Published:Updated:

``கோயிலில் திருப்பணி செய்பவர்களைக் குறிவைத்து அசிங்கப்படுத்துகிறார்கள்'' - குமுறும் மடாதிபதிகள்

சி.வெற்றிவேல்

இந்து ஆச்சார்ய சபாவின் தலைவர் ஸ்ரீ சாந்தா சுவாமிகள், தவத்திரு. ஊரன் அடிகளார், திருக்கயிலாய மரபு திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் சென்னை, மயிலாப்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

மடாதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு
மடாதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு

'தமிழகத்தில் இந்துக் கோயில்களும் அறக்கட்டளைகளும் மதச்சார்பற்ற அரசின் அதிகாரத்தில் இருப்பதால், இந்து சமயம் மற்றும் அறக்கட்டளைகள் தன்னிச்சையாகச் செயல்பட முடியாத நிலையில் இருக்கின்றன. அதனால், கோயில்களின் பராமரிப்புகள் தடைப்படுகின்றன. மேலும், கோயிலில் திருப்பணி செய்யும் கொடையாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அபாண்டமாக எழுப்பப்படுகின்றன' என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள் மடாதிபதிகள்.

கோயில்களுக்கு நன்கொடை அளிக்கும் திருப்பணியாளர்கள்மீது சிலைத் திருட்டு வழக்கு பதிவுசெய்து, அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கப்படுகின்றன.
தவத்திரு. ஊரன் அடிகளார்.

இந்து ஆச்சார்ய சபாவின் தலைவர் ஸ்ரீ சாந்தா சுவாமிகள், தவத்திரு. ஊரன் அடிகளார், திருக்கயிலாய மரபு திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் சென்னை, மயிலாப்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

“இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்வதற்கு, செல்வந்தர்களும் பொருள்வளம் படைத்தவர்களும் முன்வருகின்றனர். அவ்வாறு உதவி செய்பவர்களுக்கு தக்க மரியாதை அளிக்கப்படுவதில்லை. அவர்களுக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் இருக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே இதுபோன்று பெருங்கொடை அளிக்கக்கூடியவர்கள்மீது முறையற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

மடாதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு
மடாதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு
Vikatan

குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகுதான், சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வெளியிடுவது முறை. ஆனால், குற்றம் உறுதி செய்யப்படாமல், விசாரணை நிலுவையில் இருக்கும்போதே நன்கொடையளித்தவர்களின் மானத்துக்குப் பங்கம் ஏற்படும் விதத்தில் காவல்துறையும், நீதித்துறையும் நடந்துகொள்ளக் கூடாது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் கோயில் திருப்பணிகளில் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. பல அறப்பணியாளர்கள் திருப்பணி செய்யவே அஞ்சுகிறார்கள். இந்த அநியாயத்தைப் பார்த்துக்கொண்டு ஆன்மிகத்துறையைச் சேர்ந்த நாங்கள் வாளாவிருப்பது அதர்மம்” என்றார்கள் மடாதிபதிகள்.

சிலை திருட்டில் ஈடுபடுபவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், ஆதாரம் இல்லாமல் போட்டி பொறாமை காரணமாக கோயில் திருப்பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
திருக்கயிலாய மரபு திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்.

“தமிழகத்தில் சுமார் 35,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒரே ஐஏஎஸ் அதிகாரிதான் நிர்வகிக்கிறார். எங்கோ, ஏதோவொரு கோயிலில் நடைபெறும் சிலை திருட்டுக்கு மாநில அறநிலையத்துறை ஆணையரைக் கைது செய்வதென்பது முறையானதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கோயிலுக்கும் அவரால் நேரில் சென்று கண்காணிக்க முடியாது. அந்தந்தக் கோயில்களில் ஒரு நிர்வாக அதிகாரி இருக்கிறார். அவர்தான் பொறுப்பு.

கர்ப்பக் கிரகத்துக்குள் நுழைபவர் அர்ச்சகர் ஒருவர் மட்டுமே. அவர்தான் பூஜைகள் அனைத்தையும் செய்கிறார். அதனால் அங்கு நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு அவர் மட்டுமே பொறுப்பாவார். இதுமட்டுமல்லாமல், கோயில்களுக்கு நன்கொடை அளிக்கும் திருப்பணியாளர்கள்மீது சிலைத் திருட்டு வழக்குப்பதிவு செய்து, அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கப்படுகின்றன” என்றார் தவத்திரு. ஊரன் அடிகளார்.

மடாதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு
மடாதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு

திருக்கயிலாய மரபு திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், “சிலை திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், ஆதாரம் இல்லாமல் போட்டி பொறாமை காரணமாகக் கோயில் திருப்பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சிலை திருட்டு வழக்குகளை ரகசியமாக விசாரிக்க வேண்டும். போதிய ஆதாரம் கிடைத்த பிறகே அவர்கள் பெயரை அறிவிக்க வேண்டும்” என்றார்.

இறுதியாகப் பேசிய இந்து ஆச்சாரியா சபா தலைவர் ஸ்ரீ ஸ்ரீ சாந்தா சுவாமிகள், “தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான சிலைகள் சேதமடைந்து மாற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. சிலைகளை மாற்றியதற்கெல்லாம் வழக்குப் பதிவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

Vikatan
மடாதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு
மடாதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு

இந்தச் சந்திப்பின்போது, ‘ஆதாரம் இல்லாமல் யார் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், யார்மீது களங்கம் கற்பிக்கப்பட்டிருக்கிறது,’ என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்க மறுத்துவிட்டார்கள் மடாதிபதிகள். மேலும் பழநி, திருச்செந்தூர், மயிலை உள்ளிட்ட சிலை திருட்டு வழக்குகள் குறித்து கேள்வியெழுப்பியபோதும் பதில் அளிக்கவில்லை.