Published:Updated:

பத்மநாபசுவாமி சூடிக்கொள்ளும் மாணிக்கமாலையின் சிறப்புகள்... இதற்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?

மாணிக்க மாலை

சிறப்புகள் மிக்க மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கும் முயற்சி நடந்துவருகிறது. இது தோவாளையில் மாணிக்கமாலை கட்டும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்மநாபசுவாமி சூடிக்கொள்ளும் மாணிக்கமாலையின் சிறப்புகள்... இதற்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?

சிறப்புகள் மிக்க மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கும் முயற்சி நடந்துவருகிறது. இது தோவாளையில் மாணிக்கமாலை கட்டும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
மாணிக்க மாலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளையில் பிரசித்திப்பெற்ற மலர் சந்தை உள்ளது. தமிழகம் மற்றும் கேரள மாநிலத்துக்கு இந்த மலர் சந்தையில் இருந்துதான் பூக்கள் செல்கின்றன. பூவுக்கு மட்டும் அல்ல பூக்களை அழகான மாலைகளாகக் கட்டுவதிலும் பிரசித்தி பெற்ற ஊர் தோவாளை. இங்கு கட்டப்படும் மாணிக்க மாலைக்கு எனத் தனி வரலாறே உண்டு.

மாணிக்க மாலை என்றதும் மாணிக்கக் கற்களைக் கோத்துச் செய்வது என நினைத்துவிடாதீர்கள். இயற்கையாக மலரும் பூக்களை வைத்துதான் மாணிக்க மாலை கட்டப்படுகிறது. சாதாரண பூமாலைகளைத் தொடுப்பதுபோன்று அல்லாமல், பாய் பின்னுவதுபோன்று கோத்து மாணிக்க மலைகள் உருவாக்கப்படுகின்றன. கூடை பின்னப்படுவதை பார்த்து அதே முறையில் முயற்சி செய்து தோவாளையைச் சேர்ந்த லட்சுமண பண்டாரம் என்பவர் மாணிக்க மாலை தயாரிப்பதை பல தலைமுறைகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

மாணிக்க மாலை
மாணிக்க மாலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதாரண பூ மாலைகள் உருளை வடிவில் கட்டப்படும். ஆனால் மாணிக்க மாலைகள் பட்டை வடிவில் கட்டப்படுகின்றன. வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை நிற பூக்கள் மட்டுமே மாணிக்க மாலை செய்ய பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணத்துக்காக அரளிப்பூ மற்றும் பச்சை நிறத்துக்காக நொச்சி இலைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பூக்கள் சம்பா நாரில் கோர்க்கப்படுகின்றன. பார்ப்பதற்கு பாய்விரித்தது போன்று வித்தியாசமாக இருப்பதுடன், நான்கு நாள்களுக்கு மேல் வாடாமல் அழகாக இருக்கும் என்பது மாணிக்க மாலையின் தனிச்சிறப்பு.

மாணிக்க மாலை தயாரிப்பு
மாணிக்க மாலை தயாரிப்பு

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாமிக்கு அணிவிக்கும் மாலை, தோரண வாயில்களில் தொங்கவிடும் நிலை மாலை, கொத்துமாலை என மாணிக்க மாலையிலும் நிறைய வகைகள் இருக்கின்றன. சாதாரண மாலைகள் எல்லாமே நார்களை மொத்தமாக வைத்துக்கொண்டு ஒரே ஒரு நாரால் பூக்களைக் கட்டிவைப்பார்கள். மாணிக்க மாலைக்கு நான்கு நார்கள் எடுத்து நான்கு நார்களாலும் பூக்களைக் கட்டுவார்கள். ஒரு கையால் பூவை எடுத்து மற்றொரு கையால் நான்கு நார்களையும் பின்னுவதுதான் இதன் சிறப்பு. மற்ற மாலைகளை சீக்கிரம் கட்டி முடிக்கலாம். ஆனால் மாணிக்க மாலையின் ஒரு பகளம் (ஒரு முழம்) கட்டி முடிக்கவே இருபது நிமிடம் ஆகும். சின்ன மாலை கட்டவே நான்கு மணி நேரம் ஆகும். ஐந்து பகளம், ஏழு பகளம், ஒன்பது பகளம் என்ற எண்ணிக்கையில் தனித்தனியாகக் கட்டி, பின்னர் அதை பக்கவாட்டு வாக்கில் நூல் மூலம் ஒன்றாக இணைக்கிறார்கள். எவ்வளவு நீளத்திலும், எவ்வளவு அகலத்திலும் மாணிக்க மாலை கட்ட முடியும். மாணிக்க மாலை கட்டுவது ரொம்ப நுணுக்கமான வேலை என்பதால்தான் ஒரு சிறிய மாலையே 400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

மாணிக்க மாலை கட்டும் வனிதா ஸ்ரீ
மாணிக்க மாலை கட்டும் வனிதா ஸ்ரீ

இந்த மாலைக்கு மாணிக்க மாலை எனப் பெயரிட்டது திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்தான். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையின்கீழ் கன்னியாகுமரி மாவட்டம் இருந்த சமயத்தில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு தோவாளையில் இருந்துதான் மலர் மாலைகள் தினமும் கொண்டுசெல்லப்பட்டன. அப்போது இந்த மாலையும் பத்மநாபசுவாமி கோயிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. அப்போது அதற்கு என தனி பெயரிடப்படவில்லை. அந்த மாலையை பார்த்த மன்னர் 'இது என்ன வித்தியாசமான மாலையா இருக்கு. தங்க நகைக்கு மேல மாணிக்கத்தை பொதிஞ்சு வச்சது போல இருக்கே. இது என்ன மாணிக்க மாலையா’ எனக் கேட்டிருக்கிறார். அதன்பிறகுதான் இதற்கு மாணிக்க மாலை என்ற பெயர் ஏற்பட்டது. அதன்பின்னர் பத்மநாபசுவாமிக்கு தினமும் மாணிக்கமாலை சார்த்தப்பட்டுவருகிறது. இன்றளவும் தினமும் தோவாளையில் கட்டப்படும் மூன்று ஜோடி மாணிக்கமாலைகள் பத்மநாபசுவாமி கோயிலுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பத்மநாபசுவாமி கோயிலில் ஆண்டுக்கு இரண்டு முறை பத்து நாள் திருவிழா நடக்கும். அந்த விழாவில் பல்லக்கில் சுவாமி எழுந்தருளலின் போது தோவாளை மாணிக்க மாலையை அணிவிப்பது வழக்கம். மூன்று பல்லக்குகளுக்கும் மாணிக்க மாலை இல்லாமல் சுவாமி எழுந்தருளல் நடப்பதில்லை. சீன அதிபரும், பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்தபோது அந்தக் கண்காட்சியில் மாணிக்க மாலையும் இடம்பிடித்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி மாணிக்க மாலைகளை சீன அதிபரிடம் அதிமுகப்படுத்தும்போது, 'இந்திய கலாசாரத்தில் பூ மிக முக்கியமானது. மாணிக்க மாலை தேசிய விருது பெற்றது' எனக் கூறினார். இவ்வளவு சிறப்புகள் மிக்க மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கும் முயற்சி நடந்துவருகிறது. இது தோவாளையில் மாணிக்கமாலை கட்டும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணிக்க மாலை வகைகள்
மாணிக்க மாலை வகைகள்

ஐந்தாவது தலைமுறையாக மாணிக்கமாலை கட்டும் தோவாளையைச் சேர்ந்த வனிதா ஸ்ரீ-யிடம் பேசினோம், "மாணிக்கமாலை சுவாமி அலங்காரத்துக்கு மட்டுமல்ல, மணப் பெண் அலங்காரத்துக்கு நகைகள் போன்றும் தயாரித்துக் கொடுக்கிறோம். வளையல், மாலை, நெற்றிச்சுட்டி, ஒட்டியானம், சடை மாலைகள் தயாரிக்கிறோம். மணப்பெண் அலங்காரத்தின்போது அரளிப் பூவுக்கு பதில் ரோஜா பூவை பயன்படுத்தி மாணிக்க மாலை செய்கிறோம். அதுபோல பரத நாட்டியம் ஆடும் பெண்களும் ஒட்டியாணம் போன்ற அணிகலன்களுக்காக மாணிக்க மாலையை விரும்புகிறார்கள்.

இப்ப தோவாளையில 50 குடும்பங்கள் மாணிக்கமாலை கட்டுறாங்க. எங்க தோவாளை மாணிக்க மாலை கைவினை கலைஞர்கள் நலச்சங்கத்தில இளைஞர்கள் அதிகமா இருக்கிறாங்க. ஆதியில இருந்தே தமிழகம் மற்றும் கேரளாவுக்கும்தான் தொடர்ச்சியா மாணிக்கமாலை போகுது. புவிசார் குறியீடு கிடைத்தால் உலக அளவில மாணிக்கமாலை புகழ்பெறும்" என்றார்.

எல்.பாலு
எல்.பாலு

மத்திய அரசின் கைவினைப்பொருள்கள் வளர்ச்சி ஆணைய உதவி இயக்குநராக இருந்து ஓய்வுபெற்ற எல்.பாலு கூறுகையில், "தமிழ்நாட்டை பொறுத்தவரை 48 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதில கைவினைப்பொருட்கள் மட்டுமே 18 இருக்கு. அரபிக்கடலுக்கும், மேற்குத்தொடர்ச்சி மலைக்கும் இடையில தோவாளை இருக்கிறதுனால அந்தப் பூவுக்கு தனி வாசனை உண்டு. 1981-ல இருந்து பத்மநாபசுவாமி கோயிலின் உற்சவ மூர்த்திக்கு மாணிக்க மாலை சார்த்துறாங்க. மாணிக்கமாலை கலையின் நுணுக்கம் தோவாளையில்தான் உள்ளது. புவிசார் குறியீடு காரணமாக ஏற்றுமதிக்கு அதிகரிப்பது போன்ற பல வாய்ப்புகள் வரும். குறிப்பாக பாசுமதி அரிசி கிலோ 35 ரூபாய் விற்பனை ஆனது. புவிசார் குறியீடு கிடைத்தபிறகு கிலோ 125 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. அதுபோல மாணிக்கமாலையும் சிறப்புபெறும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism