Published:Updated:

`கடவுளும் கண்ணதாசனும்..’- சக்தி விகடனின் சிறப்புப் பட்டிமன்றம்... முதல்முறையாக யூடியூப் சேனலில்!

வள்ளுவன், இளங்கோ, கம்பன், பாரதி என்று 2,000 ஆண்டுக்காலத் தமிழ் மரபில் மாகவிகளின் வரிசை ஒன்று உண்டு. அதில் நானும் இருக்கிறேன் என்று அவர் கூறிச் செழுமையான தமிழ் மரபின் தொடர்ச்சியாகத் தன்னை அறிவித்துக்கொண்டவர் கண்ணதாசன்.

கவிஞர் வைரமுத்து, கவிஞர் கண்ணதாசன் குறித்து ஒரு கவிதை எழுதியிருப்பார்.

தமிழ்த்தாய்

உனக்கென ஒரு தங்க நாற்காலி

செய்து கொடுத்தாள்

உன் இடத்திற்கு

எவனும் இங்கே இல்லை

என்பதால்

அதை

தானே எடுத்துக்கொண்டாள்’

இந்தக் கவிதையில் காணப்படும் முக்கியமான கருத்து கவிஞர் கண்ணதாசன், நம் காலத்தில் ஈடு இணையற்ற கவிஞர் என்பதுதான். ‘பாடலொரு கோடி செய்தேன்... கேட்டவர்க்கு ஞானம் இல்லை’ என்று ஒரு திரைப்படப் பாடல். அதன் பொருள் கண்ணதாசனின் பாடல்களை வெறும் திரைப்படப் பாடலாகக் காண்கிறவர்களைக் குறித்த விமர்சனம் என்று கொள்ளலாம். காரணம் திரைப்பாடல்களை இலக்கியமாக மாற்றி ஈடு இணையற்ற ஒரு படைப்பைச் செய்தவர் கண்ணதாசன்.

கடவுளும் கண்ணதாசனும் பட்டிமன்றம்
கடவுளும் கண்ணதாசனும் பட்டிமன்றம்

கண்ணதாசன், தன்னைப் பற்றிய குறிப்புகளைத் தொடர்ந்து தன் பாடல்களில் பதிவு செய்துகொண்டேயிருப்பவர். ‘வள்ளுவன், இளங்கோ, பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன். அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமாந்தேன்’ என்று பாடியிருப்பார். அந்தப் பாடல் `கம்பன் ஏமாந்தான்’ என்று தொடங்கும். பாடலில் கருத்து வேறு என்றாலும் கண்ணதாசன் முன்வைக்க விரும்பும் விஷயம் ஒன்று உண்டு. அது வள்ளுவன், இளங்கோ, கம்பன், பாரதி என்று 2,000 ஆண்டுக்காலத் தமிழ்மரபில் மாகவிகளின் வரிசை ஒன்று உண்டு. அதில் நானும் இருக்கிறேன் என்று கூறுவதுதான். செழுமையான தமிழ் மரபின் தொடர்ச்சியாகத் தன்னை உணர்வதுபோலவே, அற்புதமான தன் கற்பனைத் திறத்தாலும் தமிழ் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் கவிஞர் .

கவிஞர், நாத்திகத்திலிருந்து ஆத்திகத்துக்கு மாறியவர். எப்படித் தீவிரமாக நாத்திகம் பேசினாரோ அதேபோலத் தீவிரமாக ஆத்திகத்திலும் புகுந்து, புகழ்மிக்க `அர்த்தமுள்ள இந்துமதம்’ முதலான ஞான நூல்களை எழுதியவர். இவரின் ஆன்மிகத் திரைப்பாடல்கள் தனித்துவமானவை. `திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீ மன் நாராயணா...’, `திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேருமடா’ என்னும் பக்தி ரசம் சொட்டும் பாடல்கள் இவருக்குச் சொந்தமானவை. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே போன்ற கண்ணன் புகழ்பாடும் பாடல்கள் பலவற்றை எழுதித் தன் பெயருக்கு நியாயம் சேர்த்தவர். ஹரிவராசனம் பாடலுக்கு இணையான தெய்விகம் நிறைந்தது இவர் எழுதிய `அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம்.’

கண்ணதாசன்
கண்ணதாசன்

ஆன்மிகம் ஞானத்தின் அடையாளம். ஞான ஒளி தோன்றிவிட்டால் அங்கு இருள் இருப்பதில்லை. எப்படி நெருப்போடு சேர்ந்த அனைத்தும் நெருப்பாகவே மாறிவிடுகிறதோ அதேபோல ஆன்மிகத்தோடு சேர்ந்த அனைத்தும் ஆன்மிகமாகவே மாறிவிடும். கண்ணதாசன் திரைப்பாடல்களில் காதல் சார்ந்த பாடல்களையும் எழுதியவர்தான். ஆனால் ஆன்மிகத்தின் பக்கம் திரும்பிவிட்டபோது அவர் பார்வை முற்றிலும் மாறுகிறது. இதற்கு நல்ல உதாரணம் கண்ணதாசன் ஆதிசங்கரர் குறித்து எழுதியிருக்கும் நூல். அதில் அவர் ஆதிசங்கரரின் பெற்றோரைப் பற்றி ஒரு பாடலில் குறிப்பிடுவார். அது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``தழுவுங்கால் இருவர் மூச்சும் சங்கரா என்னும் - விட்டு

நழுவுங்கால் அதையே சொல்லும் - நல்லுணவருந்தும் போதும்

எழுங்கைகள் அதையே பாடும் - இடுங்கைகள் அதையே கூறும்

வழுவுங்கால் வார்த்தை கூட வன்சொல்லை அறியாதன்றே.”

இந்தப் பாடல் கூறும் ஞானயோகம் உபநிடதங்களின் சாரம்.    

இப்படிப் பெருமையும் தனித்தன்மையும் கொண்ட கவிஞரின் புகழைப் போற்றுமாறு சக்திவிகடன் ஒரு சிறப்புப் பட்டிமன்றம் ஒன்றை வாசகர்களுக்காக உருவாக்கியுள்ளது. இந்தப் பட்டிமன்றத்தின் தலைப்பு `கவிஞர் கண்ணதாசன் தனது பாடல்களில் புராண இதிகாசங்களிலிருந்து எடுத்தாண்டது சிறப்பா? அல்லது தனது அனுபவம், கற்பனைகளிலிருந்து தொடுத்தாண்டது சிறப்பா?’ என்பதாகும்.

இந்தப் பட்டிமன்றத்தில் மூன்று இலக்கிய ஆளுமைகள் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நாளை (19.5.20) காலை 11 மணிக்கு சக்திவிகடன் யூடியூப் தளத்தில் வெளியாக உள்ளது. விகடன் வாசகர்கள் அனைவரும் தவறாது இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்துத் தங்கள் கருத்துகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு