Published:Updated:

அழியும் தமிழின் தொன்மையைப் பாதுகாக்க மறுப்பது ஏன்? - நீதிமன்றத்தின் கேள்விக்குப் பின் இருக்கும் நியாயங்கள்

ஒரு காலத்தில், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலைப் பகுதியில் மட்டும் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மலைகளும், குன்றுகளும் இருந்துள்ளன. ஆனால், அவற்றில் தற்போது மேல மலை, கடம்பர் மலை, உவச்சர் மலை, பறையர் மலை, பொம்மாடி மலை, ஆலுருட்டி மலை, மண் மலை, பொன்மலை, நார்த்தா மலை உள்ளிட்ட ஒன்பது மலைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன...

அழியும் தமிழின் தொன்மையைப் பாதுகாக்க மறுப்பது ஏன்? - நீதிமன்றத்தின் கேள்விக்குப் பின் இருக்கும் நியாயங்கள்
அழியும் தமிழின் தொன்மையைப் பாதுகாக்க மறுப்பது ஏன்? - நீதிமன்றத்தின் கேள்விக்குப் பின் இருக்கும் நியாயங்கள்

த்திய அரசு, வடநாட்டுத் தொன்மையை வெளிப்படுத்த முயற்சிக்கும் அளவுக்குத் தமிழகத்தின் தொன்மையை வெளிப்படுத்துவதில் போதிய அக்கறையின்றியே செயல்பட்டுவருகிறது.  ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல் என்று பல்வேறு அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு போதிய முக்கியத்துவத்தை எப்போதுமே அளித்ததில்லை. பாதுகாக்க வேண்டிய முக்கிய சின்னங்களான சமணர் படுகைகள் மற்றும் தமிழ் பிராமி கல்வெட்டுகளுக்கும் இதே நிலைமை தான்.

பராமரிப்பின்றி காணப்படும் மகாவீரர்

சமணர் படுகைகளில் காணப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுகள் தான் தமிழின் தொன்மைக்குத் தொல்லியல் சான்றாக இருக்கின்றன. பாதுகாத்துக் கொண்டாட வேண்டிய இந்தப் பகுதிகள் இப்போது சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாகவும், காதலர்கள் ஒதுங்கும் இடமாகவும் இருப்பது தான் சோகத்திலும் சோகம். சமணர் படுகைகள் அமைந்திருக்கும் பல்வேறு மலைகள் இப்போது கல் குவாரிகளால் அழிந்து போகும் அபாயத்தில் இருக்கின்றன. 

நேற்று மதுரை உயர்நீதிமன்றமும் தொல்லியல் துறைக்குக் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழின் தொன்மைக்குச் சான்றாக இருக்கும் சமணர்காலக் கல்வெட்டுகளைப் பாதுகாக்கத் தொல்லியல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனும் உயர்நீதிமன்றத்தின் கேள்வி குறித்து வரலாற்று ஆர்வலர்களிடம் பேசினோம்.

குடுமியான் மலை தமிழ் பிராமி

மதுரையைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலிருக்கும் சமணர் படுகைகள் மற்றும் தமிழி கல்வெட்டுகள் குறித்தும், அவற்றின் இன்றைய அவல நிலைகளைப் பற்றியும் ' பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய'த்தைச் சேர்ந்த சாந்தலிங்கத்திடம் பேசினோம்...

“சமணப் படுகைகளில் இருக்கும் தமிழ் பிராமி கல்வெட்டுகளின் துணை கொண்டுதான் தமிழரின் பழைமையான வரலாற்றை உறுதிப்படுத்துகிறோம். செம்மொழித் தகுதி பெறுவதற்கு ஒரு மொழி 2000 ஆண்டுகளுக்கு மேலான தொன்மை உடையதாக இருக்கவேண்டும். இந்தக் கல்வெட்டுகளின் துணைகொண்டே தமிழ் மொழிக்கான ‘செம்மொழி’ தகுதியைப் பெற்றிருக்கிறோம்.

வேதக் கல்வி வேதியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட காலத்தில் கல்வியை அனைத்து மக்களுக்கும் ‘பள்ளி’ மூலம் வழங்கியவர்கள்

சமணர்கள். கி.பி 10 - ம் நூற்றாண்டு வாக்கில் மதுரையைச் சுற்றிலும் சுமார்  40 - க்கும் மேற்பட்ட சமணர்கள் நடத்திய பள்ளிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு அனைத்து மக்களுக்கும் கல்வி கற்பிக்கப்பட்டிருக்கிறது. சமண மதத்தின் அடிப்படை அடைக்கல தானம், அன்ன தானம், மருத்துவ தானம், அறிவு தானம் ஆகியவற்றை சமணத் துறவிகள் தமிழ் மக்களுக்கு அளித்து சமுதாயப் புரட்சி செய்திருக்கிறார்கள். இவை அனைத்துக்கும் ஆதாரமாகத் திகழ்வது இந்த சமணப் படுகைகளும், கல்வெட்டுகளுமே. இவற்றைப் பாதுகாத்து அனைத்து மக்களும் விழிப்புணர்வு அடைய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மதுரையைச் சுற்றி மாங்குளம், அரிட்டாபட்டி, ஆனைமலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பதிமூன்று இடங்களில் சமணர்கள் வாழ்ந்த படுகைகளும், குகைகளும், தமிழ் கல்வெட்டுகளும் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டு எழுத்துகள் சுமார் 2300 லிருந்து 2500 ஆண்டுகள் பழைமையானவை. திருப்பரங்குன்றம், கிடாரிப்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள சமணச் சின்னங்களை மத்திய தொல்லியல் துறையும், மாங்குளம், ஆனை மலை, கருங்காலக்குடி ஆகிய இடங்களில் உள்ள சமணச் சின்னங்களை மாநில தொல்லியல் துறையும் பராமரித்து வருகின்றன. இவை அனைத்துக்கும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வேலி அமைத்திருந்தார்கள், பகுதிநேரக் காவலர்களை நியமித்திருந்தார்கள். அவர்கள், பணி ஓய்வு பெற்ற பிறகு வேறு காவலர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இரும்பு வேலிகள் அனைத்தும் திருடு போய்விட்டன. இந்த சமண சின்னங்கள் அனைத்தும் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, மது அருந்துவதற்காகத் தான் பயன்படுகின்றன. சமணச் சின்னங்கள் பற்றிய விளக்கப் பலகையை எழுதி வைத்தாலும் உடைத்து விடுகிறார்கள். சுற்றுலாப் பயணிகள் சென்றாலும் இவற்றை விளக்குவதற்குக் கூட யாரும் இங்கு இல்லை. மத்திய அரசிலும் சரி, மாநில அரசிலும் சரி தொல்லியல் துறையில் பாதிக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் தான் இருக்கின்றன. 

அரிட்டாபட்டி சமணர் 

மத்திய அரசு வட நாட்டிலிருக்கும் தொன்மைச் சின்னங்களைப் பாதுகாக்கச் செலுத்தும் அக்கறையைத் தமிழகத்திலிருக்கும் தொன்மைச் சின்னங்களைப் பாதுகாக்க அக்கறை செலுத்த மறுக்கிறது. இதுதான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். கீழவளவு மற்றும் திருவாதவூர் பகுதியில் சமண படுகைகள் வரை கற்கள் குவாரி வெட்டப்பட்டு, இப்போது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. அரிட்டாப்பட்டி மலையை உடைத்துக் கல் எடுக்க முயற்சிகள் நடந்தன. அந்த முயற்சி மக்கள் போராட்டம் மூலம் தடுக்கப்பட்டிருக்கிறது. ஆனை மலையைச் சிற்ப நகராக மாற்ற நடந்த முயற்சிகள் மக்கள் போராட்டம் மூலம் தடுக்கப்பட்டது. மதுரைப் பகுதியில் உள்ள சமணச் சின்னங்கள் இருக்கும் கல் குவாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இது மட்டுமே மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி” என்கிறார். 

சமூக விரோதிகளால் பாழடைந்திருக்கும் சமணர் குகை

மதுரையை அடுத்து சமணர் சின்னங்கள் அதிகமாகக் காணப்படும் பகுதி புதுக்கோட்டை மாவட்டம். புதுக்கோட்டைப் பகுதியிலிருக்கும் சமணர் சின்னங்கள், கல் படுகைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள் குறித்து ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அமைப்பைச் சேர்ந்த பார்த்திபனிடம் கேட்டோம்.

"ஒரு காலத்தில், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலைப் பகுதியில் மட்டும் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மலைகளும், குன்றுகளும் இருந்துள்ளன. ஆனால், அவற்றில் தற்போது மேல மலை, கடம்பர் மலை, உவச்சர் மலை, பறையர் மலை, பொம்மாடி மலை, ஆலுருட்டி மலை, மண் மலை, பொன்மலை, நார்த்தா மலை உள்ளிட்ட ஒன்பது மலைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

மற்ற அனைத்தும் கல் குவாரிகளால் அழிக்கப்பட்டுவிட்டன. இப்போதும் கூட இந்தப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மலைகளில் பதிவு செய்யப்படாமலே அழிந்து போன சிலைகளும், சமணர் படுகைகளும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் ஏராளம்.

எஞ்சியிருக்கும் செட்டிப்பட்டி சமணர் கோயில் 

சித்தன்னவாசல் மற்றும் குடுமியான் மலையில் கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. ஏராளமான சமணர் சிலைகள் அங்கு உள்ளன. தேனி மலையில் வட்டெழுத்துக் கல்வெட்டு மற்றும் இருக்குவேள்

மன்னர்களின் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. குடகு மலையில் சமணர் படுகைகள் இருக்கின்றன. இதில் இருந்த சோழர் காலக் கல்வெட்டுகள் அனைத்தும் குவாரிகளால் அழிக்கப்பட்டுவிட்டன.

புதுக்கோட்டைப் பகுதிகளில் மட்டும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சமணர் கோயில்கள் இருந்தன. அவற்றில் தற்போது சுமார் நாற்பது சிலைகள் இங்குக் கிடைக்கின்றன. தற்போதுதான் தொல்லியல் துறையினர் இந்தச் சிலைகளையும், சின்னங்களையும் பாதுகாக்க வேலி அமைத்து, அறிவிப்புப் பலகை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் செட்டிப் பட்டி என்னுமிடத்தில் மிகப்பெரிய சமணர் கோயில் இருந்திருக்கிறது. அதற்கான அடித்தளமும், சில சிலைகளுமே இப்போது எஞ்சியிருக்கின்றன. நாற்பது ஆண்டுகளுக்கும் முன் இந்தக் கோயிலில் படியெடுக்கப்பட்ட ராஜராஜன்காலக் கல்வெட்டு இப்போது அங்கு இல்லை, அழிந்துபோய்விட்டது. இங்கு இருந்த சிலைகள் தற்போது அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படுகின்றன. 

சமணர் படுகை

கன்னங்குடி, சித்தன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல் துறையினர் வேலி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். புத்தாம்பூர், செம்பாத்தூர், கரமாமேடு, லட்சுமணப்பட்டி, நக்கீரர் வயல் உள்ளிட்ட பகுதிகளில் சமணர் சிலைகளும், சமணர் கோயில் அமைப்புகளும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றன. இவை அனைத்தும் பாதுகாக்க வேண்டிய பகுதிகளாகும். இந்தப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்துக் காவலர்களை நியமித்துப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருப்பதைப் போன்று மத்திய தொல்லியல் துறை சர்க்கிளைத் தமிழகத்திலும் இரண்டு அல்லது மூன்றாகப் பிரித்தால் தான் இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண முடியும்” என்று தெரிவித்தார்.