Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது! - 4

தலைவனுக்கு அழகு... சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

பாதை இனிது... பயணமும் இனிது! - 4

தலைவனுக்கு அழகு... சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

Published:Updated:
பாதை இனிது... பயணமும் இனிது! - 4
பாதை இனிது... பயணமும் இனிது! - 4

ரிடத்தில் கல் உடைக்கும் பணி வெகு மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. அந்த வேலையில் பலரும் ஈடுபட்டிருந்தார்கள்.  'நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’ என்ற கேள்வி, அவர்களில் மூன்று பேரிடம் கேட்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருவன், 'கல் உடைத்துச் சாகிறேன்’ என்றான். இரண்டாமவனோ 'அகலமும் நீளமுமான கல்லை வெட்டிக்கொண்டிருக்கிறேன்’ என்றான். மூன்றாமவன், 'கோயில் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறேன். நான் உடைக்கும் கல், ஒரு கோயிலின் இரண்டாம் பிராகாரச் சுற்றுச் சுவருக்கானது’ என்றான்.

மூவரும் செய்துகொண்டிருப்பது ஒரே பணிதான் என்றாலும், வேலையைக் குறித்த மனோபாவம் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது.

ஒரு நல்ல தலைவர், தனது நிறுவனத்தில் உள்ள கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் தனது நிறுவனத்தின் குறிக்கோளைத் தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடியவராக இருப்பார்.

எதற்காக வேலை செய்கிறோம் என்பதே தெரியாமல் வேலை செய்யும்போது, செயலில் வெகுவிரைவில் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது.

வேலையின் நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாத பலர், நம் தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள் என்பதற்கு அரைகுறையாக எழுப்பப்பட்ட பல கட்டடங்களும் சாலைகளுமே சாட்சி!

சாலையில் ஒருவர் குழி ஒன்றை வெட்டிக்கொண்டே செல்ல, இன்னொருவர் அதனை மண் போட்டு மூடிக்கொண்டே போனாராம். விசாரித்தால், 'குழி வெட்ட வேண்டியது அவர் வேலை. அதில் செடியை நட வேண்டியது மற்றொருவர் வேலை. அதனை மண்ணிட்டு நிரப்ப வேண்டியது என் வேலை. செடியை நட வேண்டிய நபர் வரவில்லை. மற்றபடி, நாங்கள் இருவரும் எங்களுக்கு இட்ட பணியைச் செவ்வனே செய்கிறோம்’ என்றாராம்!

பாதை இனிது... பயணமும் இனிது! - 4

பொருளாதார நெருக்கடி தாண்டி, வேலையின் தரம் குறைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, செயலின் நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாததே ஆகும்.

தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டுக்கு முன், மேடை நாடகங்கள் பிரபலமாக இருந்தன. அந்தக் காலகட்டத்தில், நாடகத்தில் பங்கேற்கும் அனைவருக்குமே அனைத்து கதாபாத்திரங்களின் வசனங்களும் தெளிவாகத் தெரிந்திருக்கும். எனவே, எவர் ஒருவர் வரவில்லையென்றாலும், வேறு ஒரு நடிகர் அந்த கதாபாத்திரமாக நடிக்கத் தயாராக இருப்பார்.

அப்படித்தான், நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும், நிறுவனம் பயணிக்கும் திசையை, அதன் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டிய பொறுப்பு தலைவனுக்கு இருக்கிறது.

அடுத்த ஐந்தாண்டுகளில், இரண்டாண்டுகளில், நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டிய செயல்திட்டங்களை மிகத் தெளிவாக வகுத்து, தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களிடம் பகிர்ந்து, அதில் அவர்களது பங்களிப்பை எடுத்து விளக்க வேண்டியது தலைவனின் கடமை. எண்ணத்தின் தெளிவே, தெளிந்த சொற்களாகவும் முறையான செயல்களாகவும் வடிவெடுக்கின்றன.

பாதை இனிது... பயணமும் இனிது! - 4

ஒரு நிறுவனத்தின் வெற்றிக்குத் தலைமை என்பது மிக முக்கியம் எனினும், தலைவனின் உள்ளக் கிடக்கையைப் புரிந்துகொண்டு, ஒத்திசைவோடு செயலாற்றும் குழு இருந்தால்தான், அந்த நிறுவனம் முன்னேற்றப் பாதையில் வீறுநடைபோடும்.

ஒரு நல்ல அரசன் அல்லது தலைவன் தனக்குக் கீழ் வேலை செய்பவர்களை என்னென்ன அம்சங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு, திருவள்ளுவர் மிக அழகான குறிப்புகளைத் தருகிறார்.

அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும்
. (திருக்குறள்: 501)

ஒருவன் எவ்வளவு அறச்செயல்களில் ஈடுபடுகிறான்? எவ்வளவு பொருளைச் சம்பாதித்திருக்கிறான்? இன்பங்களில் அவனுக்கு உரிய நாட்டம் எத்தகையது? அவன் உயிருக்குப் பயப்படுபவனா? இந்த நான்கையும் ஆராய்ந்து, அவனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
(திருக்குறள்: 513)

அன்பு, அறிவு, கலங்காமல் செயலாற்றும் உறுதி, ஆசையின்மை ஆகிய நான்கு குணங்களும் உடையவனை அரசன் நம்பிக்கையுடன் தேர்ந்தெடுப்பான். அது மட்டுமல்ல, எவரிடம் எத்தகைய செயலைக் கொடுக்க வேண்டும் என்ற நுண்ணறிவும் ஒரு தலைவனுக்குத் தேவை.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
(திருக்குறள்: 517)

ஒரு செயலை சரியான நபரிடம் ஒப்படைப்பது என்பது மாபெரும் கலை. ஒரு மனிதனின் உள்ளார்ந்த திறமையைக் கண்டுணர்ந்து, அவனை உற்சாகப்படுத்தி, செயலைச் செய்து முடிக்க வல்லவனே சிறந்த தலைவனாகத் திகழ முடியும்!

- பயணிப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism