Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது! - 3

கற்க கசடற... சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

பாதை இனிது... பயணமும் இனிது! - 3

கற்க கசடற... சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

Published:Updated:
பாதை இனிது... பயணமும் இனிது! - 3

ஸ்ஸாம் மாநிலத்தில் பரந்து விரிந்த பிரம்மபுத்ரா நதியின் தீவு ஒன்றில், ஓர் அழகிய காட்டை உருவாக்கிச் சாதனை படைத்திருக்கிறார் 'பாவோங்’ என்ற தனி மனிதர். நூற்றுக்கணக்கான யானைகள் வந்து இளைப்பாறும் வனமாக அது இன்றைக்கும் விளங்கிக்கொண்டிருக்கிறது.

இதுபோன்று வெளியுலகம் அறியாத, தலைமைப் பண்புமிக்க ஆயிரக்கணக்கான மனிதர்கள் இந்தத் தேசத்தில் இருக்கிறார்கள். இருளைப் பற்றிக் குறை கூறியே எல்லோரும் சலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தீக்குச்சியைக் கிழித்து ஒளி காட்டும் அறிவொளி உடையவர்கள் இவர்கள். வழியே இல்லை என்று புலம்புவோர் மத்தியில் முன்னோடியாகத் தடம் பதித்து நடந்து புதியதொரு பாதையை உருவாக்கும் செயல்திறன் மிக்கவர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நல்ல தலைவனுக்குக் கல்வியறிவு மிக முக்கியம். அதனால்தான் திருக்குறளில் இறைமாட்சி என்னும் அதிகாரத்துக்கு அடுத்ததாக கல்வி என்னும் அதிகாரம் இடம்பெற்றுள்ளது.

தனது துறையில் ஆழ்ந்த நுண்ணறிவும், பன்முகப்பட்ட பரந்த அறிவும் ஒரு நல்ல தலைவனுக்கு மிக முக்கியம். எந்தத் துறையிலும் நுனிப்புல் மேய்பவன் தலைவனாக முடியாது.

கற்றலுக்கு எல்லையே இல்லை. ஒரு துறையில் ஒருவர் சாதிக்க வேண்டுமானால், அதற்குப் பத்தாயிரம் மணி நேர உழைப்பு அவசியம் என்கிறது ஓர் ஆராய்ச்சி! புகழின் உச்சியில் சாதனையாளர்களாக அறியப்படும் ஒவ்வொருவருக்கும் பின்னால், பல நூறு மணி நேர கடும் உழைப்பு ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

ஒரு நல்ல தலைவன் இடையறாது தான் செய்யவேண்டிய செயலை நேசிப்பவனாக இருப்பான். ஞாயிற்றுக்கிழமைகளை விரும்புபவர்களும் திங்கட்கிழமைகளை வெறுப்பவர்களும் நம்மில் பலர் உண்டு. அலுவலகத்தின் மேலாளரே செயல்புரிவதற்குச் சலித்துக்கொண்டால், வேலையை வெறுப்பவராக இருந்தால், அந்த நிறுவனம் வெற்றிப் பாதையிலிருந்து விரைவில் விலகிச் சென்றுவிடும்.

''தூங்கும்போது வருவது கனவல்ல, உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு'' என்றார், நம் பாரதத்தின் ரத்தினமாக விளங்கிக்கொண்டிருக்கும் டாக்டர் அப்துல் கலாம்.

ஒரு கனவு, ஒரு குறிக்கோள் நம்மை உந்தித் தள்ளும்போது, செயல்புரிவது என்பது சுமையாகத் தெரியாது. நல்ல தலைவன் செயலை வெறுப்பது இல்லை. ஒரு செயலை நேசிப்பவர்களுக்கு, அந்தச் செயலே இளைப்பாறுதல் தரும்.

பாரத தேசம் ஆன்மிகத்தில் எட்டியிருந்த உயரங்களை உலகுக்கு உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். அவரது உரைகளாலும், ஆற்றல்மிகு வாழ்வாலும் கவரப்பட்ட பல நூறு சீடர்கள் உலகெங்கிலும் உண்டு.

''நான் உங்களுக்கு என்ன சேவை செய்ய வேண்டும் சுவாமிஜி?'' என்று கேட்டவர்களுக்கு அவர் கூறிய பதில்... ''இந்தியாவை நேசியுங்கள்'' என்பதுதான்.

பாதை இனிது... பயணமும் இனிது! - 3

சகோதரி நிவேதிதை, சுவாமிஜியைப் பற்றி எழுதும்போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்... ''இந்தியா அவரது நாடி நரம்புகளின் துடிப்பாக இருந்தது. இரவும் பகலும் அவர் இந்தியாவைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தார். இந்தியாவின் முன்னேற்றத்துக்காகவே செயலாற்றிக் கொண்டிருந்தார்.''

செயலை நேசித்தல் முதல் படி. செயலைப் பற்றிய கற்றலில் இடையறாது ஈடுபடுதல் இரண்டாவது படி. 'கற்றலை ஒருபோதும் நிறுத்திவிடாதே!’ என்று கட்டளையிடுகிறது வேதம். பலருக்குக் கற்றல் என்பது கல்லூரியோடு நின்றுவிடுகிறது. அப்போது மூடிக்கொள்ளும் மனக்கதவை பிறகு அவர்கள் ஒருபோதும் திறப்பதே இல்லை.

பண்டைக்காலத்தில் பாரத தேசத்தில் அரசர்கள் அரசாட்சிக்குத் தேவையான போர்ப் பயிற்சிகள் மட்டுமின்றி, அனைத்துவிதமான கல்விப் பயிற்சிகளையும் பெற்றிருந்தார்கள். வீரத்துடன், கல்வியும் அறிவாற்றலும் மிக்கவரே சிறந்த மன்னராக விளங்க முடியும். கம்பராமாயணம், வில்லிபாரதம் போன்ற பல நூல்களில் அரசனுக்கு உரிய இலக்கணங்களை நாம் காண முடியும். வடமொழியில் அதற்கு 'ராஜ தர்மம்’ என்று பெயர். ஜனநாயகத்தில் நாம் எல்லோருமே மன்னர்கள்தான். ஆனால், அரசனுக்கு உரிய பண்புகளை காலப்போக்கில் நாம் இழந்துவிட்டோம் என்பதே உண்மை.

மாமன்னன் ஸ்ரீராஜராஜசோழன் முறையாக அனைத்துவித பயிற்சி களையும் பெற்றதோடு மட்டுமல்லாமல், பதவியேற்பதற்கு முன் பல நாடு களுக்கும் பயணம் மேற்கொண்டு, பன்முகப்பட்ட அறிவைப் பெற்று, காலத்தால் அழியாத கலைக் காவியத்தைப் படைத்து, மிகச் சிறந்த முறையில் ஆட்சிபுரிந்து இன்றளவும் மக்கள் போற்றும் மிக உன்னதமான தலைவராகப் போற்றப்படுகிறார்.

அவர் ஆட்சி செய்த கி.பி.985 முதல் கி.பி.1012 வரையுள்ள காலம், சோழர்களின் காலத்தில் மட்டுமின்றி, தென்னிந்திய வரலாற்றிலேயே பொற்காலமாகும். அவரது ஆட்சிக்காலத்தில் ஆட்சித்துறை, படைத்திறம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய எழுச்சி உண்டாயிற்று.

இதற்கு, அவர் கசடறக் கற்ற கல்வியும், பெற்ற அறிவாற்றலுமே அடிப்படையாக விளங்கின.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்
(திருக்குறள்: 388)

என்ற திருக்குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஸ்ரீராஜராஜசோழன்.

- பயணிப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism