நாகை மாவட்டம் நாகூரில் உலகப் பிரசித்திபெற்ற, சர்வ மதத்தினரும் வந்து வழிபடும் ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நாகை மீரா பள்ளிவாசலிலிருந்து 20-க்கும் மேற்பட்ட கொடி ஊர்வலம், மந்திரி கப்பல், செட்டி பல்லாக்கு, சின்ன ரதம் ஆகியவை புறப்பட்டன.

மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள், நாகை மற்றும் நாகூர் நகரங்களின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று, மீண்டும் அலங்கார வாசல் வந்தடைந்தன. தொடர்ந்து கொடிகள் நாகூர் தர்காவில் 5 மினாராக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் தர்கா பரம்பரை கலிபா துவா ஓதினார். மின்னொளியில் ஜொலித்த தர்காவின் 5 மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடியேற்றப்பட்டன. அப்போது வாண வேடிக்கை மிகச் சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கொடியேற்ற விழா நிகழ்ச்சிகளை தர்கா மேனேஜிங் டிரஸ்ட் டாக்டர் செய்யது காமில் சாஹிப் தலைமையில் பரம்பரை டிரஸ்டிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவிற்கு மாவட்ட போலீஸ் சுப்பரின்டென்ட் ஜவகர், துணை போலீஸ் சுப்பரின்டென்ட் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வருகிற 2-ம் தேதி (திங்கள் கிழமை) நடைபெறும். பிரியா ஆண்டவர் சமாதிக்குச் சந்தனம் பூசும் நிகழ்ச்சி 3-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) அதிகாலை நடக்கிறது. இதை முன்னிட்டு வரும் 3-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் அருண்தம்புராஜ் அறிவித்துள்ளார்.