Published:Updated:

ஆஸ்திரேலியா டு கைலாசா... இலவச விசா... கருட விமானத்தில் ஆன்மிகச் சுற்றுலா! - நித்யானந்தா அதிரடி!

நித்யானந்தா
நித்யானந்தா

``ஆர்வமுள்ளவர்கள் ஆஸ்திரேலியா வரை சொந்தச் செலவில் வந்தால், அங்கிருந்து கைலாசா நாட்டின் சிறிய ரக விமானமான கருட விமானத்தில் கைலாசாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்'' - நித்யானந்தா

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்து, கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்து, அதன் பிறகு இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் கிளை ஆசிரமங்களைத் தொடங்கியவர் நித்யானந்தா. 2010-ம் ஆண்டு முதல் பல சர்ச்சைகளையும் வழக்குகளையும் சந்தித்துவந்தவர், கடந்த சில மாதங்களாகப் புதிய நாடு உருவாக்கியிருப்பதாகக் கூறிவந்தார். அந்த நாட்டுக்கு `கைலாசா' என்று பெயரிட்டிருப்பதாகவும் கூறியிருந்தார் நித்யானந்தா.

சத்சங்க சொற்பொழிவு!

பல குற்ற வழக்குகள் காரணமாக போலீஸாரால் தேடப்பட்டுவரும் நித்யானந்தா, `நான் தனி நாடு உருவாக்கிவிட்டேன்' என்று சொன்னது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ``நித்யானந்தா தனி நாடெல்லாம் உருவாக்கவில்லை. நேபாளத்துக்கு அருகே எங்கேயோ ஒளிந்துகொண்டிருக்கிறார்'' என்றும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் `சத்சங்கம்' என்கிற பெயரில் தினசரி வீடியோ வெளியிட்டு, சொற்பொழிவுகளை நிகழ்த்திவந்தார் நித்யானந்தா. அந்த வீடியோக்கள் எங்கு எடுக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து இன்டர்போல் காவல்துறையினர், நித்யானந்தாவுக்கு எதிராக `ப்ளூ கார்னர்' நோட்டீஸ் அனுப்பினர்.

நித்யானந்தா
நித்யானந்தா
கப்பலில் கைலாசா! - கூடுவிட்டு கூடு பாயும் யுக்தி - ‘அடடே’ ஆராய்ச்சியில் நித்தி

தனது சத்சங்க சொற்பொழிவுகள் மூலம் பல அதிரடித் தகவல்களை வெளியிட்டுவந்தார் நித்யானந்தா. கைலாசா நாட்டின் கொடி, கரன்ஸி நோட்டுகள், ரிசர்வ் பேங் ஆஃப் கைலாசா, பாஸ்போர்ட் எனப் பல அறிவிப்புகளை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் நித்யானந்தா. தற்போது மீண்டுமொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அவர்.

கைலாசா - இலவச சுற்றுலா!

டிசம்பர் 16-ம் தேதி வெளியிடப்பட்ட சத்சங்கச் சொற்பொழிவு வீடியோவில், கைலாசாவுக்கு மூன்று நாள்கள் இலவச சுற்றுலா ஏற்பாடு செய்யப்போவதாகக் கூறியிருக்கிறார். ``கைலாசாவுக்கு வர வேண்டுமென விரும்புபவர்கள் இன்று முதல் கைலாசாவின் contact@kailaasa.org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். மூன்று நாள்களுக்கு எவ்விதக் கட்டணமுமின்றி இலவச விசா வழங்கப்படும்'' என்று கூறியிருக்கிறார்.

ஆர்வமுள்ளவர்கள் ஆஸ்திரேலியா வரை சொந்தச் செலவில் வந்தால், அங்கிருந்து கைலாசா நாட்டின் சிறிய ரக விமானமான கருட விமானத்தில் கைலாசாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
நித்தியானந்தா

மேலும், ``கைலாசா நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் திரும்பும் வரை உணவு, தங்கும் வசதி, போக்குவரத்து ஆகியவை இலவசமாகச் செய்து தரப்படும். ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 பேருக்கு நேரடி தரிசனம் தருவேன். இங்கு வருபவர்கள் அனைவரையும் நீங்கள் பரமசிவனாகப் பார்க்க வேண்டும். சிவனை வழிபடும் ஆன்மிக நோக்கத்தோடு மட்டுமே இங்கு வர வேண்டும்'' என்று பேசியிருக்கிறார் நித்யானந்தா.

நித்தி
நித்தி
"அப்ப `மாஸ்க் பரோட்டா'... இப்ப `கைலாசா'வில் ஹோட்டல்!" - `கலகல' ஹோட்டல் அதிபர்

ஆஸ்திரேலியா வரை வர வேண்டுமென நித்யானந்தா சொல்லியிருப்பதால், அவர் தங்கியிருக்கும் தீவு ஆஸ்திரேலியாவுக்கு அருகில் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதேநேரத்தில் `கைலாசா' என்கிற பெயரில் எந்தவொரு நாடும் சர்வதேச அமைப்புகளால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, `அப்படியொரு நாடு இருக்கிறதா... நித்யானந்தா எங்கேயிருக்கிறார்?' என்கிற கேள்விகளுக்கெல்லாம், இந்த ஆன்மிகச் சுற்றுலா நடைபெற்றால் மட்டுமே விடை தெரியவரும்.

அடுத்த கட்டுரைக்கு