Published:Updated:

செல்வ வளம் சேரப்போகும் 2021... மகர ராசிக்காரர்களுக்கான ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்!

மகரம் - புத்தாண்டு ராசிபலன்கள்
மகரம் - புத்தாண்டு ராசிபலன்கள்

இந்த ஆண்டு தொடங்கும் போது உங்கள் ராசியைச் சந்திரன் பார்ப்பதால் எதிலும் ஆர்வம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

எடுத்த வேலையை வெற்றிகரமாக முடிக்கும்வரை விடாமல் பொறுமையுடன் உழைக்கும் மகர ராசி அன்பர்களே...

உங்களின் லாப வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திட்டமிட்டபடி காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். இந்த ஆண்டு தொடங்கும் போது உங்கள் ராசியைச் சந்திரன் பார்ப்பதால் எதிலும் ஆர்வம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

குரு பகவான்
குரு பகவான்

குருபகவான் தரும் பலன்கள்

இந்த ஆண்டு 5.4.2021 வரை ராசியிலேயே அமர்ந்து ஜன்மகுருவாக குருபகவான் அருள்கிறார். நீசமடைந்த குருவால் பெரிய பிரச்னைகள் நிகழாது. சின்னச் சின்னத் தொந்தரவுகள் இருக்கலாம். சில நேரங்களில் நிம்மதி இழந்து தவிப்பீர்கள். உங்களைப் பற்றி எல்லோரும் தவறாக நினைப்பதாக நீங்களே முடிவெடுக்காதீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும்.

ஆனால் ஏப்ரல் 6ம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2ல் அமர்வதால் நற்பலன்கள் அதிகரிக்கும். பேச்சில் இனிமை கூடும். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். தலைச்சுற்றல், வாந்தி, அடிவயிற்றில் வலி யாவும் விலகும். பார்வைக்கோளாறு சரியாகும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள்.

ராகு - கேது

ராகு 5 - ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்மாமன், அத்தை வகையில் செலவுகள் வந்து போகும். எதையும் சந்தேகக் கண்ணுடன்தான் பார்ப்பீர்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பூர்வீகச் சொத்தை கவனமாகக் கையாளுங்கள்.

ஆனால் கேது 11 ம் வீட்டில் இருப்பதால் பணப்பிரச்னைகள் நீங்கும். கைமாற்றாக இருந்த கடனையும் தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வி.ஐ.பிகள், நாடாளுபவர்களின் நட்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.

புத்தாண்டு பலன்கள்
புத்தாண்டு பலன்கள்

ஜன்ம சனி

இந்தாண்டு முழுக்க ஜன்ம சனி தொடர்வதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. நெருக்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். வழக்கில் தீர்ப்புத் தள்ளிப் போகும். பெரிய பதவியில் இருப்பவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கிப் பேச வேண்டாம்.

வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்புப் பலன்கள்!

வியாபாரிகளே!

தொழிலில் புதிய திட்டங்களைச் செயல்படுத்திச் சோர்ந்திருந்த வணிகத்தைச் சீர் செய்வீர்கள். சரக்குகள் விற்றுத் தீரும். புதிய திறமையான வேலையாள்கள் கிடைப்பார்கள். கொடுக்கல் -வாங்கலிலிருந்த சிக்கல்கள் தீரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் இணைவார்கள்.

ராகு கேது
ராகு கேது

உத்தியோகஸ்தர்களே!

வேலையில் இதுவரை இருந்த மந்த நிலை மாறும். எதிர்பார்த்த பதவியுயர்வு, சம்பள உயர்வு எல்லாம் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களிடம் அன்பாகப் பேசினாலும் மேலதிகாரியிடம் உங்களைப் புகார் செய்து கொண்டுதான் இருப்பார்கள். பெரிய நிறுவனத்திலிருந்து உங்களை அழைத்துப் பேசுவார்கள்.

ஆரம்பத்தில் பணவரவையும், வெற்றியையும் தந்தாலும் பிற்பகுதியில் அலைச்சலையும், செலவினங்களையும் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

பரிகாரம்

கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசரபேஸ்வரரை சனிக் கிழமையன்று சென்று வணங்குங்கள். மாணவனுக்கு நோட்டு, புத்தகம் வாங்கிக் கொடுங்கள். நிம்மதி கிட்டும்.

அடுத்த கட்டுரைக்கு