Published:Updated:

கணவனுக்காக உடன்கட்டை ஏறிய மனைவி... சேலம் அருகே சதிக்கல்!

சேலம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட சதிக்கல் வெளிப்படுத்தும் கறுப்பு வரலாறு!

கணவனுக்காக உடன்கட்டை ஏறிய மனைவி... சேலம் அருகே சதிக்கல்!
கணவனுக்காக உடன்கட்டை ஏறிய மனைவி... சேலம் அருகே சதிக்கல்!

வளது பெயர் ரூப் கன்வர். 24 வயதே ஆன இளம்பெண். ஜெய்ப்பூர் மாநிலத்திலிருக்கும் தியாரோலே கிராமத்தில் ராஜபுத்திரவம்சத்தைச் சேர்ந்த அரச குடும்பத்து மருமகள் அவள். எதிர்பாராத விதமாக அவளது கணவன் இறந்துபோகிறான். கணவனுக்குப் பாடை கட்டுகிறார்கள். கூடவே, உயிரோடிருக்கும் ரூப் கன்வருக்கும் சேர்த்துதான். இறந்துபோன கணவன் ஒரு பாடையில் செல்ல மற்றொன்றில் ரூப் கன்வர் வலுக்கட்டாயமாக அமரவைக்கப்பட்டு ஊர்வலமாக சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டாள். சாலையின் இரண்டு பக்கமும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களைப் பார்த்துக் கதறியபடியே கைகூப்பி வணங்கியபடி கண்ணீருடன் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டாள். 

சூழ்ந்திருந்த மக்கள் அனைவரும், ``சதி மாதாக்கீ ஜே... சதி மாதாக்கீ ஜே..." என்று உரக்க முழங்குகிறார்கள். சுடுகாட்டில் நிறுத்தப்படுகிறாள். அவளது முன்னிலையில் கணவனின் சிதை எரியூட்டப்படுகிறது. அருகில் இன்னொரு சிதை தயாரானது. தப்பிக்க முயற்சி செய்கிறாள் கன்வர். சிலர் அவளைப் பிடித்துக்கொண்டார்கள். மருத்துவர் ஒருவர் மயக்க ஊசி செலுத்த மயங்கிச் சரிந்தாள் அவள். கனன்று எரிந்துகொண்டிருந்த தீயில் வீசப்பட்டாள் ரூப் கன்வர். துடிக்கத் துடிக்க எரிந்து அடங்கிப் போனாள். `சதி மாதாக்கீ ஜே' எனும் குரல் அவளுடைய உடல் எரிந்து சாம்பலாகும் வரை அங்கு ஒலித்துக்கொண்டேயிருந்தது. 

4.9.1987 அன்று இந்தியாவில் கடைசியாக நடைபெற்ற, `சதி' என்னும் உடன்கட்டை ஏறும் நிகழ்வு இதுதான். அப்போதுதான் உடன்கட்டை ஏறுவது எப்படி நடைபெறும் என்பதை இந்தியா மட்டுமல்லாமல் உலகமே தெரிந்துகொண்டது. 

சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கம் நம் நாட்டில் இதிகாச காலத்திலிருந்தே இருந்து வந்தது. ராஜாராம் மோகன்ராய் போன்றோர் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக, 1829 - ம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு சதி வழக்கத்தைத் தடை செய்தார். ஆனால், அதன் பிறகும் ஆங்காங்கே இந்தக் கொடூர நடைமுறை இருக்கத்தான் செய்தது.

வட இந்தியாவில் மட்டுமல்ல... தமிழகத்திலும் ஆங்காங்கே உடன்கட்டை ஏறும் வழக்கம் இருக்கத்தான் செய்தது. உடன்கட்டை ஏறி இறந்த பெண்கள் நினைவாக ஒரு கல் நடும் வழக்கம் உண்டு, அந்தக் கல்லுக்கு `சதிக்கல்' என்று பெயர். ஏற்கெனவே பல்வேறு சதிக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் தற்போது 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட சதிக்கல் ஒன்று சேலம் மாவட்டம், வட்டமுத்தான்பட்டி, காமராஜ் நகரில் பெரியாண்டிச்சி கோயிலுக்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளது. கூடவே ஒரு வாமனக் கல்லும் கண்டறியப்பட்டிருக்கிறது. சிவன் மற்றும் பெருமாள் கோயில்களுக்கு நிலங்களை தானமாகக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. சிவன் கோயில்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களின் எல்லையைக் குறிக்க சூலம் பொறிக்கப்பட்ட கல்லை நட்டு வைப்பார்கள். இதற்கு, `சூலக்கல்' என்று பெயர். அதேபோல, பெருமாள் கோயிலுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலங்களின் எல்லையைக் குறிக்க நடப்பட்ட எல்லைக் கல்லில் சக்கரத்தின் உருவம் பொறிக்கப்படும். இதற்கு, `திருவாழிக்கல்' என்று பெயர். அரிதாக சில எல்லைக்கற்களில்தாம் வாமனன் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இது `வாமனக்கல்' என்று அழைக்கப்படும். 

 ``கி.பி 17 - ம் நூற்றாண்டில் கெட்டிமுதலி வம்சத்தினர், சேலம் அருகில் இருந்த அமரகுந்தியை தலைநகராகக் கொண்டு மதுரை நாயக்க மன்னர்களின் கீழ் ஆட்சி செய்துவந்தனர். கி.பி 1659 மற்றும் கி.பி 1667 - ம் ஆண்டுகளில் மதுரை நாயக்க மன்னருக்கும் மைசூர் மன்னருக்கும் போர் நடந்தது. அந்தப் போரில் கெட்டிமுதலி மன்னர், மதுரை நாயக்கர் சார்பில் பங்கேற்றார். கெட்டிமுதலியின் படையில் இடம்பெற்ற ஒரு வீரன் போரில் இறந்துபோனான். தன் கணவன் இறந்ததையறிந்த அவன் மனைவி உடன்கட்டை ஏறி உயிர்நீத்தாள். அவளுக்காக எடுக்கப்பட்ட சதிக்கல் இது" என்று சேலம் வரலாற்று ஆய்வு சங்கத்தினர் கூறுகிறார்கள். 

போரில் இறந்த கணவருக்காக மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்ததால், இதில் கணவனின் உருவமும் மனைவியின் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சதிக்கல் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. இதன் உயரம் 68 செ.மீ, அகலம் 65 செ.மீ.  போரில் இறந்த வீரன், அள்ளி முடிந்த வட்ட வடிவக் கொண்டை போட்டிருக்கிறான். இந்தக் கொண்டை வடிவம், கெட்டிமுதலிகள் காலத்தில் மட்டுமே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இடது பக்கம் நிற்கும் மனைவி, அள்ளி முடிக்கப்பட்ட கூந்தலோடு இரு கரங்களையும் கூப்பி வணங்கிய நிலையில், அணிகலன்கள், கையில் வளையல் அணிந்து நிற்கிறாள். 

தமிழக வரலாற்றில் உடன் கட்டை ஏறும் பழக்கத்தைப் பற்றியும், சதிக்கல் பற்றியும் விளக்குகிறார் ஓய்வு பெற்ற தொல்லியல் கழக இணை இயக்குநர் பூங்குன்றன்.

``அக்காலத்தில் கணவன் இறந்த பிறகு உயிர் வாழும் பெண்கள் `கைம்பெண் நோன்பு' என்பதை மேற்கொள்ள வேண்டும். பூதபாண்டியன் இறந்த பிறகு அவனது மனைவி பெருங்கோப்பெண்டு நெருப்பில் பாய்வதற்குச் செல்கிறாள். அப்போது புலவர்களும், சான்றோர்களும் தடுக்கிறார்கள். அப்போது  பெருங்கோப்பெண்டு, `கைம்பெண் நோன்பிருப்பதை விடவும், என் கணவனுடன் தீப்பாய்வதே மேல்' என்று தெரிவிப்பாள். 

கைம்பெண் நோன்பிருக்கும் பெண்கள், வெள்ளரிக்காய் விதையோடு கைப்பிடி அளவு அரிசி, வெள்ளை எள் சேர்த்துப் புளி ஊற்றி வெந்த சோற்றை மட்டும் சாப்பிட வேண்டும். பரல் கற்களைப் பரப்பி பாயாக்கி உறங்க வேண்டும். கணவன் இறந்த பிறகும் இயல்பாக வாழும் பெண்களும் உண்டு. இவர்களுக்கு `பருத்திப் பெண்டிர்' என்று பெயர். இவர்கள் நூல் கோத்து வாழ்ந்தார்கள். தீப்பாய்ந்து இறந்த நிகழ்வென்பது பெரும்பாலும் கணவன் மீது கொண்ட பேரன்பின் காரணமாகவே நடந்த சடங்கு, பிற்காலத்தில் அது கட்டாயச் சடங்காக மாற்றப்பட்டுவிட்டது. சுந்தரசோழன் இறந்த பிறகு அவனது மனைவியும், ராஜராஜ சோழனின் தாயுமான வானமன் மாதேவி உடன்கட்டை ஏறி உயிர் நீப்பாள். உடன்கட்டை ஏறி இறந்தவர்களைத் `தீய்ப்பாய்ந்த அம்மன்' என்றும் அவர்களுக்கு எழுப்பப்பட்ட கோயில் `தீப்பாஞ்சாயி கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது.

கண்ணகிக்குப் பிறகு காஞ்சியில்தான் பழைமையான சதிக்கல் கிடைக்கிறது. இந்த சதிக்கல் கி.பி 5 - ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதில் சிவன், பெருமாள், கொற்றவை, ஜேஷ்டா தேவி ஆகியோரின் உருவத்துடன் வளையல் அணிந்த கைகள் காணப்படுகின்றன. சதிக்கற்களில் தெய்வ உருவங்கள் இருப்பதால் தீய்ப்பாய்ந்து உயிர் நீப்பவர்கள் சொர்க்கத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையை விதைத்து உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஊக்குவித்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்..." என்கிறார்.