Published:Updated:

2021-ல் அள்ளித் தரப்போகும் அதிசார குரு... மேஷ ராசிக்காரர்களுக்கான ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மேஷம் புத்தாண்டு ராசிபலன்கள்
மேஷம் புத்தாண்டு ராசிபலன்கள்

இந்த வருடம் பிறக்கும் போது சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலக்ட்ரானிஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். தங்க நகைகள், விலையுயர்ந்த ஆடைகள் வாங்குவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக்கடன் கிடைக்கும்.

அனைத்திலும் முதன்மையாக விளங்குவதற்காக முழுமூச்சாய் உழைக்கும் மேஷராசி அன்பர்களே...

2020 ம் ஆண்டு பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி இருந்த உங்களுக்கு 2021 மிகவும் நன்மைதரும் ஆண்டாக அமையும். மனதிலிருந்த சஞ்சலங்கள் நீங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்தி என வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கனிவான பேச்சாலேயே காரியங்களை சாதிப்பீர்கள். விட்டு போன பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள்.

பணவரவு - அமோகம்

இந்த வருடம் பிறக்கும் போது சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலக்ட்ரானிஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். தங்க நகைகள், விலையுயர்ந்த ஆடைகள் வாங்குவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக்கடன் கிடைக்கும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். குலதெய்வ கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள்.

2021-ல் அள்ளித் தரப்போகும் அதிசார குரு... மேஷ ராசிக்காரர்களுக்கான ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்!

குரு பகவான் சஞ்சாரம்

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 5.4.21 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10 - ம் வீட்டில் தொடர்வதால் நான்கைந்து வேலைகளை ஒன்றாகச் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உருவாகும். உத்தியோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே அநாவசியப் பேச்சைத் தவிர்த்து விட்டு வேலையில் கவனம் செலுத்துங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். பழைய கடன் பிரச்சனைகள் அவ்வப்போது தொல்லை தரும். வங்கிக் காசோலையில் முன்பே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம்.

அள்ளித்தரப்போகும் அதிசார குரு :

ஆனால் ஏப்ரல் 6 - ம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 11 - ம் வீடான லாப வீட்டில் அதிசாரமாவதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரவு அதிகரிக்கும். உற்சாகம் அடைவீர்கள். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகள் உங்களின் அருமையைப் புரிந்து கொள்வார்கள். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கியில் லோன் கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள்.

சந்தோஷம் தரப்போகும் சனிபகவான்

சனிபகவான் உங்கள் ராசிக்கு 10 ம் வீட்டில் இந்த ஆண்டு முழுவதும் சஞ்சரிக்க இருப்பதால் உங்களின் திறமைகள் வெளிப்படும். பணபலம் கூடும். சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் வளரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். நட்பு வட்டம் விரியும்.

 ராகு - கேது பெயர்ச்சி
ராகு - கேது பெயர்ச்சி

2 - ல் ராகு, 8 ல் கேது... 2021 ம் ஆண்டு தரப்போகும் பலன்கள்

உங்கள் ராசிக்கு 2 - ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலேயே ராகு தொடர்வதால் பேச்சில் கவனம் தேவை. சில நேரங்களில் நீங்கள் விளையாட்டாக பேசப் போய் அது விபரீதமாகி முடியும். குடும்பத்தில் சின்னச் சின்ன கூச்சல் குழப்பங்கள் வந்து போகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று கவலைபடுவீர்கள்.

கேது 8 - ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திண்டாடுவீர்கள். கை, காலில் காயம், வயிற்றுக் கோளாறு, மூட்டு வலி மற்றும் நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும். கணவன் - மனைவிக்குள் சின்ன சின்ன பனிப்போர் வரும் என்றாலும் ஒற்றுமைக்குக் குறைவிருக்காது. இருவரும் தங்கள் வழி சொந்தம் பந்தங்களை பெருமையாகப் பேசிக் கொண்டிருக்காதீர்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. ஆன்மிகம் நாட்டம் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லப்பாருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கவனம் தேவைப்படும் காலகட்டங்கள்

12.8.2021 முதல் 6.9.2021 வரை சுக்கிரன் 6 ல் சென்று மறைவதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும்போது அதிக கவனம் தேவை. மேலும் விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் தேவையற்ற பொருள் இழப்புகளைத் தவிர்க்கலாம்.

உங்கள் ராசிநாதனா செவ்வாய் 6.12.2021 முதல் வருடம் முடியும் வரை 8 ல் மறைவதால் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. சகோதரர்களுடன் சுமுகமான போக்கைப் பின்பற்றுங்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பதன் மூலம் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.

வியாபாரம்
வியாபாரம்

மேஷ ராசி வியாபரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்புப் பலன்கள்

வியாபாரிகளே!

அதிக முதலீடுச் செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்களை சலுகை திட்டங்களை அறிவித்துக் கவர்வீர்கள். அனுபவமிகுந்த வேலையாள்களைச் சேர்ப்பீர்கள். யாருக்கும் கடன் தரவேண்டாம். புரோக்கரேஜ், ஏஜென்ஸி வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படிப் பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். என்றாலும் லாபம் உண்டு. உணவு, இரும்பு, கட்டட பொருள்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே...

10 - ல் சனியும், குருவும் நிற்பதால் அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும். இரவு பகலாக உழைத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள். விருப்பமில்லாத இடமாற்றம் உண்டு. மேலதிகாரியுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் இருந்தாலும் அனுசரித்துப் போங்கள்.

இந்த 2021 - ம் ஆண்டு உங்களின் அயராத உழைப்பால் வசதி, வாய்ப்புகளையும், பணவரவையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

பெருமாள் கோயில்களுக்கு ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். தாயில்லாப் பிள்ளைகளுக்கு உதவுங்கள். நினைத்தது நிறைவேறும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு