மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 10 - சுவாமி சுகபோதானந்தா

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G
பிரீமியம் ஸ்டோரி
News
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G

நம்பிக்கைத் தொடர்

கதைகள் காது விட்டுக் காது பாயும் நூலகங்கள். ஆதியிலிருந்தே கதைகள்தான் மனித சமூகத்தை அடுத்தடுத்து நகர்த்தி வந்திருக்கின்றன. அதனால் இந்த வாரத்தையும் கதையில் இருந்தே தொடங்கலாம். ஒற்றர் படையைச் சேர்ந்த படை வீரன் அவன். திடகாத்திரமானவன். வாள் சண்டை, வேல் சண்டை எனப் பல விதமான சண்டைப் பயிற்சிகளில் தேர்ந்தவன். ஒற்றர்களுக்கு இடம் விட்டு இடம் மாறிக்கொண்டே இருப்பதுதானே வேலை. அப்படிப் பயணப்படும்போது ஒருமுறை வழியில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டான். உண்ட களைப்பிலும், பயணக் களைப்பிலும் இருந்த அவன், இதமாக வீசிய காற்றின் சுகத்தில் அப்படியே தூங்கிவிட்டான். அப்போது அவனது கால்களை ஒரு எலி கடிக்க, ‘அம்மா’ என்ற அலறலோடு விழித்தெழுந்தான். அந்தச் சத்தம் கேட்டு எலி தெறித்து ஓட, இந்த அதிர்வுகளால் துணுக்குற்று கொஞ்சம் தள்ளியிருந்த புற்றிலிருந்து ஒரு பாம்பு மெல்லத் தலையை நீட்டி வெளியே பார்த்தது. தன்னைக் கடித்தது பாம்புதான் என்று தவறாக முடிவுக்கு வந்த ஒற்றன், அந்த பயத்திலேயே மாரடைப்பு வந்து இறந்துபோனான்.

தேவையில்லாத பயம் எவ்வளவு வலிமையான ஆளையும் சாய்த்துவிடக்கூடியது என்பதை அறிவுறுத்தச் சொல்லப்படும் கதை இது. சரி, இப்போது ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

சில வருடங்களுக்கு முன்பு நடந்த என்னுடைய பயிலரங்கு ஒன்றில் புகழ்மிக்க ஐ.ஐ.டி-யில் படித்து முடித்த மாணவி ஒருவர் கலந்து கொண்டார். பொதுவாகவே எவ்வளவு மன உளைச்சலில் இருப்பவர்களும், என் பயிலரங்கின் இரண்டாவது நாளிலேயே ஓரளவிற்குத் தேறிவிடுவார்கள். ஆனால் இந்த மாணவியோ விதிவிலக்கு. மூன்றாம் நாளில்கூட அந்த ஐ.ஐ.டி பெண் மிகுந்த படப்படப்புடன்தான் காணப்பட்டார். அதே படபடப்பில் அவர் ஒரு நிமிடத்திற்குள் ஆறேழு பிரச்னைகளைச் சொல்லி அதற்கான தீர்வுகளைக் கேட்டார். ‘`மேற்கொண்டு ஆராய்ச்சிப் படிப்பு படிக்க எனக்கு இதே ஐ.ஐ.டி-யில் இடம் கிடைக்குமா, அப்படியே கிடைத்தாலும் அந்தப் படிப்பிற்குத் தேவையான ஆராய்ச்சியை என்னால் சரியாகச் செய்ய முடியுமா, என் ஆராய்ச்சி முடிவுகளைக் கல்லூரி ஏற்றுக் கொள்ளுமா...’ - இப்படி நிறுத்தாமல் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார். ஏற்கெனவே அதே வளாகத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்து கல்வி கற்றவர் அவர். இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ வாழ்க்கைப் பாடங்களை அந்த வளாகம் அவருக்கு அள்ளி வழங்கியிருக்கும். ஆனால், அவற்றில் எதையுமே அவர் தன் அவநம்பிக்கையைப் போக்கிக்கொள்ளப் பயன்படுத்தவில்லை.

எதிர்காலம் பற்றிய பயத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அதிகமாகியிருக்கிறது. இதில் இரண்டு வகை. கரைந்துவிட்ட சேமிப்பும், பெருகிக் கொண்டிருக்கும் கடனும் மனதை அழுத்தும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் இதில் முதல்வகை. இவர்கள் இன்றுபார்க்கும் வேலைதான் நாளை நோக்கி இவர்களை நகர்த்தும் என்பதால் இந்த பயம் நியாயமானது. இரண்டாவது ‘Privileged’ வகை. அடிப்படை வாழ்வாதாரத்திற்கான அத்தனையும் இவர்களிடம் இருந்தாலும் எதிர்காலம் குறித்து பயத்தோடே சுற்றிக்கொண்டிருப்பார்கள். அந்த ஐ.ஐ.டி மாணவி இந்த இரண்டாவது வகை.

தலைசிறந்த கல்வி நிறுவனத்தில் லட்சக்கணக்கான பேரோடு போட்டிபோட்டு இடம்பிடிக்க முடிந்த அந்த மாணவியால் எதிர்காலத்தை எதிர்கொள்ளமுடியாதா என்ன? நிச்சயம் முடியும். ஆனாலும் ஏன் இத்தனைக் கேள்விகள்?

காரணம், படிப்பும் வேலையும் நினைத்த இடத்தில் அமைந்தால்தான் வாழ்க்கை, அதுமட்டும்தான் வாழ்க்கை என அவருக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘இதெல்லாம் நடக்காவிட்டால் வாழ்க்கையே தரைமட்டமாகிவிடும்’ என்கிற பயம் நிறைந்த மனநிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார்.

உங்களுக்கு ஒரு சின்ன டாஸ்க். ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதை மேலே சுண்டிவிட்டு ஒரே கையால் பிடிக்கவேண்டும். நம்மில் பலரும் இதை முதல் தடவையே செய்துவிடுவோம். எஞ்சியவர்களும் ஒன்றிரண்டு முயற்சிகளுக்குப் பின் சரியாகவே செய்வார்கள். ஆக எல்லாராலும் செய்யமுடிந்த வேலைதானே இது? சரி, இப்போது இதைச் சரியாகச் செய்பவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் தருகிறேன் எனச் சொல்கிறேன். முன்னைப் போல இப்போது இந்தச் சுண்டிவிடுதலை எளிதாக அணுகுவீர்களா? முன்பு சரியாகச் செய்தவர்களுள் பாதிப்பேர் இப்போது தவறவிடுவார்கள். காரணம்? போட்டி என வந்துவிட்டாலே பதற்றப்படும் மனம். தடுமாறும் ஆறாம் அறிவு. ‘வெற்றி மட்டுமே வாழ்க்கை’ எனக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறோம்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 10 - சுவாமி சுகபோதானந்தா

பட்டாம்பூச்சி பறப்பதைப் பார்த்து ரயில் பூச்சி எனப்படும் மரவட்டைக்கு வியப்பாக இருந்தது. ‘உனக்கு இருப்பது இரண்டு ஜோடி சிறகுகள்தான். மேலே பறக்கும்போதும் சரி, தரை இறங்கும்போதும் சரி... உன் சிறகுகள் ஒரே மாதிரிதான் படபடக்கின்றன. உயரே எழும்பும்போது உன் குட்டிச் சிறகுகளை எப்படி இயக்குகிறாய். அதேபோல கீழே இறங்க என்ன மாதிரி சிறகுகளை இயக்குகிறாய்?’ என்று மரவட்டை பட்டாம்பூச்சியிடம் கேட்டது. பதிலுக்கு பட்டாம்பூச்சிக்கு மரவட்டையிடம் கேட்கவும் ஒரு கேள்வி மட்டுமே இருந்தது. ‘இரண்டே இரண்டு கால்கள் கொண்ட மனிதர்களே நடப்பதற்கு எந்தக் காலை முதலில் எடுத்து வைப்பது என்கிற குழப்பத்தில் தடுமாறி விழுவதைப் பார்க்கிறேன். ஆனால் உனக்கோ சுமார் ஐம்பது ஜோடிக் கால்களாவது இருக்கும். முன்னோக்கி நகர இதில் நீ எந்தக் காலை முதலில் எடுத்து வைப்பாய், இரண்டாவதாக எந்தக் காலை எடுத்து வைப்பாய்?’ எனக் கேட்டது. ரயில் பூச்சிக்கும் அந்தக் கேள்விக்கான விடை தெரியவில்லை.

பல சமயங்களில் ஒரு விஷயத்தை எப்படிச் செய்கிறோம் என்று நமக்குத் தெரியாது. ஆனால், சர்வசாதாரணமாக நாம் அதைச் செய்து முடித்திருக்கிறோம்; இனியும் செய்வோம். அனுமனின் பலம் அவருக்கே தெரியாது என்பதைப் போல, நம் முழு பலமும் தெரியாமல் நம்மில் பலரும் இருக்கிறோம். பலநாள் தள்ளிப்போட்ட வேலையை ‘இன்று முடித்தே தீரவேண்டும்’ என்று நீங்கள் கிளம்பினால் அன்று புது பலம் உங்கள் உடலில் ஊறுவதைப் பார்க்கமுடியும். நாம் சற்றும் எதிர்பாராத திசையில் இருந்தெல்லாம் உதவிகளும் வரும்.

Fortune favours the brave என்று சொல்வது உண்மையே! இதை மெய்ப்பிக்கவும் ஒரு கதை இருக்கிறது.

அடுத்த அப்பார்ட்மென்டில் இருப்பவர்களிடம் பேசுவதுகூட கௌரவக் குறைச்சல் என்கிற எண்ணமெல்லாம் தோன்றியிருக்காத காலம் அது. ``வீட்டிற்கு நிறைய விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் காபி கொடுக்க போதுமான வெள்ளி டம்ளர்கள் இல்லை. அதனால் கடனாகக் கொடுங்கள்’’ என்று கேட்டு முதல் வீட்டுக்காரர் அடுத்த வீட்டுக்காரரிடம் இரண்டு டம்ளர்களை வாங்கிக் கொண்டு போனார். அடுத்த நாள், கடனாக வாங்கிய இரண்டு வெள்ளி டம்ளர்களைத் திருப்பிக் கொடுக்க வந்த அவர், அதோடு சேர்த்து இரண்டு சிறிய வெள்ளி டம்ளர்களையும் கொடுத்தார். ‘நான் உங்களுக்கு இரண்டு டம்ளர்தானே கொடுத்தேன்?’ என்று அதை வாங்குவதற்கு அடுத்த வீட்டுக்காரர் தயங்க. ‘எங்கள் வீட்டில் இருக்கும்போது உங்கள் டம்ளர்கள் குட்டிபோட்டன. அவைதான் இந்த இரண்டு குட்டி வெள்ளி டம்ளர்கள்’ என்று சொல்லி நான்கு டம்ளர்களையும் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

சில வாரங்கள் கழித்து மீண்டும் முதல் வீட்டுக்காரர் வந்தார். ‘`எங்கள் வீட்டிற்கு இன்றும் சில விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள்’’ என்று சொல்லி இரண்டு வெள்ளித் தட்டுகளைக் கடனாக வாங்கிக்கொண்டு போனார். இந்த முறையும் கடனாக வாங்கிய வெள்ளித் தட்டுகளோடு சேர்ந்து மேலும் இரண்டு சிறிய வெள்ளித்தட்டுகளைக் கொடுத்து, ‘அவற்றின் குட்டிகள்’ எனச் சொல்லிச் சென்றார். கடன் கொடுத்த அடுத்த வீட்டுக்காருக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை! ‘மீண்டும் முதல் வீட்டுக்காரர் எப்போது வருவார்’ என்ற ஏக்கத்தில் அடுத்த வீட்டுக்காரர் பொழுதைக் கழிக்க ஆரம்பித்தார். அவரது கனவு வீண்போகவில்லை.

ஒரு வாரம் கழித்து மீண்டும் முதல் வீட்டுக்காரர் வந்தார். அவரை ‘`வாங்க வாங்க’’ என்று வாய் நிறைய வரவேற்ற அடுத்த வீட்டுக்காரர். ‘`வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்காங்களா, தயங்காம என்ன வேணும்னாலும் எடுத்துக் கொண்டு போங்க’’ என்று பூரிப்போடு சொல்ல, ‘`என் மனைவி ஊருக்குப் போயிருக்கிறாள். போனவள் இரும்புப்பெட்டியைப் பூட்டி சாவியையும் கொண்டுபோய்விட்டாள். அதனால் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டிய என் பெண்ணுக்கு உங்கள் மனைவியின் வைர நெக்லஸ் கடனாக வேண்டும்” என்று கேட்டார். ஒரு குட்டி வைர நெக்லஸும் கூடுதலாகக் கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியில், ‘`தாராளமாக எடுத்துட்டுப் போங்க’’ என்று வைர நெக்லஸை சந்தோஷமாக எடுத்துக் கொடுத்தார் அடுத்த வீட்டுக்காரர்.

இப்போது இந்தக் கதையின் முடிவு நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமா என்ன? நெக்லஸும் வரவில்லை. வாங்கிப் போன ஆளும் வரவில்லை. குறுக்குவழியில் எதைப் பெற நினைத்தாலும் அது நிலைக்காது. எதிர்காலத்தின் மீது நமக்கு இருக்க வேண்டியது பயமல்ல. நம்பிக்கை. அந்த நம்பிக்கை போதும் குறுக்குவழிகளை நாடாமல் நேர்வழியில் முயன்று நாம் வெற்றிபெறுவதற்கு. செய்கின்ற செயல் எதுவானாலும் தெளிவான பார்வையோடும் நம்பிக்கையோடும் செய்யுங்கள். பலன் நிச்சயம் கிடைக்கும்.

- பழகுவோம்

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 10 - சுவாமி சுகபோதானந்தா

முக்காலமும் உணர்ந்த முனிவர் அவர். அவரிடம், ‘`உங்களுக்கே விடை தெரியாத கேள்வி ஏதாவது உண்டா?’’ என அரசன் ஒருவன் கேட்டான். அதற்கு அவர், ‘ஆம், இருக்கிறது’ என்று அந்தக் கேள்வியை அரசனிடம் சொன்னார்.

‘`சக மனிதர்கள் மரணிப்பதை மனிதன் தன் வாழ்க்கையில் பலமுறை பார்க்கிறான். தன் நெருங்கிய நண்பர்களும், ஏன்... சில சமயம் சொந்த பந்தங்கள் மரணிப்பதைக்கூட அவன் பார்க்கிறான். இருந்தாலும், மரணம் தனக்கு வரவே வராது என்பதைப் போல அவனால் எப்படி நடந்துகொள்ள முடிகிறது?’’

இப்போதைய சூழலில், இன்றைய சமூகம் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது!