Published:Updated:

"பரம்பொருளுக்கு மதம் ஏது?" - காந்தி முன்னெடுத்த ஆன்மிகம் எத்தகையது?

காந்திஜி
News
காந்திஜி

காந்தியின் ஆன்மிகம் என்பது வேதாந்த ஆன்மிகம் அல்ல. அது மக்களை ஒரு சமூகமாக இணைக்கும் முயற்சி. முதலில் நாட்டில் உள்ளவர்கள் சகோதர சண்டைகளை விட்டுவிட்டு ஒன்றிணைய மதம் துணையாகும்.

“உங்கள் பிரார்த்தனைக் கூட்டங்களில் அனைத்து மதத்தவர்களும் கலந்துகொள்கிறார்கள். அப்படியிருக்க பிரார்த்தனைப் பாடல்களில் ராம நாமம் அடிக்கடி வருகிறது. நீங்கள் ஏன் பொதுவான பிரார்த்தனைப் பாடல்களைப் பாடக்கூடாது?”
என்று ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர் காந்தியிடம் கேட்டார்.

இதற்கு காந்தி கோபப்பட்டு பதில் சொல்வார் என்பது அவரின் எதிர்பார்ப்பாக இருக்கலாம். ஆனால் காந்தியைப் புரிந்துகொள்ளாதவர்களின் கேள்வியாக அது இருந்தது என்பதுதான் உண்மை.

காந்தி சிறுபையனாக இருக்கும்போதே ராம நாமத்தை அறிந்துகொண்டார். இருட்டில் செல்ல பயந்த காந்தியிடம் ராம நாமத்தைச் சொல்லுமாறு அவர்கள் வீட்டு வேலைக்காரி சொல்ல, அதை அப்படியே கடைப்பிடித்தார் காந்தி. அவர் மனதிலிருந்து பயம் விலகி ஓடுவதைக் கண்டார். காந்தியின் முதல் குருவாக, மந்திர உபதேசம் செய்தவராகத் திகழ்ந்தவர் அந்தப் பணிப்பெண். அந்த வயதில் அறிந்துகொண்ட ராம நாமத்தைப் பிரார்த்தனைகளிலிருந்து அவர் எப்படி நீக்கிக் கொள்ள முடியும் என்பது பிறரின் அபிப்ராயமாக இருக்கலாம்.

காந்திஜி
காந்திஜி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், காந்தியோ தன் வாழ்க்கை முழுமையையும் சோதனைக்காகவே அர்ப்பணித்துக்கொண்டவர். அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது அங்கு பலரும் கிறிஸ்தவமும் இஸ்லாமும் சார்ந்தவர்களாக இருந்தார்கள். காந்தியையும் மதம்மாற வலியுறுத்தினார்கள். அப்போது அவருக்குள் பல கேள்விகள். இந்த நிலையில் அவர் உலக அறிஞர்களின் நூல்களை வாசிக்க ஆரம்பித்துவிட்டார். கடவுள் பற்றிய கருத்துருவாக்கம் மாறத்தொடங்கிவிட்டது. ஒருநிலையில் கடவுள் இருக்கிறாரா என்கிற கேள்விகூட அவர் மனதில் தோன்றியது. அப்போது தன் சந்தேகத்தைத் தீர்க்கும் குருவைத் தேடினார். அப்போது அவருக்கு வாய்த்தவர்தான், ஸ்ரீமத் ராய்ச்சந்திரா. சமண சமயத்தைச் சேர்ந்த பெரும் மகான். மனவலிமை வாய்க்கப்பெற்றவர். ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துக்கொள்ளும் சதாவதானி. காந்தி இந்தியா வந்தபோது ஸ்ரீமத் ராய்ச்சந்திராவை சந்தித்தார். காந்தியின் குழப்பங்களுக்கான விடைகளை அவர் சொன்னபோது கடவுள், மதம், வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களில் காந்திக்குத் தெளிவு உண்டானது. ஸ்ரீமத் ராய்ச்சந்திராவே காந்தியின் ஆன்மிக குரு எனலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காந்தியின் வாழ்வின் ஆன்மிகச் சிந்தனைகளை விதைத்த மூவர் குறித்து காந்தியே சொல்கிறார்.

"நான் உலகெங்கும் சென்று மதத்தலைவர்கள் பலரை சந்தித்திருக்கிறேன். ஸ்ரீமத் ராய்ச்சந்திராவைப்போல் என் மனதில் இடம்பிடித்த தலைவர் யாரும் இல்லை. அதேபோன்று ‘ஆண்டவனின் ராஜ்யம் உனக்குள்ளே' எனும் நூலை எழுதிய டால்ஸ்டாய் மற்றும் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்' நூலை எழுதிய ஜான் ரஸ்கின் ஆகியோரும் முக்கியமானவர்கள்” என்கிறார்.

எனவே காந்தியின் ஆன்மிகம் என்பது வெற்று மதம் சார்ந்த ஒன்றாக இருக்கவில்லை. அப்படியிருந்தால் அவர் நரசிம்ம மேத்தா எழுதிய ‘வைஷ்ணவ ஜனதோ...’ என்னும் பாடலை விரும்பியிருக்க மாட்டார். நரசிம்ம மேத்தா குஜராத்தில் தோன்றிய ஆன்மிகவாதி. தன் வாழ்வில் இறைவனைக் கண்ட மகான் என்று போற்றப்படுபவர். அவர் பாடல் அவரின் ஆன்மிகம் எத்தனை எளிமையும் தூய்மையுமானது என்பதை விளக்கும். வைஷ்ணவ ஜனதோ என்னும் பாடலை நாமக்கல் கவிஞர் மொழிபெயர்த்திருக்கிறார்.

காந்திஜி
காந்திஜி

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே

பீடு பராயே ஜானெரெ

பரதுக்கே உபகார் கரே தொயெ

மன் அபிமான் ந ஆனெ ரெ

தமிழில்

வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின்

வகுப்பேன் அதனைக் கேளுங்கள்…

பிறருடைய துன்பம் தனதென எண்ணும்

பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;

உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்

உண்மை வைஷ்ணவன் அவனாகும்;

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல, 'ரகுபதி ராகவ ராஜா ராம்' என்ற இந்து சமயப் பாடலை நாடெங்கும் பிரபலபடுத்தியவர் காந்தி. லக்ஷமண் ஆச்சார்யா எழுதிய இந்தப் பஜனைப் பாடலில் 'ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று வரிகளை மாற்றியமைத்து மத ஒற்றுமையை அதில் நிறுவியவர் காந்தி.

சக மனிதனை நோக்கிய கருணையே மதம் என்பதுவே காந்தி கண்டடைந்த ஆன்மிகம். அதையே அவர் தன் வாழ்வில் கடைப்பிடிக்கத் தொடங்கினார்.

காந்தி குறித்து ஆய்வு செய்த அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரைன் டைபோவ்ஸ்கி, “காந்தியின் ஆன்மிகம் என்பது வேதாந்த ஆன்மிகம் அல்ல. அது மக்களை ஒரு சமூகமாக இணைக்கும் முயற்சி. முதலில் நாட்டில் உள்ளவர்கள் சகோதர சண்டைகளை விட்டுவிட்டு ஒன்றிணைய மதம் துணையாகும் என்று நம்பினார். அதையே அவர் முன்னெடுத்தார்” என்கிறார்.

காந்திஜி
காந்திஜி

காந்தி இந்திய சமூகத்தை ஒன்றுதிரட்ட காலம்காலமான சநாதன தர்மத்தில் பல்வேறு மாறுபாடுகளைக் கொண்டுவர முயன்றார். குறிப்பாக சாதிப்பாகுபாடுகளை விட்டுவிட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். காந்தியின் ஆளுமையால் கவரப்பட்ட பல உயர்சாதி இந்துக்கள் சமூக விடுதலைப் போராட்டங்களையும் முன்னெடுத்தனர். ஆலயப் பிரவேசப் போராட்டங்கள் காந்தியால் ஊக்குவிக்கப்பட்டன. இந்தியா முழுவதும் இந்த மாற்றம் நிகழத் தொடங்கியது. மதுரையில் வைத்தியநாத அய்யர் தலைமையில் ஆலய நுழைவுப் போராட்டம் நடந்தது இதற்கு ஓர் உதாரணம். யார் ஒரு தரப்பு மக்களைத் தடுத்தார்கள் என்று புகார் சொல்லப்பட்டதோ அவர்களில் ஒரு சிலரைக் கொண்டே காந்தி இந்தப் போராட்டங்களை முன்னெடுக்கச் செய்தார்.

காந்தியின் ஆசிரமம் அமைந்த இடம் குறித்த தல புராணம் ஒன்று உண்டு. ததீசி முனிவர் தேவர்களுக்காக தன் முதுகெலும்பைத் தானம் செய்த இடம் என்பதுதான் அது. காந்தி அதை ஒரு குறியீடாக எண்ணினார். தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதுவே சமூக வாழ்க்கை என்று கருதினர். சத்தியாகிரகத்தில் பங்குகொள்பவர்கள் அதைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காந்தியிடம் நீங்கள் மத துவேஷத்தை எங்குமே காணமுடியாது. அவர் நம்பியது பரம்பொருள் ஒருவன் உண்டு என்பதை மட்டுமே. அதை அவர் ‘ராம்’ என்று சொல்லிக்கொண்டார் அவ்வளவுதான். அவரைப் பொறுத்தவரை சகமனிதனே கடவுள். ‘பசித்தவனுக்கு ரொட்டியே கடவுள்’ என்று சொன்னவர்தான் காந்தி. அவரிடம் ‘ ஏன் ராம் என்னும் நாமத்தை உங்கள் பிரார்த்தனைகளில் வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டபோது,

காந்திஜி
காந்திஜி

“இதற்கு துளசிதாசரே பதில் சொல்லிவிட்டார். ‘ஸியா ராம மய ஸப் ஜக் ஜானி’ என்கிறார் துளசிதாசர். அதாவது உலகம் முழுவதையும் சீதா ராம மயமாகவே அறிகிறேன் என்பது அதன் பொருள். தொடக்கத்தில் தசரதன் மகனாக, சீதையின் கணவனாகவே ராமனை வணங்கினேன். ஆனால் ராமன் குறித்த புரிதலும் ஞானமும் அதிகரித்தது. இப்போது நான் ராமனை உண்மையின் வடிவமாக சத்தியத்தின் வடிவமாகக் காண்கிறேன். அவன் எங்கும் நிறைந்த பரம்பொருள். பரம்பொருளுக்கு மதம் இருக்கிறதா என்ன?” என்று பதில் சொன்னார் காந்தி.

இன்னும் இந்தியாவில் சாதியக் கொடுமைகள் நடக்கின்றன. கோயில்களில் தலித்துகள் அனுமதிக்கப்படுவதில்லை. காந்தி முன்னெடுத்த பல சமூக விடுதலைக் காரணிகள் பாதியில் நிற்கின்றன. காந்தி, இந்தியா பின்பற்ற வேண்டிய ஆன்மிகத்தை முன்மொழிந்தவர். அதை இந்த காந்தி ஜயந்தி நாளில் நினைவுகூர்வோம்.