Published:Updated:

லாபம் அதிகரிக்கும்... பிரச்னைகள் தீரும்... மீனராசிக்கான 2021 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்!

புத்தாண்டு பிறக்கும்போது சனிபகவான் உங்களின் லாப வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பணப்புழக்கம் அதிகரிக்கும். இனி திட்டமிட்ட காரியங்கள் தடையில்லாமல் முடியும். புது சொத்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள்.

ப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பவர்களுக்கு மத்தியில் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கொள்கையோடு ஆன்மிக நாட்டத்துடன் இணைந்து இயங்கும் மீனராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 9 - ம் வீட்டில் சுக்கிரன் வலுவாக நிற்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் சென்ற ஆண்டு ஏற்பட்ட அனுபவங்களினால் ஏற்பட்ட விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி நிறைவடையும். கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உங்கள் ஆலோசனையை அவர்கள் ஏற்பார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு உடனே திருமணம் முடியும்.

குருபகவான்
குருபகவான்

குரு பகவான் அருளும் பலன்கள்

இந்த ஆண்டு 5.4.21 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிலே வலுவாகக் காணப்படுவதால் திடீர் யோகம், பணவரவு ஏற்படும். நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் கைக்கு வரும். பழைய கடனில் ஒருபகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் முன்வந்து உதவுவார். தாழ்வுமனப்பான்மை நீங்கும். இனி நேர்மறை எண்ணங்கள் உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். பெரிய பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். பழைய சொந்த - பந்தங்கள் தேடி வருவார்கள்.

ஏப்ரல் 6 - ம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 12 - ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளையும் பார்க்க வேண்டி வரும். அநாவசிய செலவுகளைக் குறைக்கப்பாருங்கள். முன்பின் அறியாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாள்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

சாதக பலன்கள் தரும் ராகு - கேது

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு தொடர்வதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பெரிய பதவியில் அமருவீர்கள். பேச்சிலிருந்த தடுமாற்றம் நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையிலிருந்த மனத்தாங்கல் விலகும். அவர்களால் உதவிகளும் கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வேற்றுமதம், மொழி, இனத்தவரால் திடீர் திருப்பம் உண்டாகும்.

9 ம் வீட்டில் கேது நிற்பதால் சேமிப்புகள் கரையும். வாகனத்தை இயக்கும் போது கவனத்தை சிதற விடாதீர்கள். வெளிமாநில புண்ணிய தலங்களுக்கெல்லாம் சென்று வருவீர்கள். சொந்த ஊர் கோயில் திருவிழாவைச் சொந்தச் செலவில் நடத்துவீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும்.

சனிபகவான்
சனிபகவான்

சனிபகவான்

புத்தாண்டு பிறக்கும்போது சனிபகவான் உங்களின் லாப வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பணப்புழக்கம் அதிகரிக்கும். இனி திட்டமிட்ட காரியங்கள் தடையில்லாமல் முடியும். புது சொத்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். பழைய சொந்த -பந்தங்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பிள்ளைகளிடமிருந்த பிடிவாதக்குணம் நீங்கும். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்புப் பலன்கள்!

வியாபாரிகளே!

தொழிலில் முதலீடுகளைக் குறைவாகப் போட்டு நிறைவான பலனைப் பெறுங்கள். லாபத்தைக் குறைத்து விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். வேலையாள்களிடம் பக்கும்வமாக நடந்துகொள்ளுங்கள். யாருக்கும் கடன் தர வேண்டாம். உணவு, புரோக்கரேஜ், கமிசன், எலக்ட்ரிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும்.

புத்தாண்டு பலன்கள் 2021
புத்தாண்டு பலன்கள் 2021

உத்தியோகஸ்தர்களே!

அலுவலகத்தில் முக்கியப்பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருக்கும். எனவே காலம் தாழ்த்தாமல் கொடுத்த வேலையை விரைந்து முடிக்கப் பாருங்கள். இடமாற்றத்துக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். வருடத்தின் பிற்பகுதியில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். சாதித்துக் காட்டுவீர்கள்.

தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதுடன் தன்நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய வருடமிது.

பரிகாரம்

காஞ்சிபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாமாட்சி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். மூடை சுமக்கும் தொழிலாளிகளுக்கு உதவுங்கள். வளம் பெருகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு