Published:Updated:

உள்ளங்களில் ஒளி பிறக்கட்டும்!

உள்ளங்களில் ஒளி பிறக்கட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உள்ளங்களில் ஒளி பிறக்கட்டும்!

ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள் - திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம்

உள்ளங்களில் ஒளி பிறக்கட்டும்!

ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள் - திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம்

Published:Updated:
உள்ளங்களில் ஒளி பிறக்கட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உள்ளங்களில் ஒளி பிறக்கட்டும்!

ஆன்மிகம்

`மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்

கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே'

- திருஞானசம்பந்தர்

சமயம் என்பது சமைத்தல், பக்குவப்படுத்தல் அல்லது நெறிப்படுத்தலைக் குறிக்கும். குறையுடைய மனித வாழ்வை நிறை நோக்கி அழைத்துச் செல்லும் தோணியாக அமைவது சமயம். மக்களை தீநெறியினின்று பிரித்து செந்நெறியில் செலுத்துவது சமயம். அறம் சார்ந்த சமூக நெறியை உருவாக்க நாற்றங்கால்களாக அமைவது சமயம்.

மனித சமூகத்தை மேன்மையுறச் செய்கின்ற அன்பு, அடக்கம், பொறை, அருள், ஈகை, ஒப்புறவு எனும் உயர் குணங்களை ஊற்றெடுக்கச் செய்கின்ற ஊற்றுக் கண்ணாக விளங்குவதும் சமயம். மனிதனைப் புனித நிலைக்கு உயர்த்தி வாழ்வாங்கு வாழச் செய்வதுவே சமயத்தின் நோக்கமாகும்.

சமயங்களுள், தோற்றம் ஒன்றில்லாத, பழைமையும் முடிந்த முடிபான தத்துவப் பெருமையும் கொண்ட சிவபெருமானை முழுமுதற் பொருளாகக் கொண்டு ஒப்பற்று விளங்கும் தலையாய சமயம் சைவமாகும்.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டாகவும் நடமாடும் கோயிலுக்கு ஒன்றீவராயின் படமாடும் கோயிலுக்கு அதுவாகும் எனச் சமூகப் பாங்கையும் முதன்மையாகக் கொண்டது சைவம். சிவத்தின் சாரம் சைவம். சிவம் என்பது அன்பு. சிவநெறி அன்பு நெறியாகும். எனவேதான் திருமூலர்,

`அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்தி ருந்தாரே'

என்பார். அன்பே அனைத்துக்கும் அடிப்படை. அனைத்துச் சமயங்களும் அன்பையே வலியுறுத்துகின்றன. `அன்பலால் பொருளும் இல்லை, ஐயன் ஐயாறனாருக்கே' என அப்பர் சுவாமிகளும் `அன்புடையார் எல்லாம் உடையார்' எனத் திருவள்ளுவரும் `யாவருக்குமாம் பிறர்க்கு ஓர் இன்னுரை தானே' எனத் திருமூலரும் அருளியவை எல்லாம் அன்பே சமயத்தின் அடிப்படை என்பதை உணர்த்துகின்றன.

உள்ளங்களில் ஒளி பிறக்கட்டும்!

இறை அன்பும், இறை உணர்வும், இறை வழிபாடும் முழுமையாக ஆன்மாக்களிடம் அமையுமானால் துன்ப இருள் நீங்கி தூய நெறியாம் இன்ப நெறி எங்கும் பூக்கும். தீய நெறியாகிய இருள் இவ்வுலகை விட்டு நீங்கிட வேண்டுமானால் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் எனும் அன்பு நெறி எல்லோர் உள்ளத்திலும் உதித்தாக வேண்டும்.

இன்றைய உலகம் இயற்கையையும் வாழ்வியல் முறைமைகளையும் சரிவரப் புரிந்துகொள்ளாமல் பெருந் துன்பங்களையும் துயரங் களையும் அடைந்து நம்பிக்கையற்று வருந்தி வருகிறது.

`இன்பமே எந்நாளும் துன்பமில்லை' எனும் அப்பர் பெருமானின் அருள் உரைக்கேற்ப `இறைவன் அனைத்தையும் வழங்கும் அருளாளன்' எனும் இறை நம்பிக்கை பெருகிட, சான்றோர் அருளிய நன்னெறிகளைப் பின்பற்றி வாழ்ந்திட முனைந்தால், எங்கும் பெருமகிழ்வு பிறக்கும்.

சைவ சமயம் பேரானந்த வாழ்வுக்குரிய அறங்களை வலியுறுத்துகிறது. உயர்ந்தவர்க ளோடு பொருந்தி வாழும் ஒழுக்கம், நம்முடன் தொடர்புடையார் இடத்துக் கொள்ளும் அன்பு, தொய்வில்லாது மனிதர்களிடத்தும், உயிர்களிடத்தும் காட்டும் அருள், தகுதியுடை யோருக்குச் செய்யும் நற்பணிகள், சிறந்த உயர் குணங்கள், பிறர் வாழ்வுக்குத் தன்னை அர்ப்பணிக்கும் தவம், தம்மின் மூத்தோருக்குச் செய்யும் வழிபாடு; வணக்கம், இவைகளின் மெய்ம்மை, பிறன் மனை நோக்கா பேராண்மை, மாசில்லாத துறவு, எல்லோரிடத்துள்ளும் கொள்ளும் அடக்கம், அறிவு, தக்காரைப் போற்றும் தகுதி ஆகியவை இறைவனை அடைதற்குரிய தூய குணங்களாகும்.

இத்தகைய உயர் குணங்களை வாழ்வாகக் கொண்டவர்களுக்கு இறைவன் துன்பத்தை வழங்காமல் இன்பத்தையே அருள்வான் எனச் சித்தியார் வழிகாட்டுகிறது.

அருளாளர்களின் வழிகாட்டல்கள் மட்டுமல்ல, சமய விழாக்களும் என்றும் இன்பம் காணும் வழிமுறைகளையே தத்துவார்த்தமாகக் கொண்டுள்ளன. ஐப்பசியில் கொண்டாடவுள்ள தீபாவளியும் கார்த்திகை மாத பெருங் கார்த்திகைப் பெருவிழாவும் மக்களின் இருளகற்றி நம்பிக்கை ஒளியேற்றும் வாழ்வியல் உண்மைகளையே உணர்த்துகின்றன.

உள்ளங்களில் ஒளி பிறக்கட்டும்!

தீபாவளிப் பண்டிகை ஒரு தத்துவத்தின் பின்னணியில் உருவாகியுள்ளது. மனிதர்கள் உள்ளத்தில் எழும் காம, குரோத, பாவ எண்ணங்களான அழுக்குகளை நீக்கி தத்துவ குணமான நல்ல மனத்தைப் பெற வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.

திருமாலுக்கும் பூதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன் என்பான். இவன் பிரமனை நோக்கி கடும் தவம் செய்து பெறற்கரிய வரங்களைப் பெற்றான். செருக்கால் இந்திரனை எதிர்த்துப் போராடி அவனது காதணி முதலியவற்றைக் கவர்ந்து கொண்டான்.

தன் குடிமக்களையே துன்புறுத்தி, அவர்கள் செய்யும் நன்மைகளையும் தடுக்கலானான். செய்வது அறியாது தவித்த தேவர்கள் இறை யிடம் முறையிட்டு அரற்றினர். அவர்களைக் காக்க முனைந்தது இறை.

விளைவு, அசுரனை அழிக்கப் புறப்பட்டார் திருமால். அவருடன் போராடி நிறைவில் இறக்கும் தறுவாயில் நரகாசுரன் நல்லறிவு வரப்பெற்று, தான் செய்தவை அனைத்தும் குற்றமே என்று உணர்ந்து, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினான்.

திருமாலும் அவனுக்கு மன்னிப்பு அருளி, `வேண்டும் வரம் கேள்' என்றார். `தான் உயிர் விடும் இந்நாளில் ஒழுக்கம் உள்ளவர்களுக்கும், எண்ணெய் முழுக்காடி, கோடி ஆடை உடுத்திக் கடவுளை வழிபடுபவர்களுக்கும் எல்லா நன்மைகளையும் அருள்க!' என நரகாசுரன் வேண்டி நின்றான். திருமாலும் அதை ஏற்று அருளினார்.

இதன் வழி உணர வேண்டியது யாதெனின் மக்கள் உள்ளங்களில் தோன்றுகிற தீய குணங்களும் செயல்களுமே அவர்களுக்குப் பகையாக அமைந்து துன்பங்களைத் தருகின்றன.

இத்தீய குணங்கள் இறைவனால் அழிக்கப் படுகின்றன. தீபாவளி என்பது பாவங்கள் தோற்று அறம் வென்ற திருநாள். இருளகன்று உள்ளங்களில் ஒளி தோன்றிய திருநாள்!

அடுத்து கார்த்திகைத் திருநாள். இது ஆணவ இருளை நீக்கி அருள் பேரொளியைக் காட்டிய அற்புதப் பெருநாள். எல்லாம் வல்ல சிவப் பரம்பொருள் ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ்ஜோதியாய் திருவண்ணாமலையில் அயனுக்கும் மாலுக்கும் அழல் வடிவம் காட்டி நின்ற ஐதிகத் திருநாள்.

அயனும் மாலும் தம்முள் யார் பெரியவர் என்று மாறுபட்டு நின்றனர். இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான் அனல் உருவாய் நின்றார். இதனைத் திருமந்திரம்,

`பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்

பிரமன் மால் தங்கள் தம் பேதைமை யாலே

பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க

அரன் அடி தேடி அரற்று கின்றாரே.'

- எனப் பாடுவதை அறியலாம். கல்விச் செருக்காலும் செல்வச் செருக்காலும் இறை வனைக் காணமுடியாது. இறைவன் அன்பில் மட்டுமே தேடிக் காண வல்லவன் என்பதை இவ்வரலாறு உணர்த்தும்.

ல மாசிலாமணி 
தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள்
ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள்

ஆகவே, தீபாவளி - திருக்கார்த்திகை இவ்விரண்டு திருவிழாக்களிலும்... இல்லங் களிலும் உள்ளங்களிலும் தீய குணங்களான இருள் அகன்று, நன்மைகள் சூழ்ந்த இன்பம் என்றும் பொலியும் பொருட்டு விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்துத் தூய இறைவுணர் வோடுக் கொண்டாடுகின்றனர்.

பிணியும் பகையும் அகலவும், எல்லோர் மனங்களிலும் அன்பும், அருளும், இன்பமும், கருணையும், மனித நேயமும், இறை உணர்வும் தழைத்திடவும் வழிபாடு என்னும் தூய தெய்விக விளக்கினை ஏற்றுவோம்.

உள்ளத்து இருள் அகன்றால் உலக இருள் தானே அகலும். 'உள்ளத்தில் உண்மை உண்டா யின் வாக்கினிலே ஒளியுண்டாம்' எனும் மகா கவி பாரதி கூற்றும் இதனை உணர்த்தும்.

எல்லோரது வாழ்விலும் அச்சம் நீங்கி நம்பிக்கை பூத்து ஆனந்தம் ஒளிவிடவும், எல்லோரும் எல்லாமும் பெற்று நீடுழி வாழ்ந் திடவும் எல்லாம் வல்ல செந்தமிழ் சொக்கன் திருவருளை சிந்திக்கிறோம்.