஓவியம்!’

``எங்க குடும்பம் பெரிய கூட்டுக் குடும்பம். பெரியவர்கள் முதல் சின்னப் பசங்க வரை எல்லோருக்குமே கடவுள் நம்பிக்கை நிறைய. சின்ன வயசில் நாங்க அடிக்கடி போறது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் முனீஸ்வரன் கோயிலுக்கும்தான். அந்த வயசில் அது வரைக்கும்தான் தனியாகப் போறதுக்கு எங்களுக்கு அனுமதி.

பள்ளியில் படிக்கிறப்போ, எனக்குன்னு தனியா சில சாமி படங்களை வெச்சுக்கிட்டு, பரீட்சைக்கு முன்னாடி அதையெல்லாம் நான் கும்பிட்டுட்டுப் போவேன். அதுதான் ஆரம்ப கால ஆன்மிக ஈடுபாடு. 14 வயசுக்கு அப்புறம் மயிலாப்பூர், மந்தைவெளியில் இருக்கும் கோயில் களுக்குப் போக ஆரம்பிச்சேன்.

மந்தைவெளியில் இருந்த பசங்கள்லாம் சேர்ந்து ஒரு கிரிக்கெட் டீமாக இருந்ததுதான், பின்னாளில் கிரேஸி கிரியேஷன்ஸ் என்கிற எங்கள் நாடகக் குழுவாக உருமாறியது. எங்க குழுவினர் எல்லோருமே சேர்ந்து அடிக்கடி கோயில்களுக்குப் போவோம். அதிலும் நான் தினமும் போவேன். முக்கியமா சொல்லணும்னா கபாலி கோயில். மோகனுக்குக் கற்பகாம்பாள் மீது அப்படி ஓர் ஈடுபாடு. கற்பகாம்பாளை ‘மதர் ஆஃப் மயிலாப்பூர்’னு மோகன் சொல்லுவான். எந்த வேண்டுதலாக இருந்தாலும் அவள் காலடியில்தான் கொண்டுபோய் வைப்போம்.

மனநிம்மதியை நாடும்போது நான் போகும் மற்ற கோயில்கள், சத்ய சாய்பாபா கோயில் ‘சுந்தரம்’ மற்றும் மயிலாப்பூர் ஷீர்டி பாபா கோயில். குறிப்பிட்ட பிரச்னை ஏதாவது வரும்போது நான் வணங்கும் இஷ்டதெய்வங்கள்னு வெச்சுக்கலாம்.’’

மடை திறந்த வெள்ளம் போல மளமளவென கொட்டுகின்றன மாது பாலாஜியின் ஆன்மிக அனுபவங்கள்.

``கும்பகோணம்தான் எங்க பூர்விகம். அங்கே ஆரவாமுதப் பெருமாள்- கோமளவல்லித் தாயார் கோயில்தான் எங்கள் குலதெய்வக் கோயில். வருஷத்துக்கு ஒரு முறை புடவை, வேஷ்டி எல்லாம் வாங்கிட்டுப் போய் சாத்தி, வழிபட்டு விட்டு வருவோம். உப்பிலியப்பன் கோயிலும் எங்களுக்கு ரொம்ப இஷ்டம். ரெண்டுமே மனசுக்கு நெருக்கமான கோயில்கள்.. ‘’

‘ரஜினி சார் கேட்ட 
ஸ்ரீராகவேந்திரர் ஓவியம்!’

``கோயில், தெய்வம் குறித்த சென்டிமென்ட் ...?’’

``எக்கச்சக்கமா உண்டு! ஒவ்வொரு நாடக ஸ்கிரிப்டும் எழுதி முடிச்சதும், கற்பகாம்பாள் சந்நிதியில் வெச்சு பூஜை போட்டுட்டுத்தான் ஒத்திகை ஆரம்பிப்போம்.

இதைத் தவிர, எனக்குன்னு ஒரு சென்டிமென்ட் உண்டு. ஸ்கிரிப்டை எடுத்துக்கிட்டு மயிலாப்பூர், மந்தைவெளியில்... தண்டுமாரியம்மன், முண்டகக் கண்ணி அம்மன், கோலவிழி அம்மன்... இப்படி நான் ரெகுலராகப் போகும் சுமார் 25 - 26 கோயில் களுக்குப் போவேன். அந்த ஸ்கிரிப்டை யாருக்கும் கொடுக்கிறது இல்லை; உபயோகப்படுத்துறதும் இல்லை. மஞ்சள், குங்குமம், பூவோடு அப்படியே பாதுகாப்பாக உள்ளே வெச்சிடுவேன். அதுக்கப்புறம் அதைத் தொடவே மாட்டேன்.

எனக்கு சென்டிமென்ட் எந்த அளவுக்கு உண்டுன்னு புரிஞ்சுகிறதுக்கு ஒரு சம்பவம் சொல்றேன்... நாங்க தயாரிச்ச ‘ரிடர்ன் ஆஃப் தி கிரேஸி தீவ்ஸ்’ என்கிற நாடகத்தில், மாது கேரக்டர் (நான்தான்) ஒரு கிறிஸ்துவப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி வரும்.

அதனால, சாந்தோம் சர்ச்சுக்கு அந்த ஸ்கிரிப்டை எடுத்துட்டு போய் பிரேயர் பண்ணிட்டு வந்தேன். அப்புறம், எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் தர்காவுக்கும் ஸ்கிரிப்டை எடுத்துப் போய்ட்டு வந்திருக்கேன். சின்ன வயசில் எங்க பாட்டி எங்களை அங்கேதான் மந்திரிக்கக் கூட்டிட்டுப் போவாங்க. இந்த மாதிரி சென்டிமென்ட்ஸ் நிறைய உண்டு!

இன்னொரு முக்கியமான சென்டிமென்டை விட்டுட்டேனே... நாடகம் இருக்கிற நாள்களில் எல்லாம் மயிலாப்பூர் லஸ் - நவசக்தி விநாயகர் கோயிலுக்குப் போய் ரெண்டு தேங்காய் உடைச்சி டுறது வழக்கம். இப்போதும் நாடகத் துவக்க விழாவுக்குமுன் அந்தக் கோயிலில் ரெண்டு தேங்காய் உடைக்கும் பழக்கம் தொடர்கிறது.

அதேபோல், செங்கழுநீர் விநாயகர் கோயிலி லும் தேங்காய் உடைப்பது உண்டு. அதில் ஒரு சென்டிமென்ட் என்னன்னா, அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு தேங்காய்க் கடை இருக்கு. அந்தக் கடையில்தான் தேங்காய் வாங்குவேன். அப்போதான் நாடகம் ஹிட்டா கும்னு எனக்கு ஒரு நம்பிக்கை!

சிரிக்காமல் பேசுகிறார் பாலாஜி. நம்மால் சிரிப்பைத் தவிர்க்க முடியவில்லை.

‘ரஜினி சார் கேட்ட 
ஸ்ரீராகவேந்திரர் ஓவியம்!’

``மனதில் குடியிருக்கும் குருமார்கள்..?’’

``பொதுவாக எனக்கு நிறைய குருமார்களிடம் நம்பிக்கை உண்டு. ஓர் ஒழுங்கு மற்றும் கட்டுப் பாட்டுடன் இருக்கும் குருமார்களிடம் நான் என் மனதைப் பறிகொடுத்துடுவேன்.

சத்யா சாய்பாபா, சாய்ராம் (ஷீர்டி பாபா), ராகவேந்திரர், பாண்டிச்சேரி அன்னை, எங்க வம்சத்துக்குன்னு இருக்கிற ரங்கராமானுஜ மகாதேசிகன்... சொல்லப்போனா எங்க தாத்தாவின் சகோதரி கணவரே அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர்ன்னு பெரிய குரு... அவர் சந்நியாசம் வாங்கிக்காமல் இல்லறத்தில் இருந்தபடியே குருவாக இருந்தவர்... அவரும் எங்களுக்கு ஒரு குருதான். அண்மையில் சமாதி அடைந்த சுவாமி ஓம்காரானந்தர் எங்களுக்கு ரொம்பப் பிரியப்பட்டவர்.

ரொம்ப அற்புதமானவர். தீட்சண்யமான ஞானம். அவரை நிறைய ஃபாலோ பண்ணுவோம். திருவண்ணாமலை போனால் ரமணாஸ்ரமம், சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம், விசிறி சாமியார் ஆஸ்ரமம் எல்லாத்துக்கும் தவறாமல் போவேன்.’’

‘ரஜினி சார் கேட்ட 
ஸ்ரீராகவேந்திரர் ஓவியம்!’

``உங்கள் சகோதரர் மோகனை நினைத்ததும் ஞாபகத்தில் வரும் ஆன்மிக அனுபவங்கள்..?’’

``எனக்குள் ஆன்மிகத்தை விதைத்தது மோகன் தான். மோகனை நினைச்சதும் எனக்கு நினைவில் வரும் அனுபவம், ஒரு பெரிய அதிசயம்னுதான் சொல்லணும். என் முதல் குழந்தை ஆறு மாதங் களிலேயே இறந்துபோயிடுச்சு. அதன் பிறகு இரட்டைக் குழந்தைகள் கருவிலேயே போயிடுச்சு.

அந்தச் நேரத்தில் நான் ரொம்ப சோகத்தில் இருந்தபோது மோகன், ‘கவலைப்படாத.. உனக்கு கண்டிப்பாக ஆரோக்கியமா குழந்தை பிறக்கும்’னு சொல்லி, எனக்காக ஶ்ரீராகவேந்திரர் படம் வரைந்து என்கிட்ட கொடுத்தான்.

‘இவரை தினசரி பிரார்த்தனை பண்ணு. நல்ல படியாக குழந்தை பிறக்கும். குழந்தை பிறந்தால் ராகவேந்திரான்னு பெயர் வைக்கணும்’னு சொன்னான். அதை மோகன் என்கிட்ட கொடுத்து ஆறே மாதங்களில் என் மனைவி கருத்தரிச்சு, நல்லபடியாக புள்ளை பிறந்தான். ‘சாய் ராகவேந்திரன்’னு பேர் வெச்சேன். அந்தப் படம் இன்னிக்கு ரஜினி சார் வீட்டில் இருக்கு.

‘அருணாசலம்’ ஷூட்டிங்கின்போது அந்தப் படத்தைப் பார்த்த ரஜினி சார், ‘ரொம்ப நல்லாருக்கே. இந்தப் பெயிண்டிங்கை எனக்குக் கொடுங்க’ன்னு கேட்டார். அதன் போட்டோ காப்பியை நான் வெச்சுகிட்டு, அதை ரஜினி சார்கிட்ட கொடுத்துட்டேன். இப்போ அது அவர் பூஜையறையில் இருக்கு!

சோ சார் சொல்வது போல கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல; கடவுள் மேல பயமே உண்டு எங்களுக் கெல்லாம். அந்தப் பயம் இருந்தால் வாழ்க்கையில் தவறு செய்யாமல் இருப்போம். அந்தப் பயம் இருக்கணும்னு மோகனும் சொல்வான். எனக்கும் அது உண்டு. அந்த பயம்தான் என்னை இன்னும் வாழ்க்கையில் கொண்டு செலுத்திட்டு இருக்கு என்பதையும் நான் தீவிரமா நம்புறேன்!’’

மாது பாலாஜியின் குரலில் தொனித்த அந்த பக்திப் பரவசமும் அழுத்தமும் நமக்கு முற்றிலும் புதிது. ஆனால் இறைவனை அணுஅணுவாக அவர் உணர்வதைச் சொல்லும் உணர்ச்சி வெளிப்பாடு அது!

கண்ணன் அலங்காரம்!

ஞ்சையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது, மன்னார்குடி ஶ்ரீவித்யா ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில்.

ஶ்ரீராஜகோபால ஸ்வாமி!
ஶ்ரீராஜகோபால ஸ்வாமி!

இவர் ஒரு காதில் குண்டலம், மறு காதில் தோடு, இடுப்பில் கச்சம், தலையில் முண்டாசு, கையில் பொன் சாட்டை... என விசேஷ கோலத்தில் அருள்கிறார். இவரை மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டால், உடனே குறைகளைக் களைந்து நம் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பாராம்!

- கே.ராமு, கும்பகோணம்