Published:Updated:

மதுரை சித்திரைத் திருவிழா: 8 தலைமுறைகளாகக் காரியாபட்டியில் தயாராகும் தோப்பறைகள்! என்ன ஸ்பெஷல்?

சித்திரைத் திருவிழா

மதுரை சித்திரைத் திருவிழா: "ஒரு தோப்பறைத் தயாரிக்க மூன்று மாத காலம் ஆவதால் தை மாதத்திலிருந்தே வேலையைத் தொடங்கிவிடுவோம்."

மதுரை சித்திரைத் திருவிழா: 8 தலைமுறைகளாகக் காரியாபட்டியில் தயாராகும் தோப்பறைகள்! என்ன ஸ்பெஷல்?

மதுரை சித்திரைத் திருவிழா: "ஒரு தோப்பறைத் தயாரிக்க மூன்று மாத காலம் ஆவதால் தை மாதத்திலிருந்தே வேலையைத் தொடங்கிவிடுவோம்."

Published:Updated:
சித்திரைத் திருவிழா

மதுரையில் நடைபெறவிருக்கும் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும்போது நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் தண்ணீர் பீச்சி அடிக்கப் பயன்படும் தோப்பறைகள் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் காலம் காலமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தோப்பறைகள்
தோப்பறைகள்

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக விவசாயம் செழிக்க வேண்டியும் மழை வேண்டியும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது, கள்ளழகர் வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடனாக மாலை அணிந்து தண்ணீர் பீச்சி அடிக்கும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெறும். இதற்காகத் தோல் பைகளை கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் பயன்படுத்துவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோல் பை
தோல் பை

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனோ பாதிப்பு காரணமாகக் கொடியேற்றம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், திக் விஜயம் உள்ளிட்ட விழாக்கள் பக்தர்கள் அனுமதி இல்லாமலும், தேரோட்டம், அம்மன் சுவாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டு சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு உள் விழாவாகவும் நடைபெற்றது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால் கடந்த 2 ஆண்டுகளாக எளிமையான முறையில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு வழக்கமான விமரிசனங்களோடு வெகு சிறப்பாக நடத்தத் திட்டமிடபட்டுள்ளது.


இந்தத் திருவிழாவில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் ஒன்று கூடுவர். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், பூ பல்லக்கு என அடுத்தடுத்த விழாக்கள் நடைபெறும்.

ஆட்டுத்தோல் பை
ஆட்டுத்தோல் பை

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது, கள்ளழகர் வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடனாக மாலை அணிந்து தண்ணீர் பீச்சி அடிக்கும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெறும். இதற்காக தோப்பறைகள் என்று அழைக்கப்படும் தோல் பைகளை கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் பயன்படுத்துவார்கள். ஆட்டுத் தோலினால் செய்யப்பட்ட தண்ணீர் பீச்சி அடிக்கும் பைகளைப் பக்தர்கள் நேர்த்திக் கடனாகச் செலுத்தி அழகர் ஆற்றில் இறங்கும் போது அழகர் மீதும் அங்கு கூடியிருக்கும் மக்கள் மீதும் தண்ணீரைப் பீச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

உரிக்கப்பட்ட ஆட்டுத்தோல், சுண்ணாம்பு, ஆவாரம்பூ, கடுக்காய் இவற்றைக்கொண்டு பதப்படுத்தி தயாரிக்கப்படும் தோப்பறைகளை எட்டு தலைமுறைகளாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தயாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆட்டுத்தோல் பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வியாபாரியான சோலைமலை கூறியதாவது, "100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எட்டு தலைமுறையாக இத்தொழிலைச் செய்து வருகிறோம். சித்திரைத் திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் போது அவரை குளிர்விக்கப் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தண்ணீர் பீச்சி அடிக்கும் தோப்பறைகளைப் பயன்படுத்துவர். ஒரு தோப்பறைத் தயாரிக்க மூன்று மாத காலம் ஆவதால் தை மாதத்திலிருந்தே வேலையைத் தொடங்கிவிடுவோம்.

தோப்பறை
தோப்பறை

திண்டுக்கல், புதுக்கோட்டை, செம்பட்டி பகுதிகளில் இருக்கக்கூடிய சந்தைகளிலிருந்து ஆட்டுத்தோல்களை வாங்கி சுண்ணாம்புத் தொட்டியில் பத்து நாள்கள் ஊறவைத்து அதன் பின்பு அதில் இருக்கக்கூடிய முடியை அகற்றி ஆவரங்கொலையில் போட்டு கருவப்பட்டை தொட்டியில் 20 நாள்கள் ஊறவைத்து காலை மாலை என மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து வேலையைச் செய்தால்தான் ஒரு பை தயாரிக்க முடியும். தயாரிக்கப்படும் தோல் பைகள் அதன் அளவு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப ரூ.500 முதல் 750 வரை விலை வைத்து சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அழகர் ஆற்றில் இறங்கிய பின்பு பக்தர்கள் இப்பைகளை வைகை ஆற்றலையே விட்டுச் சென்று விடுவார்கள்.

திருவிழா காலங்களில் 10,000 முதல் 15,000 வரை தயாரிக்கப்படுவதால் போதிய தண்ணீர் வசதி மற்றும் தேவையான தொட்டிகள் இல்லாததால் பைகள் தயாரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சந்தைகளிலிருந்து ஆட்டுத்தோல்களை வாங்கி வரும்போது துர்நாற்றம் அடிக்கும் எனக்கூறி பேருந்தில் ஏற்ற மறுப்பதால் தனியாக வாடகை வண்டி எடுப்பதில் நிறையப் பணம் செலவாகிறது. இதனால் வருடம் தோறும் தோப்பறைகளின் விலைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்நிலை மேலும் இப்படியே தொடர்ந்தால் அடுத்தடுத்த சித்திரைத் திருவிழாக்களில் தோப்பறைகளின் பங்களிப்பு குறைந்துகொண்டே வரும்" என வேதனையுடன் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism