ராமநாதபுரம் அருகே ரகுநாதபுரத்தில் உள்ள வல்லபை ஐயப்பன் கோயிலில் எருமேலிக்கு அடுத்தபடியாக பேட்டை துள்ளல் விழாவும், பம்பைக்கு அடுத்தபடியாக ஆராட்டுவிழாவும் ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடத்தப்படும்.
இந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் கோயில் வளாகத்திற்குள் எளிமையாக மண்டல பூஜை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் வெகு விமர்சையாக நடத்த முடிவு செய்தனர்.
கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் கோயிலில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த டிச. 18-ம்தேதி 18- ம் ஆண்டு மண்டல பூஜை விழாவுக்கான கொடியேற்றம் நடந்தது. 26-ம்தேதி மாலை கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க பள்ளி வேட்டை புறப்பாடு நடந்தது. அப்போது கோயிலில் நடை சாத்தப்பட்டது.
இன்று மண்டல பூஜையை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் ஆயிக்கணக்கான பக்தர்கள் ரகுநாதபுரம் முத்துநாச்சியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, கோயிலில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ரகுநாதபுரம் வீதிகளின் வழியாக ஆடிப்பாடி, வேடமிட்டு, உடலில் வர்ணபொடிகளைப் பூசி சரண கோஷமிட்டபடி பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடத்தினர்.

அலங்காரம் செய்யப்பட்ட வல்லபை ஐயப்பன் உற்சவர், பஸ்மகுளத்திற்கு ஊர்வலமாகச் சுமந்து சென்று அங்கு உற்சவருக்கு 16 வகையான அபிஷேகதத்துடன் ஆராட்டு விழா நடந்தது. தொடர்ந்து சன்னிதானத்தின் முன்புறம் உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடிக் கம்பத்தில் கொடியிறக்கம் செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள், 'சாமியே சரணம் ஐய்யப்பா' என்று பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டனர். இதையடுத்து மூலவருக்கு 33 வகையான மகா அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை, பஜனை நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வருகிற 31-ம்தேதி காலையில் இருமுடி கட்டுதலும். இரவு சிறப்பு பஜனை, சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்குப் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சபரிமலை யாத்திரை புறப்பாடு நடக்கிறது.