Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது! - 2

அறமும் அஞ்சாமையும்...சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

பாதை இனிது... பயணமும் இனிது! - 2

அறமும் அஞ்சாமையும்...சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

Published:Updated:
பாதை இனிது... பயணமும் இனிது! - 2

மிழகத்தில், தேர்ச்சியின் அடிப்படையில் மட்டுமே மாணவிகளைச் சேர்த்துக்கொள்ளும் கண்டிப்பு மிக்க மகளிர் கல்லூரி அது. பல வருடங்களுக்கு முன்பு, அங்கே சேர்ந்து படிப்பதற்காக நுழைவுத் தேர்வு நடந்தது. மாநிலத்தை ஆளும் தலைவரின் பரிந்துரைக் கடிதத்துடன் இரண்டு மாணவிகள் வந்து, தேர்வு எழுதினார்கள்.

சில நாட்கள் கழித்து, தேர்வு செய்யப்பட்ட மாணவிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், சிபாரிசுக் கடிதத்துடன் வந்திருந்த மாணவிகளின் பெயர்களுக்குப் பக்கத்தில், 'மாநிலத்தை ஆளும் தலைவரின் பரிந்துரைக் கடிதம் பெற்று வந்த காரணத்தால் நிராகரிக்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாதை இனிது... பயணமும் இனிது! - 2

தலைமைப் பண்புகளில் முக்கியமானது அஞ்சாமை. வாழ்க்கைப் போர்க்களத்தில் அறத்தைச் சார்ந்த, வழிநடத்தும் அஞ்சாமை வேண்டும். தலைவனாக இருப்பது எளிது அல்ல. அறநெறி பிறழாது வாழ்பவனே, பிறரை மிகச் சிறப்பாக வழிநடத்த முடியும்.

அறநெறிக் கொள்கைகளின்படி நடப்பதற்காகச் சிறிதுகூடச் சமரசம் செய்துகொள்ளாத தலைவர்கள் பலர் இந்த தேசத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்; இன்னமும் அப்படியான சிலர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பிரச்னைகளில் இருந்து தப்பிக்க எண்ணுபவன் தலைவன் அல்லன். பிரச்னைகளை எதிர்நோக்கி, அவற்றைத் தீர்ப்பதற்கு உரிய திண்மை உள்ளவனே சிறந்த தலைவன்.

ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் ஒரு தலைவன் இருக்கிறான். குடும்பம், சமூகம், அலுவலகச் சூழல் முதலான பல இடங்களில், முக்கிய கடமைகளைத் தலைமையேற்று நடத்தவேண்டிய பொறுப்பு அவனுக்கு உள்ளது.

தலைமைப் பண்பு என்பது, ஒருவர் அணிந்துகொள்ளும் தங்கக் கிரீடம் அல்ல. குடும்பத்தின், சமூகத்தின் அமைதியை சீர்குலையாமல் பாதுகாக்கிற தலைக்கவசம் அது.

பொருட்பாலின் துவக்கத்தில், தலைமைப் பண்புமிக்க அரசனின் பெருமையை இறைமாட்சி என்னும் அதிகாரமாக அருளியிருக்கிறார் திருவள்ளுவர்.

காலங்கள் பல உருண்டோடி விட்டன. ஒவ்வொரு கால கட்டத்தையும், அதன் தலைவனைக் கொண்டே நாம் அடையாளப் படுத்தி வருகிறோம்.

சிறந்த தலைவன் வெறும் பேச்சாற்றலால் அல்ல, சிறந்த நடத்தையின் வாயிலாகவே மக்களின் மனதில் இடம்பெறுகிறான். ஒரு குடும்பத் தலைவனின் முகமே குடும்பத்தின் முகமாக விளங்குகிறது.

தலைவன், முறையாகக் கற்க வேண்டிய நூல்களைக் கசடறக் கற்று, அதன்படி நின்று ஒழுகவேண்டும். அதுமட்டுமின்றி, அவன் நுட்பமான அறிவு படைத்தவனாக இருக்கவேண்டும். அறிவாற்றல் மிக்க தலைவனே மிகச் சரியாகச் சிந்திப்பான்; விரைவாக முடிவெடுத்துக் களத்தில் இறங்குவான்.

தலைவன், பன்முகப்பட்ட அறிவுடையவனாக விளங்க வேண்டும். தன்னைப் பின்பற்றுவோரின் மனநிலையை,  உணர்ச்சிகளை, முழுவதுமாக அறிந்து உணர்கிற மிகச் சரியான புரிதல் உடையவனாக இருக்க வேண்டும்.

பாதை இனிது... பயணமும் இனிது! - 2

தலைமைப் பதவி என்பது வெறும் விதிகளால் நிர்ணயிக்கப்படுவதல்ல. விதிகளே வழிநடத்த முடியுமென்றால் தலைவனே தேவையில்லையே! பிறரது உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளக்கூடிய, தவறு நிகழும்போது அதனைத் தட்டிக் கேட்டும், துவண்டு நிற்கும்போது தட்டிக் கொடுத்தும் வேலை வாங்கக்கூடிய தலைவனே ஒரு நிறுவனத்தின் செல்வமாக விளங்குகிறான்.

தலைவன் என்பவன், அறிவும் ஆற்றலும் மட்டும் உடையவனாக இருந்தால் போதாது; மற்றவர்களை உற்சாகப்படுத்தி சரியான திசையில் வழிநடத்துபவனாகவும், சிறந்த ஊக்கத்துடன் கூடியவனாகவும் இருக்கவேண்டும். நீண்ட நெடும் பயணத்தில், வழிநடத்திச் செல்வோர் உற்சாகத்தின் ஊற்றாக இருந்துவிட்டால், பயணக் களைப்பே தெரியாது.

மேலும், தன்னைக் கட்டுபவனே தன்னிகரற்ற தலைவனாக விளங்க முடியும். தலைவன் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. நடுநிலைமை தவறக்கூடாது. எதற்காகவும் அறத்தை சமரசம் செய்துகொள்ளக் கூடாது. மேற்கூறியவற்றைக் கடைப்பிடிக்க, அஞ்சாமை என்ற உயர்ந்த குணம் தலைவனுக்கு வேண்டும். தலைவன் சிறுமையற்றவனாக, ஈகை நிரம்பியவனாக இருக்க வேண்டும். எப்போதும் விழிப்பு உணர்வுடன் இருந்து, மக்களின் தேவையறிந்து செயலாற்றுபவனே சிறந்த தலைவன்.

அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
(திருக்குறள்: 382)

அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு பண்புகளும் குறைவுபடாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள் பவர்க்கு
(திருக்குறள்: 383)

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டிய குணங்கள்.

அறம் முக்கியம். அறத்துடன் வாழ்வதும் அவசியம். எந்த நிலையிலும் அஞ்சாதவனாக இருப்பது மிக மிக அவசியம்.

- பயணிப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism