Published:Updated:

"என் மீசையை எடுக்கச் சொன்னார்கள்; கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தேன்" - நினைவுகள் பகிரும் சுகி சிவம்

சுகி சிவம்

ஆழ்வார்பேட்டையில் ஆஸ்திக சமாஜத்தில் சென்று பேசினால், நாம் ஒரு சமய சொற்பொழிவாளர் என்ற அங்கீகாரம் கிடைக்கும். அவ்வளவு மதிப்புமிக்க இடம்அது. நான் அங்கு ஹாப் ஸ்லாக் போட்டுக்கொண்டு, கிராப் தலையோடு, மீசை வைத்துக்கொண்டு பேசினேன். - சுகி சிவம்

"என் மீசையை எடுக்கச் சொன்னார்கள்; கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தேன்" - நினைவுகள் பகிரும் சுகி சிவம்

ஆழ்வார்பேட்டையில் ஆஸ்திக சமாஜத்தில் சென்று பேசினால், நாம் ஒரு சமய சொற்பொழிவாளர் என்ற அங்கீகாரம் கிடைக்கும். அவ்வளவு மதிப்புமிக்க இடம்அது. நான் அங்கு ஹாப் ஸ்லாக் போட்டுக்கொண்டு, கிராப் தலையோடு, மீசை வைத்துக்கொண்டு பேசினேன். - சுகி சிவம்

Published:Updated:
சுகி சிவம்

தமிழகத்தின் தலைசிறந்த சொற்பொழிவாளர்களில் தவிர்க்க முடியாத பெயர் சுகி சிவம். தீவிர ஆன்மிகவாதியான இவரின் பேச்சில் அறிவியல், அரசியல் இரண்டும் தவாறமல் இடம்பெறும். சொல்வேந்தர் என பலரால் பாராட்டப்படும் சுகி சிவத்திடம் பேராசிரியர் பர்வீன் சுல்தானா நடத்திய நேர்காணல் இதோ...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"திருச்சி சதாசிவம், சுகி சிவம் ஆனது எப்படி?"

"நான் திருச்சியில்தான் பிறந்தேன். அப்போது என்னுடைய பெயர் ஆறுமுகம் என்பதுதான். என் தந்தை திருச்சி வானொலி நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அங்கு எழுத்தாளர்களை மதிக்காத ஒருவர் உயரதிகாரியாக இருக்கிறார். இதுகுறித்து என் அப்பா சென்னைக்கு சென்று கல்கி சதாசிவத்திடம் முறையிடுகிறார். அவர் உடனடியாக என் தந்தைக்கு திருச்சியிலிருந்து சென்னைக்கு பணி மாறுதல் செய்யும் ஆணையை மேலிடத்திலிருந்து வாங்கித் தருகிறார். அதற்கு நன்றியுணர்வாக என் தந்தை என் பெயரை சதாசிவம் என்று மாற்றியமைக்கிறார். அவருடைய பெயர் சுப்ரமணியம்தான். அப்பாவின் ஆதர்ச எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. அதனால் அவர் எப்போது எழுதினாலும் சுகி என்ற புனைபெயருடன் எழுதுவார். அதனால் நானும் என் பெயருக்கு முன்னால் சுகி-ஐ சேர்த்து சுகி சிவம் என்று வைத்துக்கொண்டேன்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"உங்களை முதன்முதலில் பேச ஊக்குவித்த விஷயம் எது?"

சுகி சிவம்
சுகி சிவம்

"என்னுடைய இளம்வயதில் நான் மிகவும் குண்டாகவும் கருப்பாகவும் இருப்பேன். இதனால் தாழ்வு மனப்பான்மையும் எனக்குள் தொற்றிக் கொண்டது. நம்மை இவ்வளவு பேர் கேலி செய்கிறார்கள். அதனால் ஏதாவது சாதிக்க வேண்டும். எல்லோரும் அங்கீகரிக்க வேண்டும் என்ற வெறி எனக்குள் தொற்றிக்கொண்டது. அதற்கு எனக்கு மேடைதான் சரியான வழி என்று தோன்றியது. அதனால் 6-ம் வகுப்பிலேயே மேடை பேச்சில் கலந்துக்கொள்ள ஆர்வம் வருகிறது. ஒருநாள் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மாணவர்களுக்காக கல்வித் துறை ஒரு பேச்சுப் போட்டி நடத்தினார்கள். அதில் நான் முதல் பரிசு பெற்றேன். அந்தப் பரிசு பள்ளிக்கான பரிசாதலால் அதை தலைமை ஆசிரியரிடம்தான் கொடுப்பார்கள். அவருக்கு இது மிகவும் பெருமையாக இருந்தது. மறுநாள் பள்ளிக்கூட்டத்தில் நான் பரிசு வென்றதற்காக ஒரு நாள் முழுவதும் பள்ளிக்கு விடுமுறை என்று அறிவித்தார். இந்த அங்கீகாரம்தான் என்னைத் தொடர்ந்து பேசத்தூண்டியது."

"நீங்கள் சட்டம் படித்திருக்கிறீர்கள், பொருளாதாரம் படித்திருக்கிறீர்கள், ஒரு தத்துவார்த்தமான தர்க புத்தி கொண்டிருக்கும் நீங்கள் அந்தத் துறையை விட்டுவிட்டு எப்படி ஒரு பேச்சாளராக மாறினீர்கள்?"

சுகிசிவம்
சுகிசிவம்

"நான் அரசியலுக்கு செல்லவேண்டும் என்றுதான் சட்டம் படித்தேன். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதற்காக அல்ல. நான் விவேகானந்தா கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது மாணவர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. அதில் நானும் பங்குபெற்றேன். அப்போது என்னை எதிர்த்து நின்றவர் நான் தலைமையாசிரியரின் கையாள் என்று ஒரு தவறான செய்தியை பரப்பிவிட்டார். இதனால் அந்தத் தேர்தலிலேயே தோல்வியைத் தழுவினேன். அப்போது தான்அரசியலில் திறமை மட்டுமே இருந்தால் போதாது, சூது வாது செய்துகூட நம்மைக் கவிழ்த்து விடுவார்கள் என்பதை தெரிந்துக்கொண்டேன். அந்தத் தோல்வி என்னைப் பெரிதும் பாதிக்கவில்லை. ஆனால் சிந்திக்க வைத்தது. 'இன்னொருவரிடம் அங்கீகாரத்திற்காகப் போய் நின்று நான் என்னுடைய தலைமையை நிலைநாட்ட வேண்டுமா?' என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அப்படியிருந்தால் அந்த துறை எனக்கானது அல்ல என்று அன்றே புரிந்துக்கொண்டேன். அரசியல் என்பது திறமையோ, அறிவையோ பொருத்ததல்ல. அது நம்பர் கேம். நம்பர் கேமில் சூழ்ச்சி, வஞ்சனைகள்தான் அதிகம். இதனால் அரசியல் எனக்கு ஒத்துவராது. என்னுடைய மனம் தூய்மையான கருத்துக்களை நேராக சொல்ல வேண்டும். அப்போது தான் சமய சொற்பொழிவுதான் என்னுடைய பாதை என்று கண்டுபிடிக்கிறேன். மேடை ஏறினேன், நிறைய வாய்ப்புகள் கிடைத்தன, நிறைய அறிமுகங்கள் கிடைத்தது. குன்றக்குடி அடிகளார், தீபம் நா பார்த்தசாரதி, அவ்வை நடராஜன் என எல்லாருக்கும் என்னைப் பிடித்தது."

"சமய சொற்பொழிவிற்கென சில கட்டுபாடுகள், மரபுகள் உண்டு. அந்த மரபுகளை நீங்கள் சிறிது தகர்த்தியவர் என்று உங்கள்மீது ஒரு பார்வை உண்டு. அது குறித்து உங்கள் கருத்து என்ன?"

சுகி சிவம்
சுகி சிவம்

"ஆழ்வார்பேட்டையில் ஆஸ்திக சமாஜத்தில் சென்று பேசினால், நாம் ஒரு சமய சொற்பொழிவாளர் என்ற அங்கீகாரம் கிடைக்கும். அவ்வளவு மதிப்புமிக்க இடம்அது. நான் அங்கு ஹாப் ஸ்லாக் போட்டுக்கொண்டு, கிராப் தலையோடு, மீசை வைத்துக்கொண்டு பேசினேன். அப்போது என்னுடைய மீசையை எடுக்கச் சொல்லி சொன்னார்கள். நிறைய இடங்களில் இதனால் கடும் எதிர்ப்புகளை நான் சந்திக்க நேர்ந்தது. ஆனால் இதனால் அவர்களால் என்னை நிராகரிக்கவே முடியவில்லை. அதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று என்னுடைய வேகப் பேச்சு. நான்கு மணி நேரத்தில் சொல்லக்கூடிய விஷயத்தை, இரண்டு மணி நேரத்தில் சொல்லி விடுவேன். மற்றொன்று என்னுடைய பேச்சில் நான் முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்கள். ஒரு சிலர் பேச்சில் ஆன்மிகம் அதிகமாக இருக்கும். சமூகம் சார்ந்த விஷயங்களைப் பற்றிக் குறைவாக இருக்கும். ஆனால் என்னுடைய பேச்சில் எல்லா விஷயங்களும் நிரவலாக இருக்கும். என்னுடைய முதல் பேச்சிலிருந்தே சமூகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம், கவிதைக்கு எவ்வளவு முக்கியத்துவம், பக்திக்கு எவ்வளவு இடம் என்று வகுத்துவிடுவேன்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism