விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சாமி திருக்கோயில். இந்தக்கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட தினங்களில் சாமி தரிசனம் செய்ய 8 நாள்கள் அனுமதி வழங்கப்படும். இந்த விஷேச நாள்களில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இதில், வானிலை மாற்றம் மற்றும் மழை இருந்தால் மட்டும் பக்தர்கள் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யத் தடைவிதிக்கப்படும்.
இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாதம் பிரதோஷம் மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 22ம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு வருகை தந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேவேளை, பக்தர்கள் மலைப்பகுதியில் உள்ள நீரோடைகளில் குளிக்கவும், மூச்சுத்திணறல், மற்றும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்கள், தீவிர காய்ச்சல் உள்ளவர்கள் கோயிலுக்கு செல்லவும் அனுமதி இல்லை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதியில் இரவில் தங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.