சினிமா
Published:Updated:

தூரமும் அதிகம்; நேசமும் அதிகம்!

தூரமும் அதிகம்; நேசமும் அதிகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தூரமும் அதிகம்; நேசமும் அதிகம்!

பெற்றோரின் செல்போனில் இருந்து ‘இது அப்பா போன், ரிப்ளை செய்யாதே.

சிக்காது; உடல் மெலிந்துவிடும்; கை வளையல்கள் கழன்று விழும்; தூக்கம் வராது; சோர்வடைந்து கண்கள் சிவந்திருக்கும்; தோலின் நிறம் மங்கும்... இவையெல்லாம் கொரோனாவின் புது அறிகுறிகள் அல்ல, காதல் பிரிவின்போது வருவதாக சங்க இலக்கியங்கள் சொல்லும் பசலை நோயின் அறிகுறிகள்.

‘தலைவன் தலைவியைக் கட்டியணைக்கும்போது கொஞ்சம் கவனமின்றி இருந்துவிட்டான். இருவருக்கும் இடையில் இருந்த சின்னஞ்சிறிய இடைவெளியில் குளிர்ந்த காற்று நழுவிச்சென்றது. அந்தப் பிரிவைத் தாங்க முடியாத தலைவிக்குப் பசலை நோய் படக்கெனப் பற்றிக்கொண்டது...’ எனக் காதல் பிரிவை வள்ளுவர் வர்ணித்த காலம் மலையேறிவிட்டது.

‘காதலே ரொம்ப சிம்பிள்தான் பாஸ். இதுல பசலைக்கீரை, பாலக் பனீர்னு சிக்கலாக்காதீங்க. ஏன்னா, இது #LongDistanceRelationship காலம்’ என ஒற்றை ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் அடிக்கிறார்கள், தற்காலத் ‘தொலைதூரக் காதலர்கள்.’

செம்புலப் பெயல் நீராய் அன்புடை நெஞ்சங்கள் கலந்திட தூரம் எப்போதும் ஒரு தொல்லைதான். அத்தனை பிரச்னைகளுக்கும் மத்தியில் மலர்கிற ஒரு பூவைப் போல, அத்தனை தொல்லைகளுக்கும் மத்தியில் தீர்வை வழங்கிக்கொண்டிருக்கிறது தொழில்நுட்பம்.  கடிதவழி காதல்கள் இப்போது எமோஜி வழி காதலாக அடுத்த வெர்ஷனுக்கு அப்கிரேடு ஆகிக்கிடக்கிறது.

தூரமும் அதிகம்; நேசமும் அதிகம்!

தினந்தினம் சந்தித்துக்கொள்ள முடியாது; கால நேரம் கணக்கிடாமல் உரையாட முடியாது; வாரந்தோறும் ஊர் சுற்ற முடியாது; நினைக்கும் போதெல்லாம் முறுக்கிக்கொள்ளவும் முனகிக்கொள்ளவும் முடியாது; நொடிப்பொழுதில் சண்டையிடவும் அதைவிட வேகமாக மண்டியிடவும் முடியாது... அத்தனை ‘முடியாது’களையும் தாண்டி இந்தத் தொலைதூரக் காதலர்கள் எப்படித்தான் காதலிக்கிறார்கள்..?

எண்ணி எண்ணி 160 எழுத்துகளுக்குள் சிக்கனமாகக் காதலித்த எஸ்.எம்.எஸ் தலைமுறை, சில நிமிடங்களில் 160 ரியாக்‌ஷன் செல்பிகளை எடுத்து வாட்ஸ்அப்பில் பரிமாறும் தாராள தலைமுறையாக வளர்ந்திருக்கிறது. GM, gud nit எனச் சுருக்குமொழிக் கலாசாரத்தில் கண் விழித்தும் உறங்கியும் கழிந்த நாள்கள், ஒற்றை வீடியோ காலில் துயிலெழுந்ததும் திருமுக தரிசனத்துக்கு வளர்ந்திருக்கிறது. 

பெற்றோரின் செல்போனில் இருந்து ‘இது அப்பா போன், ரிப்ளை செய்யாதே...’ என டிஸ்க்ளைமருடன் வரும் ஒற்றைக் குறுஞ்செய்திக்கு தவமிருந்து காத்திருந்தவர்களை, நோட்டிபிகேஷன் பாரிலேயே கள்ளச்சிரிப்பொன்றை உதிர்க்க வைத்திருக்கிறது. அத்தனை சிக்கல்களையும் உடைத்துப்போட்டு, ‘காதல் உண்மையிலேயே எளிதானதுதான்’ எனத் தொழில்நுட்பம் உணர்த்திவிட்டுப் போயிருக்கிறது.

தொழில்நுட்பம் காதலை எளிமைப்படுத்தியது இருக்கட்டும், இந்தத் தொலைதூரக் காதலர்களின் காதல் அவ்வளவு எளிதாகவா இருக்கிறது... சிக்கல்களே இல்லையா? சில தொலைதூரக் காதலர்களிடம் பேசினோம்.

‘தினம் தினம் நேரில் சந்தித்துக் காதல் வளர்ப்பவர்களுக்கு இருக்கும் ஒரு சிக்கல் எங்களுக்கில்லை’ என்கிறார்கள், ‘‘பேசிப் பேசி சலித்துப் போவதும், அதனால் ஏற்படும் புரிதல் கோளாறு பிரிவுவரை கொண்டு போய்ச் சேர்ப்பதும் எங்களிடம் இல்லை.  கிடைக்கும் சொற்ப நேரத்தில் பேசும் பேச்சில் பெரும்பாலும் நேசமும் காதலும் கலந்திருக்கும்... கூடவே சின்னச் சின்னச் சண்டைகளும் வரத்தான் செய்யும். அந்தச் சண்டையும் மன்னிப்புக்கான முன் ஜாமீனை அடுத்த அழைப்புக்குள் ஒளித்து வைத்திருக்கும்’’ என்கிறார்கள்.

தன் பிரியத்துக்குரியவரை சந்தித்துவிட முடியுமா என்ற ஏக்கம், ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கும். அந்த வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள மனம் ஏங்கும். அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், சந்திப்புக்கான அந்த நொடி வரைக்குமான காத்திருப்பு முழுக்க அத்தனை காதலையும் தனக்குள் தேக்கி வைத்திருக்கும். காதலை மேலும் மேலும் பல்கிப் பெருகச் செய்யும். இது தொலைதூரக் காதலர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வரம். காதலை வலுவடையச் செய்யும் ஒரு மாயசக்தி.

மலைச்சிகரத்தை அடையும் பாதை கரடுமுரடானதாக இருக்கலாம். சரளைக்கற்கள் பாதம் கிழிக்கலாம். ஆனால், மலைச்சிகரத்தை அடையும் நொடிப்பொழுதுக்காக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இத்தொலைதூரக் காதலர்களுக்கு உண்டு. ‘நாம் மீண்டும் இணையும் எதிர்காலம் ஒன்று உண்டு’ என ஒவ்வொரு நாளும் அத்தனை பேச்சுகளிலும் அது எதிரொலித்தபடி இருக்கும், நம்பிக்கையை விதைத்தபடி இருக்கும். அது காதலை அத்தனை வலுவுடையதாக்கும்.

நம்பிக்கை. அந்த ஒற்றை விஷயத்தில் உயிர் வாழும் அந்தக் காதலை உடைத்துப் போட அத்தனை தடங்கல்கள் ஏற்படும்; அவநம்பிக்கை துளிர்க்கும்; மேலே சொன்ன அத்தனை நல்ல விஷயங்களுமே ஒரே ஒரு நொடியில் நீர்க்குமிழியைப் போல உடைந்துவிழும் அபாயமும் இத்தொலைதூரக் காதலில் உண்டு. எப்போதுமே தன் நேசத்துக்குரியவரை மகிழ்ச்சிப்படுத்தும், நம்பிக்கையை வளர்க்கும் நோக்கத்தில் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு போலியான முகத்திரையை மாட்டிக்கொள்ளச் செய்யும். யதார்த்தத்தை உணர வைக்காது. யதார்த்தம் உறைக்கும் அந்த நொடியில் அந்தக் காதல் சுக்குநூறாய் உடைந்துபோகும். பெரும்பாலான தொலைதூரக் காதல்கள் தோற்றுப்போகும் ஒற்றைப்புள்ளி இதுதான்.

‘பொறுமை, நேர்மை, நம்பிக்கை சரிவிகிதத்தில் கலந்த ஒரு மாயச்சேர்க்கைதான் தொலைதூரக் காதலை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மாமருந்து’ என்பதே வென்றவர்கள் அத்தனை பேரின் தாரக மந்திரமாக இருக்கிறது.

வழக்கமான தொலைதூரக் காதல்கள், கொரோனாவுக்குப் பிறகான நியூ நார்மல் வாழ்க்கையில் இன்னும் நேசம் பரப்பி, மேலும் நூறு பூக்களை மலரச் செய்திருப்பது நிஜம்.

தூரமும் அதிகம்; நேசமும் அதிகம்!
தூரமும் அதிகம்; நேசமும் அதிகம்!

நித்யலஷ்மி சுந்தர் இருப்பது சென்னையில், அரவிந்த் ராம்பிரசாத் வசிப்பது மலேசியாவில். நான்காண்டு தொலைதூரக் காதலுக்குப் பிறகு இருவரும் கரம் கோக்கிறார்கள். திருமணம் முடிந்த சில தினங்களில் மலேசியா செல்கிறார் அரவிந்த். ஒரு வார இடைவெளியில் நித்யாவும் மலேசியா செல்வது திட்டம். கொரோனாவால் ஊரடங்கும் கடலும் இருவருக்கும் இடையில் வருகிறது. காதலுக்குக் கடல் ஒரு பொருட்டா என்ன? தொழில்நுட்பம் தந்த சாத்தியத்தில் முன்பைவிட அதிகமாகக் காதலித்திருக்கிறார்கள். வழக்கமான தொலைதூரக் காதலர்களைப் போல் இல்லாமல், வீடியோ காலை கிரியேட்டிவாக மாற்ற யோசிக்கிறார்கள். வீடியோ காலிலேயே இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது, சமைப்பது, OTT தளங்களில் ஒன்றாய் படம் பார்ப்பது, வீட்டுக்குள் ஒரு விர்ச்சுவல் டூர், உறவினர்களுடன் விர்ச்சுவல் கெட் டுகெதர், கேண்டில் லைட் டின்னருடன் ஒரு விர்ச்சுவல் டேட்டிங் எனத் தொழில்நுட்பத்தின் அத்தனை சாத்தியங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தத் தொலைதூரக் காதலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தன் துணைக்காக ஒதுக்குவதும், அதற்குத் திட்டமிடுவதும், அதைச் செய்து முடிப்பதும் என ஒரு கமிட்மென்ட்டுடன், அருகில் இருப்பதைவிட அதிகமாகவே காதலை இந்த இடைவெளியில் உணர்ந்ததாகச் சொல்கிறார்கள் இந்த தூரம் கடந்த காதலர்கள்.