Published:Updated:

``கேள்வி கேளுங்கள்... அதுதான் உங்கள் வாழ்க்கையை மாற்றும்!" - சுவாமி அக்னிவேஷ்

``கேள்வி கேளுங்கள்... அதுதான் உங்கள் வாழ்க்கையை மாற்றும்!" -  சுவாமி அக்னிவேஷ்
``கேள்வி கேளுங்கள்... அதுதான் உங்கள் வாழ்க்கையை மாற்றும்!" - சுவாமி அக்னிவேஷ்

``உச்ச நீதிமன்றம் மட்டும் தலையிடவில்லையென்றால் சமூக ஆர்வலர்கள் பலர் ஜாமீன்கூட பெற முடியாத பிரிவுகளில் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பார்கள்” என்ற சுவாமி அக்னிவேஷ், ஆதிக்கவாதம் பற்றியும் விரிவாகப் பேசினார். 

“ஒருவரின் கருத்து மீது முதலில் நமக்கு சந்தேகம் வர வேண்டும், பின்னர் விவாதிக்க வேண்டும். அதற்குப் பின்னர்தான் அந்தக் கருத்தின் மீது மாற்றுக் கருத்து கொள்ள வேண்டும். விவாதிப்பதற்கு இடம் தராமலே எதிர்க்குரல்களை ஒடுக்குவது ஜனநாயகம் அல்ல.” 

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு `சமாதானம் மற்றும் நீதி’ என்கிற தலைப்பில் உரையாற்றிய ஆர்ய சமாஜ் இயக்கத்தைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் உணர்வுபூர்வமாகச் சொன்ன வார்த்தைகள் இவை. 

``கேள்வி கேட்பது மூலமாகத்தான் நம்மை நாமே வளர்த்துக்கொள்ள முடியும். கேள்வி கேட்பது நம்முடைய பிறப்புரிமையாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம்கூட, 'மாற்றுக் கருத்துதான் ஜனநாயகத்தின் சாராம்சம்' என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. உச்ச நீதிமன்றம் மட்டும் தலையிடவில்லை என்றால் சமூக ஆர்வலர்கள் பலர் ஜாமீன்கூட பெற முடியாத பிரிவுகளில் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பார்கள்” என்ற சுவாமி அக்னிவேஷ் ஆதிக்கவாதம் பற்றியும் விரிவாகப் பேசினார். 

“உலகமே இன்று வெள்ளை மேலாதிக்கத்தை எதிர்த்து வருகிறது. தோலின் நிறத்தால் ஒரு மனிதரை உயர்ந்தவர் என்பதோ, தாழ்ந்தவர் என்பதோ சரியல்ல. ஆனால், இந்த விஷயம்தான் உலகம் முழுவதும் மனிதனின் எண்ணங்களை ஆட்சி செய்து வருகிறது. இன்றும்கூட சட்டபூர்வமாக நிறவெறி ஒழிந்திருந்தாலும் மக்களின் மனதில் அது இருக்கவே செய்கிறது. ஐ.நா வரையறைப்படி செல்வ வளம் உள்ள நாடுகள், 'வளர்ந்த நாடுகள்' எனவும், மற்றவை 'வளர்கிற நாடுகள்' எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், சற்று நிதானமாகக் கவனித்தால், வெள்ளை நிறமுடையவர்கள் உள்ள நாடுகள்தான் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளாக இருக்கின்றன. இதுவும் ஒரு விதமான வன்முறை தான்.

உலகில் சரி பாதியாக இருக்கின்ற பெண்கள்தான் அதிக அளவிலான வன்முறைகளைச் சந்திக்கின்றனர். ஆனால், அதுபற்றி யாரும் பெரிதாகப் பேசுவதில்லை. லட்சக்கணக்கானப் பெண்கள் கருவிலே கொல்லப்படுகின்றனர். ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தால் உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுகின்றன. ஆனால், இதுகுறித்து யாரும் பேசுவதில்லை. இது வன்முறை இல்லையா. உலக நாடுகளின் பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகள் இணைந்து இதைக் கண்டித்துப் பேச வேண்டாமா?  

'அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள்' எனச் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் கூறுகின்றது. இயற்கையும் மனிதர்களைப் பாலின ரீதியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. ஆனால், மனிதர்கள்தான் அனைத்து விதமான பாகுபாடுகளையும் பிரிவினைகளையும் உருவாக்கி அதற்கு மத அடையாளம் பூசுகின்றனர். அநீதிகளை நம்பிக்கைகளாக்கி அதைக் கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்கிறார்கள். 

தற்போது இந்தியாவில் நிலவிவரும் வகுப்புவாத பிரிவினை செயல்பாடுகள் அனைத்துமே உண்மையான பிரச்னைகளை மறைக்கவோ அல்லது திசை திருப்பவோதான் எழுப்பப்படுகின்றன. கடந்த மாதம் ஜார்க்கண்ட்டில் பழங்குடியின மக்கள் மத்தியில் நான் பேசச் சென்றுகொண்டிருந்தபோது ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களால் தாக்கப்பட்டேன். ஆனால், பா.ஜ.க-வைச் சேர்ந்த எந்தவொரு தலைவரும் அதற்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் அது திட்டமிட்டு நடத்தப்பட்டது. இந்த மாதம் 17-ம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த சென்றபோதுகூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்னைத் தாக்கினர். மாற்றுக் கருத்து என்பதற்கு மரியாதை இல்லாமல் வன்முறை அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இதைக் களத்திலே முறியடிக்க வேண்டும். 

வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சி ஜனநாயகத்துக்கு என்றுமே ஆபத்தானது. இப்போதைய பா.ஜ.க அரசும் அதை வெளிப்படையாக ஆதரித்து வருகிறது. இது முறியடிக்கப்பட வேண்டும். பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள் அனைவரையும் ஓர் அணியில் திரட்ட வேண்டும்” என்றார் சுவாமி அக்னிவேஷ்.

அடுத்த கட்டுரைக்கு