Published:Updated:

தீபாவளிக்குக் கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம் எது?

தீபாவளிக்குக் கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம் எது?
தீபாவளிக்குக் கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம் எது?

முற்காலத்தில், உலகத்தில் உள்ள இருள் அகலவும், மனித மனங்களை மூடியிருக்கும் அஞ்ஞான இருட்டு விலகவும்,  தீர்க்கதமஸ் என்ற முனிவர் சூரிய வெளிச்சம் புக முடியாத அடர்ந்த வனத்தில் அமர்ந்து தவம் செய்து வந்தார். 'பரப்பிரம்மம் ரஸமானது, அமிர்தமயமானது, ஜோதிமயமானது, சத்தியமானது' எனும் பொருள்படும் மந்திரம் கூறி துயரத்திலிருந்து மக்களைக் காக்க  பரபிரம்மத்தை வழிபட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவரைச் சந்திக்க வந்தார் சநாதன முனிவர். அவரிடம் துன்ப இருளில் இருந்து மக்கள் அனைவரும் விடுபடுவதற்கான வழிமுறைகளை அருளும்படிக் கேட்டார் தீர்க்கதமஸ் முனிவர்.

துயரத்திலிருந்து அனைவரும் விடுபடுதற்கு வழிகாட்டும் அற்புதமான ஒரு வழிபாட்டை தீர்க்கதமஸ் முனிவருக்கு விளக்கினார் சநாதனர். 

''துலா மாதம் கிருஷ்ணபட்ச திரயோதசியில் மகா பிரதோஷ பூஜை செய்து, யம தீபம் ஏற்றி வழிபடவேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசியன்று எண்ணெய் தேய்த்து நீராடவேண்டும். எண்ணெய்யில் மகாலட்சுமியும், சீயக்காய்ப் பொடியில் சரஸ்வதியும், தண்ணீரில் கங்கையும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரியும், புஷ்பத்தில் யோகினிகளும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்புப் பலகாரத்தில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறியில் ஜீவாத்மாவும் உறைவதாக ஐதீகம். 

ஆகவே அன்று, சூரியோதயத்துக்கு முன் இந்தப் பொருள்களைப் போற்றுவதுடன், சிரஞ்சீவிகளான அஸ்வத்தாமா, மகாபலி, வியாசர், கிருபர், பரசுராமன், அனுமன், விபீஷணன் ஆகியோரையும் வழிபட, அவர்களது ஆசியால் துன்ப இருளில் இருந்து விடுபடலாம்'' என்றார் சநாதன முனிவர்.

மேலும் நரகசதுர்த்தசியன்று இரவு குபேரலட்சுமி பூஜை செய்வதும் மறுநாள் (அமாவாசை) கேதாரகௌரி விரதம் இருப்பதும் சிறப்பு என்றும் கூறிச் சென்றார். சநாதன முனிவர் கூறியபடியே தீபாவளித் திருநாளை அனுஷ்டித்து இறைவழிபாடு செய்தால், வாழ்வு வளம் பெறும்.

தீபாவளியன்று வழிபட வேண்டிய முறைகளைப் பற்றி விளக்குகிறார் காஞ்சிபுரம்  நடராஜ சாஸ்திரிகள்...

தீபாவளி அன்று சூரிய உதயத்துக்கு முன்பாக, அதிகாலையில் 3 மணியில் இருந்து 6 மணிக்குள் நல்லெண்ணெய்யை தலையில் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. தீபாவளி விடியற்காலை எண்ணெய்க் குளியலை 'கங்காஸ்நானம்' என்று புனிதமாக சொல்வார்கள். 'வீட்டுக் கிணற்றின் நீரிலோ அல்லது குழாயில் வரும் நீரிலோகூட தீபாவளியன்று நீராடினால் புனித கங்கையில் நீராடிய பலன் கிட்டும்' என்பது ஆன்றோர் வாக்கு. அதனால்தான் இந்தப் பண்டிகையன்று நீராடிப் புத்தாடை உடுத்தி, இறைவனைத் துதித்து இனிப்புப் பண்டங்கள் புசித்து மகிழ்ந்த பின்னர், அக்கம் பக்கத்தில் வசிக்கும் உற்றார் உறவினரிடம், 'கங்காஸ்நானம் ஆயிற்றா?' என்று விசாரிக்கிறோம். பட்டாசு கொளுத்துவதன் மூலம் ஆயிரமாயிரம் குடும்பங்கள் பிழைக்கவும் இந்த தீபத்திருநாள் வழிவகுக்கிறது. புத்தாடை உடுத்தும் வழக்கம் நம்மிடையே இருப்பதால் நெசவுத் தொழிலும் செழிக்கிறது. இப்பெருநாளில் இந்துக்கள் மட்டுமின்றிப் பிற மதத்தவரும் தங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்குப் பட்டாசும், புத்தாடையும் வாங்கிக் கொடுத்து மகிழ்கின்றனர்” என்றார்.


கங்கா ஸ்நானம் செய்வதற்கு ஏற்ற நேரம் : 

அதிகாலையில் 3.30 மணிக்கு மேல் 4:45 மணிக்கு முன்பு அஷ்டம சுத்தியான கன்னியா லக்னத்தில் எண்ணெய் தேய்த்து, நீராடிவிட வேண்டும்.

புத்தாடை நகை அணிவதற்கு ஏற்ற நேரம் :
காலை 8.05 மணிக்கு மேல் 9 மணிக்கு முன்னர் சுக்கிர ஹோரையில் புத்தாடை அணிதல் நன்று.

தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரம் :
இரவு 7.05 மணிக்கு மேல் 8 மணிக்கு முன்பு குரு பார்வை உடைய ரிஷப லக்னம், குரு ஹோரை நன்று.