Published:Updated:

`ஆன்மிகத்தில் உயர்ந்தநிலையை அடைய உரிய வழி எது?’ - சுவாமி விவேகானந்தர் நினைவு தினப் பகிர்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`ஆன்மிகத்தில் உயர்ந்தநிலையை அடைய உரிய வழி எது?’ - சுவாமி விவேகானந்தர் நினைவு தினப் பகிர்வு
`ஆன்மிகத்தில் உயர்ந்தநிலையை அடைய உரிய வழி எது?’ - சுவாமி விவேகானந்தர் நினைவு தினப் பகிர்வு

`ஆன்மிகத்தில் உயர்ந்தநிலையை அடைய உரிய வழி எது?’ - சுவாமி விவேகானந்தர் நினைவு தினப் பகிர்வு

ந்தியத் தாய் பெற்றெடுத்த ஆன்மிகச் செல்வர்களில் முதன்மை ஸ்தானத்தில் இருப்பவர்களில் முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர். `என்னிடம் ஆற்றல் மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள். நம் நாட்டை மிகப் பெரிய வல்லரசாக மாற்றிக் காட்டுகிறேன்' என்று வீர முழக்கமிட்டவர். 

கம்பீரமான அவருடைய தோற்றம் எப்படிப்பட்டவரையும் வசீகரித்துவிடும். அவருடைய சொற்பொழிவுகளோ மற்றவர்களைக் கிளர்ந்தெழச் செய்யும். தன்னுடைய பேச்சாற்றலால் மக்களை ஈர்க்கும் திறமையில் அவருக்கு நிகர் அவர்தான். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலருக்கும் சுவாமிஜி ஆதர்ச சக்தியாக இருந்துள்ளார். `வீரத் துறவி’ என்ற சிறப்புக்கு மிகப் பொருத்தமானவர் சுவாமி விவேகானந்தர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதல் யோகி அரவிந்தர் வரை பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆதர்ச நாயகராக சுவாமிஜி திகழ்ந்தார். தேசிய கீதம் கொடுத்த ரவீந்திரநாத் தாகூர், `சுவாமி விவேகானந்தர் ஒரு ஜீனியஸ்' என்று போற்றிப் புகழ்ந்திருக்கிறார். பல நாட்டு அறிஞர்  பெருமக்களும் சுவாமிஜியால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் எழுச்சி உரை...

அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரத்தில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் பல்வேறு இன்னல்களுக்கிடையில் கலந்துகொண்ட சுவாமிஜி, இந்தியாவின் பண்பாட்டுப் பெருமைகள் குறித்தும், இந்து மதத்தின் பெருமைகள் குறித்தும் ஆற்றிய எழுச்சி மிக்க உரை, இந்தியா மற்றும் இந்தியர்கள் பற்றிய அமெரிக்கர்களின் எண்ணத்தை அடியோடு மாற்ற உதவியது. சுவாமிஜியின் சிகாகோ சொற்பொழிவுகள் இன்றுவரை பலராலும் நினைவுகூரப்பட்டு வருகிறது. அமெரிக்காவுக்கான முதல் இந்தியத் தூதுவர் சுவாமி விவேகானந்தர் என்றே சொல்லலாம்.
மூட நம்பிக்கையைக் கடுமையாகச் சாடியவர்!

விவேகானந்தர் இந்து மதத்தில் நிலவிய சில மூட நம்பிக்கைகளை அறவே வெறுத்தார்.  தீவிரமாக எதிர்க்கவும் செய்தார். `பழைமையைப் போற்றுவதுடன், புதுமையான விஷயங்கள் சரியானதாக இருந்தால் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை’ என்று கூறியவர் சுவாமிஜி. பழைமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலமாக இருந்தவர். நல்ல கருத்துகள் எந்த மதத்திலிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை என்று கூறினார். இந்து மதத்தினரால் மட்டுமே பிற மதங்களிலிருக்கும் நல்ல கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதில் நம்பிக்கைகொண்டிருந்தார்.

பக்தி ஒன்றே முக்கியம்!

`அவர் எந்த வரையறைக்குள்ளும் அடங்காதவர். சத்திய சொரூபமாகத் திகழ்பவர்' என்று ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரால் வர்ணிக்கப்பட்டவர். `தூய பக்தியுடன் இருந்தால் போதும். மற்ற எதற்கும் கட்டுப்படத் தேவையில்லை' என்று கூறி அதே தருணத்தில், வாழ்க்கையின் அடிமட்டத்திலிருக்கும் ஏழை எளியவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். `பலனை எதிர்பார்க்காமல், பக்தியுடன் கடமைகளைச் செய்து வருவது ஒன்றே ஆன்மிகத்தில் உயர்ந்தநிலையை அடைவதற்கு உரிய வழி’ என்று வழிகாட்டிய மகான் சுவாமி விவேகானந்தர்.  

`தான் யார் என்று அறிந்துகொள்ளும்போது நரேந்திரன் இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிடுவான்' என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியதைப்போலவே, இந்த உலகத்தில் தான் அவதரித்த நோக்கம் நிறைவேறியதும், சுவாமி விவேகானந்தர் தான் யார் என்பதையும், எங்கிருந்து வந்தோம் என்பதையும் புரிந்துகொண்டார். அவர் அப்படிப் புரிந்துகொண்ட தினம் 1902-ம் வருடம், ஜூலை மாதம், 4-ம் தேதி. 
மகா சமாதி அடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அவர் தனக்குத் தானே பேசிக்கொண்ட வார்த்தைகள்:

`இந்த விவேகானந்தனை யார் புரிந்துகொண்டார்கள்... யாரும் புரிந்துகொள்ளாவிட்டால்தான் என்ன... இந்த விவேகானந்தன் போய்விட்டால்தான் என்ன? காலப்போக்கில் இன்னும் பல விவேகானந்தர்கள் இந்த தேசத்தில் பிறக்கத்தான் போகிறார்கள்.'
அன்று நள்ளிரவு சுவாமி விவேகானந்தர் ஸித்தியடைந்துவிட்டார்.

அவர் கூறியதுபோல் இப்போது நலிவுற்றிருக்கும் நம் தேசத்தைப் புனர் நிர்மாணிக்க ஒரு விவேகானந்தர் வர வேண்டும் என்று அவரைப் பிரார்த்திப்போம்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு