Published:Updated:

நடுகல் அற்புதங்கள் 2: நாய், கோழி, புலி - அனைத்துக்கும் நடுகல் எழுப்பிய தமிழர்கள்! ஆச்சர்ய தகவல்கள்!

நடுகல்

பண்பாட்டில் சிறந்து விளங்கிய நம் தமிழர்கள், தாம் வளர்த்த விலங்கினங்களுக்கும் நடுகல் எழுப்பி வழிபட்டது உண்மையில் வியப்பைத் தரக்கூடியதுதான்.

நடுகல் அற்புதங்கள் 2: நாய், கோழி, புலி - அனைத்துக்கும் நடுகல் எழுப்பிய தமிழர்கள்! ஆச்சர்ய தகவல்கள்!

பண்பாட்டில் சிறந்து விளங்கிய நம் தமிழர்கள், தாம் வளர்த்த விலங்கினங்களுக்கும் நடுகல் எழுப்பி வழிபட்டது உண்மையில் வியப்பைத் தரக்கூடியதுதான்.

Published:Updated:
நடுகல்
சுவரன் மாறன் என்னும் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையனால், கொல்லப்பட்ட ஒரு புலிக்கு எழுப்பிய நடுகல் இது. மன்னன் ஒருவனே ஒரு புலிக்கு நடுகல் எழுப்புவது இதுவே முதல்முறை! அவ்வகையில் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
நடுகல்
நடுகல்

ஆதியில் நம் வழிபாட்டு முறைகள் நடுகல்லில் இருந்தே தோன்றின என்கிறது வரலாறு. பிரமாண்டக் கோயில்களோ, வழிபாட்டு முறைகளோ இல்லாத நாள்களில் முதன்முதலாக நன்றியின் பொருட்டோ, அச்சத்தின் பொருட்டோ எழுப்பப்பட்ட நடுகற்களே வழிபாட்டுக்கு உரியவைகளாக இருந்தன. நடுகல், கந்து எனும் கல்தூண் எனத் தொடங்கிய வழிபாடுகள் மெல்ல மெல்ல அச்சமூட்டிய அணங்கு எனும் பேய், வேல், வாள் என நீண்டன. பிறகு மன்னர்கள் காலத்தில் சிலைகளாக முன்னேறிப் பல தெய்வ வடிவங்களும் உண்டாகின என்றும் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பண்பாட்டில் சிறந்து விளங்கிய நம் தமிழர்கள், தாம் வளர்த்த விலங்கினங்களுக்கும் நடுகல் எழுப்பி வழிபட்டது உண்மையில் வியப்பைத் தரக்கூடியதுதான். வரலாற்றுக் காலத்தில், வளர்ப்பு உயிரினங்கள் குறித்த தரவுகள் பொயுமு 4,000-ம் ஆண்டு முதலே கிடைக்கின்றன. எகிப்தில் இவ்வகையான உயிரினங்களின் மம்மிகளும் கிடைத்துள்ளன. நமது பகுதிகளில் இதேபோல் நாய்களுக்கு நடுகல் எடுப்பதுண்டு. தன்னை வளர்த்த மனிதனோடு சேர்ந்து போர் செய்து அவனுடனேயே மரித்த கதைகளை அவை சொல்லும். தொண்டை மண்டலத்தில் இதே போல சேவல்களுக்கும் நாய்களுக்கும் நடுகற்கள் கிடைத்திருக்கின்றன.

கோழிப்போர்
கோழிப்போர்

கோழிப்போர் நடுகல்:

'பாய்ந்தும் எறிந்தும் படிந்தும் பலகாலும்

காய்ந்தும்வாய்க் கொண்டும் கடுஞ்சேவல் – ஆய்ந்து

நிறக்கண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப்

புறங்கண்டும் தான்வருமே போர்க்கு!'

புறப்பொருள் வெண்பாமாலையில் சேவற்சண்டை குறித்து வரும்பாடல் இது. பல சண்டையில் கலந்தாலும் விடாமல் வெறியுடன் சண்டையிடுதலை மேற்கண்ட பாடல் கூறுகிறது. இதில் வரும் 'எறிந்தும்' என்பதற்கு "காலின் முள்ளை இட்டு இடித்தும்" என இப்பாடலின் உரை கூறுகிறது. சமீபகாலம் வரையிலும் சேவலின் காலிடுக்கில் கூரான சிறிய கத்திபோன்ற பொருளைக் கட்டி சண்டையிட வைப்பர். எத்துணை வருடமாய் இவ்வழக்கம் தொடர்கிறது என இப்பாடல் வாயிலாய் அறியலாம். பெண்கோழியை 'அளகு' எனக் கூறினர். சேவற்சண்டையிடும் சேவல்களை அன்று வித்தகர் என அழைத்தனர். கோழிசண்டையின் நுட்பங்களை விளக்க 'கோழிநூல்' என்ற நூல் வழக்கத்தில் இருந்து பிற்பாடு அழிந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சண்டைக் கோழிகளின் உரிமையாளரான 'கோழி வித்தகர்கள்' தாம் உயிருக்குயிராய் வளர்த்த சேவலை மறக்கவியலாது கல்லெழுப்பி வணங்கினர். விழுப்புரம் மாவட்டம் அரசலாபுரம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி 4 - 5 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய சேவல் நடுகல் இது. இதுபோல இந்தளூர், அரசலாபுரம் ஆகிய ஊர்களிலும் கோழி நடுகல் உண்டு.
கோழி கல்வெட்டு
கோழி கல்வெட்டு

கோழி கல்வெட்டு:

'முகையூரு மேற்சே, ரிகு யாடிக, ருகிய கோழி...' முகையூர் என்ற ஊரின் மேற்சேரியில் நடந்த சேவல் சண்டையில், இறந்துபட்ட சேவல் என்பது பொருள். தற்போது இக்கல்வெட்டு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் இந்தளூரிலும் சேவலுக்குரிய நடுகல் உள்ளது.

நாய்க்கு எழுப்பிய நடுகல்:

எடுத்தனூர் நடுகல் - சங்க இலக்கியத்தில் நாய்கள்: பெருங்கற்காலம் தொட்டே மனிதர்களுடன் பயணித்து வரும் மிருகங்களில் குறிப்பிடத்தக்கது நாய் இனங்கள். நாய்களை வேட்டைக்காகவும் காவலாகவும் செல்லப் பிராணியாகவும் வளர்த்து வருகின்றனர். நாய்களை சங்க இலக்கியங்கள் ஞமலி, ஞாளி என்று கூறுகின்றன. சினமுற்ற வேட்டை நாய்களை ‘கதநாய்’ என்றும் குறிப்பிட்டுள்ளன.

மான், முயல், பன்றி, உடும்பு போன்றவற்றை வேட்டையாடுவதில் நாயின் பங்கு குறிப்பிடத்தக்கது. சங்ககாலத் தமிழ்ச் சமுதாயத்தில் ஓர் ஆண்மகன் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, கையில் ஒரு வேலுடன் வேட்டைநாய் பின்தொடரச் செல்வது பெருவழக்காக இருந்தது. வீட்டுநாய், வேட்டை நாய்களைப் பற்றி மட்டுமின்றி காடுகளில் வாழும் செந்நாய்கள், நீர் நாய்களைப் பற்றியும் சங்ககால இலக்கியங்களில் பதிவுசெய்து வைத்துள்ளனர்.

‘சொன்றி ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்

வறைகால் யாத்தது வயின்தொறும் பெறுகுவிர்’

என்ற பெரும்பாணாற்றுப்படை வரி, வேட்டுவக் குடிகளான எயினர் இன மக்கள், நாய்களைக் கொண்டு வேட்டையாடிய ஊன் உணவைப் பற்றிக் கூறுகிறது. ‘கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன்’ என்ற புறப்பாடல் வரி, கானகத்து வாழ் வேட்டுவனையும், அவனோடு இணைந்து வாழ்ந்த நாயையும் குறிக்கிறது. குறிஞ்சி நிலத்தில் வேட்டைக்குப் பயன்பட்ட நாய்கள்தான், பின்னர் மெல்ல மருத நிலத்து மக்களால் ஆநிரைக் காவலுக்குப் பயன்படுத்தப்பட்டன. அவ்வாறான நாய்கள்தான் ‘பட்டி நாய்கள்’ என்று பெயர்பெற்றன.

சங்ககாலத் தமிழர்களின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயானது காவலுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதைப் பல பாடல்களின் வழியாக அறியமுடிகிறது. வீட்டுக்கு வெளியில் பந்தல்காலில் கட்டி வைக்கப்பட்ட நாயானது காவலில் சிறந்து விளங்கியதைப் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. இவ்வாறு தம்முடன் அன்றாடம் பயணிக்கும் நாய்களுக்கும் தமிழர்கள் நடுகல் எழுப்பியுள்ளனர்.
எடுத்தனூர் நடுகல்
எடுத்தனூர் நடுகல்

எடுத்தனூர் நடுகல்:

திருவண்ணாமலை செங்கம் சாலையில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது எடுத்தனூர். இவ்வூரில் உள்ள நடுகல்லில் வீரன் சண்டைக்கு செல்லும் நிலையில் நிற்கின்றான். அவன் பின்னால் ஒரு நாய் நிற்கிறது. காவலனைக் கள்வர்கள் வீழ்த்தி விடுகிறார்கள். வீரனுக்குத் துணையாக நின்ற நாய், அவனை அடித்து வீழ்த்திய இரு கள்ளர்களோடு போரிட்டு வீழ்த்தி வெற்றி கண்டது. இந்த நடுகல்லில் 2 கல்வெட்டுக்கள் உள்ளன. ஒன்று வீரனுக்கும் இன்னொன்று நாய்க்குமானது.

செங்கம் பகுதியில் நடுகற்களை வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது. இவர்கள் நடுகற்களை வேடியப்பன் என்று அழைக்கிறார்கள். இதேபோன்று வேலூர் மாவட்டம் அம்பலூரில் 9-ம் நூற்றாண்டு நடுகல் ஒன்று இருநாய்கள் பன்றியுடன் சண்டையிட்டு இறந்ததைப் பற்றிக் கூறுகிறது. இந்த நாய்களின் பெயர்களாக முழகன், வந்திக்கா கத்தி என அவற்றின் உரிமையாளர் கோவந் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். 1,200 ஆண்டுகள் கடந்தும் அந்நாய்களின் தியாகம் இன்றும் நினைவுகூறப்படுகிறது. இது போன்றே தண்டாரம்பட்டு அருகே ஒரு நாயின் நடுகல் கண்டறியப்பட்டது.

புலிக்கு எழுப்பட்ட நடுகல்
புலிக்கு எழுப்பட்ட நடுகல்

புலிக்கு எழுப்பட்ட நடுகல்:

பொதுவாக புலிக்குத்தி நடுகல் தமிழகத்தின் பல பகுதிகளில் கிடைக்கிறது. அந்நடுகற்கள் புலியால் தாக்கப்பட்டு இறந்த வீரனுக்கு எழுப்பப்பட்டிருக்கும். ஆனால் முதன்முதலாக ஒரு பெருவீரன், தான் குத்திக் கொன்ற புலிக்கு ஒரு நடுகல் எழுப்பியுள்ளான். அவன் சாதாரண வீரன் அல்ல, அவர் ஆளுமைமிக்க முத்தரையர் மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது. சுவரன் மாறன் எனும் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையனால், கொல்லப்பட்ட ஒரு புலிக்கு எழுப்பிய நடுகல் இது. மன்னன் ஒருவனே ஒரு புலிக்கு நடுகல் எழுப்புவது அதுவே முதல்முறை அவ்வகையில் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism