Published:Updated:

``என் இஷ்டதெய்வம் சரஸ்வதி, என் தொழிலுக்கு இஷ்ட தெய்வமென்றால் சிவாஜிதான்"- நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்

கடவுள்னு ஒருவர் இருக்கிறார் என்று நம்பினால் போதும். உண்மையான கடவுள் என்பது ஒவ்வொருவரின் மனசாட்சிதான் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

ஒய்.ஜி.மகேந்திரன் தமிழ் நாடக உலகில் தவிர்க்க முடியாத நடிகர். கதாசிரியர், திரைப்பட நடிகர், கல்வியாளர் எனப் பன்முகத் தன்மையாளர். பல நாடக நடிகர்களையும் திரை நட்சத்திரங்களையும் உருவாக்கியவர். ஆனாலும், நடிகர் திலகம் சிவாஜியுடன் 28 படங்கள் இணைந்து நடித்ததைத்தான் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார். அவரை `எனது ஆன்மிகம்' பகுதிக்காகச் சந்தித்தோம்.

ஒய்.ஜி.மகேந்திரன்
ஒய்.ஜி.மகேந்திரன்

``குறிப்பிட்டு இந்தத் தெய்வத்தைத்தான் நான் வணங்குவேன் எனச் சொல்ல முடியாது. நான் எல்லா கோயில்களுக்கும் போவேன். எல்லா தெய்வங்களையும் வணங்குவேன். கஷ்டமென்று வரும்போது எல்லா தெய்வங்களையும் மனம்விட்டுக் கூப்பிடுவேன். யார் முதலில் வர வேண்டுமோ வரட்டுமே.

வைணவனா இருக்கிறதனால் டக்குன்னு பெருமாள்தான் ஞாபகத்துக்கு வருவார். பள்ளிக்கூட நாள்களில் நான் அதிகம் விரும்பி வணங்கிய தெய்வம் திருப்பதி வேங்கடாஜலபதிதான். எங்கள் வீட்டிலுள்ள எல்லோரும் அடிக்கடித் திருப்பதி போயிட்டு வருவோம்.

ஆனால், நான் ஈஸ்வரன், முருகன், விநாயகரையும் வேண்டிக்கொள்வேன். வியாழக்கிழமைகளில் நேரம் கிடைக்கும்போது ராகவேந்திரர் கோயிலுக்குப் போவேன். ஷீர்டி சாயிபாபாவையும் வணங்குவேன். ஒரு நல்ல ஆன்மிகவாதி எல்லாவற்றிலும் தெய்வத்தைக் காண்பான். எல்லாவற்றிலும் தெய்விகத்தை உணர்வான்.

எனக்கு 70 வயது ஆகிவிட்டது. நான் பிறந்தது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பக்கத்தில். இந்த வருடம் என் பிறந்த நாளன்னைக்கு என்னால் பார்த்தசாரதி கோயிலுக்குப் போக முடியல. திருவான்மியூரில் இருக்கிற மருந்தீஸ்வரர் கோயிலுக்குப் போயிட்டுத்தான் வீட்டுக்கு வந்தேன்.

Tirupati
Tirupati

சிவனாக இருந்தாலும் விஷ்ணுவாக இருந்தாலும் எல்லா தெய்வமும் ஒன்று என்று நினைக்கிறவன். இன்னும் சொல்லப்போனால் எங்களுடைய குலதெய்வம் யாரென்று பார்த்தால் கர்நாடகாவில் மைசூர் அருகிலிருக்கும் லட்சுமிநரசிம்மர்தான். அதுவே என் பொண்ணு சொல்லித்தான் தெரியும். என்னுடைய சஷ்டியப்த பூர்த்தியை அங்குதான் கொண்டாடினோம்.

சில பேர் குறிப்பிட்ட இந்தக் கோயிலுக்குத்தான் போவேன். இந்த தெய்வத்தைத்தான் வழிபடுவேன்னு சொல்லுவாங்க. என்னைப் பொறுத்தவரை அப்படியெல்லாம் கிடையாது. நான் எல்லா கோயில்களுக்கும் போவேன். வெளிநாடுகளுக்குப் போனால் அங்குள்ள சர்ச்சுக்குப் போவேன். இஸ்லாமிய நாடுகளுக்குப் போனால் அங்கிருக்கும் மசூதிக்குப் போவேன். அங்கேயும் போய் வணங்கிட்டு வருவேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு மதம் பிடிக்கும். அதை விட்டுவிட்டு வேறு மதத்துக்குப் போறது தப்பு கிடையாது. அதுக்காக மற்ற மதங்களை அசிங்கப்படுத்தக் கூடாது. அது எனக்குப் பிடிக்காது.

எங்க குரூப்ல பிரான்சிஸ்னு ஒருவர் இருக்கார். அவர்தான் ஸ்டேஜ்ல்லாம் பார்த்துக்கொள்வார். அவர் பாடுற மாதிரி விநாயகர் துதி யாராலும் பாட முடியாது. அவ்வளவு அருமையாகப் பாடுவார்.

கடவுள்னு ஒருவர் இருக்கிறார் என்று நம்பினால் போதும். உண்மையான கடவுள் என்பது ஒவ்வொருவரின் மனசாட்சிதான் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். என் நம்பிக்கையை உன் நம்பிக்கை இழிவுபடுத்தக் கூடாது. என் நம்பிக்கை உன் நம்பிக்கையை வற்புறுத்தக் கூடாது.

ஒய்.ஜி.மகேந்திரன்
ஒய்.ஜி.மகேந்திரன்

ஆனா, இதை சிலர் உதாசீனப்படுத்துறாங்க. அதனாலதான் ஒருவருக்கு ஒருவர் தேவையற்ற மனஸ்தாபங்கள் வருகின்றன. சில பேர் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்காங்க. அவங்க அப்படியே இருக்கட்டும். அவங்க நம்பணும்ங்கிற அவசியமில்லை.

கடவுளிடம் வேண்டி நிறைய விஷயம் நடந்திருக்கு. நிறைய விஷயம் நடக்காமலும் போயிருக்கு. தனித்தனியா எதையும் கணக்குப் போட்டுப் பார்க்கிறதில்லை. அவர் என்ன கொடுக்கிறாரோ அந்த வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு மனநிறைவோடு வாழணும்ங்கிறதுதான் என் கொள்கை.

எனக்கு இஷ்ட தெய்வம் சரஸ்வதி. ஆனால், என் தொழிலுக்கு இஷ்ட தெய்வம்னு பார்த்தால் சிவாஜி கணேசன்தான். நான் சிவாஜி மேல அப்படி ஒரு பக்தியைத்தான் வெச்சிருக்கிறேன். கலையுலகில் எனக்கு அவர்தான் தெய்வம். கோயில் கட்டிக் கும்பிடுவேன்'' என்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு