Published:Updated:

J Krishnamurthi - ஜே.கே இறுதிச் சொற்பொழிவு ஆற்றிய `Vasanta Vihar' ல் ஒரு நாள்!

J Krishnamurthi

அன்றாட வாழ்வில் மனிதன், தன் மனதில் தோன்றும் எண்ணங்களையும், உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் தனக்குள் அடிப்படை மாற்றம் கொண்டுவர இயலும் என்பதை வலியுறுத்திவந்தார்.

J Krishnamurthi - ஜே.கே இறுதிச் சொற்பொழிவு ஆற்றிய `Vasanta Vihar' ல் ஒரு நாள்!

அன்றாட வாழ்வில் மனிதன், தன் மனதில் தோன்றும் எண்ணங்களையும், உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் தனக்குள் அடிப்படை மாற்றம் கொண்டுவர இயலும் என்பதை வலியுறுத்திவந்தார்.

Published:Updated:
J Krishnamurthi
பரபரக்கும் சென்னை மாநகரின் மையத்தில், மலரும் பூ ஒன்றின் அமைதியைச் சூடி நிற்கிறது ‘வசந்த் விஹார்’. இருபதாம் நூற்றாண்டில் உலகின் முக்கியமான தத்துவஞானிகளில் தனித்தன்மையுள்ள ஒருவரான ஜே.கே. என்றழைக்கப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி இந்தியாவில் வாழ்ந்த, ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றிய இடங்களில் முதன்மையானதாக ‘வசந்த் விஹார்’ திகழ்கிறது. ஆறு ஏக்கர் பரப்பில் மரங்கள் அடர்ந்து, செடி கொடிகள், பூ, வண்டு, வண்ணத்துப்பூச்சி இன்னும் பிற உயிரினங்களோடு ஆழ்ந்திருக்கும் இந்த வசந்த் விஹார் முழுக்க ஜே.கே-யின் இருப்பு வியாபித்திருக்கிறது.
வசந்த் விஹார்
வசந்த் விஹார்
BharathWaj

தற்கால நாகரிகத்துக்கும், என்றென்றைக்குமான காலகட்டத்திற்கும் ஏற்புடையதான போதனைகள், புரட்சிகரமான சிந்தனைகளை வெளிப்படுத்திய ஜே.கே., இளமைப் பருவத்திலேயே வியக்கத்தக்க வகையில் புகழ்பெற்றார். துக்கத்திலிருந்து மீட்பவர், உலக ஆசான், புத்தர், ஏசு கிருஸ்து என இன்னும் பலவாறாகவும் போற்றப்பட்ட ஜே.கே., அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பயணித்து, பிற ஒளியை நாடாமல், தானே தனக்கு ஒளியாக திகழ வேண்டியதின் அவசியத்தை, தன் உரையைக் கேட்க வருபவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். அன்றாட வாழ்வில் மனிதன், தன் மனதில் தோன்றும் எண்ணங்களையும், உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் தனக்குள் அடிப்படை மாற்றம் கொண்டுவர இயலும் என்பதை வலியுறுத்திவந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மனிதகுலத்தின்மீது ஆதிக்கம் செலுத்திவந்த மதங்களின் இடத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், அறிவியல் எடுத்துக்கொள்ளத் தொடங்கியது. அறிவியலுக்கும் மதங்களுக்குமிடையே சமநிலையை ஏற்படுத்த பல புதிய அமைப்புகள் தோன்றின. இப்புதிய அமைப்புகளில் ஒன்றாக, சென்னை அடையாறில் நிறுவப்பட்டதே தியோஸஃபிகல் சொஸைட்டி எனப்படும் பிரம்மஞான சபை. பழமையான சமயங்களில் பொதிந்துள்ள பேருண்மைகளைக் கண்டறிவது, இயற்கையின் விளக்கப்படாத ரகசியங்களை ஆராய்வது, உலக சகோதரத்துவத்தை வளர்ப்பது ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஹெலீனா பெட்ரோவ்னா ப்ளாவட்ஸ்கியும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டும் இந்தச் சபையை உருவாக்கினர். இந்தப் பின்னணியில், ப்ளாவட்ஸ்கி The Secret Doctrine என்ற புத்தகத்துக்கு மதிப்புரை எழுதும்படி, Review of Reviews பத்திரிகை அன்னிபெசண்ட் என்பவரிடம் கேட்கிறது.

ப்ளாவட்ஸ்கி - ஆல்காட்
ப்ளாவட்ஸ்கி - ஆல்காட்

இங்கிலாந்தில் நன்கறியப்பட்ட சமூகச் செயல்பாட்டாளராக விளங்கிய அன்னிபெசண்ட், The Secret Doctrine-னைப் படித்து பிரமித்துப் போனார். இதைத் தொடர்ந்து ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே, தன் வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடிய பிணைப்பினை, பிரம்மஞான சபையுடன் ஏற்படுத்திக் கொண்டார். ப்ளாவட்ஸ்கியின் மறைவிற்குப் பிறகு, அன்னிபெசண்ட் அதன் தலைவரானார். ப்ளாவட்ஸ்கியின் கோட்பாடுகளை எளிமையாக்கி, இச்சபையை மக்கள் இயக்கமாக மாற்றினார். சபையின் பணிகளைச் செய்துகொண்டிருந்தவாறே இந்தியச் சுதந்திரப் போரட்டத்திலும் அவர் பெரும்பங்கு வகித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகில் தீமை மேலோங்கும்போதெல்லாம், மனிதகுலத்தைக் காக்க ஓர் அவதாரப் புருஷர் தோன்றுவார் என்று உலகிலுள்ள பல சமயங்கள் கூறுகின்றன; பிரம்மஞான சபையும் அவ்வாறே நம்பியது. உலக ஆசானான மகான் மைத்ரேயர் அவதரிப்பார் என்பது பிரம்மஞான சபையின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. ப்ளாவட்ஸ்கியும் The Secret Doctrine-ல், புதிய நாகரிகத்திற்கு ஏற்ப, சத்தியத்தைப் பற்றி விவரிக்கவல்ல அத்தகைய ஓர் உலக ஆசானைப் பற்றி விளக்கியுள்ளார். பிரம்மஞான சபையினர் அந்த ஆசானை எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தவாறே பிரம்மஞான சபையின் C.W. லெட்பீட்டர் என்பவர் 1909-ல் பதினான்கு வயது சிறுவன் ஜே.கிருஷ்ணமூர்த்தியைக் கண்டெடுத்தார்.

இளம் வயதில் ஜே.கே
இளம் வயதில் ஜே.கே

பிரிட்டிஷ் இந்தியாவில் மெட்ராஸ் மாகாணத்தின் அங்கமாக இருந்த ஆந்திராவின் சித்தூர் அருகே மதனப்பள்ளி என்ற ஊரில் 1895-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி ஜிட்டு நாராயணய்யாவுக்கும் சஞ்ஜீவம்மாவுக்கும் 8-வது மகனாகப் பிறந்தார் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்திக்கு 10 வயதாகும்போது தாய் இறந்துவிட, தந்தை நாராயணய்யா பிரம்மஞான சபையில் வேலைக்குச் சேர்வதற்காகத் தன் குழந்தைகளுடன் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். அப்போதுதான் லெட்பீட்டர் சிறுவன் கிருஷ்ணமூர்த்தியைக் கண்டார். ‘சுயநலம் சிறிதுமற்ற, வியத்தகு ஓர் ஒளி இவனிடத்தில் உண்டு, இச்சிறுவனே நமது சங்கம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஜகத்குரு' என கிருஷ்ணமூர்த்தியை பிரம்மஞான சபைக்கு அடையாளம் காட்டினார்.

1909-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி இந்தியா திரும்பிய அன்னிபெசண்ட், கிருஷ்ணமூர்த்தியையும் அவரது சகோதரன் நித்யாவையும் முதன்முறையாகச் சந்தித்தார். இச்சந்திப்பிலேயே ஒரு பாசப்பிணைப்பு அவர்களிடையே மலர்ந்தது. லெட்பீட்டரின் தீர்க்கதரிசனமான பிரகடனத்தை முழுவதுமாக ஏற்றுக்கொண்ட அன்னிபெசண்ட், அவர்களைத் தத்தெடுத்துக் கொண்டார். அவர்களுக்கு ஒரு தாயாக, ஆசிரியராக, தோழராக இருந்து தனது முழு கண்காணிப்பில் அவர்களைப் பராமரிக்கத் தொடங்கினார்; கிருஷ்ணமூர்த்தியின் எதிர்காலத்தை வழிநடத்திச் செல்வதையே தனது புனிதப்பொறுப்பாக மேற்கொண்டார்.

உலக ஆசான் வருகையில் நம்பிக்கை கொண்டவர்கள், கிருஷ்ணமூர்த்தியைத் தலைவராகக் கொண்டு ‘Order of the Star in the East' என்ற பெயரில் உலகளாவிய அமைப்பு ஒன்றை 1911-ல் நிறுவினர். உலக ஆசானின் வருகைக்கான செயல் வடிவம் அப்போது நிர்ணயிக்கப்பட்டது. வாரணாசியில் நடைப்பெற்ற பிரம்மஞான சபையின் ஆண்டுக் கூட்டத்தில் கிருஷ்ணமூர்த்தியே உலக ஆசானின் அவதாரம் என உறுதியாக, வெளிப்படையாகவே அறிவித்தார் அன்னிபெசண்ட். இக்கூட்டத்திலிருந்த உறுப்பினர்கள், உணர்ச்சிப் பெருக்கால், கிருஷ்ணமூர்த்தியின் பாதங்களைத் தொட்டு வணங்கினர்.

ஜே.கே
ஜே.கே

இந்த இயக்கத்தின் தலைவராக தன்னுடைய கருத்துக்களைக் கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து எழுதிவந்தார். உலக நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவாற்றத் தொடங்கினார். 1922 காலகட்டத்தில் அவருடைய சகோதரர் நித்யாவிற்குக் காசநோய் ஏற்பட்டு உடல்நலம் குன்றியது. அத்தருணத்தில், நித்யாவைப் பராமரிக்க அமெரிக்காவின் ஓஹாய் பள்ளத்தாக்கில் அன்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த குடிலில் சகோதரர்கள் இருவரும் வசிக்கத் தொடங்கினர்.

கிருஷ்ணமூர்த்தியின் ஆத்மவிசாரணை தீவிரம் அடையத் தொடங்கியது. வெளியுலக பிரக்ஞையற்று, ஸ்தூல உடலின் உணர்விற்கும் அப்பாலுள்ள ஒரு தன்னுணர்வில் அடிக்கடி ஆழ்ந்துபோவார். ஆழ்ந்த தியான நிலையில் எப்போதும் காணப்பட்டார். இந்நிகழ்வுகள் அவரது வாழ்க்கையின் அடித்தளத்தையே அசைத்தன.

1925-ல் நிகழ்ந்த அவரது சகோதரர் நித்யாவின் மரணம், கிருஷ்ணமூர்த்தியை மனமுடையச் செய்தது. இதனால், வாழ்க்கையைப் பற்றிய அவரின் மொத்த தத்துவங்கள், எதிர்காலத்தில் அவரது பணிகள் பற்றிய அசைக்க முடியாத திட்டங்கள், அதில் நித்யாவின் பங்கு ஆகிய அனைத்தும் சுக்கு நூறாகியது. பழைய கனவுகள் சிதைந்தன. ஆனால், புதியதோர் அகமலர்ச்சி உருப்பெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, ஒரு புதிய மனம் அவரிடம் மலர்ந்துகொண்டிருந்தது. உள்ளத்தெளிவிலிருந்து மலர்ந்த இந்தப் புதிய சிந்தனைகளை உலகிற்கு எடுத்துரைக்க, பல இடங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றத் தொடங்கினார் கிருஷ்ணமூர்த்தி.

ஜே.கே
ஜே.கே

இந்தக் காலகட்டத்தில் ஏராளமான புதிய உறுப்பினர்களோடு, பேரியக்கமாக வளர்ந்திருந்தது Order of the Star. ஹாலந்தில் எர்டி என்ற இடத்திலிருந்த மாளிகை ஒன்றினை இந்த அமைப்புக்குக் கொடையாக வழங்கினார் பிலிப் என்ற பிரபு. அன்னிபெசண்ட் அம்மையாரிடம் மிகுந்த விசுவாசமும், மாறாத பற்றும் கொண்டிருந்த போதிலும், நட்சத்திர சபையால் தன்னைச்சுற்றி சமய அமைப்புகளையும், எழுப்பப்பட்ட சடங்குகளையும் கிருஷ்ணமூர்த்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவற்றிற்கு எதிராக, உள்முகமாக அவர் கிளர்ந்தெழுந்தார். அவரைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளின் மேல் அவருக்கு இருந்த அதிருப்தி, அச்சமயம் அவர் விடுத்த பல புரட்சிகரமான வாசகங்களில் வெளிப்பட்டன.

“கடற்கரைக்குச் சென்று பாருங்கள். அங்கு வீசுகின்ற காற்றில் அலைகள் ஒன்றுக்கொன்று முட்டிமோதிக் கொள்கின்றன. அவ்வழகு அனைத்தையும் ஒரு குறுகிய பிரார்த்தனைக் கூடத்தில் சேர்த்து கட்டிவைக்க விரும்புகிறீர்களா? உங்கள் மனதையோ இதயத்தையோ எதனாலும், எவராலும் எல்லைக்குட்படுத்த அனுமதிக்காதீர்கள். அப்படி அனுமதித்தால், நீங்கள் மற்றொரு மதத்தையோ, மற்றொரு பிரார்த்தனைக் நிறுவுவீர்கள். சூரியனே நமக்கிருக்கும்போது, யார் ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியை வணங்குவர்?” என்றார் கிருஷ்ணமூர்த்தி.

ஜே.கே
ஜே.கே

சத்தியத்தை பற்றிய கிருஷ்ணமூர்த்தியின் கண்ணோட்டம், அங்கத்தினருக்கு மட்டுமின்றி, அனைத்து நிறுவப்பட்ட மதங்களுக்குமே ஒப்புக்கொள்ள மிகக் கடினமாக இருந்தது. ஆன்மீக அதிகார பீடத்தை அவர் நிராகரித்தது, பிரம்மஞான சபையின் ஆயுட்கால உறுப்பினர்களை நிலைகுலையச் செய்தது. அமைப்பு பிளவுண்டதுபோல் தோன்றியதால், வெளிப்படையான முரண்பாடுகள் எழுந்தன. சில காலங்களாகவே புகைந்துகொண்டிருந்த விஷயம், இறுதியாக 1929 ஆகஸ்ட் 3-ம் தேதியன்று நிகழ்ந்தேறியது. அன்னிபெசண்ட் மற்றும் 3,000 நட்சத்திர உறுப்பினர்கள் முன்னிலையில், நட்சத்திர சபையை கலைத்தார் கிருஷ்ணமூர்த்தி. இவ்வியக்கத்திற்குக் கொடையாகப் பெற்ற பெரும் செல்வத்தையும், சொத்துக்களையும் அளித்தவர்களிடமே திருப்பிக் கொடுத்தார். அவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனைத்திலுமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். சிலர் அவருடன் உறுதியாக இருக்க, மற்றவர்களோ, தங்களுக்கு பிடித்த அதே நம்பிக்கையுடன் தொடர்ந்தனர்.

“தொழில்நுட்பம், அறிவியல், விஞ்ஞானம் ஆகியவற்றில் உலகம் அபார வளர்ச்சியடைந்திருக்கலாம், முன்னேறியிருக்கலாம். ஆனால், மனோரீதியாக, உளவியல்ரீதியாக, மனிதகுலம் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக அதைப் போலவே வளர்ச்சியடையாமலேயே இருக்கிறது” என்பதை அவர் தெளிவுபடுத்தி பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து, மனிதன் அடையவேண்டிய உள்மாற்றத்தைப் பற்றியும், புதிய மாற்று கலாச்சாரத்தின் அவசியத்தைப் பற்றியும், சத்தியத்தை அடைவதற்கான அணுகுமுறையில் மாற்றம் செய்ய வேண்டியதைப் பற்றியும் உலகெங்கிலும் 70 ஆண்டுகளாகப் பறைசாற்றி வந்தார்.

ஜே.கே
ஜே.கே

பெரும் பொதுக்கூட்டங்களில் அவர் உரை நிகழ்த்தியபோது, அவையில் இருந்தவர்கள், தங்களின் குறிப்பிட்ட பிரச்சினையைப் பற்றி தங்களுடன் தனிப்பட்ட முறையில் அவர் பேசுவதாகவே உணர்ந்தனர். தன்னை நாடி வருபவர்களிடம் ஆறுதலாக மௌனத்தில் அமர்ந்திருக்கவும் செய்தார். ஜே.கே-வின் போதனைகள் படிப்பறிவின் அடிப்படையில் பிறந்தவையல்ல, வாழ்வைப் பற்றிய அவரின் அவரின் உள்ளார்ந்த உணர்வில், அக நோக்கில் மலர்ந்தவை.

காலத்தாலோ சூழ்நிலைகளாலோ தேய்ந்துவிடாமல், ஜே.கே-வின் வேகமும் தீவிரத்தன்மையும் குன்றாமல் நீடித்தது. ஜே.கே-யின் வயது கூடிக் கொண்டுப்போகையில், அவரது பணியில் புதிய ஆற்றலும் வேகமும் அதிகரித்து வெளிப்பட்டது. ஜே.கே-வின் கடைசி சொற்பொழிவு சென்னையில் இந்த வசந்த விஹாரில் தான் நிகழ்ந்தது. 1 ஜனவரி 1986 அன்று நடந்த இந்தச் சொற்பொழிவுக்கு ஆறு வாரங்கள் கழித்து, 17 பிப்ரவரி அன்று அமெரிக்காவின் ஓஹ்யா பள்ளத்தாக்கில் உள்ள குடியில் ஜே.கே. அமரரானார். அப்போது அவருக்கு வயது 92. ‘சொற்பொழிவாற்றுவதை நிறுத்திவிட்டால், தனது உடல் மடியும், உடலின் ஒரே நோக்கம் போதனைகளை வெளிப்படுத்துவதே' என்று ஜே.கே. ஒருமுறை கூறியதுண்டு.

ஜே.கே
ஜே.கே

தன்னை நாடி வந்தவர்களின் செல்வத்தையோ வழிபாட்டினையோ ஜே.கே., ஏற்றுக்கொண்டதில்லை; அவர்களுக்கு குரு என்ற ஸ்தானத்தில் இருக்கவும் மறுத்தார். “மறைபொருள் பற்றிய தேடல், எங்கும், எல்லா மக்களிடையேயும் உள்ளது. அத்தேடல், அவர்களுக்கு மிகுந்த அறிவினையும், பரந்த பார்வையையும், ஆழ்ந்த புரிதலையும் தரும்; இதையே அவர்கள் சத்தியம் என்கின்றனர். அவர்கள் சத்தியம் என்பதை வாழ்க்கைக்குப் புறம்பாக, இன்ப துன்பங்களிலிருந்து விலகி, எங்கேயோ தொலைவில் மறைந்திருப்பதாக நினைக்கின்றனர். மாறாக, சத்தியம் என்பது வாழ்க்கையே. அதனால், வாழ்க்கைப் பற்றிய புரிதலுடன்தான் சத்தியத்தைப் பற்றிய புரிதலும் பிறக்கிறது” என்பது அவரது பிரகடனமாக இருந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism