Published:Updated:

மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 10 | இன்றும் வரலாற்றுப் பள்ளியாக கீழக்குயில்குடி சமணர் மலை!

சமணர் மலை
News
சமணர் மலை

கீழக்குயில்குடியில் சமணமுனிகள் வாழ்ந்த பகுதிகள், 'சமணர்மலை' என்ற பெயரோடே வழங்கப்பட்டுவருவது இதன் சிறப்பு.

Published:Updated:

மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 10 | இன்றும் வரலாற்றுப் பள்ளியாக கீழக்குயில்குடி சமணர் மலை!

கீழக்குயில்குடியில் சமணமுனிகள் வாழ்ந்த பகுதிகள், 'சமணர்மலை' என்ற பெயரோடே வழங்கப்பட்டுவருவது இதன் சிறப்பு.

சமணர் மலை
News
சமணர் மலை
சைவமும் சமணமும் போட்டியிட்டுக்கொண்டு தமிழ் வளர்த்த ஊர் மதுரை மாநகரம். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டு - திருப்பரங்குன்றமும் பழமுதிர்ச்சோலையும். இவை மதுரையில் அமைந்து சிறப்புச் செய்வதைப்போல, மதுரையைச் சுற்றிலும் எண்ணற்ற சமணக் குன்றுகளும் சமணப்படுகைகளும், கல்வெட்டுகளுமாய் அமைந்து மதுரை நகரத்தை இன்னும் சிறப்பு செய்கின்றன.

மதுரையின் கிழக்கில் யானைமலை, மாங்குளம், கீழவளவு என சமணர் படுகைகளைப் பார்க்கலாம். மேற்கில் கொங்கர் புளியங்குளம், முத்துப்பட்டி என சமணர் படுகைகள் இருக்கின்றன. தெற்கில் கீழக்குயில்குடியின் சமணர் மலையும், மேற்கில் அழகர்கோயில் பகுதி சமணர் படுகைகளும் என மதுரையின் எண்பெருங்குன்றத்திலும் சமணர்களின் வரலாற்றை நாம் இன்றும் தெரிந்துகொள்ள முடியும்.

கள்ளிச்செடி
கள்ளிச்செடி

சமணமுனிகள் வாழ்ந்த பகுதிகளுக்கு ஏதேனும் ஒரு பெயர் இருக்கும். ஆனால், கீழக்குயில்குடியில் மட்டும் அதற்கு 'சமணர்மலை' என்றே பெயர் என்பதுதான் முழுமுதல் சிறப்பு. சமணர்மலை மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில், மதுரை–தேனி நெடுஞ்சாலையிலிருந்து, நாகமலை புதுக்கோட்டைக்குத் தெற்கே அமைந்திருக்கிறது.

மதுரை – போடி ரயில் பாதையைத் தாண்டியதும், சட்டென நம் கண்முன் விரிவது அழகிய சமணர்மலைக் குன்றும், எழில்மிகு தடாகமும், அடர்ந்து வளர்ந்து நிழல்பரப்பும் ஆலமரமும்தான். முழுமையான கிராமச் சூழலும், கிடாவெட்டு நாள்களிலும், ஒருவித அமைதியைப் பரப்பும் ஐயனார் – கருப்புசாமி கோயிலும் இப்பகுதிக்கு ஒரு விதத் தனித்துவமான எழிலைக் கொடுக்கும்.

சமணர்மலையின் அடிவாரத்தில், கருப்புசாமி, ஐயனாருக்குக் கோயில் உள்ளது. இதன் வாயிலில், 'பட்டவன் சாமிகோயில்' என மாலிக்காபூர் படையெடுப்பின்போது, அப்படையை எதிர்த்துப் போரிட்டு, உயிர் துறந்த கள்ளர்குல தளபதிகளான வீரத்தேவர், கழுவதேவர் இருவருக்கும் நடுகல் எடுத்து, வழிபடுவதைக் காணமுடியும். நடுகல்லில், வீரத்தேவர், கழுவதேவர் வலக்கையில் வாளும், இடக்கையில் வளரியும் வைத்திருப்பதைக் காணலாம்.

இந்த மலையடிக் கருப்பு ஐயனார் கோயிலுக்குள் இப்போது பூத்துக் குலுங்கும் நாகலிங்க மரங்களும், மகாவில்வம் என்கிற விசேட வில்வமரமும் இருப்பது கூடுதல் சிறப்பாகும். இக்கோயிலின் மேற்குப்புறத்தில், பாண்டிய மன்னனின் பழைமையான சிலை ஒன்றுக்கு 'பாண்டியராஜன் சாமி' என்று பூசைகளும் நடைபெறுவது வித்தியாசமான ஒன்றாகும்.

கருப்பசாமி கோயில்
கருப்பசாமி கோயில்

எண்பெருங்குன்றம் எனப் பெயர் பெற்ற மாமதுரையின் கூவாத மலையெனச் சொல்லப்படும் கீழக்குயில்குடி சமணர் மலையின் தென்மேற்கே செட்டிபுடவு என்றழைக்கப்படும் பகுதி இருக்கிறது. இங்கு சிற்பங்களுடன் கூடிய குகையும், குகையின் இடப்புறப் பாறை முகப்பில் புடைச்சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள அழகிய அண்ணல் மகாவீரரின் காதுநீண்ட உருவமும் காணப்படுகிறது. இச்சிற்பத்தில் மகாவீரர் இருபுறமும் சாமரம் வீசுபவர்கள் சூழ, முக்குடைக்கு மேலே வானவர்கள் பறந்துவர, அரசமரத்தின்கீழ் மூன்று சிம்மங்கள் தாங்கும் ஆசனத்தில் அமர்ந்திருப்பார். இச்சிலையின் கீழ் இச்சிற்பத்தைச் செய்தவர்கள் பற்றிய வட்டெழுத்துச் செய்தியும் இருக்கிறது. குறண்டி திருக்காட்டாம்பள்ளி மாணாக்கர்களே இச்சிற்பத்தைச் செய்ய காரணமாயிருந்தவர்கள் என்கிற செய்தி, ஆசிரியரைக் கொண்டு, மாணாக்கர்கள் தனிநபராக அடையாளப்படுத்தப்படுவதும், அன்றைய சமணமுனிகளின் பண்பை அறியத்தருகிறது தானே!

செட்டிபுடவு குகையின் உள்ளே ஐந்து சிற்பங்களைப் பார்க்கலாம். முதலில், கடைசியிலும் இயக்கியர் சிற்பங்களை கொற்றாகிரியா, அம்பியா என்கின்றனர். இச்சிற்பங்களை, மலையின் மேல் இருக்கும் மாதேவி பெரும்பள்ளியை வெகுகாலம் பொறுப்பாய் கவனித்த குணசேனத்தேவர் மற்றும் அவரின் மாணாக்கர்கள் செதுக்கியது என்று கீழே குறிப்பிட்டுள்ளது இன்னும் சிறப்பான அம்சமாகும்.

இச்சமணர் குன்றின் மேல் இயற்கையாக அமைந்த வற்றாத சுனை ஒன்றும் உள்ளது. இப்பகுதியைப் பேச்சிப்பள்ளம் என்று சொல்வோம். பேச்சிப்பள்ளத்தில் எட்டுத் தீர்த்தகங்கரர் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுகளாக செதுக்கியவர் பெயர்களும் உள்ளன.

செட்டிபுடவு குகை
செட்டிபுடவு குகை

பேச்சிப்பள்ளத்திற்கு சற்று மேலே கி.பி.10-ம் நூற்றாண்டில் செயல்பட்ட மாதேவி பெரும்பள்ளி என்னும் சமணப்பள்ளியின் அடித்தளம் மட்டும் காணப்படுவைதைப் பார்க்கலாம். பராந்தக வீரநாராயணன் (கி.பி. 860 – 905) என்னும் பாண்டிய மன்னன் தன் மனைவி வானவன் மாதேவியின் பெயரால் இப்பள்ளியைக் கட்டிக்கொடுத்திருக்கிறான்.

மாதேவி பெரும்பள்ளத்தில் இருந்து மேலே சென்றால், தீபத்தூண் ஒன்றும், அதன்கீழ் கல்வெட்டுகளும் பார்க்கலாம். இது கர்நாடகாவின் சரவணபெலகுள பகுதிக்கும் இங்கும் சமணத்துறவிகள் வந்து சென்றதன் அடையாளமெனப் புரிந்து கொள்ளலாம்.

இச்சமணர்மலையின் மற்றொரு சிறப்பு இங்குள்ள தமிழி கல்வெட்டு. மாதேவி பெரும்பள்ளியின் அடித்தளம் அமைந்துள்ள பகுதியில் இருந்து, மலையின் தென்புறம் நோக்கிச் சென்றால், அங்கும் தமிழி கல்வெட்டு ஒன்றைக் காணலாம். இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். 13 எழுத்துகளைக் கொண்ட தமிழ் பிராமிக் கல்வெட்டு இது. மதுரை வாழும் மூதூர் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

செட்டிபுடவின் இரண்டாவது குகையில்தான் மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்தின் வௌவால் குறித்த சிறப்பான ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு, சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இக்குன்றின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஆலமரங்களின் தாய்மரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தவை என்று சொல்லி, இன்னும் அவ்வூர் மக்கள் அப்பகுதியில் ஆலமரங்களைக் கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறார்கள். முந்நூறு ஆண்டுகள் பழைமையான பொந்து விழுந்த நாவல் மரமொன்று இன்றும் பழங்களை உதிர்த்து பறவைகளைப் பேணுகின்றன. நீர்மருது மரமும், பூத்துச் சொரியும் பாலை மரங்களும், மழை வருவதற்கு ஒரு வாரம் முன்பு செடியே பூக்களாய் தேனீக்களை ஈர்க்கும் கள்ளிச்செடிகளுமாய், இச்சமணர் மலை வரலாற்றுத் தலமட்டுமல்லாமல், அழகியதொரு சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.

பேச்சிப்பள்ளம் சுனை
பேச்சிப்பள்ளம் சுனை

குன்றின் கீழிருக்கும் தாமரைக்குளத்தில், பல்கிப் பெருத்திருக்கும் மீன்களையும் ஆமைகளையும், இலையின் மேல் ஒய்யாரமாய் ஏதேனும் மழலை மொழி மிழற்றியபடி நடந்து திரியும் கானாக்கோழிகளையும், வக்கா என்னும் குருட்டுக்கொக்குகளையும், நீர்க்காகங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

மூதூர் மதுரையின் மற்றுமொரு அடையாளம் கீழக்குயில்குடி சமணர்மலை என்றால் அது மிகையில்லை!