Published:Updated:

வள்ளலார் பிறந்த தினம்: சென்னையில் 33 ஆண்டுகள் வள்ளலார் வாழ்ந்த வீடு இப்போது எப்படி இருக்கிறது?

வள்ளலார் சென்னையைப் பற்றி தனது பாடல்களில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். ‘தருமமிகு சென்னை' என்ற புகழ்பெற்ற சொல்லாடலை எழுதியவர் வள்ளலார்தான்.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று எல்லா உயிர்களிடத்திலும் பேரன்பு காட்டிய மகான் வள்ளலார்.

வள்ளலார்
வள்ளலார்
ம.செ
19-ம் நூற்றாண்டில் இருளை அகழ்ந்தெரியும் சூரியனாக தமிழ்நாட்டில் தோன்றியவர் திருவருட் பிரகாச வள்ளலார். மூட நம்பிக்கைகளையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் தகர்த்து, ஆன்மநேய ஒருமைப்பாட்டை மக்களிடம் கொண்டு சென்ற மாபெரும் சீர்திருத்தவாதி அவர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாத காலத்தில், சகல மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றுகூடி வழிபடக்கூடிய சத்திய ஞான சபையை அமைத்தவர் வள்ளலார்; வடலூரில் அதை நிறுவி, அன்பு நெறி பரப்பும் இயக்கமாக அதை வளர்த்தெடுத்தார்.

வடலூர் சத்திய ஞானசபை
வடலூர் சத்திய ஞானசபை
மாபெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய வள்ளலார் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து துறவி நிலையடைந்த வீடு சென்னை தங்கசாலைப் பகுதியில் வீராசாமி தெருவில் இருக்கிறது. எண் 31 இலக்கமிட்ட அந்த வீட்டில்தான் 1825 முதல் 1858 வரை 33 ஆண்டுகள் வள்ளலார் வாழ்ந்தார். அவர் பெயராலேயே தற்போது இந்தப் பகுதி “வள்ளலார் நகர்” என்று அழைக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வள்ளலார், 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி சிதம்பரத்துக்கு அருகிலுள்ள மருதூரில், இராமையா - சின்னம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார்; பெற்றோர் அவருக்கு இராமலிங்கம் என்று பெயரிட்டனர். ஆறு மாதத்தில் தந்தை காலமாகிவிட, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன்னுடைய சொந்த ஊரான பொன்னேரி அருகிலிருக்கும் சின்னக்காவணத்துக்கு வந்து சேர்ந்தார் சின்னம்மாள். இராமலிங்கத்துக்கு இரண்டு வயதாக இருக்கும்போது, வீராசாமி தெருவிலிருக்கும் இந்த வீட்டுக்கு மாறியது குடும்பம்.

அன்னதானம்
அன்னதானம்

இராமலிங்கத்தின் மூத்த அண்ணன் சபாபதி சென்னையில் பெரியபுராண சொற்பொழிவாளராக இருந்தார். அவரோடு சிறுவனாக இருந்த இராமலிங்கமும் செல்வதுண்டு. ஒருமுறை, ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு திட்டமிட்டபடி சபாபதியால் செல்ல முடியவில்லை. தன் தம்பியை அழைத்து நீ பேசுகிறாயா என்று கேட்டார். ராமலிங்கம் தைரியமாக அந்த சொற்பொழிவுக்குச் சென்றார். மண்ணடி லிங்கிச் செட்டித் தெரு மல்லிகேஸ்வரர் கோவிலுக்கு அருகில் உள்ள சோமசுந்தர செட்டியார் வீட்டில் அந்த சொற்பொழிவு நடந்தது. இரவு முழுவதும் நடந்த அந்தச் சொற்பொழிவை ஊரார் பாராட்ட, இராமலிங்கத்தின் ஆற்றலை அறிந்துகொண்டார் அண்ணன் சபாபதி. அன்றிலிருந்து வீட்டின் மாடியில் இந்த தனியறை இராமலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த அறையில்தான் திருவருட்பாவின் ஐந்து திருமுறைகளை வள்ளலார் இயற்றினார். 27-வது வயதில் தன் தாய், அண்ணன், அண்ணியார் வலியுறுத்தியதால், தனக்கோட்டி என்ற பெண்ணை வள்ளலார் திருமணம் செய்துகொண்டது இந்த வீட்டில் தான். எனினும், அவர் இல்லற வாழ்வுக்குள் செல்லவில்லை. 1858-ல் அவருடைய 35-வது வயதில் தாயும், மனைவியும் காலமாகிவிட, வள்ளலார் சென்னையிலிருந்து வெளியேற முடிவெடுத்தார்.

திருவருட்பா
திருவருட்பா
வள்ளலார் சென்னையைப் பற்றி தனது பாடல்களில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். ‘தருமமிகு சென்னை' என்ற புகழ்பெற்ற சொல்லாடலை எழுதியவர் வள்ளலார்தான்.

சென்னையைப் போற்றிய வள்ளலாரின் தியானத்திற்கு, அன்றைய சென்னையின் நெரிசலும் பரபரப்பும் இடையூறாக இருந்தன. அதனால், ‘தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால், சிலுகுறும் என்னுளம் பயந்தே...' எனக் கூறி, சென்னையை விட்டு வெளியேறினார்.

சென்னை
சென்னை

இலக்கணமறிந்த தமிழ் வித்வான், சொற்பொழிவாளர், நூலாசிரியர், பதிப்பாளர் என்று சென்னையில் பல பரிமாணங்களைக் காட்டிய வள்ளலார், 1858-ல் சென்னையை விட்டுப் புறப்பட்டு நடந்தே சென்று சிதம்பரத்தை அடைந்தார். அங்கிருந்து அவருடைய பிறந்த ஊரான மருதூருக்குப் பக்கத்தில் உள்ள கருங்குழிக்கு சென்றார்.

“இராமலிங்கர் முதலில் நாள் ஒன்றுக்கு இருவேளை உணவு எடுத்துக்கொண்டார், பிறகு அது ஒரு வேளை உணவாகியது, பிறகு இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை உணவு என்று உணவில் மிகுந்த கட்டுப்பாட்டைப் பின்பற்றினார். வெந்நீரில் சர்க்கரை கலந்து அருந்துவதே பெரும்பாலும் அவரது உணவு! பச்சைத்தண்ணீர் சேர்த்துக்கொள்வதேயில்லை. குடிப்பதற்கும் குளிப்பதற்கும் வெந்நீர்தான். உணவில் தூதுவளை, கரிசலாங்கண்ணி சேர்த்துக் கொள்வார். இரவு மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குவார். தூக்கம் ஆயுளைக் குறைக்கும் என்பது அவர் கொள்கை. உரத்துப் பேசுவதைக் கேட்டு நடுங்குவார். பெரும் ஓசை கூடாது; அழுகுரலுக்குப் பதைப்பார்; தெருவில் கைவீசி நடக்க மாட்டார்; எப்போதும் கை கட்டியபடியே இருப்பார்” - என வள்ளலாரின் பண்புகளைப் பற்றி அவரோடு இருந்தவர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள்.

வள்ளலார் பிறந்த நாள்
வள்ளலார் பிறந்த நாள்

பாரிமுனை கந்தகோட்டம், திருவொற்றியூர் வடிவுடையம்மன், பாடி திருவலிதாயம் சிவன் கோவில், திருமுல்லைவாயில் மன்னாதீஸ்வரர் கோவில் போன்றவை வள்ளலாரால் பாடல் பெற்ற தலங்கள்.

வள்ளலார் வாழ்ந்த காலத்தில் எப்போதும் இல்லாத வறுமையின் பிடியில் தமிழகம் தவித்தது. 19-ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் 7 கொடூர பஞ்சங்கள் ஏற்பட்டன. இந்தப் பஞ்சங்களால் மனம் பதறிய வள்ளலார், “பசியினால் இளைத்து வீடுதோறும் இரந்தும், பசி அறாதயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்'' என்று மனம் வெதும்பிப் பாடினார். வடலூரில் சத்திய தர்மசாலையை நிறுவி, மக்களின் பசிப்பிணி போக்கும் அரும்பணியில் ஈடுபட்டார். அங்கு அவர் ஏற்றிவைத்த அணையாத அடுப்பு இன்னும் எரிகிறது. பசித்தீயை அணைக்கிறது.

அணையாத அடுப்பு
அணையாத அடுப்பு

சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டில் அவரது அறை இப்போதும் பழமை மாறாமல் பாதுகாக்கப்படுகிறது. வீட்டில் இப்போது புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. மூன்று நபர்கள் கைமாறி நான்காவதாக இந்த வீட்டை எத்திராஜுலு நாயுடு என்பவர் விலைக்கு வாங்கினார். இன்று அவருடைய வாரிசுகளில் ஒருவரான ஸ்ரீபதி என்பவர் இந்த இல்லத்தை நிர்வகித்து வருகிறார். இங்கு நாள்தோறும் நண்பகலில் சுமார் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இது தவிர, வள்ளலாரின் அவதார நாளான அக்டோபர் 5 மற்றும் தைப்பூசத் தினத்தன்று சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் நடைபெறுகின்றன.

அன்னதானம்
அன்னதானம்
இப்போதும் வள்ளலார் ஜீவித்த அறைக்குள் நுழைகிறபோது ஓர் ஆன்ம அதிர்வு நமக்குள் பரவுகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு